உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Thursday, December 29, 2011

காணி, பொலிஸ் அதிகாரம் இல்லாத தீர்வை காண பாராளுமன்ற தெரிவுக் குழு தேவையா?

இன்றைய இலங்கையின் அரசியல் அரங்கில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதியும், அராசங்கமும் வெளியிட்ட கருத்துக்களும் அதற்கு தமிழர் தரப்பின் சார்பில் பேச்சுக்களில் பங்கெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து வந்திருக்கும் பதிலுமே அதிகமாக பேசப்படும் விடயமாக உள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பிற்பட்ட காலத்தில் அதாவது இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் பெரியளவில் விஸ்வரூபம் எடுத்த இலங்கையின் இனப்பிரச்சினையானது காலத்திற்கு காலம் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்களாலும் அதன் தலைமைகளாலும் வெவ்வேறு வகையில் கையாளப்பட்டமை வரலாறு.

இருந்த போதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்களிடமோ அதன் தலைமைகளிடமோ தெளிவான ஒரு கொள்கை இருக்கவில்லை. இதனால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் இனம் சாத்வீக வழியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து அதன் மூலம் எந்தவித பயனும் இல்லை என்கின்ற நிலையில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு ஓர் தனி நாடு அது தமிழீழம் என்கின்ற கொள்கையுடன் ஆயுத வழியில் போராட்டங்களை ஆரம்பித்தது. பல்வேறு ஆயுதக் குழுக்களாக ஆரம்பித்த ஆயுதப் போராட்டத்தில் துரோகங்கள், விலை போதல்கள் என்பவற்றிற்குள் சிக்குண்டு பல இயக்கங்கள் மீண்டும் ஜனநாயக வழி முறைக்கு திரும்பியதுடன் இன்னும் சில குழுக்கள் ஆயுதம் எந்தியதன் நோக்கம் மறந்து தமது ஆயுதங்களை சக இயக்கங்களிற்கு எதிராக திருப்பின. இவ்வாறான ஆயுத போராட்ட காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னடைவுடன் கடந்த 2009 ஆண்டு மே மாதத்துடன் நிறைவுக்கு வந்தது.

விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு முன்னர் அதாவது விடுதலைப் புலிகள் பலமான ஒரு இராணுவக் கட்டமைப்பாக இருந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று ஒரே நாட்டுக்குள் அதிகாரப்பரவலாக்கலாக அமையும் என்ற வகையில் அரச தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவந்தன. மேலும் நாட்டில் உள்ள பயங்கர வாதத்தை ஒழித்துவிட்டு தீர்வை முன் வைக்க போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கூறியது. ஆனால் இப்போது புலிகளை அழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்து இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நிறைவடைந்த தருணத்தில் ஜனாதிபதி மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் வடக்கு கிழக்கை மீள இணைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் மேற்குலகின் விருப்பபடி குறிப்பாக அமெரிக்காவின் விருப்பபடி செயற்பட முடியாது என்றும் அவர் சொல்லியுள்ளார். இதுமட்டுமல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வை காண முடியாமல் இருப்பதற்கு தமிழர் தரப்பே காரணமாக இருப்பதாகவும், புலிகளைப் போன்று தமிழ்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கவில்லை என்கின்ற குற்றச் சாட்டையும் முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்துக்கள் இவ்வாறு அமைகின்ற அதே வேளை அரசாங்க அமைச்சர்களும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று சொல்லியுள்ளனர். குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வளவு காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு பிரதிநிதிகளை நியமிப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கலாம் என்றும் சொல்லியுள்ளார். தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினை விடயத்தில் பல்வேறு ஒப்பந்தங்களையும், ஆணைக் குழுக்களையும் கண்டுள்ளனர்.

யுத்த காலத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் உருவாக்கப்பட்ட சர்வகட்சிக் குழு இதற்கு ஓர் சிறந்த உதாரணம் நூற்றுக்கும் அதிகமான தடைவை கூடிய இந்தக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்தியதா? மேலும் இந்த குழுவின் தலைவராக செய்யப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண அண்மையில் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார்.
அதாவது ""தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் உள்ளடக்க முடியும். எனவே அரசாங்கம் பேச்சுக்களில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளாது நிரந்தர தீர்வொன்றிற்காக கூட்டமைப்புடன் இணைந்து முன்னகர வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடாத்துவதில் அர்த்தமில்லை. ஆகவே இருதரப்பும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விரைவான தீர்வொன்றுக்கு வர வேண்டும். இழுத்தடிப்பதால் யாருக்கும் பயனேற்படப் போவதில்லை."" என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்திருந்தார்.

இங்கு பேராசிரியர் குறிப்பிட்ட இழுத்தடித்தல் என்கின்ற சொல் மிகவும் முக்கியமானது. இலங்கை அரசியல் வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும், அதன் தலைமைகளும் இனப்பிரச்சினை தொடர்பில் இழுத்தடிக்கின்ற உத்தியையே கால காலமாக பின்பற்றியிருக்கின்றன. ஆட்சியாளர்களின் இவ்வாறான போக்கால்தான் முப்பது வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள் ஆயுதம் எந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த நிலையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத பிரிந்த வடக்குக் கிழக்கிற்குள் அரசாங்கம் எவ்வாறான அரசியல் தீர்வை முன்வைக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவை நியமிக்கின்றது? இதற்கு ஒரு குழு நிச்சயம் தேவைதானா? இவ்வாறான ஒரு தீர்வைக் கூட அரசாங்கம் சுயமாக முன்வைக்க முடியாத நிலையிலா உள்ளது? இவையெல்லாம் தவிர்க்க முடியாத கேள்விகள்.

பாராளுமன்றத்தில் 2 / 3 பெரும்பான்மை உள்ள இன்றைய அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதில் உண்மையான அக்கறை இருக்குமானால் அதனை செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் அரசாங்கம் ஒரு போதும் அதனை செய்ய தயாரில்லை என்பதுடன் இந்த அரசாங்கமும் இழுத்தடிக்கும் உத்தியையே கையாளப்போகிறது என்பதையும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நியமிப்பு வெளிப்படுத்துகின்றது.

இங்கு வேடிக்கையான விடயம் என்னவென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமான அமைப்பாக இருந்து பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கும்போது அவர்களின் தனி நாட்டுக் கோரிக்கை நியாயமற்றது என்றும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இன ஐக்கியத்துடன் தீர்வு, சமஷ்டி ஆட்சி என்று வெவ்வேறு தீர்வுத்திட்டங்களை முன்வைத்த அரச ஆதரவு தமிழ்க் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இப்போது அமைதியாக இருக்கிறார்கள். முன்பு புலிப் பயங்கரவாதத்தால்தான் தீர்வைக் காண முடியாமல் உள்ளது என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முழங்கியவர்கள் இப்போது மூலைக்குள் முடங்கியுள்ளனர். இருந்த போதிலும் அரசாங்கத்தில் உள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன், முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புத் தொடர்பில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.


இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்த காலம் தொடக்கம் இப்போது வரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் சமூகத்தில் சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் வெளிவந்த தமிழ் சிவில் சமூகத்தின் அறிக்கை இதன் உச்சக் கட்டம் என்று சொல்லலாம். அந்த வகையில் தமிழ் சிவில் சமூகம் என்கின்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த கால தவறுகள் என்று சில விடயங்களும் எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை என்று சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது என்பது தொடர்பில் அதிகமாக விளக்கப்பட்டுள்ளமையானது இந்த அறிக்கையின் பின்னணியில் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் பொதுவாக தவறுகளை சுட்டிக் காட்டியும், போதுமான ஆலோசனைகளை முன்வைத்தும் புத்திஜீவிகளிடமிருந்து கருத்துக்கள், அறிக்கைகள் வெளிவருவது ஆரோக்கியமானது என்கின்ற போதிலும் அந்த அறிக்கைகள் வெளிவரும் காலப்பகுதியையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் தமிழர்கள் தமது ஒன்றுபட்ட அரசியல் சக்தியை சீர் குலைக்காமல் மென்மேலும் பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தக் கூடாது. அவ்வாறு பலவீனப்படுத்தும் பட்சத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் இழுத்தடிக்கும் உத்திக்கு தூபமிடுவதாகவே அது அமையும்.

தமிழ் சிவில் சமூகம் என்கின்ற பெயரில் வெளிவந்த அறிக்கை ஒருபுறமிருக்க ஜனாதிபதி இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான் சிங்கிற்கு அலரி மாளிகையில் வைத்து அளித்துள்ள செவ்வி ஒன்றில் தன்னை மேற்குலகம் தங்களின் அடிமையாக வைத்திருக்க முயல்வதாகவும் இதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் இந்தியாவை தாண்டியே இலங்கைக்கு எல்லாம் என்றும் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் அவர் தனது செவ்வியில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவை பகிரங்கமாகவே சாடியுள்ளார். புலிகளின் கப்பல்களை அழிப்பதற்கான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதாவது சுதந்திரத்துக்கு பின்னர் எந்தவொரு ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ வெளிநாடுகள் தொடர்பில் எதிரான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பது குறைவு அல்லது இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால்தான் என்னவோ இலங்கைக்கு பகையான நாடுகள் என்று எதுவும் இல்லை. மேலும் இலங்கை ஒரு தீவாக இருப்பதால் எல்லைப் பிரச்சினையும் இல்லை. இந்த நிலையில் அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடான இலங்கை வெவ்வேறு நாடுகளில் பொருளாதாரத்தில் தங்கியுள்ளது என்பதால் எந்தவொரு நாட்டையும் அரசியல் ரீதியான கருத்துக்களால் பகைத்துக் கொள்வது நல்லதல்ல. இலங்கை மீது வெளி நாடுகள் பொருளாதார ரீதியான தடைகளை விதித்தாலோ அல்லது ராணுவ ரீதியிலான தலையீடுகளை மேட்கொண்டாலோ அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு போதுமான வளங்களும் இலங்கையில் இல்லை. இந்த நிலையில் எந்தவொரு நாடு தொடர்பிலும் வெளிப்படையான எதிர்க் கருத்துக்களை முன்வைப்பதை தவிர்ப்பதே நல்லது.

உண்மையில் இலங்கை தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மாற வேண்டும் என்றால் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும். இதன் மூலம் மேற்குலகின் தேவையற்ற தலையீடுகள் குறைவடைவதுடன் இலங்கை என்பது பலமான ஒரு நாடாக திகழவும் வாய்ப்புள்ளது. இதனை விடுத்து தமிழர்கள் கேட்கும் குறைந்த பட்ச அதிகாரப் பகிர்வான இணைந்த வடக்குக் கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரங்களை கூட வழங்குவதற்கு அரசாங்கம் முன்வராவிட்டால் வெளிநாடுகளின் தலையீடுகளையும் தவிர்க்க முடியாது, தமிழர்களின் மனங்களையும் வென்றெடுக்க முடியாது.

Friday, November 25, 2011

பலே பாகிஸ்தான் 2

எழுதுவதற்கு நிறைய விடயங்கள் உண்டு. எழுதத்தான் நேரம் கிடைப்பதில்லை. இன்று கட்டாயம் ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்று நினைத்தால் உடனே ஞாபகம் வந்தது பாகிஸ்தான் அணிதான். பாகிஸ்தான் அணி என்றால் சர்ச்சை சர்ச்சை என்றால் பாகிஸ்தான் அணி. இது அடிக்கடி முன்பு நான் அறிவிப்பாளராக இருந்த வானொலியில் விளையாட்டு உலகம் நிகழ்ச்சியை செய்யும் போதும், இப்போது நமது வன்னி fm சஞ்ஜீவ ஒலியில் ஆடுகளம் நிகழ்ச்சியை படைக்கும் போதும் நான் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ஒன்று. அப்படியொன்றும் பாகிஸ்தான் அணி மேல் வெறுப்பெல்லாம் கிடையாது. உண்மையை சொல்லணும் என்றால் இந்த விளையாட்டில் அதுதாங்க கிரிக்கட்டில் எந்த அணிக்கு நான் சப்போர்ட் என்று எனக்கே தெரியாது.

ஒரு நாள் முன்பு நான் அறிவிப்பாளராக இருந்த வானொலியில் நிகழ்ச்சி செய்யும் போது இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் போட்டி நடை பெற்றுக் கொண்டிருந்தது நாங்களும் பரபரப்பாக போட்டி முடிவுகளை சொல்லிக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் கட்டாரில் இருந்து ஒரு நேயர் நேரடியாக வானொலியில் பேசிக் கொண்டிருக்கும் போது செந்தூரன் நீங்கள் எந்த அணிக்கு சப்போர்ட் என்று கேட்டார்? ஒரு அறிவிப்பாளரிடம் நேரடியாக இவ்வாறு கேட்கப்படும் கேள்விகள் மிகவும் தர்ம சங்கடமானவை. நான் எந்த அணிக்கும் சப்போர்ட் இல்லை என்று சொன்னால் சும்மா சொல்லுங்களன் என்று கேட்பார்கள். உடனே எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்கு சப்போர்ட் என்று சொன்னேன். நேயர் நண்பரும் சிரித்துக் கொண்டிருக்கவே பேச்சை திசை திருப்ப முடிந்தது. இவையெல்லாம் வானொலியில் பெற்ற சின்ன சின்ன அனுபவங்கள்.

சரி இவை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இன்றைய பதிவின் தலைப்புக்கு வரலாம். கிரிக்கட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணியின் இரண்டு வீரர்களுக்கு சிறைத் தண்டனை ஒரு வீரர் சீர் திருத்தப்பள்ளியில்.... ஊக்க மருந்து பாவித்தமையால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அக்தருக்கு ஒரு வருட போட்டித் தடை... பாகிஸ்தான் பயிற்சியாளருக்கும் அணித் தலைவருக்குமிடையில் சுமூகமான உறவில்லை... போதியளவு பாதுகாப்பின்மை காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தென்னாபிரிக்க அணி மறுப்பு... தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பின்னடைவு...இப்படி பாகிஸ்தான் அணி பற்றியும் வீரர்கள் பற்றியும் கடந்த சில வருடங்களாக வெளி வந்த செய்திகளும் போட்டிகளில் பாகிஸ்தான் அணி முத்திரை பதிக்க தவறியமையும் பாகிஸ்தான் ரசிகர்களிடையே மட்டுமன்றி ஒட்டுமொத்த கிரிக்கட் ரசிகர்களிடையேயும் ஒரு வித பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் இலங்கை அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி அபரிமிதமான எழுச்சியை காட்டியுள்ளது.

அந்த வகையில் இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட test தொடரை பாகிஸ்தான் அணி 1 - 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அந்த வகையில் இரண்டு போட்டிகள் சம நிலையில் நிறைவடைந்துள்ளன. இதே போன்று 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 4 - 1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இங்கு இலங்கை அணியைப் பொறுத்த வரையில் கடந்த உலகக் கிண்ண தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அணி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஐ.சி.சி தரவரிசையிலும் இலங்கை அணியானது முன்னணியில் இருந்த அணி என்பதும் முக்கியமானது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியானது இலங்கை அணியை 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 4 போட்டிகளில் வெற்றி கொண்டு ஒரு நாள் தொடரையும் தனதாக்கியது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற ஒரே ஒரு 20 - 20 போட்டியிலாவது இலங்கை அணி வெற்றி பெறும் என்றே இலங்கையணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் இந்த எதிர்பார்ப்பிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

அதாவது இன்று நடைபெற்ற 20 - 20 போட்டியிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் அந்த அணியானது 20 - 20 உலகக் கிண்ணத்தின் நடப்பு சம்பியன் என்னும் பெருமை இருந்தாலும் அண்மையில் ஐ.சி.சி அறிமுகம் செய்த 20 - 20 போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப்பட்டியலில் 7 ஆம் இடத்திலையே தரப்படுத்தப்பட்டிருந்தது. இது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஷ்பா உல் ஹஹ் உம் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்ததுடன் அண்மைய போட்டிகளில் சாதிக்க தவறியமையே இந்த தரப்படுத்தலுக்கு காரணம் என்றும் சொல்லியிருந்தார். மேலும் இனி வரும் போட்டிகளில் திறைமையாக செயற்பட்டு தரவரிசையில் முன்னேறுவோம் என்றும் கூறினார். இதனை நிரூபிக்கும் விதமாக பாகிஸ்தான் அணி 20 - 20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கையணியை 3 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றிகளானது பாகிஸ்தான் அணி வீரர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். மேலும் பாகிஸ்தான் அணியின் தலைமை பொறுப்பிலிருந்தும் போட்டிகளிலிருந்தும் பயிற்சியாளருடன் இருந்த மனக் கசப்பால் ஓய்வு பெற்ற சஜிட் அப்ரிடியின் மீள் வருகையே பாகிஸ்தான் அணியின் மீள் எழுச்சிக்கும், இலங்கையணியுடனான தொடர் வெற்றிக்கும் அடிப்படையாக அமைந்தது என்று சொல்வதிலும் தவறு இருக்க வாய்ப்பில்லை. மேலும் ஒரு நாள் போட்டியில் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும் இலங்கை அணியுடனான தொடரில் முத்திரை பதித்த அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் கணிசமான அளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளார்கள். மிஷ்பா தலைமையில் அப்ரிடியின் மீள் வருகையுடன் எழுச்சி பெற்றுள்ள பாகிஸ்தான் அணியின் வெற்றி பயணம் தொடருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்..மேலும் இலங்கை அணியானது பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வியால் இலங்கை அணியின் தலைவர் TM டில்ஷானின் தலைமைத்துவம் பறி போகுமா? அப்படியானால் இலங்கை அணியின் புதிய தலைவர் தரங்கவா? மத்தியுஸா? விடைக்காக காத்திருப்போம்..

பாகிஸ்தான் அணி பற்றிய விடயங்கள் இவ்வாறு இருக்க மும்பையில் நடை பெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது test போட்டியில் சொந்த மைதானத்தில் வைத்து தனது நூறாவது சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களை சச்சின் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றியுள்ளார். இதே வேளை test இல் தனது கன்னி அரைச் சதத்தை இந்திய அணியின் விராத் கோலியும் தனது கன்னிச் சதத்தை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இன்றைய தினம் பூர்த்தி செய்துள்ளார்கள். இவர்களின் இந்த சிறப்பான துடுப்பாட்டம், பந்து வீச்சு பெறுதிகள் இந்திய test அணியில் மூத்த வீரர்களான யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் ஆகியோரின் இடம் தொடர்பில் சிந்திக்க செய்கிறது...

Thursday, August 11, 2011

எப்போது பண்பலையில் பவனி வருவீர்கள்??-- வன்னி fm சஞ்ஜீவ ஒலி..

முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்.. முயன்று முயன்று முன்னேறு... முயன்று பார் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பாய் இது நமது முன்னோர்களின் மொழி. எங்கள் வாழ்வில் என்றுமே கூட வரும் முது மொழிகள். இலட்சியப் பயணத்தில்தான் மனிதனுக்கு எத்தனை இடையூறுகள். அத்தனையையும் தாண்டி வெற்றியை அடைவதென்பது ஒன்றும் சாதாராண விடயம் இல்லைத்தான். உயர்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிதான் வெற்றியின் அடிப்படை.

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த நவம்பர் மாதத்தில் ஆரம்பித்து கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு இணைய பக்கத்தை உருவாக்கி, அந்த இணைய பக்கத்தில் தொடர்ச்சியாக பாடல்களை ஒலிபரப்பி, கல்லூரிக் கால நண்பர்களில் பலரும் கூட வருவார்கள் என்று நம்பி ஏமார்ந்து, கடைசியில் பிந்தி வந்து இணைந்த ஒரு நட்புடன்.. அந்த நட்பின் அர்ப்பணிப்புடன் வானொலிக்கான அறிவிப்பாளர்களை தெரிவு செய்து, போதுமான பயிற்சிகளை வழங்கி, கடந்த மே 07ஆம் திகதி முல்லைத்தீவில் Vanavil Media Networks அலுவலகத்தை திறந்துவைத்து அதன் பின்னர் மே 18ஆம் திகதி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து.. இவையெல்லாம் நடப்பது யுத்தத்தின் கொடிய வடுக்களுடன் காட்சி தரும் முல்லைத்தீவில் என்பதுதான் இங்கு முக்கியம்.

உண்மையில் கொழும்பிலோ அல்லது வேறு ஒரு வசதிகளுடன் கூடிய இடத்திலோ இணைய வானொலியை ஆரம்பிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் முல்லைத்தீவில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்தான்.

நோக்கம் சிதறாமல் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றோம். வெற்றி என்றால் அது சாதாரண வெற்றி அல்ல. இன்று இலங்கையிலிருந்து இணையத்தில் ஒலிபரப்பாகும் வானொலிகளில் அதிகமான நேயர்களை சென்றடையும் தமிழ் வானொலியாக வெற்றி பெற்றோம்.. மேலும் இப்போது இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் ஒரேயொரு இணையத்தள வானொலியாகவும் உள்ளோம் (பல வானொலிகள் உள்ளன ஆனால் நிகழ்ச்சிகளை படைக்கும் வானொலி என்றால் வன்னி fm சஞ்ஜீவ ஒலி மட்டுமே!)

எமது வெற்றிக்காக நாம் ஒன்றும் பணத்தையோ அல்லது பொருளையோ முதலீடு செய்யவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாம் நமது வானொலி பற்றி வேறு எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரம் செய்யவில்லை. முக நூலில் உள்ள நமது நண்பர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தினோம்.. நமது நண்பர்கள் தாமாக முன் வந்து தங்கள் நண்பர்களுக்கும் அந்த நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கும் என்று இன்று ஏராளமானவர்கள் வன்னி fm சஞ் ஜீவ ஒலியுடன் இணைந்துள்ளார்கள்..

சஞ்ஜீவ ஒலி என்ற பெயருடன்தான் ஆரம்பித்தோம். எனினும் வன்னி என்பதை அடையாளப்படுத்தும் நோக்குடனும் ஏராளமான நேயர்களை சென்றடையும் நோக்குடனும் வன்னி fm சஞ்ஜீவ ஒலி என்ற பெயருடன் நேயர்களை சென்றடைகின்றோம். உண்மையில் நமக்கு பின்னால் எந்தவொரு அரசியல் பலமோ அல்லது நிறுவன பலமோ இல்லை. எப்பொழுதும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நமது நேயர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து செயற்படுவதே வன்னி fm சஞ்ஜீவ ஒலியின் மிகப் பெரிய பலமாகும்.

எனவே இதனை கருத்திற்கொண்டு நாம் யாரிடமும் அடிபணியாத Vanavil Media Networks என்கின்ற நிறுவனத்தை அமைத்து அதன் கீழ் வன்னி fm சஞ்ஜீவ ஒலியாக உலகெங்கும் வலம் வருகின்றோம். இந்த வானொலியை ஆரம்பித்தது முதல் இன்றுவரை நம்முடன் இணைய அல்லது நம்மை விலை கொடுத்து வாங்க நினைத்து தோற்றுப்போன நிறுவனங்கள், அரசியல் சக்திகள் பல/பலர்.. (நோகாமல் நொங்கு குடிக்க நினைக்கிறாங்கப்பா.) ஆனாலும் நமது Vanavil Media Networks என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதனை நாம் செவ்வனவே நிறைவேற்றுவோம், நிறைவேற்றுகிறோம்.

Vanavil Media Networks ஐ உருவாக்கியமையின் நோக்கம் ஒன்று சஞ்ஜீவ ஒலி (வன்னி fm சஞ்ஜீவ ஒலி) வானொலியை இந்த நிறுவனத்தின் கீழ் செய்வதாகும். மேலும் இன்னும் பல செயற்றிட்டங்களும் நம்மிடம் உள்ளது. முதலாவது வானொலி என்றால் இரண்டாவது மாதம் இரு முறை வெளிவரும் பல்சுவை சஞ்சிகை. அடுத்தது அழிந்து போன முல்லை மண்ணில் ஒரு பிரமாண்டமான இசைக் குழுவை அமைப்பது. இந்த வேலைத்திட்டங்களையும் இப்போது Vanavil Media Networks செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. இவை அனைத்தும் இன்னும் சில நாட்களுக்குள் வெற்றி பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இப்போது நாம் முன்னெடுக்கும் இன்னுமொரு முயற்சிதான் முல்லைத்தீவுக்கென ஒரு தமிழ் சங்கத்தை அமைத்தல். இதற்காக கற்றோர்களையும், அறிஞர்களையும், கலைஞர்களையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி வருகின்றோம். நமது இந்த முயற்சியும் வெற்றிப்பாதையிலையே உள்ளது. இவை இவ்வாறு இருக்க நம்முடன் வன்னி fm சஞ் ஜீவ ஒலியில் இணையும் நேயர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி எப்போது பண்பலையில் வன்னி fm சஞ் ஜீவ ஒலி ஒலிபரப்பாகும்.?

இந்த கேள்விக்கும் இப்போது மெல்ல மெல்ல விடை கிடைத்துள்ளது. ஆம் மிக விரைவில் வன்னி fm சஞ்ஜீவ ஒலியை முல்லைத்தீவின் வானலைகளில் பண்பலையில் செவிமடுக்க முடியும். இதற்கான அடிப்படை வேலைகளை செய்து வருகின்றோம். விரைவில் உங்கள் மேலான அன்புடனும் ஆதரவுடனும் பண்பலையில் பவனி வருவோம்.

நாங்கள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் சொந்தக் காரர்கள் நீங்களே.. நமது ஒவ்வொரு முயற்சியையும் எப்போதும் எங்களுடன் இணைந்துள்ள உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் ஆரம்பிக்கிறோம்.. பெறுகின்ற ஒவ்வொரு வெற்றிகளையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்... நன்றி... நன்றி... நன்றி...

Tuesday, January 25, 2011

சஞ்ஜீவ ஒலி ஒரு புதிய உதயம்....

நேரம் இல்லை.. நேரம் இல்லை... இதுதான் இன்று எல்லோருக்கும் இருக்கின்ற பிரச்சினை. நான் மட்டும் என்ன விதிவிலக்கா?? அதுக்காக ஐயா ஏதோ வெட்டிப் பிடுங்கிறார் என்று நினைத்தால் அது உங்கள் தப்பு. உண்மையில் வலைப் பதிவுகளை முடிந்த வரையில் ஒழுங்காக வழங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனாலும் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் மிகப்பெரிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தமை போன்ற காரணங்களால் பதிவுகளை இடுவதற்கு மட்டுமல்ல மற்றையயவர்களின்பதிவுகளை வாசிப்பதற்கும் கூட நேரம் கிடைக்கவில்லை.

இவ்வாறான ஒரு சூழ் நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இன்றுதான் எனது அடுத்த பதிவு வருகிறது. ஒரு சந்தோஷமான செய்தியை, அதாவது எனது நீண்டகால எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துவிட்டு அந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து மகிழ்வதற்காக இத பதிவை வரைகிறேன். எப்போதும் வானொலி, ஒலிபரப்பு என்று வாழும் எனக்கு சந்தோஷமான செய்தி என்று கோடிட்டு சொல்வதென்றால் அது நிச்சயமாக இந்தத்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

சரி விடயத்துக்கு வருகிறேன். கடந்த பத்து வருடங்களாக எனக்குள் ஒரு ஆசை. அதை ஆசை என்று சொல்வதை விட எனது இலட்சியம் என்றும் சொல்லலாம். அதாவது ஒரு வானொலியை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் இலட்சியம். இது கல்லூரியில் கல்வி கற்ற நாட்களிலையே எனக்குள் உதித்துவிட்டது. அந்தவகையில் கல்லூரியில் கல்வி கற்ற நாட்களில் கண்காட்சி நிகழ்வுகளில் நண்பர்களுடன் சேர்ந்து செய்த ஒலிபரப்புக்கள்தான் இந்த இலட்சியத்தின் அடிப்படை.

நாங்கள் கல்லூரியில் கல்விகற்றுக் கொண்டிருந்தபோது 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி "வானவில் மாணவர் ஒலிபரப்புச் சேவை" என்கின்ற பெயரில் ஒரு வானொலியை செய்தோம். எமது சூழலில் அப்போதிருந்த குறுகிய வளத்தைக் கொண்டு பண்பலையில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு எமது வானொலியை ஒலிபரப்ப முடிந்தது. வேறு எவரது உதவியும் இல்லாமால் எமது சொந்த முயற்சியில் அப்போது இளம்பராயத்திலிருந்த எங்களால் ஒரு வெற்றிகரமான வானொலியை நடாத்தி கல்லூரி சமூகத்தினதும், ஏனையவர்களினதும் பாராட்டினைப் பெற முடிந்தது அளவில்லாத மகிழ்ச்சி. அன்றுதான் நான் ஒரு வானொலி அறிவிப்பாளனாக உருவாக வேண்டுமென்று எனக்குள் இலட்சியத்தை வரித்துக் கொண்டேன்.

என்னோடு கூட இருந்த நண்பர்களும் வானொலித்துறையில் அதிக ஆர்வம்காட்டியதால் அவ்வப்போது எமது கல்லூரியிலும், ஏனைய அயல்பாடசாலைகளிலும் நடைபெறும் கண்காட்சிகளில் வானவில் ஒலிபரப்பாகத் தவறுவதில்லை. ஆரம்பத்தில் வானவில் மாணவர் ஒலிபரப்புச் சேவையாக ஆரம்பித்த நாங்கள் எமது வானொலியின் பெயரை பின்நாளில் வானவில் fm என மாற்றிக் கொண்டோம். இப்படி ஆரம்பித்த எமது பயணத்தில் கால சூழலால் பல்வேறு சோகங்கள், பிரிவுகள் நிகழ்ந்தன. அதாவது கல்லூரி வாழ்வு முடிந்ததும் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிக்க நேர்ந்தது. அறிவிப்பாளனாக உருவாக வேண்டுமென்ற இலட்சியத்திலிருந்த நான் கொழும்பை நோக்கி நகர்ந்தேன். முறையான ஊடக கற்கை நெறியினைக் கற்று தாளம் fm வானொலியில் எனது அறிவுப்பு பயணத்தை ஆரம்பித்தேன். பின்னர் டான் தமிழ் ஒலியில் அறிவிப்பாளனாக பணிபுரிந்தேன்.

கல்லூரிக் கால நண்பர்களைப் பிரிந்து நீண்ட காலமாக இருந்த எனக்கு மீண்டும் நண்பர்களின் தொடர்புகள் கிடைத்தாலும் எப்போதும் எமது வானவில் fm ஒலிபரப்பில் துணையிருக்கும் சஞ்ஜீவனின் தொடர்புமட்டும் நிரந்தரமாக கிடைக்காமலே போய்விட்டது. ஆம் சஞ்ஜீவன் எங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டான். சஞ்ஜீவன் இனி எங்களுடன் பேசமாட்டான். அவன் குரலை இனி கேட்கமுடியாது. ஆனால் உற்ற நண்பனின் நினைவுகளை அழிக்கமுடியாது. அழியாத அவன் நினைவுகளுடன் ஏனைய நண்பர்களின் தொடர்புகள் கிடைக்கவே வானொலி ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்ற எனது ஆர்வம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.

இதன் பிரகாரம் வானவில் என்ற நாமத்தை மாற்ற முடியாத நிலையிலும் சஞ்ஜீவனின் நினைவுகளை நிலைபெறச் செய்வதற்குமாக "Vanavil Media Network " நிறுவனத்தை ஆரம்பித்து www sanjeevaoli com என்கின்ற இணையத்தளத்தினூடாக முதன் முதலாக முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகும் வகையில் சஞ்ஜீவ ஒலி என்கின்ற இணைய வானொலியை ஆரம்பித்துள்ளோம். எந்தவொரு பின்புலமும் இல்லாமல், எந்தவொரு அரசியல் நோக்கங்களும் இல்லாமல் முற்று முழுதாக பொழுதுபோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு வானொலியே சஞ்ஜீவ ஒலியாகும்.

சஞ்ஜீவ ஒலி வானொலியானது எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமான சொத்தல்ல. இது பொதுவான ஒரு தமிழ் வானொலியாகும். "உலகெங்கும் தமிழிசை" என்கின்ற மகுடத்துடன் முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் இருபத்து நான்கு மணி நேரமும் ஒலிபரப்பாகும் சஞ்ஜீவ ஒலி தற்போது தொடரிசையாக பாடல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் சஞ்சீவ ஒலியின் நேரடிக் கலையாக நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். அந்தவகையில் உலகெல்லாம் பரந்து வாழும் தமிழ் பேசும் உள்ளங்களாகிய உங்களின் மேலான ஆதரவுடன் நாம் சிகரம் தொடுவோம் என்று நம்புவதுடன், உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

உங்கள் கருத்துக்களை தற்காலிகமாக msenthuva @ yahoo com என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதுடன், 0094243246533 / 0094778092036 என்கின்ற எமது தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக நேரடியாக இணைந்துகொண்டும் தெரிவிக்கலாம்.

"எல்லைகள் தாண்டிய எமது பயணம் உங்களுடன்"

குறிப்பு- சஞ்ஜீவ ஒலி வானொலியினை ஆரம்பிக்கும் முயற்சியில் கூடவே இருந்து உதவிய, உதவுகின்ற நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் எப்போதும் நன்றி...நன்றி...நன்றி...