உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Friday, August 28, 2009

எப்பிடி இருந்ததை எல்லாம் இப்பிடியாக்கீட்டாங்க!!!!!

உருவ மாற்றங்களும், கருத்து மாற்றங்களும் காலங் காலமாய் நிகழ்ந்து வருகின்ற ஒன்றுதான். அந்த வகையில் நமது தமிழ் மொழியும் இதற்கு விதிவிலக்கானதல்ல. இன்று வழ்க்கில் உள்ள எத்தனையோ தமிழ்ச் சொற்களுக்கான அர்த்தங்கள் அந்தக் காலத்தில் வேறுபட்டவையாக இருந்திருக்கின்றன.

மேலும் அன்றைய காலங்களில் சாதாரணமாக வழக்கிலிருந்த எத்தனையோ சொற்கள் இன்று வழக்கிழந்து அல்லது அரும்பதங்கள் என்ற அடையாளங்களுடன் இருக்கின்றன. அது மட்டுமன்றி வேறு மொழிகளின் ஊடுருவல்களும் தமிழ் மொழியின் அடிப்படைத் தன்மைகள் சிலவற்றை மாற்றி அமைத்திருக்கின்றன. அத்துடன் காலத்தின் சுழற்சியில் அறிவியல், விஞ்ஞானத்தின் வளர்ச்சிகளால் சில கலைச் சொற்களின் உருவாக்கங்களும் தவிர்க்க முடியாதவையாக உள்ளன.

இவ்வாறாக ஏராளமான ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற மாற்றங்களை தமிழ் மொழி சந்தித்து வந்துள்ளது. இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த விடயங்கள் ஒருபுறமிருக்க நமது தமிழ் மொழிக்குள்ளே இருந்த பல தத்துவங்களும், கருத்துக்களும், சிந்தனைகளும் இன்று திரிபடைந்து வழக்கில் உள்ளமையையும் காணமுடிகின்றது. அந்த வகையில் நான் அறிந்த திரிபடைந்துள்ள விடயங்களில் சிலவற்றை இந்தப் பதிவின் வழியே பகிர்ந்து கொள்கின்றேன்...

இன்று பொதுவாக எல்லா விடயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் அனைவருக்கும் அதீத ஆர்வமுள்ளது உண்மைதான். இந்த எல்லா விடயங்கள் என்பதுக்குள் நல்ல விடயங்களும் வரும் தீய விடயங்களும் வரும். இத்தனை அடிப்படையாகக் கொண்டு நம்மிடையே "களவும் கற்று மற" என்று ஒரு கருத்து உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் இது தொன்றுதொட்டு வந்த ஒன்று என எண்ணுகின்றோம். ஆனால் இது அவ்வாறு வந்ததல்ல. அதாவது, அடிப்படையில் "களவும் கத்தும் மற" எனற கருத்தைத்தான் நாம் களவும் கற்று மற என்று மாற்றியிருக்கிறோம்.

இங்கு களவு என்பது திருட்டையும், கத்து என்பது பொய்யையும் குறிக்கின்றது. ஆகவே உண்மையில் களவையும், பொய்யையும் மறக்க வலியுறுத்துவதாகவே இதன் நோக்கம் அன்று அமைந்தது. ஆனால் நாம் இன்று கருத்தையே மாற்றிவிட்டோம். (நாங்கள்தான் அரிச்சந்திர பரம்பரையில் வந்தவர்களாச்சே என்று எண்ணி கத்தும் என்ன்பதை கற்று என்று மாற்றியிருப்பார்களோ???)

இனி அடுத்த விடயத்துக்கு வருவோம். இது கொஞ்சம் மகளீரணியோடு சம்பந்தப்பட்டது. அதாவது இன்று பெண்களின் மீதான ஆண்களின் நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்த பல பாடல்கள், கருத்துக்கள், தத்துவங்கள் வழக்கத்திலிருக்கின்றன. இதில் "சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே..", "பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்.." போன்ற பாடல்கள் பிரபலமானவை. இவ்வாறான பாடல்கள் ஒருபுறமிருக்க "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே" என்ற ஒரு வரிவடிவம் நமக்குள் வழக்கத்தில் உள்ளது. சேலை கட்டும் பெண்ணை நம்பக் கூடாது என்றால், சுடிதார் அணியும், ஜீன்ஸ், T சேட் அணியும், பாவடை தாவணி அணியும் பெண்களைத்தான் நம்ப வேண்டுமா?? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

உண்மையில் "சேலைகட்டும் பெண்ணை நம்பாதே" என்பது "சேல் அகட்டும் பெண்ணை நம்பாதே" என்பதிலிருந்து திரிபடைந்த ஒன்றாகும். இங்கு சேல் அகட்டும் பெண்ணை நம்பாதே என்றால் கண்ணடிக்கும் பெண்ணை நம்பாதே என்று அர்த்தம். (இனியாவது இந்தக் கண்ணடிக்கிற பெண்களை நம்பமாட்டீங்கதானே!!!) ஆக மொத்தம் எவ்வளவு அர்த்தமுள்ள கருத்தை திரிபுபடுத்தி சம்பந்தமே இல்லாமல் "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே" என்று சேலை கட்டி பொட்டு வைத்து அழகாக காட்சி தருகின்ற அத்தனை பெண்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்த விளைவது எந்த வகையில் நியாயம். (மகளீர் அணியினர் எனக்கு மாலை போட்டு கெளரவிக்க விரும்பினால் முகவரியை பிரசுரிக்கத் தயார்.)

இப்படி சேலை கட்டும் பெண்ணை நம்பாதே என்ற விடயம் அமைய அடுத்த விடயத்திற்கு வந்தால் இது கொஞ்சம் ஆன்மீகத்தோடு சம்பந்தப்பட்டது. (அதில் நமக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால்தானே!) அதாவது, "விதியை மதியால் வெல்ல முடியும்" என்ற ஒரு கருத்து நம்மிடையே நிலவுகின்றது. இத்தனை நம்மில் பெரும்பாலானோர் நமக்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதி என்ற ஒன்றை நமது புத்தியால் வெற்றி கொள்ள முடியும் என்று பொருள் கொள்கின்றோம்.

உண்மையில் விதி என்ற ஒன்று இருக்குமேயானால் அது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவே அமையும். (விதி என்பதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது வேடிக்கையாக இருக்கட்டும்) இப்படி நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒன்றை எப்படி நமது புத்தியால் வெல்ல முடியும்??? என்பது இயல்பான கேள்வி. ஆகவே நாம் விதியை மதியால் வெல்லலாம் என்பதை நமக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதியை நமது புத்தியால் வெல்ல முடியும் என்று அர்த்தம் கொள்ளவது பொருத்தமற்றதாகவே அமைகின்றது. மாறாக இத்தனை இறை நம்பிக்கை உள்ளவர்கள் குறிப்பாக சைவர்கள் "நமக்கென நிர்ணயிக்கப்பட்ட விதியை மதியை (சந்திரனை) தலையில் சுமந்த சிவனால் வெல்ல முடியும்" என்றும் ஏனைய சமயத்தவர்கள் "நமக்கென நிர்ணயிக்கப்பட்ட விதியை மதிபோன்ற (சந்திரன் போன்ற) தத்தமது கடவுள்களை விழித்து அவர்களால் வெல்ல முடியும்" என்றும் அந்தக் காலத்தில் அர்த்தம் கொண்டிருக்கின்றார்கள். (ஆஹா நம்மைப் போல கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் இனி இதனை உச்சரிக்கவே முடியாது போல)

இறுதியாக இன்னுமொரு மருவிய அர்த்தம் கொள்ளல், "எறும்பு தின்றால் கண் கூர்மையாகும்". எறும்பைப் பிடித்து பொரித்தோ, அவித்தோ, பச்சையாகவோ, தேநீரி, தண்ணீரில் கலந்தோ உட்கொண்டால் கண்கூர்மை பெறும் என்று நாம் இதனை அர்த்தம் கொள்கின்றோம். (அது சரி கண்கூர்மையாக கட்டெறும்பைப் பிடித்து தின்று உதட்டிலும், நாக்கிலும் கடிவேண்டிய உத்தமர்கள் உங்கள் அனுபவங்களை கருத்துரையில் மறைக்காமல் வெட்கப்படாமல் சொல்லிடுங்க)

எறும்பை சாப்பிடுவதால் கண்கூர்மை பெறும் என்று எந்த விஞ்ஞானம் அல்லது மருத்துவம் சொன்னது.?? ஆகமொத்தம் இதுவுமொரு தவறான புரிந்துகொள்ளல்தான். அதாவது அன்றைய காலங்களில் வீட்டிற்கு முன்னால் அதிகாலையில் அரிசிமாக் கோலம்போடும் வழக்கம் இருந்தது. (இப்போதும் சில வீடுகளில் உள்ளது) இந்த செயலுக்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டன. குறிப்பாக வீட்டுச் சூழலில் உள்ள எறும்புகள் போன்ற உயிரிகளுக்கு அரிசிமாக் கோலத்தின் மூலம் உணவு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆகவே இதன்படி கோலம்போடுவதை ஊக்குவிப்பதற்காக கோலத்திலுள்ள அரிசிமாக்களை எறும்பு தின்றால் கண் கூர்மையாகும் என்று சொன்னார்கள். இதனையே நாம் எறும்பைத் தின்றால் கண் கூர்மையாகும் என்று நினைத்து செயற்படுகின்றோம். (எறும்பு வியாபாரம் செய்யலாம் போல..)

இவ்வாறாக பல விடயங்கள் உள்ளன... எனக்குத் தெரிந்த அல்லது இனி அறிந்துகொள்ளப்போகின்ற இவ்வாறான விடயங்களை எல்லாம் உங்களோடு பகிர்ந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கின்றேன்...

Wednesday, August 26, 2009

இருபத்தைந்தாவது பதிவில் இதயம் திறக்கிறேன்....!!!!!!


இது எனது வலைப்பூவில் பதிவாகும் 26ஆவது பதிவு. ஆனால் எனது சொந்தப் பதிவென்று பார்த்தால் இது 25ஆவது பதிவு. பொதுவாக 25ஆவது பதிவை எழுதும்போது பலரும் தங்கள் பதிவுலக அனுபவங்களையும், அடுத்து வரப்போகும் தங்கள் பதிவுகளின் போக்குகள் தொடர்பிலும் சொல்வதுண்டு.
அந்தவகையில் மிகவும் குறுகிய அனுபவமுடைய நானும் எனது சின்னச் சின்ன அனுபவங்களையும் எதிர்காலத் திட்டங்களையும் இந்தப் பதிவின் வழியே சுருக்கமாக தருகின்றேன்.....
உண்மையில் நான் கடந்த மே மாதத்தில் இந்த வலைப்பூவை ஒரு விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருந்தேன். அப்போது வலைப் பூ தொடர்பான தொழில் நுட்ப அறிவோ, வேறு வலைப் பதிவாளர்களுடனான தொடர்புகளோ இருக்கவில்லை.
மேலும் வலைப்பூக்களை வாசிப்பதும், பின்னூட்டங்களை இடுவதும் அப்போது குறைவு அல்லது இல்லை என்று சொல்லலாம். அப்படியான ஒரு சூழலில்தான் இந்த வலைப் பூவை ஒரு மின்னஞ்சலை உருவாக்குவது போன்ற உணர்வுடன் ஆரம்பித்தேன்...
ஆரம்பித்ததன் பின்னர் இதில் என்னென்ன விடயங்களை இடுவது என்று சிந்தித்து முதலில் வேறு வலைத்தளங்களில் வெளியாகும் முக்கியமான செய்திகளை பிரதிபண்ணி வெளியிட்டு பரீட்சித்துப் பார்த்தேன்... ஆனாலும் அது ஆபத்தில் முடியுமோ என எண்ணி அவற்றை நீக்கிவிட்டு சினிமா சம்பந்தமான தகவல்கள் சிலவற்றை பிரதிபண்ணி வெளியிட்டேன்.
எனினும் அதுவும் திருப்திகரமாக அமையாமையால் அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு விளையாட்டாக கடந்த மே மாதம் 19ஆம் திகதி, அன்று பெரும்பாலானவர்கள் மத்தியில் இருந்த குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டு "இப்போதுள்ள குழப்பம்" எனற தலைப்பில் எனது முதலாவது சொந்தப் பதிவை பதிந்தேன்...
உண்மையில் இந்தப் பதிவை முழுமையாக்கிய பின்னர் எனது மனதில் ஒரு இனம்புரியாத திருப்தி உருவானது. அத்துடன் அந்தப் பதிவு கணினிக்கு முன்னால் அமர்ந்திருந்து யோசித்து, யோசித்து தட்டச்சு செய்த பதிவு. ஏற்கனவே எழுதவுமில்லை, தயார்ப்படுத்தவுமில்லை. அதாவது அது ஒரு திடீர் பதிவு. (இப்போதும் பெரும்பாலான பதிவுகள் அப்படித்தான் என்றாலும் கொஞ்சம் குறிப்பெடுத்துக் கொள்வதுண்டு.)
இப்படியாக எனது ஆரம்பப் பதிவே ஒரு அரசியல் பதிவாக அமைய அடுத்து எனது வலைப்பூவில் என்னென்ன விடயங்களை எல்லாம் பதியலாம் என்று சிந்தித்தபோது, சில முகப்புத்தக நட்புக்களும், இன்னும் சில நேரடி, தொலைபேசி நட்புக்களும் இதனை ஒரு பல்சுவை அம்சங்களிற்கான வலையாக பேணுமாறு கூறினார்கள்.
ஆனாலும் எனக்கு இதனை ஒரு அரசியல் கட்டுரைகளுக்கான களமாக பேணும் எண்ணமே இருந்தது. எனினும் தொடர் அரசியல் பதிவுகளின் ஆபத்தினை கருத்தில்க் கொண்டு எனது நட்பு உள்ளங்களின் ஆலோசனைப்படி பல்சுவை அம்சங்களிற்கான வலைத்தளமாக பதிவுகளை பதிய எண்ணி, அடுத்ததாக எனக்கும் எனது ஆருயிர் நண்பனுக்கும் (நண்பன் யுத்தத்தின் பிடிக்குள் சிக்கி உயிரிழந்துவிட்டான்) இடையில் நடந்த சுவையான விவாதம் ஒன்றை "கடவுள் உள்ளாரா?? இல்லையா???" என்ற தலைப்பில் பதிந்தேன்...
அதனைத்தொடர்ந்து "இயக்குனர்" என்ற தலைப்பில் கையிருப்பில் இருந்த ஒரு கவிதையென்று பதிவுகள் தொடர்ந்து இப்போது 25ஆவது சொந்தப் பதிவை பதிந்துகொண்டிருக்கின்றேன்.... (எனது வலைப் பூவில் வணக்கப் பதிவோ அல்லது விளக்கப் பதிவோ இல்லாமை இது ஒரு விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட திட்டமிடப்படாத வலைப்பூ என்பதற்கு ஆதாரமாக இருக்கும்...)
மேலும் நான் வலைப் பூவை ஆரம்பித்த மே மாதத்தில் மட்டும் மொத்தமாக 05 பதிவுகளை பதிந்திருந்தேன். அடுத்து ஜூன் மாதத்தில் 06பதிவுகள் ஜூலையில் 07பதிவுகள் என்று மாதம் ஒவ்வொரு பதிவுகளாக அதிகரித்திச் செல்வதே நோக்கமாக இருந்தது... இதுவரை அதை செய்யவும் முடிந்துள்ளது... அத்துடன் எனது பதிவுகளையும், படைப்புக்களையும் காத்திரமானவையாக்குவதுடன், அவற்றை பலரிடம் கொண்டு சேர்க்கின்ற தேவையும் உள்ளது...
அதுமட்டுமன்றி இனிவருங்காலங்களில் ஏனைய அனுபவஸ்தர்களின் வலைப்பூக்களை அதிகம் வாசித்து அவற்றுக்கு பின்னூட்டங்களை வழங்குவதுடன், தொழில் நுட்ப விடயங்களையும் கற்றறிந்து கொள்ளவேண்டியுள்ளது... உண்மையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல், வலைப்பூக்களை அதிகம் வாசிக்காமல், பின்னூட்டமிடாமல், தொழில் நுட்ப விடயங்களை அறிந்துகொள்ளாமல் உள்நுழைந்த எனக்கு மேற்படி விடயங்களை நடைமுறைப் படுத்துவது மிக மிக அவசியமான ஒன்று...
மேலும் புதிதாக வலைப்பதிவுகளை ஆரம்பிப்பவர்களின் வலைத்தளங்களை வாசித்து பின்னூட்டங்களால் உற்சாகப்படுத்த வேண்டுமென்கின்ற அதீத ஆர்வத்தில் உள்ளதுடன், எனது பதிவுகள் யார் மனதையும் புண்படுத்தாமல் அமைய வேண்டுமென்பதிலும் உறுதியாக உள்ளேன்...
உங்கள் அன்பும், ஆதரவும் துணையிருக்க எனது பயணம் இன்னும் தொடரும்.... உற்சாகப் படுத்தும் உள்ளங்களுக்கும், வலைத்தளத்திற்கு வரும் வாசகர்களுக்கும், ஆலோசனைகளை தரும் அன்பர்களுக்கும், உதவி புரியும் உறவுகளுக்கும் உள்ளத்தால் உண்மையான நன்றிகள்....

Sunday, August 23, 2009

முகாம்களை நோக்கி.....!!!!!!! பகுதி-02

ண்பன் வீதிச் சோதனையில் அடையாள அட்டை இல்லாமல் சிக்கியமையால் தடைப்பட்ட முகாம்களை நோக்கிய எனது முதலாவது பயணத்தை திங்கட்கிழமை காலை உறவினர் ஒருவறின் துணையுடன் ஆரம்பிப்பதாக தீர்மானித்திருந்தேன். எனினும் அவராலும் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் என்னுடன் கூட வருவதற்கு முடியாமல்போகவே அன்றைய பயணம் சாத்தியமாகுமோ? என்ற அச்ச உணர்வு தோன்றியது.
அப்போது எனது அன்னையார் தான் என்னுடன் வருவதாக சொன்னார். (எனக்கு இதற்கு முன்னர் அந்த முகாம்கள் அமைந்துள்ள செட்டிக்குளம் பகுதிக்கு சென்ற அனுபவம் கிடையாது. ஆனால் அம்மா ஓரிரு தடவை சென்று வந்திருக்கிறார்.) உண்மையில் அப்போது எனது அன்னையாரின் உடல்நிலை அவ்வளவு நன்றாக இருக்கவில்லை.
ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை எட்டு ஐம்பது மணியளவில் அம்மாவுடன் பொடி நடையாக வவுனியா பேரூந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இடையில் கொழும்பில் வாங்கிக் கொண்டு செல்வதற்கு தவறிய சில பொருட் கொள்வனவு...
வவுனியா பேரூந்து நிலையத்தை அடைந்தபோது அங்கு நிறைந்த மக்கள் கூட்டம். பிறகென்ன ஆரம்பமே வரிசைதான். (நமக்கு நிவாரணத்தில ஆரம்பித்து இப்ப மலசல கூடம், குளியல் வரைக்கும் வரிசை...வரிசை...) கூட்டத்தோடு கூட்டமாக கலந்து வரிசையில் நின்று பயணச் சிட்டையை பெற்றுக்கொண்டு பொதிச் சோதனையை முடித்துக்கொண்டு (எங்களுக்கு எங்குதான் சோதனை இல்லை..) பேரூந்துக்குள் புகுந்தால் அங்கு கால் கூட வைக்க முடியாதளவுக்கு பேரூந்து பயணிகளால் நிறைந்திருந்தது. எனக்கு இந்த அனுபவம் கொஞ்சம் பழக்கம் என்றாலும் அன்னையாரை எண்ணினால் பாவமாக இருந்தது.
அப்போது நம்மை பார்த்து நிறைய நேரம் புன்னகைத்துக் கொண்டிருந்த நம்மை நன்கு தெரிந்த ஆனால் நமக்கு திடீரென ஞாபகம் வராத ஒரு வயதான பெண் தனது இருக்கையை எனது அன்னைக்கு கொடுத்தார். உண்மையில் அவருக்கும் எனது அன்னைக்கும் இடையில் பெரிதாக வயது வேறுபாடு இருக்காது என்று நினைக்கின்றேன். இத்தனைக்கும் எத்தனையோ இளையவர்கள் அங்கு ஆசனத்தில் அமர்ந்திருந்தாள்.
ஒருவாறாக அந்த நல்ல உள்ளத்தின் உதவியால் அம்மா ஆசனத்தில் அமர நான் ஒற்றைக் காலில் தொங்கிக் கொண்டு நிற்க ஓடியது பேரூந்து. அது ஒரு அரச பேரூந்து. பொதுவாக முகாம்களுக்கு அரச பேரூந்துச் சேவையே இடம்பெறுகின்றது. பேரூந்துக் கட்டணம் 49 ரூபாய். ஐம்பது ரூபாய் கொடுத்தால் ஒரு ரூபாய் மிகுதி கிடையாது. இங்கென்றால் (கொழும்பில்) ஐம்பது சதம் மிகுதிக்காக நடத்துனருடன் சண்டையிடும் எத்தனையோபேரை கண்டிருக்கின்றேன். அந்தவகையில் இது நம்மவர்களின் நல்ல ஆனால் பலவீனமான பழக்கம் என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன். (நமது உரிமைகள் பறிக்கப்பட்டால் அல்லது நம்மை மற்றவர்கள் ஏமாற்றினால் அதனை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற அடிப்படையில் கொஞ்சம் பலவீனமானதே.)
பேரூந்து யாழ்-கண்டி வீதியில் சிறிது தூரம் பயணித்து பின்னர் வவுனியா கச்சேரியை அண்டியுள்ள வவுனியா-மன்னர் வீதியால் திரும்பி சென்று கொண்டிருந்தது.
இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் சொல்ல வேண்டும் அதாவது பேரூந்தில் பயணித்த பயணிகளிடம் எங்கு செல்கின்றீர்கள் என்று நடத்துனர் கேட்டபோதெல்லாம் ஒற்றை வார்த்தையில் ராமநாதன், ஆனந்தகுமாரசுவாமி, அருணாசலம்.... என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எத்தனை உயர்ந்த மனிதர்கள். அவர்களின் முன்னால் மரியாதைக்காக வழங்கப்பட்ட சேர்பொன், கலாயோகி எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதா??? குறைந்த பட்சம் அவர்கள் ராமநாதன் முகாம், ஆனந்தகுமாரசுவாமி முகாம், அருணாசலம் முகாம்.... என்று அழைத்திருந்தாலாவது ஆறுதலடைந்திருக்கலாம். (முகாம்களிற்கு முன்னால் உள்ள பெயர்ப் பலகைகளிலும் சேர்பொன், கலாயோகி போன்ற கெளரவங்களை காணவில்லை.)
வவுனியா-மன்னர் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பேரூந்து பூவரசங்குளத்தை அடைந்து அங்கிருந்து இடது பக்கமாக திரும்பி பூவரசங்குளம்-செட்டிக்குளம் வீதியால் சென்றது. இந்த வீதியில் தார்களே இல்லாத பல பகுதிகளை தரிசிக்க முடிந்தது. இந்த வீதியில்ருந்து வலது பக்கமாக திரும்பிய பேரூந்து மன்னார்-மதவாச்சி வீதியால் மன்னார் போகும் திசையில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியின் வலது பக்கத்தில் முதலாவது முகாம். அது கதிர்காமர் முகாம். இந்த முகாம் மட்டுமே வீதியின் வலது பக்கமாக உள்ள முகாம் என்பதுடன், இதுவே வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கூட்டிச் சென்று காண்பிக்கப்படுகின்ற கொஞ்சம் தரப்படுத்தப்பட்ட முகாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமை அடுத்து சிறிது தூரமாக சென்றால் வலது பக்கத்தில் அடுத்த முகாம். அது கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களின் பெயரில் அமைந்த முகாம். அதனை அடுத்து அதற்கு அருகாக சேர்பொன் ராமநாதன் அவர்களின் பெயரில் அமைந்த முகாம். இந்த முகாமை நோக்கியதாகவே எனது முதலாவது பயணம் அமைந்தது.
முகாமிற்கு முன்னால் பேரூந்து தரித்தபோது நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திக்கப் போகும் அந்த உறவுகளை காணும் அதீத உற்சாகத்துடன் கால்பதித்து வீதிக்கு வலது பக்கமாக இருக்கும் பார்வையாளர்கள் பதிவு, சோதனை நிலையத்திற்கு சென்றால் அங்கும் நிறைந்த கூட்டம். பிறகென்ன மீண்டும் வரிசைதான். வேகாத வெயில் வேறு.. ஒரு தடவையில் கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து பேரைத்தான் பார்வையிடுவதற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே பார்வையிட முடியும் என்றார்கள். வவுனியாவிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள் ஒற்றைக்காலில் பேரூந்தில் தொங்கி வந்து இங்கு பத்து நிமிடங்கள் மட்டும்தான் பார்க்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.
ஒருவாறு மனதை சமாதானம் செய்துகொண்டு வரிசையோடு வரிசையாக கால்கடுக்க நின்று அடையாள அட்டையை பதிந்து, பின்னர் பொதிகளை சோதனைக்கு கொடுத்தபோது அவர்கள் பல பொதிகளில் கொண்டு வந்தவற்றை ஒரு பொதிக்குள் அடக்கி, சுருட்டி, சுமையாக்கி தந்தார்கள். வீதியைக்கடந்து முகாமின் சந்திப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அந்த இடத்தை நோக்கி நகர்ந்தபோது என்னினிய சொந்தங்கள் அந்த வேகாத வெயிலுக்குள் நமது வருகைக்காக காத்திருந்தார்கள்... (ஏற்கனவே நமது வருகையை தெரியப்படுத்தியிருந்தோம்)
கண்ணீரால் கழுவப்பட்ட முதலாவது சந்திப்பு....
தலையில் ஒரு தொப்பிகூட இல்லாமல் அவர்கள் நின்றதை பார்த்தபோது எமது வருகை அவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் என்பதை உணர்ந்தேன்... நீண்ட காலம் சந்திக்காத, நிறைய துயரங்களை, இழப்புக்களை சுமந்திருந்த உறவுகளை கண்டவுடன் மனதில் இருந்த துன்பச் சுமைகள் எல்லாம் திரண்டு வந்துகொண்டிருந்தது. ஓ! என்று பலமாக உரத்த குரலில் அவர்களை அரவணைத்து அழவேண்டும் என்று தோன்றியது. ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் கண்ணீரை தடுக்க முடியவில்லை. மெளனமாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. கதைப்பதற்கு நா தளதளர்த்தது அதனால் வார்த்தைகள் வர மறுத்தன. அன்றைய சந்திப்பு அது கண்ணீரால் கழுவப்பட்ட சந்திப்பு.
எனது உறவினர்களின் கையை தொட்டு பேச எண்ணி கையை நீட்டினால்,,, வலை வடிவில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்த அந்த இரட்டை முள்வேலி இடம்தர தாமதித்தது.. ஒருவாறு கையை நீட்டி அவர்கள் கரம் தொட்டுக் கொண்டபோது கவலைக்குள்ளும் ஒரு சந்தோசம்.. இந்த சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது அந்த வேலிக்கு பின்னால் முகாமுக்குள் கையில் குழைந்தையுடன் நின்ற ஒரு இளம்பெண் வயிற்றுப்பசிக்காகவோ என்னவோ மற்றவர்களிடம் கை ஏந்திக்கொண்டிருந்தாள். மனம் இரங்கியது.... நெஞ்சு வலித்தது... உண்மையில் முகாம்களில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்தாலும் அப்படி வசதி இல்லாத பலரும் அங்கு இருக்கின்றார்கள்...
விசில் ஊதப்பட்டது... நேரம் பத்து நிமிடங்களை கடந்துவிட்டது.... இனி அங்கு நிற்க முடியாது.... கையில் கொண்டுசென்றதை கொடுத்துவிட்டு விடைபெற்றேன்... அப்போது உறவினர்கள் ஆனந்த குமாரசுவாமி முகாமில் என்றால் அதிக நேரம் நின்று கதைக்கலாம் நாங்கள் நாளை அந்த முகாமுக்கு வருகிறோம் நீங்களும் வாருங்கள் என்றார்கள்...(இந்த இரண்டு முகாம்களும் அடுத்தடுத்து உள்ளதால் அங்கும் ஒரு வரிசையில் நின்று அனுமதி பெற்று பக்கத்து முகாமுக்கு செல்லும் வசதி உண்டு) வருகிறேன் என்று கூறி விடைபெற்றேன்... அது ஒரு அவசர விடை பெறல்... விடை பெற்று சென்று பேரூந்தில் ஏறும் வரை உறவுகள் அந்த வேகாத வெய்யிலில் நின்று கையசைத்து எம்மை வழியனுப்பி வைத்தார்கள்....
((((இது அத்தியாயத்தின் ஆரம்பம் இனி அடுத்த அத்தியாயம்... முகாம்களை நோக்கி இன்னும் வரும்....))))

இனிதே நிறைவுற்றது இலங்கை வலைப் பதிவாளர் சந்திப்பு...!!!

இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழைமை திட்டமிடப்பட்டதற்கு அமைவாக இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு காலைப் பொழுதில் ஆரம்பமாகியது. அந்த வகையில் முதலாவதாக வரவேற்புரை இடம் பெற்றது. வரவேற்புரையினை புல்லட் என்று எல்லோராலும் அறியப்பட்ட பவன் நிகழ்த்தினார்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும், அதாவது புல்லட் தனது வலைப்பூவில் பதிந்த வலைப்பதிவாளர் சந்திப்பு நிகழ்வது போன்ற ஒரு கனவுப் பதிவுதான் இந்த ஒன்றுகூடலுக்கு காரணமாக அமைந்திருந்தது. உண்மையில் தனது புனை பெயருக்கு ஏற்ப அவர் ஒரு நகைச்சுவை மன்னனாகவே இருந்தார். அவருடைய வரவேற்புரையில் இதனை காண முடிந்தது.

வரவேற்பைத் தொடர்ந்து வலைப்பதிவும் சட்டமும் என்ற தலைப்பில் சுபானு என்னும் புனைபெயரைக் கொண்ட சயந்தன் சில விளக்கக்ங்களை கொடுத்திருந்தார். இந்த விளக்கத்தில் எமக்கு தெரியாத பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு நிறுவன ரகசியங்களை பதிவேற்றுவது, மற்றவர்களின் பதிவுகளை பிரதி பண்ணி வெளியிடுவது போன்ற செயற்பாடுகளில் சட்டம் எப்படி பாயும் என்பது தொடர்பான விளக்கம் சிறப்பாக இருந்தது.

இவரின் இந்த விளக்கவுரையைத் தொடர்ந்து அதிகமானோர் பயன்படுத்தும் வலைப்பூவான Bloggerஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பத்து மெழுகுதிரிகளை ஏற்றி கேக் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த பத்து மெழுகுதிரிகளில் இரண்டாவது மெழுகுதிரியை ஏற்றுவதற்காக வயதாலும், அனுபவங்களாலும் மிகவும் சிறியவனான என்னை அழைத்திருந்தார்கள். மெழுகுதிரி ஏற்றப்பட்டதும் கேக் வெட்டப்பட்டது. கேக்கினை மூத்த ஊடகவியலாளரான திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள் உட்பட்ட அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் சிலர் வெட்டினார்கள்... ஆதிரை என்ற புனைப்பெயர் கொண்ட ஸ்ரீகரன் Bloggerஇன் பத்தாவது ஆண்டு நிறைவைப்ப்பறிய சில கருத்துக்களை வழங்கினார்.

அடுத்து வலைப் பதிவாளர்களுக்கிடையிலான அறிமுகம் இடம் பெற்றது. இலங்கையின் சகல பாகங்களிலுமிருந்து (யாழ்ப்பாணத்திலிருந்தும்) இந்த நிகழ்வில் வலைப்பதிவாளர்கள், பின்னூட்டமிடுவோர், வலைப்பதிவை ஆரம்பிக்கவுள்ளவர்கள், வாசகர்கள் என கிட்டத்தட்ட எண்பதுக்கும் அதிகமானவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்கள். உண்மையில் எழுத்துக்களால் மட்டும் அறியப்பட்ட முகம் தெரியாத பலரை சந்திக்கக் கிடைத்தமை மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

வலைப் பதிவாளர்ளுக்கிடையிலான அறிமுகங்களைத் தொடர்ந்து மருதமூரான் என்ற புனைபெயரைக் கொண்ட புருஷோத்தமன் வெளிப்படுத்தல் என்ற தலைப்பில் சில விளக்கங்களைக் கொடுத்திருந்தார். இந்த விளக்கவுரையில் தமிழ்மணம், தமிழிஸ், பூச்சரம் போன்ற திரட்டிகள் தொடர்பாக சொல்லப்பட்டதுடன், இலங்கை வலைப்பதிவாளர்களுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ்தேவி, மாயாலங்கா திரட்டிகள் பற்றியும் கூறப்பட்டது. இதில் யாழ்தேவி தமிழ்ப் பதிவுகளுக்கான திரட்டி என்பதுடன் மாயாலங்கா சிங்கள, ஆங்கில பதிவுகளுக்கான திரட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த திரட்டிகள் பற்றி பேசும்போது பலரும் தங்கள் சந்தேகங்களையும், கருத்துக்களையும் கூறியிருந்தார்கள். குறிப்பாக பெரும்பாலானவர்கள் யாழ்தேவி என்ற பெயர் பிரதேச குறியீடாக அமைவதுடன் அது அரசியல் ரீதியான ஒரு குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறு பல கருத்துக்கள், விவாதங்களுடன் இந்த நிகழ்வு நிறைவுபெற அடுத்ததாக சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மூத்த ஊடகவியலாளரான திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது பதிவுலக அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டதோடு விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பதிவாளர்களுக்கு சில ஆலோசனைகளை அல்லது அன்பான வேண்டுகைகளை வழங்கியிருந்தார். உண்மையில் பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள்தான். எத்தனை பெரிய மனிதர் திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள். ஆனாலும் அந்த கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் மிகவும் இயல்பாக பேசினார். இவரிடமிருந்து நம்மைப் போன்றவர்கள் கற்கவேண்டியவை இன்னும் இன்னும் ஏராளம் உள்ளன என்று எனது உள்ளம் சொன்னது.

இந்த சிறப்புரையைத் தொடர்ந்து சேரன் கிரிஷி அவர்கள் சில தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கினார். உண்மையில் எம்மைப் போன்றவர்களுக்கு அது மிகவும் பிரயோசனமாக இருந்தது. அவரின் தொழில்நுட்ப விளக்கங்களில் வலைப்பூவை பாதுகாப்பது எப்படி என்ற கருத்து மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

இனி என்ன மீண்டும் புல்லட்.... தனது வலைப்பதிவு அனுபவங்களை சுவாரசியமாக அவருக்கேயுரிய பாணியில் பகிர்ந்துகொண்டார்..

அடுத்து வலைப்பதிவாளரும் இளைய தலைமுறை அறிவிப்பாளர்களின் முதல்வனுமான திரு.லோஷன் அவர்களின் அனுபவப் பகிர்வு இடம்பெற்றது. தலைப்புக்களால் வாசகர்களை கவர்வது தொடர்பாகவும், சீரியஸ் பதிவுகளுக்கு கிடைக்கும் குறைந்த வரவேற்புக்கள் தொடர்பான தனது ஆதங்கத்தையும் அவர் சொல்லியிருந்ததுடன் சில இந்தியத் தமிழை நாங்கள் பயன்படுத்துவது தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவரின் இந்த பகிர்வுகளைத் தொடர்ந்து பதிவர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில் அதிகமாக விசைப் பலகைகளின் பாவனை மற்றும் யாழ்தேவி என்ற பெயரில் உள்ள சிக்கல் நிலை தொடர்பாகப் பேசப்பட்டது. மேலும் பலர் தங்கள் பல விதமான கருத்துக்களையும் முன்வைத்திருந்தார்கள்..

இந்த வலைப்பதிவாளர் சந்திப்பின் இறுதி நிகழ்வாக வந்தியத்தேவன் என்ற புனை பெயர் கொண்ட மயூரனின் பின்னூட்டலும் நன்றியுரையும் இடம் பெற்றது. உண்மையில் இங்கு வந்தியத்தேவன் அவர்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம். அதாவது நான் இந்த வலைப்பதிவாளர் சந்திப்புக்கு சென்ற போது வாசலில் நின்றவர்கள் வந்தியத்தேவன் அவர்களும் புல்லட் அவர்களும்தான். இதில் வந்தியத்தேவன் அவர்கள் எந்தவித பெருமையும் இல்லாமல் இயல்பாக பேசியமை என்னை மிகவும் கவர்ந்தது. புல்லட் அவர்களும் அப்படித்தான். அவரும் இயல்பாக மிகவும் நகைச்சுவை உணர்வோடு பேசினார்.

இவ்வாறாக அமைந்த இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் திரு.லோஷன், திரு.வந்தியத்தேவன், திரு.புல்லட், திரு ஆதிரை ஆகிய நான்கு சிங்கங்கள் என்பதுடன் இந்த நிகழ்வை இனிமையாக வெற்றி FM இன் புதிய அறிவிப்பாளரான சதீஷ் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்வை இணையத்தின் வழியே நேரடியாக ஒளி, ஒலிபரப்பும் ஆர்வத்தை வெளியிட்டு அதனை சிறப்பாக மது அவர்கள் செய்திருந்தார்.. அத்துடன் இந்த நிகழ்வு சிறக்க இன்னும் எத்தனையோ உள்ளங்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்..

இப்படியாக இனிதே நிறைவுற்றது இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு.

(((வடை, பற்றீஸ், கேக், கோப்பி எல்லாம் தந்தாங்கப்பா... அதை சொல்லாட்டி பலரும் கோபப்படுவாங்களே. ...)))

Friday, August 21, 2009

புகையிரத பயணத்தில் உதித்த சின்ன சின்ன கற்பனைகள்..

எழில் கொஞ்சும் குளு குளு மலையகப் பயணத்தின்போது உதித்த சின்ன சின்ன கற்பனைகளை இந்தப் பதிவு சுமந்து வருகிறது....

நீ பார்த்த பார்வை...

முழு முகச் சவரம் செய்துவிட்டு

வகுப்பறைக்குள் நான் வந்த போது

ஓரக் கண்ணால் ஒழிந்தொழிந்து நீ பார்த்த பார்வை

இன்னும் என் உள்ளத்தில் உள்ளதடி..

கண்ணீர்!!!!....

இளவரசனின் மரணத்துயரால்

இளவரசி சிந்திய கண்ணீர்

அங்கே அருவியாய் கொட்டுதாம்..

அப்போ

உலகில் உள்ள மொத்தக் கடலும்

உன்னை பிரிந்திருந்த நாட்களில்

நான் பொழிந்த கண்ணீரா???

கடந்து செல்கின்றாய்....

மிதி பலகையில் பயணித்த போது

தென்றல் வருடிய ஒவ்வொரு கணமும்

நீ என்னை கடந்து சென்ற ஞாபகங்கள்....

மறக்காது....

கணப்பொழுதில்

கன்னத்தில் நீ தந்த காந்த முத்தம்

மரணத்தின் கடைசி மணித்துளிவரை

மறக்காது பெண்ணே.......

கெளரவம்..

மெல்லினிய உன் சொல்லொலி

காற்றலையில் கலக்கையில்

காற்றலையும்

கெளரவம் பெறுகுதடி பெண்ணே..

இங்கொரு இதயம்...

ஓங்கி வளர்ந்த ஆலமரம்

அதில் ஓய்யாரமாய்

பல பச்சைக்கிளிகள்...

வாழ்ந்த காலத்தை மறக்கமுடியுமா??

கடந்துபோன

கல்லூரிக்காலம் இனி வராதா?? என்ற ஏக்கத்துடன்

இங்கொரு இதயம்...

பிரிவு...

அந்தப் புகை வண்டிப் பயணத்தில்

ஒவ்வொரு மலைக் குடைவுகளை கடந்தபோதும்

உன்னைப் பிரிந்திருந்த இருண்ட நாட்கள்

நிழலாடின நெஞ்சில்....

மெளனம்...

நீண்ட உன் மெளனம்

எனக்குள் நிறைந்த சலனம்...

அது மரண வேதனையிலும் கொடியது....

மங்கையே!

இன்றே உன் மெளனம் கலைத்து

என் சலனம் களைந்துவிடு....

இல்லையேல்

இந்த இதயம் இனியும் தாங்காது....

பார்வை...

உயர்ந்த மலையின்

உச்சியிலே நின்றபோது

பனித்துளிகள் மேனி தடவிய

மணித்துளிகள் ஒவ்வொன்றும்

உன் பார்வை

என்மேல் பட்ட நாட்களை மீட்டிச் சென்றன...

மாற்றுவோம்....

காலங்கள் மாறும் என்றிருக்காமல்,

காலத்தை நாம் மாற்றுவோம்...

பொறாமை..

தங்கு தடையின்றி

தண்டவாளத்தில் பயணிக்கும்

புகையிரதத்தை பார்க்க

பொறாமையாய் உள்ளதடி....

இந்த புகையிரதம்போல்

எங்கள் காதல் இல்லையே!!!!

நீயே வருகிறாய்...

நீண்ட நினைவேடுகளின்

பசுமையான பக்கங்களில் எல்லாம்

அழியாத அழகிய குறிப்புக்களாய்

நீயே வருகிறாய்....

ஏக்கம்!!!!

அந்த புகையிரத ஊழியர்

பச்சைக் கொடி அசைக்கும்போதெல்லாம்

நீ என் காதலுக்கு

பச்சைக்கொடி காட்டாயோ

என்ற ஏக்கம் எனக்குள்ளே!!!!

செல்லாக் காசு....

பசிக்குது தர்மம் பண்ணுங்க...

வயசான முதியவர்...

ஒரு கையில் பொல்லு மறு கையில் தட்டு....

கந்தல் ஆடை...

முகச்சவரம் செய்து பல நாட்கள் இருக்கும்....

மனம் இரங்கியது...

பக்கத்துக் கடையில் பாண் வாங்கிக்கொடுக்க எண்ணி

கடைக்காரனிடம் பணத்தை நீட்டினேன்....

கரையில் சின்ன கிழிசலால்

அது செல்லாக்காசு என்றான் கடைக்காரன்....

சின்ன மெளனம்...

இன்னுமொரு காசை நீட்டினேன்...

கம கம பாணை கையில் தந்தான்...

இப்போ அந்தப் பாண்

முதியவரின் கைக்கு மாறியது...

பசியின் கொடுமை

அவர் அதை சாப்பிட்ட அழகில் தெரிந்தது...

முதியவரின் முகம்

மெல்ல மெல்ல மலர்ந்தது....

விடைபெற்றேன்...

இப்போ,

அந்த செல்லா காசின் ஞாபகம்...

எடுத்துப் பார்த்தேன்...

கொஞ்சம் சிந்தித்தேன்....

செல்லாக் காசு...

இது செல்லாக் காசு...

கரை கொஞ்சம் கிழிந்ததனால் அல்ல!

ஏழையின் பசியை போக்காததால்...

செல்லாக் காசு...

இது ஒரு செல்லாக் காசு.....

Sunday, August 16, 2009

முகாம்களை நோக்கி...... பகுதி-01

வவுனியா முகாம்களில் உள்ள எனது நண்பர்களையும், உறவினர்களையும் பார்வையிடுவதற்காக செல்லவுள்ளேன் என்று கூறியபோது, நண்பர்கள் சிலர் அங்குள்ள உண்மை நிலைமைகளை எடுத்து வருமாறு கூறியிருந்தார்கள்..

நண்பர்களின் இந்த வேண்டுகோளே இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருக்கிறது. அதாவது நண்பர்கள் அவாறு சொன்னபோதே வவுனியா முகாம்களை நோக்கிய பயணத்தை பயண அனுபவமாகவும், இன்னோரன்ன விடயங்களை வெளிப்படுத்துவதற்காகவும் வலைப்பூவின் வழியே பகிர்ந்துகொள்ள எண்ணினேன்.

இதன்படி எனது பயணத்தையும், அங்கு நடந்த விடயங்களையும் இந்த பதிவுத்தொடரின் மூலம் பகிர்ந்துகொள்கிறேன்..

நான் கடந்த சித்திரை வருடப்பிறப்பிற்கு வவுனியா சென்று வந்ததன் பின்னர் பல முறை அங்கு சென்றுவர வேண்டிய தேவை இருந்தபோதிலும் நேரச்சிக்கல் காரணமாக அது சாத்தியமாகவில்லை. அதாவது கடந்த மே மாதத்தில்தான் வவுனியாவை நோக்கி முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்த எனது உறவினர்களும், நண்பர்களும் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். எனவே நீண்டகாலமாக சந்திக்க முடியாமல் அந்த இரத்தபூமியில் இருந்து வந்த அவர்கள் எல்லோரையும் சென்று பார்க்க வேண்டிய தேவை இருந்தது.

இப்படியாக அங்கு சென்றுவர வேண்டிய அவசியம் இருந்த போதிலும் அது சாத்தியமாகவில்லை. அதனால் கவலை தோய்ந்து இந்த இயந்திர வாழ்வுக்குள் இயங்க்கிக்கொண்டிருந்தபோதுதான் இந்தப் பயணம் சாத்தியமானது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அங்கு செல்ல முடியும். இது எனக்கு மிகுந்த சந்தோசம். அன்றைய தினம் இரவு தபால் புகையிரதத்தில் வவுனியா நோக்கி பயணிக்க தீர்மானித்து, முதல் நாள் வெள்ளிக்கிழைமை ஆசன முற்பதிவுக்க்காக கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றிருந்தேன். (முற்பதிவு சாத்தியமாகுமா என மனதில் கொஞ்ச பயமிருந்தது.)

ஆசன முற்பதிவுச் சிட்டையை பெற்றுக்கொண்டு அன்றைய வழக்கப்படி அலுவலகம்... அங்கிருந்து வீடு செல்ல நேரம் இரவுப்பொழுது........ அதனால் நண்பர்களுக்கும், உறவினர்களுக்குமான பொருட்கொள்வனவை அடுத்த நாளைக்கு (சனிக்கிழமை) ஒத்திவைத்துவிட்டு சில வேலைகள்........

இது நான் வவுனியா பயணிக்கவுள்ள சனிக்கிழமை காலைப்பொழுது.. வழக்கமான கற்கைநெறி வகுப்பு.. அது முடிய மதியமாகிவிட்டது.. இப்போது அந்த பொருட்கொள்வனவு.. முடிய கிடைத்த குறுகிய நேரத்துக்குள் முகப்புத்தகத்துடன்... பின்னர் கொழும்பில் நான் தங்கியுள்ள வீட்டை நோக்கி... அங்கு செல்லும்போது இரவு ஏழு மணி கடந்திருந்தது. பயணப்பையை தயார் செய்தேன்... (இதுதான் நம்ம வழக்கம்..) உணவு.... அதன் பின் பேரூந்து தரிப்பிடம் நோக்கி நகர்வு.. நேரம் இரவு எட்டு மணி முப்பது நிமிடத்தை அண்மித்துக்கொண்டிருந்தது. பேரூந்து தரிப்பிடத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் நோக்கி பேரூந்தில் ஒரு பயணம்.. நேரம் ஒன்பது மணியைத் தொடுவதற்கு இன்னும் சில மணித்துளிகள் மட்டுமே இருந்தன...

புகையிரத நிலைய நுழைவாயிலில் வழமையான சோதனை.. எனது பயணப்பை மிகவும் சிறியது என்றாலும் எனக்கு முன்னால் நின்றவர் ஏராளமான மிகவும் பெரிய பைகளை வைத்திருந்தமையால் அதில் ஒரு தாமதம்.. எல்லாம் முடிந்து உள்ளே போனால் அங்கு என்றுமில்லாத அளவுக்கு மூன்றாம் மேடையில் (இதுதான் வவுனியா புகையிரதம் வரும் மேடை) நிறைந்த மக்கள் கூட்டம். அப்போது பக்கத்தில் நின்ற ஒருவர் "இன்று என்றுமில்லாத அளவுக்கு கூட்டமாக உள்ளதே! எப்படி இதுக்குள்ள சீட் கிடைக்கப்போகுது" என்று சலித்துக்கொண்டார். "நல்ல வேளை ஏற்கனவே முற்பதிவு செய்துகொண்டேன்" என்று எனது உள்மனம் சொன்னது.(சுயநலம்)

நேரம் ஒன்பது மணி முப்பது நிமிடத்தை அண்மிக்கும்போது அந்த புகையிரதம் வந்தது.. உண்மையில் அது வழக்கமாக முதலாம் மேடையில் வரவேண்டிய புகையிரதம். அதாவது பதுளை நோக்கி செல்லும் புகையிரதம். அப்போதுதான் என்றுமில்லா கூட்டம் அன்று நின்றமை ஏன் என்று புரிந்தது. அந்தபுகையிரதம் புறப்பட்டது... இனி நமக்கான புகையிரதம்..... ம்ம்... அதுவும் வந்தது....

வவுனியா நோக்கி செல்லும் தபால் புகையிரதம் வந்தது... நேரம் ஒன்பது மணி நாற்பத்தைந்து நிமிடமாகிக்கொண்டிருந்தது... பயணிகள் எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள்... நானும் என் பங்கிற்கு ஏறினேன்... சிறிது நேரத்தில் புகையிரதம் புறப்பட்டது.....

தனியாக இருந்து இந்த இயந்திரமயமாக்கப்பட்ட நகரத்திற்குள் வாழ்க்கையை நகர்த்தும் எனக்கு எனது சொந்த இடத்திற்கு ஓரளவு அண்மையில் இருக்கக்கூடிய வவுனியா நோக்கிய பயணமும், அங்குள்ள என் உறவுகள், நண்பர்களை பார்க்கும் ஆர்வமும் மனதுக்கு இனிமையாகவும், சந்தோசமாகவும் இருந்தது. வழக்கமாக இரவு புகையிரதங்களில் பயணிக்கும்போது உறக்கம் வருவது குறைவு. ஆனால் அன்று வழமைக்கு மாறாக கொஞ்சம் தூக்கம்...

நான் எனக்கு ஆறு வயது இருக்கும்போது புகையிரதத்தில் முதன்முதலாக பயணித்திருக்கின்றேன்.. அதற்கு பின்னர் அங்கும், இங்குமென பலமுறை பயணித்தாலும் இம்முறை பயணம் ஒரு உற்சாக உணர்வைகொடுத்தது..

ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நேரம் அதிகாலை ஐந்துமணி பதினைந்து நிமிடத்தை கடந்திருந்தது... புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை அடைய பயணிகளோடு பயணிகளாக கால்பதித்தேன்... அப்போது வவுனியா நிலையத்தில் கடுகதி புகையிரதத்தில் கொழும்பு நோக்கி வருவதற்கான பயணிகள் வரிசையில் காத்திருந்தார்கள்.. ((ம்ம்ம்... எங்கு போனாலும் வரிசைதான்.))எம்மை இறக்கிவிட்டு நாம் வந்த அந்த புகையிரதம் தாண்டிக்குளம் நோக்கி புறப்பட்டது. உள்ளே புகையிரத ஊழியர்களை மட்டுமே காணக்கிடைத்தது.(இதனால் அரசாங்கத்துக்கு எவ்வளவு நஷ்டமாகியிருக்கும்? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது.)

இப்போது புகையிரத நிலையத்திலிருந்து முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி ஒரு பயணம்.. அப்போது வவுனியாவில் தேர்தல் காற்று பலமாக அடித்துக்கொண்டிருந்தது.. சுவரொட்டிகளால் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன... வீட்டை அடைந்தபோது நிலம் கொஞ்சம் தெளிந்து பொழுது புலர்ந்துகொண்டிருந்தது..

உண்மையில் அன்றைய தினமே அதாவது ஆகஸ்ட் இரண்டாம் திகதி ஞாயிற்றுக் கிழைமை அன்றே முகாம்களுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தபோதிலும், எனது நண்பன் ஒருவன் வவுனியாவில் வீத்திச்சோதனையில் அடையாள அட்டை இல்லாமல் வந்து சிக்கிக்கொண்டமையால் (அவன் அடையாள அட்டையை தொலைத்திருந்தான்) அது சாத்தியமாகவில்லை.. எனவே அன்றைய பொழுது வீட்டிலையே கழிய அடுத்தநாள் திங்கட்கிழமையை முகாம்களுக்கான முதலாவது பயண நாளாக தீர்மானித்தேன்....

(((((இது ஆரம்பம் இனித்தான் அத்தியாயம்... முகாம்களை நோக்கி....... இன்னும் வரும்........)))))

Friday, August 14, 2009

அந்த நாள் ஞாபகம்.......!!!!!!

கொஞ்ச நாளாய் வலைப்பதிவிடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை... இந்த மாதம் மொத்தம் எட்டு பதிவுகளை இடுவதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனாலும் மாதத்தின் அரைவாசி நாட்கள் கடக்கவுள்ள நிலையில் ஒரு பதிவுடன் வலைப்பூ இருக்கிறது. கைவசம் ஏராளமான விடயங்களை பதிய சிந்தித்துள்ள போதிலும் வவுனியா சென்று வந்ததன் பின்னர் கொஞ்சம் நேரம் பிரச்சினையாக உள்ளது.

அதாவது பாதியில் விட்டுவிட்டு சென்ற சில கல்வி சம்பந்தமான செயற்றிட்டங்களை பூரணப்படுத்த வேண்டியிருப்பதாலும், இம்முறை அம்மா, அப்பாவையும் என்னுடன் அழைத்து வந்துள்ளமையால் அவர்களின் சில பிரத்தியேக அலுவல்களிற்காக நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளதாலும் நேரம் கிடைப்பது குறைவாக உள்ளது.

இந்த நிலையில் இடையில் கிடைக்கும் நேரம் மூஞ்சிப்புத்தகத்தை பார்ப்பதற்கே போதுமானதாக இருக்கிறது. சரி ஒரு சின்ன பதிவையாவது இடலாம் என்றால் அதற்கும் மனம் இடங்க்கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில் கிடைத்திருக்கும் குறுகிய நேரத்தில் ஒரு அவசரப்பதிவாக வருகிறது இந்தப்பதிவு........

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத பல சம்பவங்கள் இருக்கும். அவற்றுள் பல சம்பவங்கள் முதன் முதலாக என்ற தலைப்புக்குள் அடக்கப்படக்கூடியவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது முதன் முதலாக பள்ளி சென்றது, கிணற்றில் தண்ணீர் அள்ளியது, துவிச்சக்கர வண்டி செலுத்தியது, உந்துருளி செலுத்தியது, பேரூந்தில் பயணித்தது, தொடரூந்தில் பயணித்தது, விமானத்தில் பயணித்தது, நூறு மதிப்பெண்கள் பெற்றது, காதல் கடிதம் கொடுத்தது, விளையாட்டில் ஜெயித்தது............ என்று இந்தப்பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். (சேரனின் ஞாபகம் வருதே பாடல் உங்களுக்கு ஞாபகம் வருகுதா??)

என்னைப்பொறுத்த வரையில் இவ்வாறான முதன்முதல் சம்பவங்கள் நடந்த திகதிகள் ஞாபகம் இல்லாவிட்டாலும் அவை மிகவும் சுவாரசியமானவை என்றே சொல்லுவேன். அந்த நாட்களை நான் மீள மீள நினைக்கவே விரும்புகிறேன். இப்படி உங்கள் வாழ்வில் நடந்த விடயங்களையும் நீங்கள் மீள நினைவுபடுத்தினால் இனிமை என்றே சொல்வீர்கள். இன்றைய இந்தப்பதிவில் நான் எனது கலையுலக வாழ்வின் ஒரு இனிமையான சம்பவத்தை பகிர்ந்துகொள்கிறேன்...

கலையுலக வாழ்வில் இதுவரை நான் காலெடுத்து வைக்காதவன் என்றே சொல்ல வேண்டும். அதாவது கலைஞன் என்ற அந்தஸ்தை அடையவில்லை. இந்த நிலையில் பள்ளிக்கால வாழ்வில் பொதுவாக எல்லோரும் எழுதுவதைப்போன்று நானும் பல கவிதைகளை, பாடல்களை, நாடகங்களை எழுதியிருக்கிறேன். அவற்றுள் நான் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று எனக்கு ஞாபகம் இல்லை. மேலும் அந்த கவிதையும் ஞாபகம் இல்லை. ஆனால் நான் எழுதிய முதலாவது பாடல் இன்னும் மனதில் உள்ளது..

அப்போது எனக்கு பத்து வயது தரம் ஐந்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். புலமைப்பரிசில் பரீட்சைக்காலம் என்பதால் ஆசிரியர்கள் வகுப்புக்களில் அக்கறையாக இருப்பார்கள். சின்ன இடைவேளை கூட விளையாடுவதற்கு கிடைப்பது குறைவு. அப்படி கிடைத்தால் அதைவிட சந்தோசம் இருக்குமா என்ன? இந்த நிலையில்தான் நான் அதிகமாக நேசித்த ஒரு கலைஞனின் மரண செய்தி வந்தது. அவர் ஒரு இனிமையான பாடகர். அவரால் பாடப்பட்ட பாடல் ஒன்று பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (BBC) சிறந்த பத்துப்பாடல்களுக்குள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. அந்தளவுக்கு இனிமையான குரல். அந்த குரல் ஓய்ந்துபோன போது அவருக்காக எழுதியதுதான் எனது முதலாவது பாடல்.

இது எனது பத்து வயது சிந்தனை. இங்கே அந்த பாடல் வரிகளை முழுமையாக தர முடியாவிட்டாலும் ஒரு சின்ன வரியை தருகிறேன், "மலராய் வித்து முளைக்காதா?" இப்படி அந்த பாடலில் ஒரு வரி வருகிறது. உண்மையில் இந்த வரியை எழுதும்போது அதன் அர்த்தம் தெரிந்திருந்ததோ இல்லையோ என்று எனக்கு இன்று வரை தெரியாது. ஆனாலும் ஒரு சின்ன உணர்வு என்னை அப்படி எழுதத்தூண்டியது என்று நம்புகிறேன்.

இவ்வாறாக ஆரம்பித்த பாடல் எழுதும் பயணம் பல பாடல்களை படைத்தது. ஆனாலும் அவை இசை வடிவம் பெறாதவை. அதாவது இசையமைப்பிற்கு உட்பட்டு இறுவெட்டில் ஏற்றப்படாத கற்பனைகள்.

இதே போன்றுதான் நாடகங்கள் தொடர்பிலும் ஒரு விடயம் உள்ளது. அதாவது எனக்கு சிறிய வயது இருக்கும்போது எனது ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் அதிக பொழுதை செலவிடுவதுண்டு. இப்படி செலவிடும் பொழுதுகளில் வெறுமனே விளையாட்டு மட்டும் என்றில்லாமல் நாடகங்களை எழுதி நடித்துக் கொள்வதுமுண்டு. அந்தவகையில் முதலில் நான் எழுதிய நாடகம் "வடை விற்ற வியாபாரி". இதனை எழுதியபோது எனக்கு வயது எட்டு..

இதனை ஒரு தெருக்கூத்துப் பாணியில் எழுதி சகோதரர்களுடன் சேர்ந்து நடித்திருந்தேன். அதுவும் மறக்க முடியாத ஒரு சம்பவம். அதன் பின்னர் பல நாடகங்களை எழுதியிருக்கிறேன். நடித்திருக்கிறேன். கடைசியாக நான் சூரியனின் அரங்கத்திற்காக எழுதிய "அடைக்கோழி கவனம் கவனம்" என்ற நகைச்சுவை நாடகத்தை தொடர்ந்து இன்னும் பல நாடகங்களை எழுதி வருகின்றேன். உண்மையில் நாடகத்துறை என்பது என்னை மிகவும் கவர்ந்தது. மாவீரன் பண்டாரவன்னியனின் காவியத்தை பத்து வயதில் எழுதி அதில் பண்டாரவன்னியன் கதாபாத்திரம் ஏற்று நடித்ததை என்றுமே என்னால் மறக்க முடியாது...

இவ்வாறாக கலைத்துறையில் பல மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளன. ஒவ்வொரு விடயங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்.........

பிற்குறிப்பு- இந்தப்பதிவை தற்பெருமைக்காக எழுதவில்லை. மாறாக எனது கடந்த காலங்களின் இனிமைகளை உங்களோடு மீட்டிக்கொள்ளவே எழுதியுள்ளேன். தற்பெருமையாக தெரிந்தால் மன்னிக்கவும்.

Tuesday, August 11, 2009

இலங்கை வலைப்பதிவர்களே............

பலரும் பல காலம் யோசித்து, பேசி, எழுதி, விவாதித்து வந்த விஷயம் நடைபெறக் காலம் கனிந்து வந்துள்ளது...
இலங்கைப் பதிவர் சந்திப்பு பற்றித் தான் சொல்கிறேன்...
பேசிக் கொண்டிருந்தால் போதாது.. கூடுவோம் என்று புல்லட் முதலில் இட்ட கிண்டல் பதிவு தான் பலரையும் தூண்டி விட்டது..
பலரோடும் பேசி நீண்ட காலம் இழுத்தடிக்காமல் காலம்,இடம் என்பவற்றைத் தெரிவு செய்து விட்டோம்..

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.
இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.
உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.
யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.
உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

Tuesday, August 4, 2009

வயதுவந்தவர்களுக்கு மட்டும்....!!!!!


அது ஒரு புதன் கிழமை மதியப்பொழுது... அலுவலக வேலையாக சென்று கொண்டிருந்தேன்... வழக்கமாக வீதியால் செல்லும் போது எனது கண்கள் எல்லாவற்றையும் மேய்வதுண்டு... (இது அண்மைக்கால பழக்கம்தான்...) இன்றும் கண்கள் மேய்ந்துகொண்டிருந்தன..
அப்போது அந்த திரையரங்கில் "ஸ்லம்டொக் மில்லியனர்" ,அதுதாங்க நம்ம இசைப்புயல் A.R .ரஹ்மானுக்கு 02ஆஸ்கார் விருதுகளை வாங்கித்தந்த திரைப்படம் காண்பிக்கபடுவதாக சுவர்ப்பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டிருந்தது...
இதில் என்ன ஆச்சரியம் திரையரங்கென்றால் திரைப்படம் காண்பிக்கத்தானே செய்வாங்க, என்று நீங்க நினைக்கிறது புரியுது.. அதில்ல முக்கியமான விடயம்...
அதாவது அந்த திரைப்படம் காண்பிக்கப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்த திரையரங்கு வழ்க்கமாக வயது வந்தவர்களுக்கு மட்டும் திரைப்படம் காட்சிப்படுத்தும் திரையரங்கு. இதுதான் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது...
இந்த குழப்பத்தோடு அலுவலகம் சென்று, அங்கிருந்த சகாக்களுடன் பேசியபோது ஒருவர் சொன்னார், வயதுவந்தவர்களுக்கு மட்டும் காண்பிக்கும் திரைப்படங்களுக்கு அரசு தடை விதித்துள்ளதாம் என்று... அப்போதுதான் எனக்கு குழ்ப்பம் தெளிந்தது...(காலையிலையே இந்த விடயம் தெரிந்திருந்த போதிலும் அந்த இடத்தில் உடனடியாக ஞாபகம் வரவில்லை.)
உண்மையில் அரசின் இந்த தடை உத்தரவு செய்தியை கேட்டவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.. ஆனாலும் ஒரு ஊடகவியலாளனாய் இதனை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் உள்ளது. இந்த அவசரப்பதிவின் மூலம் அதனை முழுமையாக செய்யாவிட்டாலும் ஓரளவுக்கு செய்ய முனைகிறேன்....
எனக்கு கொழும்பும், அதன் கலாசாரமும், நடைமுறைகளும் மிகவும் புதியவை. நான் வளர்ந்த சூழல் கொழும்பை விட அபிவிருத்தியில் பின்தங்கிய ஒன்று என்றாலும் அது கலாசாரத்திலும் கட்டுக்கோப்பிலும் சிறந்த சூழல்...
அதனால் அங்கு ஆபாசப்படங்கள் பார்க்கவும் முடியாது.. ஏன் நமது தமிழ் சினிமாவையே இன்னுமொரு காட்சித்தணிககைக்கு உட்படுத்திய பின்னரே பார்க்க முடியும்... அவ்வளவுக்கு அங்கு ஒரு ஒழுங்கு முறை இருந்தது...
இதனாலோ என்னவோ வயது வந்தவர்களுக்கான சினிமாவை இலங்கையில் தடை செய்தமை உடனடியாக எனது பார்வையில் ஒரு ஆரோக்கியமான, சிறந்த இளைய சமுதாயத்தைச் உருவாக்கும் என்ற வகையில் அமைந்தது...
ஆனாலும் அதற்கும் அப்பால் இந்த விடயத்தில் பல சிக்கல்கள் உள்ளன.
அதாவது அரசாங்கத்தின் இந்த உடனடி தடையால் திரைப்படங்களை இறக்குமதி செய்தவர்கள் நஷ்டம் அடைவதுடன், அந்த இடத்தை நிரப்ப கையிருப்பில் வேறு திரைப்படங்கள் இல்லை என்கின்ற நிலையும் உள்ளது... எனவே இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதால் இறக்குமதியாளர்கள் பாதிப்படைவார்கள் என்பதுடன் எதிர்காலத்தில் அவர்கள் வேறு நல்ல திரைப் படங்களை இறக்குமதி செய்வதற்கும் பின் நிற்க வாய்ப்புள்ளது...
இங்கே இந்த விடயம் ஒரு புறம் இருக்க இன்னுமொரு விடயத்தையும் தெளிவாகச் சொல்ல வேண்டியுள்ளது...
அதாவது இலங்கையை பொறுத்தவரை இங்கு முறையான பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இருந்தாலும் அதனை மாணவர்களுக்கு போதிப்பதில் ஆசிரியர்கள் பின் நிற்கிறார்கள்... (இது எனது சொந்த அனுபவமோ என்று எண்ணாதீர்கள் பொதுவான விடயம்.) இதுவும் மாணவர் சமுதாயம் அல்லது இளைஞர் சமுதாயம் ஆபாசப்படங்களின் மீது மோகம் செலுத்த காரணமாக அமைகின்றது என்பதையும் மறுத்துவிட முடியாது...
இவ்வாறன ஒரு சூழ்நிலையில் இலங்கையைப் பொறுத்தவரை இந்த பாலியல் கற்கை நெறிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்று. மேலும் அவ்வாறு இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் திரையரங்குகளை தடைசெய்தாலும் இறுவெட்டுக்களின் பாவனையை கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும்.
அத்துடன் இதற்காக வழங்கப்படும் தண்டனைகள் மாணவர் சமுதாயத்தின் அல்லது இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலங்களையும் கேள்விக்குறியாக்கும்... எனவே எல்லா விடயங்களையும் தொகுத்து நோக்கும்போது கல்வி திட்டங்களின் ஊடாக மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வியை வழங்குவது திரைப்படங்களை தடை செய்வதற்கான ஆரம்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை...
பி.கு.-தலைப்பைப்பார்த்து ஏமார்ந்த நண்பர்கள் மன்னிக்கவும். இது ஒரு அவசரப்பதிவு என்பதால் அதிகம் பேச முடியவில்லை, அதற்கும் மன்னிக்கவும்.