உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, June 27, 2009

நிமிடம்....வணக்கங்கள்...?

கல்லூரியில் படிக்கின்ற காலங்களில் நண்பர்களிற்கும் எனக்கும் வானொலிகள் தொடர்பில் அடிக்கடி ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் எனது அபிமானத்திட்குரிய, குருநாதராக நான் நினைக்கும் சிரேஷ்ட அறிவிப்பாளரின் வழிநடத்தலில் இருந்த வானொலி ஒன்றின் அபிமானி நான். இதனால் அந்த வானொலி தொடர்பாகவோ, அல்லது அந்த அறிவிப்பாளர் தொடர்பாகவோ யாராவது குறை சொன்னால் பிடிக்காது. அப்படி யாராவது சொனால் உடனடியாக எனது வாயிலிருந்து நியாயப்படுத்தல்கள் தானாக உ திரத்தொடங்கிவிடும். வேண்டுமென்றே நண்பர்கள் என்னை கோபப்படுத்தும் நோக்குடன் அப்படி சொல்ல்வதுமுண்டு.

அதனால் அடிக்கடி பல மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அது அந்த வானொலியின் மீதும் அறிவிப்பாளர் மீதும் நான் வைத்திருந்த அளவு கடந்த அபிமானத்தின் விளைவு. அத்துடன் விவாதங்கள்,எதிர் கருத்துக்கள் தொடர்பில் பக்குவப்படாத பராயம் என்றும் அதனை சொல்லலாம்.

இப்படித்தான் ஒரு நாள் வானொலிகள் தொடர்பில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நண்பன் குறித்த எனது அபிமானத்திட்குரிய அவ்வானொலி அறிவிப்பாளர் நேர அறிக்கையை வழங்கும்போது இருபது நிமிடங்கள் என்று பன்மையில் சொல்லாமல் இருபது நிமிடம் என்று ஒருமையில் செல்வதாகவும் ஆனால் அந்த வானொலிக்கு போட்டியாக உள்ள வானொலியில் அவ்வாறான தவறுகள் இடம்பெறுவதில்லை என்றும் இதனால் குறித்த அந்த அறிவிப்பாளர் ஒரு வானொலியை வழிநடாத்த தகுதியற்றவர் தமிழ் மொழி தொடர்பில் அவருக்கு போதிய அறிவு இல்லை என்றும் கூறினான்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் தெளிப்பது போல குறுக்கிட்ட இன்னுமொரு நண்பன் "ஆமாம் அவர் நேயர்கள் அனைவருக்கும்அன்பான வணக்கங்கள்"என்று சொல்கிறார்.அதுவும் பொருத்தமற்றது. ஒருவரால் ஒரே நேரத்தில் வணக்கம் என்றுதான் கூற் முடியுமே தவிர வணக்கங்கள் என்று சொல்ல முடியாது என்றான்.

சும்மா ஒரு வார்த்தை அவரைப்பற்றி குறையாக சொன்னாலே பொங்கி எழும் எனக்கு இந்த கடும் வார்த்தைகள் கடல்சுனாமியாய் சுழற்றி அடிக்க தூண்டியது. ஆனாலும் கொஞ்சம் அறிவு பூர்வமாய் aணுக நினைத்து முதலாவது நண்பரிடம் "சரி நீங்கள் அந்த அறிவிப்பாளர் தவறாக செல்வதாக சொல்கிறீர்கள் அப்படியானால் மற்ற வானொலியில் எப்படி சொல்கிறார்கள் என்று கேட்டேன்.

நண்பர் ரொம்ப கூலாக "ஒன்பது மணி இருபது நிமிடங்கள்" என்று சொல்கிறார்கள் என்றார்.

நல்லது நம்ம குருநாதர் அதனை ஒன்பது மணி இருபது நிமிடம் என்று சொல்கிறார் அப்படித்தானே என்றேன்.

"ஆமாம் "பதில் தந்தார் நமது நண்பர்.

"நண்பரே இருபது நிமிடம் என்பதை இருபது நிமிடங்கள் என்று பன்மையில் சொல்லவேண்டும் என்றால் ஒன்பது மணியும் ஒன்பது மணிகள் என்றுதானே சொல்ல வேண்டும்."

-----------

மௌனித்து விட்டார் நண்பர்.

இனி அடுத்த நண்பரின் வணக்கங்கள் தொடர்பில் நியாயப்படுத்த நினைத்து அவரிடம், "ஒரு அறிவிப்பாளர் வானொலியில் அறிவிப்பு செய்யும்போது ஏராளமான நேயர்கள் வானொலியை கேட்பார்கள். எனவே ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கம் சொல்ல வேண்டும். ஆனால அது முடியாத காரியம். எனவே எல்லோருக்கும் சொல்கின்ற வணக்கம்+வணக்கம்+வணக்கம்-----=வணக்கங்கள் என்றேன். அந்த நண்பரும் மௌனித்து விட்டார். இனி என்ன எல்லோரும் மௌனித்து விட்டால் நாங்கள்தானே அறிவாளி.(வேடிக்கை...)

உண்மையில் இந்த கருத்து மோதலில் (விவாதம் என்று சொல்லவில்லை அதற்கான தன்மைகளில் இருந்து இது௭ கொஞ்சம் மாறுபட்டிருந்தது.) இருந்து சில சிந்தனைகள் தலைதூக்கின. அவைதொடர்பில் பிற்பட்ட காலங்களில் கொஞ்சம் தேடத்தொடங்கினேன். இதன் பலனாக சில முடிவுகள் கிடைத்தன. அதாவது வானொலி அறிவிப்பின்போது மிகவும் நுணுக்கமாக எதனையும் கருதுவது கடினம். வானொலி என்பது கொஞ்சம் நவீனத்துவம் அடைந்துள்ள காரணத்தினால்(தனியார் வானொலிகளின் வரவால்) அதனை இப்படித்தான் இருக்க வேண்டுமென வரையறை செய்துவிட முடியாது. அதற்காக அறிவிப்பின் ஆரம்ப கால கட்டமைப்பை முற்றாக சிதைத்துவிடவும் கூடாது/முடியாது.

எனவே நேர அறிக்கைகளை வழங்குகின்றபோது ஒன்பது மணி இருபது நிமிடங்கள் என்று சொல்வதிலும் தவறில்லை, ஒன்பது மணி இருபது நிமிடம் என்று சொல்வதிலும் தவறில்லை. அதே போன்றுதான் வணக்கம் வணக்கங்கள் என்ற விடயமும் உள்ளது.

Friday, June 26, 2009

தமிழ் பேசுவோர் எல்லாம் தமிழர்?

இன்றைய நிலையில் இலங்கையை பொறுத்த வரையில் தமிழ் மொழியை பேசுகின்ற அனைவரையும் தமிழ்ர்கள் என்று அழைக்கின்ற ஒரு நாகரீகத்தை அரசியல் நோக்கத்திற்காக அரசியல் ஆய்வாளர்களும், அரசியல்வாதிகளும் உருவாக்கிவருகின்றார்கள். அதாவது தமிழ் பேசும் முஸ்லீம்களை "தமிழ்ர்கள்" என்று அழைக்கின்றார்கள். உண்மையில் அது தவறு என நான் நினைக்கின்றேன். முஸ்லீம்கள் என்பவர்கள் தானித்துவமான ஒரு இனத்தினர். தமிழ் மொழியை பேசுகின்ற ஒரே காரணத்திற்காக அவர்களை தமிழ்ர்கள் என அடையாளப்படுத்த முடியாது. நீண்ட வரலாறும், தொன்மையான ஒரு கலாசாரமும் உள்ள இனமான முஸ்லீம் இனத்தை அரசியல் தேவைகளிற்காக தமிழ்ர்கள் என அடையாளப்படுத்துவது , எதிர்காலத்தில் முஸ்லீம் என்று ஒரு இனம் இலங்கையில் வாழ்ந்த வரலாற்றை அடியோடு அழித்து வடும் என்பது மட்டுமன்றி , இரு இனங்களை ஒன்ராக்கும்போது கலாசார ரீதியான குழப்பங்களும் ஏற்படலாம். அதாவது தமிழர் என்றால் அவர்களிற்கும் ஒரு தனித்துவமான கலாசாரம், விழுமியம், ஒழுக்கம் இருக்கின்றது. இந்த இன ஒன்ருபடுத்தலால் இரு வழி கலாசாரம் ஒன்று உருவாகி அது தமிழ்ரின் தனித்துவங்களையும் சிதைக்கவே செய்யும்.

பிரித்தானிய காலனித்துவ காலத்தில் பிரித்தானியர் முஸ்லீம்களையும் தமிழார்களாக கருதி அவர்களிற்கான பிரதிநிதுத்துவத்தையும் தமிழ்ர்களின் பிரதிநிதிதுவத்துக்குள் அடக்கியிருந்த காரணத்தினால்தான் அதில் இருந்து வெளியே வருவதற்காக அன்றைய முஸ்லீம் முக்கியஸ்தர்கள் அரும்பாடுபட்டார்கள். இதனால்தான் அன்றைய தமிழ் தலைமைகளுக்கும், முஸ்லீம் முக்கியஸ்தர்கலுக்கும் இடையில் மனக் கசப்புக்கள் உருவாகி பின்னர் அது தமிழர் தலைமைகள், சிங்கள தலைமைகளுக்காக பரிந்து பேசுகின்ற சூழ்நிலைக்கு இட்டுச்சென்றது எனலாம். ஆக இவ்வாறான ஒரு இன ஒன்று படுத்தலை செய்வதென்பது எதிர்கால தமிழ், முஸ்லீம் சந்ததிகளையும் பாதிக்க இடம் உண்டு. ஒரு வேளை இன்றைய அரசியல் தேவையாக "தமிழ் பேசுகின்ற முஸ்லீம்களை தமிழ்ர்கள்" என்று அடையாளப்படுத்துவது இருக்கலாம். ஆனால் எதிர்காலங்கள் தொடர்பில் பல குழப்பங்களையும் ,சிக்கல்களையும் ,ஆரோக்கியமற்ற மாறுதல்களையும் இந்த கைங்கரியம் உண்டாக்கும் என்பதை ஒவ்வொரு தமிழ்னும், முஸ்லீமும் உணர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் இன்று உலகில் உள்ள குழப்பங்களுக்கு காரணம் அரசியல் தேவை கருதி அவ்வப்போது எடுக்கப்படும் தூர நோக்கற்ற முடிவுகளே என்பதில் ஐயமில்லை. எனவே தமிழ் பேசுகின்றார்கள் என்பதற்காக முஸ்லீம்களை தமிழ்ர்கள் என்று அழைப்பதை நிறுத்தி விட்டு, "அரசியலுக்காக மட்டும்" தமிழ் பேசும் மக்கள் என்ற பதத்தை பிரயோகிக்கலாம் என எண்ணுகிறேன்....

குறிப்பு-ஒவ்வொருவனும் "இனம்" என்ற பற்றுறுதியுடன் இருக்க வேண்டும் என கருதியே இதனை பதிந்துள்ளேன், அன்றி யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களுக்கு குந்தகம் விளைவிக்கவோ அல்ல. மகாகவி சுப்ரமணியபாராதியார் கூட "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடினார் , தவிர இனங்கள் இல்லையடி பாப்பா என்று பாடவில்லை.

Sunday, June 14, 2009

காதலர்தினம்...

என்னடா காதலர் தினம்தான் முடிஞ்சு ரொம்ப நாளாச்சே என்று நீங்க யோசிக்கிறது புரியுது, ஆனாலும் இதை ஒரு சுவாரசியத்திற்காக பதியிறன். கடந்த காதலர் தினத்தை எமது வானொலியில் கொஞ்சம் அமைதியாகத்தான் கொண்டாடினோம்.(கொண்டாடினோம்=நிகழ்ச்சி செய்தோம்.)
அப்போது நேயர்களை இணைத்து கொள்ளும் வசதி இடைநிருத்தப்பட்டிருந்தமையால் என்னுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்த நண்பர்களிடம் காதலை பற்றி ஏதாவது சொல்லுமாறு கேட்டேன். அவர்களுள் சிலர் காதலை பற்றியும் சிலர் தங்கள் காதலன், காதலி பற்றியும் சொன்னார்கள். அவற்றையே அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பாக்கினேன். அத்துடன் காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?/காதலர் தினத்தை வலன்டைன் டே என அழைப்பதற்கான காரணங்கள் என்ன? போன்றவற்றையும் சேர்த்திருந்தேன். அவற்றில் சிலவற்றை பதிகின்றேன்...

காதலர்தினம் வலன்டைன் டே என அழைக்கப்படுவதற்கு மூன்று வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ரோம் நகரில் 1500 வருடங்களிற்கு முன்னர் கிறிஸ்தவத்தை போதித்த இளம் பாதிரியார் வலன்டைன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.இங்கு அவர் பார்வை இழந்த சிறை அதிகாரியின் மகளை ஜெபித்து பார்வை பெற செய்ததாகவும் இதனால், சிறை அதிகாரியின் மகள் பாதிரியார் மீது காதல் கொண்டதாகவும் எனினும் பாதிரியாரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியவில்லையாம். இதன் அடிப்படையில்தான் கார்தலர்த்தினத்தை வலன்டைன் டே என்று அழைப்பதாக ஒரு கதை சொல்கிறது.

ரோம் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த கிளாடியஸ் என்பவர் படை வீரர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டளை இட்டிருந்தாராம். இதற்காக கி.பி 267 இல் போர்வீரர்களின் திறமையை திருமணம் பாதிக்கும் என சட்டம் இயற்றியிருந்தாராம். இருந்தபோதிலும் பாதிரியார் வலன்டைன் அவர்கள் இரகசிய திருமணத்தை படைவீரர்களுக்கு செய்து வைத்தார். இதனால் பாதிரியாரின் தலை சீவப்பட்டது. இவ்வாறு தலை சீவப்பட்ட நாளையே காதலர்தினம்/வலன்டைன் டே என்று கொண்டாடப்படுகின்றது என்று இரண்டாவது கதை சொல்கிறது..

ரோம் நகரில் லூபர் கேலியா விழா பெப்ரவரி மாதத்தில் கொண்டாடப்பட்டது. வசந்த காலத்தை காதலர்கள் வரவேற்கும் விழாவாகத்தான் இந்த லூபர் கேலியா கொண்டாடப்பட்டதாம். இதுதான் வலன்டைன் டே இன் ஆரம்பம் என்று மூன்றாவது கதை சொல்கிறது.

வலன்டைன் டே பற்றி மூன்று வெவ்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும், இந்த கதைகளின் அடிப்படையில் வலன்டைன் டே என்பது ரோம் நகரத்திலையே தோற்றம் பெற்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இனி நண்பர்களின் காதல்பற்றிய கருத்துக்கள்...

மனங்களின் சங்கமம் காதல்..

ஜென்ம ஜென்மமாய் தொடரும் உன்னத உணர்வு காதல்...

தினம் தினம் தீபாவளி காதல் கொண்டால் பிறக்கும் புது வழி...

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் நான் உன்மேல் கொண்ட காதல் தடம் மாறாது...

நீண்ட நினைவு ஏடுகளின் பசுமையான பக்கங்கள் காதல்நினைவுகள்....

சலனம் இல்லா உணர்வுகள் சந்திக்கும் இடம் காதல்......

உலகம் உருள்வதே உயரிய காதலினால்தான்...

கல்லைக்கூட கனிய வைக்கும் காதல் சொல்லில் அடங்குமா?

ஆயிரம் ரோஜாக்களை அடுக்கினாலும் காதல் முன்னே அவை அடிபட்டுவிடும்...

பொன் நிறம் மாறினால்லும் என் காதல் அழியாது...

வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் உருளும் உருவமில்லா உருண்டை காதல்....

பால் போல என்மனம் பார்ப்பவர் எல்லாம் போற்ற காரணம் காதல்.......

ஜாதி மத பேதம் காதலுக்கு இல்லை ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லை......

காதல் தோற்பதில்லை காதலர்கள்தான் தோற்கிறார்கள்....

அன்பு, பாசம் என்ற சொற்கள் எல்லாம் காதல் என்ற சொல்லின் முன்னே தோற்றுவிடும்...

என் நெஞ்சில் உள்ள காதல் தீ என்றுமே அணையாது...

சித்திரம் தோற்றுவிடும் என் காதலியின் சிரிப்பின் முன்னே.....

புன்னகை ததும்பும் என் நிலவான காதலியின் அன்பிற்கு நான் அடிமை....

ஆழமான காதல் அழியாத உணர்வு....

நினைவுகளால் நிரப்பப்படும் காதல் நீ இல்லை நான் இல்லை....

உன் விம்பம் என் விழித்திரைக்கு அழக்கூட்டும் ஒளிப்படம் காதலே நீ வாழ்க....

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம். காதல் கொண்டால் என்றுமே பலம்........

மனசே மனசே உனக்கு நன்றி என் மணாளன் குடியிருக்கும் மனசே உனக்கு நன்றி......

காதல்-சொற்களால் வர்ணிக்க முடியாத சுகம்....

காதல் இல்லாத வாழ்வு காற்று இல்லாத பூமி.....

உயிரில் கலந்து உடலில் புகுந்து உணர்வுகளோடு சங்கமிக்கும் உன்னதம் காதல்......

உலகை ஆட்சி செய்யும் உண்மையான உணர்வு காதல்......

இதயம் இடம்மாறும் தருணம் காதல் உருவாகும் காலம்.....

காதல் ஒரு வேதம் கற்க கற்க இனிக்கும்.....

சிற்பங்கள் சில நேரம் அழிந்து போகலாம் உண்மை காதல் உலகம் உள்ளவரை அழியாது.....

அலங்காரம் அரங்க்கத்திட்கும் அங்கத்திற்கும் மட்டும்தான் அழகு சேர்க்கும். காதல் அகத்திற்கும் முகத்திற்கும் அழஅகு சேர்க்கும்...

விடை தேட முடியா புதிர் காதல். காதல் ஒரு இனிய அனுபவம்....

நித்தம் நித்தம் நெஞ்சுக்குள் கொஞ்சும் மழலை முத்தம் காதல்.....

கனவுகள் எல்லாம் கருணையாகும். பார்வைகள் எல்லாம் பசுமையாகும்.....

கண்கள் சந்திக்கும்போது காதல் உருவாகும்......

Wednesday, June 3, 2009

அந்த ஐந்து பாடல்கள்!

பொதுவாக கல்லூரி காலம் என்பது பசுமையான ஒன்றாகவும் என்றும் மறக்க முடியாத இனிய அனுபவங்களை கொண்டதாகவும் பலருக்கும் அமைவதுண்டு. அந்த வகையில் அவ்வாறான நினைவுகளை மீட்டி பார்ப்பதில் ஒரு தனி இன்பம் கிடைப்பது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான். கல்லூரியில் செய்யும் குழப்படிகளும், சேஷ்டைகளும் வித்தியாசமானவையாக இருக்கும். அதிலும் மிகவும் சிறிய பராயத்தில் செய்த குழப்படிகளை நினைத்தால் சிரிப்புத்தான் வரும்.. கல்லூரியில் கிடைக்கின்ற நட்புக்களும் சரி, காதலும் சரி எல்லோருக்குமே கடைசிவரை கூட வருவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனக்கு கல்லூரி வாழ்விலும், பள்ளி வாழ்விலும் பல நண்பர்கள், தோழிகள், சகோதரிகள், சகோதரர்கள் கிடைத்தார்கள். ஆனால் இப்போது அருகில் இருக்கும்/தொடர்பில் இருக்கும் அந்த உறவுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இருந்தாலும் என்னோடு ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் கற்ற அந்த உறவுகளை எப்போதும் மதிக்க தவறுவதில்லை. இதற்கு கல்லூரி வாழ்வில் நடந்த இனிய அனுபவங்களை காரணமாக சொல்லலாம். அதாவது அந்த அனுபவங்களினால் பல நண்பர்கள், நண்பிகள், சகோதரர்கள், சகோதரிகள் கண்முன்னே காட்சி தருவார்கள். அவ்வாறான இனிய அனுபவங்களை பகிரும் நோக்குடன் சில பதிவுகளை பதிய எண்ணி உள்ளேன். அந்த வகையில் முதலில் "அந்த ஐந்து பாடல்கள்" என்னும் இப்பதிவு வருகிறது...

அது ஒரு கார்த்திகை மாதம், நாங்கள் உயர்தரம் படித்து கொண்டிருந்த காலம். கல்லூரியில் ஒலி விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. (எமது கல்லூரியில் அதிகமாக இந்து சமய மாணவர்களே கற்றாலும் எல்லா சமய விழாக்களும் முன்னெடுக்கப்படுவது வழாக்கம். பெளத்தம்,இஸ்லாம் இல்லை.) இதற்காக எமது வகுப்பின் சார்பில் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டி இருந்தது. என்ன செய்யலாம் என்று சிந்தித்த போதுதான் எமது வகுப்பின் மகளீர் அணியினால் அந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதாவது ஒரு இசை நிகழ்ச்சியை நடாத்துவது என்ற யோசனை...
உண்மையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் அனைவரும் ஒரு மிகப்பெரிய நகச்சுவையகவே நோக்கினோம். ஏனெனில் எம்மிடம் போதிய இசைக்கருவிகள் இல்லை, தவிர அப்படி இருந்தாலும் அந்த இசைக்கருவிகளை வாசிக்க யார்தான் இருக்கிறார்கள்? சிரிப்போ சிரிப்பு... இதைவிட பெரிய நகைச்சுவை இருக்க வாய்ப்பில்லை என்ற சிரிப்பு .....
ஆனால் அது நகைச்சுவை அல்ல அது ஒரு யதார்த்த சிந்தனை/யோசனை என்பதை எமது வகுப்பு சகோதரிகள் நிரூபித்தார்கள்... ஆம் கடுமையான பயிற்சி, கடுமையான உழைப்பு இவற்றால் அரங்கேறியது எமது வகுப்பு சகோதரிகளின் இசை நிகழ்ச்சி..
அடியேன் அதில் டோலக் வாத்திய கலைஞன், மற்றுமொரு மேடையில் அறிவிப்பாளன்.. அந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை ஐந்து. அந்த பாடல்களை இன்றும் வானொலியில் ஒலிபரப்பு செயும்போது/ வானொலிகளில் கேட்கும்பொது கல்லூரி ஞாபகங்கள் வந்து போகும். அத்துடன் இந்த பாடல்களின் வரிகளை கூட மிகவும் திறமையான முறையில் எமது கல்லூரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் மாற்றியிருந்தார்கள். அது மட்டுமன்றி குறித்த அன்றைய தினம் அந்த பாடல்களை ஒலிப்பதிவு செய்ய முடியாமையினால்,அதே வருடம் தீபாவளி தினத்தன்று அவற்றை ஒலிப்பதிவு செய்திருந்தோம்.. அந்த தீபாவளி நாளும் மறக்க முடியாத தீபாவளியாக அமைந்துவிட்டது.. ஆனால் அந்த ஒலிப்பதிவு என்கையில் இல்லை. அந்த சகோதரிகளும் தொடர்பில் இல்லை. பாடல்கள் மட்டும் மனதில்......

1.அவரவர் வாழ்க்கையில்.... -பாண்டவர் பூமி.
2.ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.... -ஓட்டோக்ராப்.
3.ஞாபகம் வருதே... -ஓட்டோக்ராப்.
4.இன்னிசை பாடிவரும்... -துள்ளாதமனமும் துள்ளும்.
5.பூவே முதல் பூவே... -காதல் கிறுக்கன்.

Tuesday, June 2, 2009

அலுவலகத்தில் நடந்த அந்த சுவாரசியம்.

அவசியம் கருதி அரசியல் பக்கம் கொஞ்சம் உலா வந்தாச்சு. (பரவாயில்லையே செந்தூரன் உனக்கும் கவிதை எழுத வரும் போல...) ஆமா அடுத்ததா என்ன பதியலாம் என்று யோசிச்சால் நம்ம அலுவலகத்தில நடந்த அந்த சுவாரசியத்த பதிஞ்சிடுவம்.. எந்த சுவாரசியம் என்று கேட்கிறீங்களா? அதுதான் முதல்ல சொன்னேனே பேய் பற்றி அலுவலகத்தில நடந்த சுவாரசியம் இருக்குதென்று அதத்தான் பதியப்போரன்...

வழக்கமாய் நிகழ்ச்சி செய்யும் போது கலையகத்துக்குள்ள கையடக்க தொலைபேசி பயன்படுத்த முடியாது. ஆனால் நாங்கள் இரவில் நிகழ்ச்சி செய்வதால் கண்காணிப்பு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தி கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவது வழக்கம். அன்றும் இப்படித்தான் எனது நிகழ்ச்சிக்காக அலுவலகத்தில் காத்துக்கொண்டிருந்த நேரம், கலையகத்தில் நிகழ்ச்சியில் இருந்த அறிவிப்பாளர் மிகவும் வேகமாக கீழ இறங்கி வந்தார். என்ன விஷயம் இப்பிடி வேகமாய் வாறீங்க? என்று கேட்டபோது, தனது கையடக்க தொலைபேசியில் சார்ஜ் இல்லை என்றும் என்னை கலையகத்துக்குள் வந்து தன்னுடன் இருக்குமாறும் அவர் அழைத்தார்.. சரி உங்க தொலைபேசியில் சார்ஜ் இல்லாததற்கும் நான் கலையகத்துக்குள் வந்து இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டபோதுதான் அந்த உண்மை தெரிய வந்தது.
அது என்ன உண்மை என்று கேட்கிறீங்களா?
அதாவது நம்ம அறிவிப்பாளருக்கு பேய் பயம் வந்துவிட்டது. சரி எப்பிடி திடீரென்று இந்த பயம் வந்திருக்கும் என்று பார்த்தால், எமது வானொலியில் இருந்து இன்னுமொரு உள்ளூர் தனியார் வானொலிக்கு இடம்மாறி கடமையாற்றும் ஒருவர் காலையில் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அவர் தமது வானொலி கலையகத்தில் உலாவும் பேய் கதை ஒன்றை எமது அறிவிப்பாளருக்கு சொன்னதுடன், எமது கலையகத்திலும் அவ்வாறான ஒரு பேய் உலாவியதாகவும் கூறியிருக்கிறார். இதனை எமது அறிவிப்பாளர் உண்மை என நம்புவதற்கு ஏற்றாற்போல எமது வானொலி நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு அண்மையில் ஆறு உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அவர் அதனை மிகவும் அதீதமாக நம்பிவிட்டார்.

இப்படி பயந்த நிலையில் இருந்த அந்த அறிவிப்பாளரின் நிகழ்ச்சி நேரம் முழுவதும் அவருடன் கலையகத்தில் உட்கார்ந்ததுடன், அன்று ஞாயிற்று கிழமை என்பதால் நானும் அந்த அறிவிப்பாளரும் மட்டுமே கலையகத்தில் இருந்தமையால், தனது நிகழ்ச்சி முடிந்தும் அவர் உறங்கும் அறைக்கு சென்று உறங்காமல், கலையகத்துக்குல்லையே உறங்கிவிட்டார். ஆமா அந்த அறிவிப்பாளர்தான் யார் என்று சொல்லல்லையே என்று நீங்கள் கேட்கிறது புரியுது....

Monday, June 1, 2009

வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தவறா?

இந்த பதிவை பார்க்கும் பெரும்பாலானவர்கள் என்னை ஒரு இனவாதியாக சித்தரிக்க முயலலாம். பரவாயில்லை யார் அப்படி சித்தரித்தாலும் நான் எப்படியானவன் என்பதை எனது உள்ளம் அறியும்.

இன்று பெரும்பாலான ஆய்வாளர்கள் புலிகள் செய்த தவறுகள் தொடர்பில் தங்கள் கருத்துக்களையும் ஆய்வுகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் வடக்கிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியமை புலிகளால் செய்யப்பட்ட தவறு என்று சுட்டிக்காட்ட தலைப்பட்டுள்ளார்கள். ஒரு மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது உண்மையில் யாரும் இதனை தவறு என்று ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அரசியல் தூர நோக்கு பார்வையில் சிந்தித்தால் இதில் உள்ள பல்வேறு உண்மைகளை புரிந்து கொள்ளலாம். அதாவது இந்த நடவடிக்கையின் நன்மையை புரிந்து கொள்ள முடியும்.

உண்மையில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு காரணம், சிங்கள தலைமைகள் வடக்கு வாழ் முஸ்லீம்களுக்கும், தமிழர்களிற்கும் இடையில் திட்டமிட்ட இன கலவரம் ஒன்றை ஏற்படுத்த இருந்த பின்னணியிலேயே இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் அப்படியான இனகலவரத்துக்கான ஆரம்ப கட்ட வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டிருந்தன (பள்ளிவாசலில் ஆயுதங்கள் செகரிக்கப்பட்டமை அடங்கலாக). இவ்வாறான ஒரு சூழலில் வடக்கில் முஸ்லீம்களும், தமிழர்களும் ஒன்றாக வாழ்ந்திருந்தால் ஒரு பெரும் முஸ்லீம், தமிழ் இன கலவரம் வெடித்திருக்கும். இதனால் ஏராளமான முஸ்லீம், தமிழ் உறவுகள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அத்துடன் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும் இடையில் மாறாத பகை உணர்வு ஏற்பட்டிருக்க இடம் உண்டு. ஆகமொத்தம் புலிகளின் இந்த நடவடிக்கை ஒரு முஸ்லீம் தமிழ் இனக்கலவரத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, பெரும்பாலான முஸ்லீம்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழ வழிசெய்திருக்கிறது. இப்போது சொல்லுங்கள்முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது தவறா?