உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Friday, November 25, 2011

பலே பாகிஸ்தான் 2

எழுதுவதற்கு நிறைய விடயங்கள் உண்டு. எழுதத்தான் நேரம் கிடைப்பதில்லை. இன்று கட்டாயம் ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்று நினைத்தால் உடனே ஞாபகம் வந்தது பாகிஸ்தான் அணிதான். பாகிஸ்தான் அணி என்றால் சர்ச்சை சர்ச்சை என்றால் பாகிஸ்தான் அணி. இது அடிக்கடி முன்பு நான் அறிவிப்பாளராக இருந்த வானொலியில் விளையாட்டு உலகம் நிகழ்ச்சியை செய்யும் போதும், இப்போது நமது வன்னி fm சஞ்ஜீவ ஒலியில் ஆடுகளம் நிகழ்ச்சியை படைக்கும் போதும் நான் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ஒன்று. அப்படியொன்றும் பாகிஸ்தான் அணி மேல் வெறுப்பெல்லாம் கிடையாது. உண்மையை சொல்லணும் என்றால் இந்த விளையாட்டில் அதுதாங்க கிரிக்கட்டில் எந்த அணிக்கு நான் சப்போர்ட் என்று எனக்கே தெரியாது.

ஒரு நாள் முன்பு நான் அறிவிப்பாளராக இருந்த வானொலியில் நிகழ்ச்சி செய்யும் போது இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் போட்டி நடை பெற்றுக் கொண்டிருந்தது நாங்களும் பரபரப்பாக போட்டி முடிவுகளை சொல்லிக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் கட்டாரில் இருந்து ஒரு நேயர் நேரடியாக வானொலியில் பேசிக் கொண்டிருக்கும் போது செந்தூரன் நீங்கள் எந்த அணிக்கு சப்போர்ட் என்று கேட்டார்? ஒரு அறிவிப்பாளரிடம் நேரடியாக இவ்வாறு கேட்கப்படும் கேள்விகள் மிகவும் தர்ம சங்கடமானவை. நான் எந்த அணிக்கும் சப்போர்ட் இல்லை என்று சொன்னால் சும்மா சொல்லுங்களன் என்று கேட்பார்கள். உடனே எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்கு சப்போர்ட் என்று சொன்னேன். நேயர் நண்பரும் சிரித்துக் கொண்டிருக்கவே பேச்சை திசை திருப்ப முடிந்தது. இவையெல்லாம் வானொலியில் பெற்ற சின்ன சின்ன அனுபவங்கள்.

சரி இவை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இன்றைய பதிவின் தலைப்புக்கு வரலாம். கிரிக்கட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணியின் இரண்டு வீரர்களுக்கு சிறைத் தண்டனை ஒரு வீரர் சீர் திருத்தப்பள்ளியில்.... ஊக்க மருந்து பாவித்தமையால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அக்தருக்கு ஒரு வருட போட்டித் தடை... பாகிஸ்தான் பயிற்சியாளருக்கும் அணித் தலைவருக்குமிடையில் சுமூகமான உறவில்லை... போதியளவு பாதுகாப்பின்மை காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தென்னாபிரிக்க அணி மறுப்பு... தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பின்னடைவு...இப்படி பாகிஸ்தான் அணி பற்றியும் வீரர்கள் பற்றியும் கடந்த சில வருடங்களாக வெளி வந்த செய்திகளும் போட்டிகளில் பாகிஸ்தான் அணி முத்திரை பதிக்க தவறியமையும் பாகிஸ்தான் ரசிகர்களிடையே மட்டுமன்றி ஒட்டுமொத்த கிரிக்கட் ரசிகர்களிடையேயும் ஒரு வித பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் இலங்கை அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி அபரிமிதமான எழுச்சியை காட்டியுள்ளது.

அந்த வகையில் இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட test தொடரை பாகிஸ்தான் அணி 1 - 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அந்த வகையில் இரண்டு போட்டிகள் சம நிலையில் நிறைவடைந்துள்ளன. இதே போன்று 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 4 - 1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இங்கு இலங்கை அணியைப் பொறுத்த வரையில் கடந்த உலகக் கிண்ண தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அணி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஐ.சி.சி தரவரிசையிலும் இலங்கை அணியானது முன்னணியில் இருந்த அணி என்பதும் முக்கியமானது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியானது இலங்கை அணியை 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 4 போட்டிகளில் வெற்றி கொண்டு ஒரு நாள் தொடரையும் தனதாக்கியது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற ஒரே ஒரு 20 - 20 போட்டியிலாவது இலங்கை அணி வெற்றி பெறும் என்றே இலங்கையணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் இந்த எதிர்பார்ப்பிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

அதாவது இன்று நடைபெற்ற 20 - 20 போட்டியிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் அந்த அணியானது 20 - 20 உலகக் கிண்ணத்தின் நடப்பு சம்பியன் என்னும் பெருமை இருந்தாலும் அண்மையில் ஐ.சி.சி அறிமுகம் செய்த 20 - 20 போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப்பட்டியலில் 7 ஆம் இடத்திலையே தரப்படுத்தப்பட்டிருந்தது. இது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஷ்பா உல் ஹஹ் உம் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்ததுடன் அண்மைய போட்டிகளில் சாதிக்க தவறியமையே இந்த தரப்படுத்தலுக்கு காரணம் என்றும் சொல்லியிருந்தார். மேலும் இனி வரும் போட்டிகளில் திறைமையாக செயற்பட்டு தரவரிசையில் முன்னேறுவோம் என்றும் கூறினார். இதனை நிரூபிக்கும் விதமாக பாகிஸ்தான் அணி 20 - 20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கையணியை 3 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றிகளானது பாகிஸ்தான் அணி வீரர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். மேலும் பாகிஸ்தான் அணியின் தலைமை பொறுப்பிலிருந்தும் போட்டிகளிலிருந்தும் பயிற்சியாளருடன் இருந்த மனக் கசப்பால் ஓய்வு பெற்ற சஜிட் அப்ரிடியின் மீள் வருகையே பாகிஸ்தான் அணியின் மீள் எழுச்சிக்கும், இலங்கையணியுடனான தொடர் வெற்றிக்கும் அடிப்படையாக அமைந்தது என்று சொல்வதிலும் தவறு இருக்க வாய்ப்பில்லை. மேலும் ஒரு நாள் போட்டியில் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும் இலங்கை அணியுடனான தொடரில் முத்திரை பதித்த அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் கணிசமான அளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளார்கள். மிஷ்பா தலைமையில் அப்ரிடியின் மீள் வருகையுடன் எழுச்சி பெற்றுள்ள பாகிஸ்தான் அணியின் வெற்றி பயணம் தொடருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்..மேலும் இலங்கை அணியானது பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வியால் இலங்கை அணியின் தலைவர் TM டில்ஷானின் தலைமைத்துவம் பறி போகுமா? அப்படியானால் இலங்கை அணியின் புதிய தலைவர் தரங்கவா? மத்தியுஸா? விடைக்காக காத்திருப்போம்..

பாகிஸ்தான் அணி பற்றிய விடயங்கள் இவ்வாறு இருக்க மும்பையில் நடை பெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது test போட்டியில் சொந்த மைதானத்தில் வைத்து தனது நூறாவது சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களை சச்சின் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றியுள்ளார். இதே வேளை test இல் தனது கன்னி அரைச் சதத்தை இந்திய அணியின் விராத் கோலியும் தனது கன்னிச் சதத்தை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இன்றைய தினம் பூர்த்தி செய்துள்ளார்கள். இவர்களின் இந்த சிறப்பான துடுப்பாட்டம், பந்து வீச்சு பெறுதிகள் இந்திய test அணியில் மூத்த வீரர்களான யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் ஆகியோரின் இடம் தொடர்பில் சிந்திக்க செய்கிறது...