உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, July 26, 2009

முன்னேற்றப் பாதைக்கான ஒரு முயற்சி...

உலகமே நவீன தொழில்நுட்பம், விஞ்ஞானத்தின் விந்தை என்று பல்வேறு வியக்கவைக்கும் வளர்ச்சிப்படிகளை கடந்து செல்கின்ற இன்றைய நவீன யுகத்திலும் மானிடவர்க்கம் ஒரு சில விடயங்களில் பின்னடைவுகளையும், வீழ்ச்சிகளையும் சந்தித்துள்ளமை, சந்தித்துவருகின்றமை வெளிப்படை.

அந்தவகையில் ஈழத்து தமிழ் சினிமாவும் யாருமே எதிர்பார்க்காதளவுக்கு மிகவும் பின்தங்கியிருக்கிறது. உண்மையில் ஈழத்து தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தையும், இன்றைய காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஈழத்து தமிழ் சினிமா எவ்வளவு தூரத்திற்கு பின் தங்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இந்தப் பதிவில் இவ்வாறான ஒரு ஒப்பீட்டை செய்யாவிட்டாலும் ஓரளவுக்கு ஈழத்து தமிழ் சினிமா பற்றி பேசுவதுடன், இன்றைய நிலையில் ஈழ்த்து தமிழ் சினிமாவை வளப்படுத்தக்கூடிய ஒரு விடயத்தையும் பரிந்துரைக்கலாம் என நினைக்கிறேன்...

உண்மையில் இன்று ஈழத்து தமிழ் சினிமாவைப்பற்றி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக உணரமுடிகின்றது. மாறாக ஈழ்த்து இசைத்துறை தொடர்பிலையே இன்று அதிகமானவர்கள் பேசுகின்றார்கள்.

அந்தவகையில் இசையுலகம் என்னும் இலங்கையில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் இசைக்கான சங்க்சிகையில் இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஈழத்து தமிழ் இசைத்துறையை தரம் உயர்த்துவது அல்லது அதற்கான உரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பது என்னும் நோக்கில் இசையாலே இசையாலே என்னும் ஒரு தொடரை எழுதி வருகின்றார்.

அதாவது இவரின் இந்த முயற்சியால் ஈழத்து இசைக்கலைஞர்களை ஒன்று சேர்க்கக்கூடிய சந்தர்ப்பம் அமையப்பெற்று நமது தமிழ் இசைத்துறை ஒரு படி நிலை மாற்றத்தை காணும் என்பதில் சந்தேகம் இல்லை. (இவரின் இந்தத்தொடர் தனிமனிதர்களை நேரடியாக தாக்குவதாக சில சந்தர்ப்பங்களில் அமைந்தமையும், கடந்த இசையாலே இசையாலே பகுதி இலங்கையில் இனமுரன்பாடுகளே கிடையாது போன்றதான ஒரு பாணியில் அமையப்பெற்றமையும் எனக்கு உடன்பாடு இல்லாதவை. இது பற்றி பின்னர் பேசலாம்.)

இசைத்துறை பற்றி பேசி அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் விளைகின்றார் எனின் அதே போன்று ஈழ்த்து சினிமாவோடு தொடர்புடையவர்களும் நமது சினிமாவின் மாற்றத்திற்காக செயற்பட வேண்டும் என்ற நோக்குடனேயே இதனை இங்கு குறிப்பிடுகின்றேன்.

ஈழத்து தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் 1982ஆம் ஆண்டு வரை மொத்தமாக 27திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. தொழில்நுட்ப வளம் இல்லாத காலத்தில் 27தமிழ் திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விடயம் அல்ல.

இவ்வாறு தொழில்நுட்பம் வளராத அந்தக்காலத்தில் 27திரைப்படங்கள் வெளிவந்த போதிலும் இதற்கு பிற்பட்ட காலங்களில் ஈழ்த்து தமிழ் சினிமாவின் வருகையில் வீழ்ச்சி ஏற்படத்தொடங்கியது.அந்தவகையில் ஈழத்து தமிழ் சினிமா இவ்வாறு நலிவடைந்தமைக்கு இங்கு நிலவும் இன முரண்பாடுகள், இந்திய தமிழ் சினிமாவின் இலங்கை ரசிகர்கள் மீதான ஆதிக்கம், இந்திய தமிழ் சினிமாக்களின் பிரமாண்ட வளர்ச்சி, முதலீட்டு சிக்கல் போன்றவை காரணங்களாக சொல்லப்படுகின்றன.

இந்த இடத்தில் விரும்பியோ விரும்பாமலோ மேற்படி காரணங்களை ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும் என்ற போதிலும் காரணங்களை கண்டறிந்துவிட்டு தீர்வைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த உலகில் உள்ள பெரும்பாலான விடயங்கள் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பது உண்மைதான். ஆனாலும் அதற்காக அவற்றால் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாதுள்ளது என்று சொல்லிவிட்டு இருந்துவிட முடியாது/ கூடாது. மாறாக முடிந்தவரை தடைகளை தாண்டியோ அல்லது தகர்த்தோ முன்னகர்த்த வேண்டியது அவசியம்.

இதே போன்றதொரு நிலைதான் இன்றைய ஈழத்து சினிமாவுக்கும் ஏற்பட்டுள்ளது. அதாவது இவ்வாறான ஒரு முன்னகர்த்தலை செய்யவேண்டிய கட்டாய கடமை ஒவ்வொரு ஈழ்த்து சினிமா ஆர்வலர்களிடமும், பொறுப்பானவர்களிடமும் உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் ஈழத்து தமிழ் சினிமாவில் முழுநீள திரைப்படங்களின் வருகை குறைவு அல்லது இல்லை என்ற போதிலும், குறும்படங்களின் வருகை தாராளமாக உள்ளது.அந்த வகையில் இந்தக் குறும்படங்களை அடிப்படையாக வைத்தே வீழ்ந்திருக்கும் நமது சினிமாவை அடுதத கட்டத்திற்கு அல்லது அதன் ஆரம்ப நிலைக்கு நகர்த்த வேண்டியுள்ளது.

அதாவது வியாபார சிக்கல்களால் முதலீட்டாளர்கள் ஈழத்து தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய முன்வராத நிலையில் இப்போதைக்கு நேரடியாக அல்லது ஒரே முயற்சியாக முழு நீளத் திரைப்படங்களை உருவாக்குவதில் உள்ள இடர்பாடு காரணமாக முதலில் குறும்படங்களின் உருவாக்கங்களை ஊக்குவிப்பதே ஒரே வழியாக இருக்கிறது.

உண்மையில் அண்மைக்காலமாக ஈழத்தில் குறும்படங்களின் உருவாக்கம் அதிகரித்துள்ளபோதிலும் அக்குறும்படங்களிற்கான சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதாவது வெளிவரும் குறும்படங்கள் ஒரு குறித்த பிரதேசத்திற்குள் அல்லது வட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றன. எனவே நாம் முதலில் அக்குறும்படங்களுக்கு சரியான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுத்து ஒரு ஆரோக்கியமான குறும்பட அடிப்படை கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக ஈழத்து தமிழ் சினிமாவோடு தொடர்புடையவர்கள், ஆர்வலர்கள் ஒரு நிர்வாக கட்டமைப்பை அமைக்க முன்வர வேண்டும். இந்த நிர்வாக கட்டமைப்பின் ஊடாக முதலில் ஈழத்து திரையரங்குகளில் ஒரு இந்திய தமிழ் சினிமா காட்சிப்படுத்தப்படுவதற்கு முன்னர் நமது குறும்படம் ஒன்றை காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்யலாம்.(இந்த முயற்சி ஆரம்பத்தில் சில பண வலு பிரச்சினைகளை உண்டுபண்ணினாலும் அதனை பெருந்தன்மையோடு பொறுத்துக்கொள்ள வேண்டும் அல்லது அரச ரீதியான உதவிகளினால் அதனை நிவர்த்தி செய்யலாம்.)

இவ்வாறாக நல்ல குறும்படங்களை தெரிவு செய்து காட்சிப்படுத்துகின்றபோது அது ரசிகர்களிடையே வரவேற்பை பெறுவதுடன் ஈழத்து தமிழ் சினிமாவை ரசிப்பதற்கான ரசனை மாற்றத்திற்கும் வித்திடும். அத்துடன் ஈழத்து தமிழ் சினிமாவின் முழு நீளத் திரைப்படங்களுக்கு ரசிகர்களை பழக்கப்படுத்தவும் செய்யும். (ஈழத்து தமிழ் சினிமாவிற்கான புதிய அடையாளத்தின் ஆரம்பமாக அமையும்.)

மேலும் இவ்வாறான ரசனை மாற்றம் ஈழத்து தமிழ் சினிமாவின் எதிர்கால பண வலுவிற்கு உதவியாக அமையும். அதாவது முதலீட்டாளர்கள் நம்பி முதலீடு செய்ய முன்வருவார்கள். இதன் பலனாக நமது சினிமா குறும்படங்களில் இருந்து முழு நீளத் திரைப்படங்கள் என்ற நிலைக்கு ஆரோக்கியமாக நகரும்.

எனவே இவ்வாறாக ஈழத்து குறும்படங்களை அடிப்படையாக கொண்டு நமது சினிமாவில் பல மாற்றங்களை செய்யலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இங்கு இசையாலே இசையாலே தொடரில் இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சொன்ன ஒரு விடயம் ஈழத்து தமிழ் சினிமாவுக்கும் பொருந்தும். அதாவது "நம்மால் பிரமாண்டத்தை வழங்க முடியாதுதான். ஆனால் பிரமாதத்தை வழங்க முடியும்."

உண்மையில் ஈழத்தில் ஏராளமான சினிமாக்கலைஞர்கள் பட்டை தீட்டப்படாத இரத்தினக் கற்களாக சிதறிக்கிடக்கிறார்கள். எனவே அவர்களை இனங்கண்டு பட்டை தீட்டி ஒன்று சேர்க்க வேண்டியுள்ளது. இதற்கு தமிழ் ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக அவசியம்.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவது இன்று ஈழத்து தமிழ் தொலைக்காட்சிகள் இசைக்கலைஞர்களை இனங்க்கான்பதிலையே அதிக ஆர்வம் காட்டுகின்றன. என்னைப்பொறுத்த வரையில் இசை என்பது ஒரு ஒலிவடிவமாக இருப்பதால் அதனை அல்லது இசைக்கலைஞர்களை அடையாளப்படுத்த ஓலி ஊடகங்களான வானொலிகள் மிகுந்த முனைப்புடன் செயற்பட வேண்டும். அத்துடன் சினிமா என்பது காட்சி, நடிப்பு, கமரா என ஒளி வடிவமாக இருப்பதால் அதனை அல்லது சினிமாக் கலைஞர்களை அடையாளப்படுத்த ஒளி ஊடகமான தொலைக்காட்சிகள் மிகுந்த முனைப்புடன் செயற்பட வேண்டும்.

எனினும் நமது ஊடகங்கள் தம்மால் செய்யக்கூடிய ஒரு பெரும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்காமல் குறுகிய வேலைத்திட்டங்களையே முன்னெடுத்து செல்கின்றன. அதாவது தொலைக்காட்சிகள் ஈழத்து தமிழ் சினிமாவை அல்லது கலைஞர்களை அடையாளப்படுத்த வேண்டியவர்கள் வானொலிகளால் செய்யக்கூடிய இசைக்கலைஞர்களை அடையாளப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஈழத்து இசைக்கலைஞர்களை அடையாளப்படுத்த வேண்டிய நமது வானொலிகள் இன்னும் இந்திய சினிமா பாடல்களை முதிக்கொண்டு வழங்குவதிலையே முதன்மை ஊக்கம் காட்டுகின்றார்கள். இது ஒரு மாணவன் நூறு புள்ளிகளை பெறக்கூடிய வல்லமை இருந்தும் ஐம்பது புள்ளிகள் போதுமென திருப்திப்படுவதற்கு ஒப்பானது. உண்மையில் இவை வருந்தத்தக்க பக்கங்கள்...

எனக்கு வானொலிகள் தொலைக்காட்சிகள் தொடர்பாக பல சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு. எனினும் இப்போது அந்த சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள முடிகின்றது.
எனினும் தொலைக்காட்சி தொடர்பில்,
"ஏன் நமது தொலைக்காட்சிகள் ஈழ்த்து தமிழ் குறும்படங்களை அடையாளப்படுத்துவதில்லை அல்லது ஒளிபரப்ப முடியாது????"
"இசைக்கலைஞர்களிடையே போட்டிகளை நடாத்தும் நமது தொலைக்காட்சிகளால் ஏன் குறும்பட கலைஞர்களிடையே போட்டிகளை நடாத்த முடியாமல் இருக்கிறது????"
இவற்றை சந்தேகக் கேள்விகளாக விட்டுவிட்டு செல்கின்றேன்.

""""மாற்றங்கள் மறுமலர்ச்சிக்காகவே.. அது நமது ஈழத்து சினிமாவிலும் ஏற்பட வேண்டும்.""""

இது நான் ஏற்கனவே பதிந்த ஒரு கவிதை இந்தப்பதிவுக்கு பொருத்தமாக அமைவதால் மீண்டும் பதிகிறேன்...

இயக்குனர்..
இது எனக்கு முதல் படம் -அதனால்
காட்சிகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.
என் படத்தின் பெயரை
பாசம் என்று பவ்வியமாய் சூட்டியுள்ளேன்.
"பாசம்"
இது கிராமத்து வாசம் வீசும் கதை.
பலருக்கும் இப்படம்
ஓசை இன்றி ஓர் கதை சொல்லும்- அதனால்
ஆசை ஆசையாய்
அரங்கிற்கு நீங்கள் அணிதிரண்டு வரலாம்.
பயப்படாதீர்கள்,
பணம் கொடுத்து பார்த்தாலும்
பாசம் உங்களை மோசம் போகச் செய்யாது- மாறாக
மாசற்ற உங்கள் மனதை பாசம் பரவசப்படுத்தும்.
வன்முறைக்குள் வாழும் உங்கள் வாழ்வின்
மூன்று மணி நேர மகிழ்ச்சிக்காய்
படத்தில் வன்முறைக் காட்சிகளை
பாதி அளவு குறைத்துள்ளேன்-ஆனால்
ஆங்கில வார்த்தைகள் ஆங்காங்கே உண்டு.
அதுதானே இன்றைய தமிழ் சினிமாவின் நாகரீகம்.
நாகரீக வரம்பை நான் மட்டும் எப்படி மீறுவது?
அடுத்ததடுத்து அரைத்த மாவையே அரைக்கும்
அகன்ற திரைக்கு பாசம் புதுசு.

இன்று,
என் "பாசம்" படத்தின்
தொடக்க பூசை.
படப்பிடிப்பையும் இன்றே ஆரம்பித்து விட்டேன்.
காட்சிகள் சிதறாமல் கட்டு கோப்புடன் இருக்க்க
கமரா கோணம் பார்க்கிறேன்.
அந்த காட்சி அவ்வளவு அழகாக தெரியவில்லை.
இன்னும் கொஞ்சம் இடப்பக்கம் திருப்பி கமராவை நிலைப்படுத்தினால்
நிச்சயம் நல்ல காட்சி கிடைக்கும்.
கமராவை அசைக்கிறேன்,
அற்புதமான அந்த காட்சியையும்
அவர்கள் நடிப்பையும் கமரா சுட்டுத்தள்ளுகிறது.
இனி அடுத்த காட்சிக்காய் கமராக் கோணம் திரும்புகிறது.
இப்படி திருப்பி திருப்பி எடுத்த காட்சிகள்
எடிட்டிங் அறையில் ஏராளமாய்
காட்சிக் கோர்ப்பிட்காய் காத்திருக்கின்றன.
இனி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.

அதற்குள்......
அம்மாவின் அலறல்,....
தம்பி விடிஞ்சிட்டு எழும்படா.....
இலங்கையில் தமிழ் பட இயற்குனராகும்
இலட்சியத்துடன் இருக்கும் எனக்காக
இந்த இரவு பொழுது தானும்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்க கூடாதா?

Sunday, July 19, 2009

புலிகளின் பின்னடைவின் பின்னணி...

இன்று இலங்கை உட்பட உலகில் உள்ள பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான பின்னடைவு பற்றியே ஆராய்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்..

அந்த வகையில் புலிகள் "ஆயுதத்தின்மேல் அதீத நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், இதனால் அரசியல் ராஜதந்திரம் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் இதுவே அவர்களின் தோல்விக்கு வித்திட்டது என்று பெரும்பாலான அரசியல் விற்பன்னர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்


மேலும் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மரணம், கருணா அம்மான் உட்பட்ட போராளிகளின் பிரிவு, முதன்மை தளபதிகளான பால்ராஜ்,தீபன் போன்றோரின் மரணம், சமாதான உடன்படிக்கை,அரசியல் ஆலோசகர் அன்டன்பாலசிங்கம் அவர்களின் மரணம் போன்றவையும் புலிகள் அமைப்பின் இராணுவ பின்னடைவுக்கான காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன


ஏதோ ஒரு வகையில் இந்தக்காரணங்களை ஏற்றுக்கொண்டாலும் இவ்வளவுதான் காரணங்கள் என்று திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் புலிகளின் இராணுவ ரீதியான பின்னடைவின் இன்னுமொரு பின்னணிபற்றி இந்தப்பதிவினூடாக பேசுகின்றேன்...

ஒரு கெரில்லா போராட்ட வடிவிலிருந்து மரபுவழி இராணுவமாக முப்படைக் கட்டுமானங்களுடன் பலம் பொருந்திய அமைப்பாக இருந்த புலிகள் இராணுவ ரீதியில் பின்னடைவை சந்தித்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்துவது உண்மைதான்.,


அந்த வகையில் புலிகளின் இந்த இராணுவ வழிப்பின்னடைவுக்கு போராட்டங்களின் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது பலத்தை புலிகள் இழந்திருந்தமையே முதன்மைக்காரணம் என்று சொல்லவேண்டும்..

அது என்ன போராட்டங்களின் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது பலம் என்று சிந்திக்கின்றீர்களா????


உண்மையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட முன்னர் ஒரு போராட்டத்தின் வெற்றி ஆட்பலம் என்னும் ஒரே ஒரு பலத்தினால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது, அதாவது போராட்ட அணிகளில் ஆட்கள் தொகை கூடிய அணிக்கே வெற்றி என்ற நிலைமை இருந்தது.

எனினும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், (பொல்லு.. கத்தி.. கோடரி.... வாள்.. துப்பாக்கி..) போராட்டங்களின் வெற்றி என்பது ஆட்பலம், ஆயுதபலம் ஆகிய இரண்டு பலங்களில் தங்கியிருக்க ஆரம்பித்தது.

இருந்தபோதிலும் இந்த இரண்டு பலங்களுடன் போராட்டத்தை தீர்மானிக்கும் பலங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை.

அதாவது ஆயுதபலம் உணரப்பட்டதன் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த காலத்தில் போராட்ட வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது பலமாக மனோபலம் உணரப்பட்டது.

உண்மையில் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது வியட்நாம் அமெரிக்காவைவிட ஆள்,ஆயுத பலங்களில் பலமடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. எனினும் அவர்களின் அதீத மனோபலம் (உளவுரண்) அவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது.


இதன் காரணமாக அன்று முதல் போரியல் பலங்களில் மனோபலம் முதன்மையானது என்ற கருத்துருவமும் தோற்றம் பெற்றது.


உண்மையை சொல்லவேண்டும் என்றால் கடற்படை, தரைப்படை, வான்படை என முப்பெரும் படைக்கட்டுமானம் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஆட்பலம், ஆயுதபலம், மனோபலம் ஆகிய முப்பலங்களிலும் குறைவு இருந்ததாக தெரியவில்லை.


இதில் அவர்கள் வீட்டிட்கொருவரை போராட்டத்தில் இணைத்தமையையும், தற்போது பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இராணுவத்திடம் சரணடைந்துள்ளதையும் ஆட்பலத்தின் சான்றாக சொல்லலாம். (புலிகளிடம் இருபத்து நான்காயிரத்திற்கும் அதிகமான போராளிகள் இருந்ததாக களத்திலிருந்து வெளியேறிய அரசியல் எழுத்தாளர் ஒருவர் தெயவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.)


அதேபோன்று சமாதான காலத்தில் புலிகள் ஏராளமான ஆயுதங்களை தரையிரக்கியிருந்தமை, யுத்தத்தில் அவர்கள் பயன்படுத்திய தாராள ஆயுத பயன்பாடு, படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் என்பவற்றை நோக்கும்போது புலிகளின் ஆயுத பலத்தின் மேலாதிக்கத்தை புரிந்துகொள்ளலாம்.


மனோபலம் தொடர்பில் இங்கு சான்றுகளை முன்வைக்காவிட்டாலும் ஆள், ஆயுத பலங்களில் பின்தங்கியிருந்த காலத்தில் புலிகளின் மனோபலமே அவர்களுக்கு பாரிய வெற்றிகளைத் தேடிக்கொடுத்தது என்ற அடிப்படையில் அவர்களின் மனோபலம் தொடர்பாக மதிப்பிட முடியும்.


இவ்வாறாக மூன்று பலங்களிலும் உயர்நிலையில் இருந்த புலிகள் இராணுவ ரீதியில் பின்னடைவை சந்திக்க அவர்களிடமிருந்த போராட்டத்தை தீர்மானிக்கின்ற நான்காவது பலமான புலனாய்வுப் பலம் சிதைக்கப்பட்டமையே காரணம் என்று சொல்லலாம்.


உண்மையில் இதுவரை காலமும் போராட்டத்தை தீர்மானிக்கும் பலங்களில் மூன்று பலங்கள் பற்றியே பேசப்பட்டுவந்தது. ஆனால் இப்போது நான்காவது பலமான புலனாய்வுப்பலம் பற்றியும் பேசவேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த நான்காவது பலமான புலனாய்வு பலம் படிப்படியாக உணரப்பட்ட ஒன்று என்றாலும் ஈராக் மீது அமெரிக்கா போர்தொடுத்து வெற்றிகொண்ட போதுதான் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் இப்பலாம் குறித்து பேச ஆரம்பித்தார்கள்.

அதாவது அன்று ஈராக்கும் அமெரிக்காவும் ஆள், ஆயுத, மனோ பலங்களில் சமநிலையில் இருந்ததாக கணிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம் நீண்டு செல்லலாம் என்றும், ஒருவேளை அமெரிக்காவிற்கு இது இன்னுமொரு வியட்நாம் யுத்த அனுபவத்தை கொடுக்கலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டது.

ஆனால் அனைத்து எதிர்வு கூறல்களையும் தவிடுபொடியாக்கி அமெரிக்கா தனது யுத்த நிகழ்ச்சி நிரலை ஈராக்கில் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றியதன் பின்னரே யுத்த வெற்றிகளை தீர்மானிக்கும் பலங்களில் நான்காவது பலமாக புலனாய்வுப்பலம் உள்ளது என்ற உண்மையை உரத்துசொல்லவேண்டியிருந்தது.


அதாவது ஈராக் ஆள், ஆயுத, மனோ பலங்களில் அமெரிக்காவிற்கு நிகராக இருந்தபோதிலும் புலனாய்வுப்பலத்தில் அமெரிக்கா ஈராக்கைவிட பன்மடங்கு உயர்வாக இருந்தமையே அமெரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்ததாக ஆய்வாளர்கள் சொல்லியிருந்தார்கள்.


இதேபோன்றே நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் இராணுவ ரீதியில் பின்னடைவை சந்திக்க அவர்களின் புலனாய்வுப்பலம் சிதைக்கப்பட்டமை காரணமாக அமைந்திருக்கிறது.


கடந்த இரண்டாயிரத்து ஓராம் ஆண்டிற்கு முற்பட்ட காலங்களில் புலிகளிடம் உலகமே வியந்து பார்க்குமளவுக்கு ஒரு ஆரோக்கியமான புலனாய்வுக்கட்டமைப்பு தமது கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளும் அதற்கு வெளியிலும் இருந்தது.
இதன் பலனாகத்தான் அவர்கள் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் உட்பட்ட அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் பெருமளவு வெற்றிகர தாக்குதல்களை நடாத்தியிருந்தார்கள்.


மேலும் தமது அமைப்புக்குள்ளும், கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்ளும் ஊடுருவியிருந்த இராணுவப்புலனாய்வாளர்களை இனங்கண்டு கொள்ளவும், துரோகங்களை முறியடிக்கவும் அவர்களால் முடிந்ததும் இதனாலையே.


எனினும் சமாதான உடன்படிக்கையின் பின்னர் அந்தக் கட்டமைப்பு உள்ளகத்திலும், வெளியகத்திலும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்தது. இதற்கு சமாதான உடன்படிக்கை, கருணா அம்மான் உள்ளிட்ட போராளிகளின் பிரிவு என்பவற்றை காரணங்களாக சொன்னாலும் இலங்கை படையினரின் புலனாய்வுக் கட்டமைப்பின் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியும், பல்வேறு நாட்டு புலனாய்வு அமைப்புக்களுடனான அவர்களின் கூட்டும் காரணங்களாக இருப்பதையும் மறுக்க முடியாது.


மேலும் இலங்கை இராணுவம் புலிகள் மீது பாரியபோரினை தொடுத்தபோது அரசுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் தமது உதவிகளை வழங்கியிருக்கின்றன. இவற்றில் பெருமளவு நாடுகள் புலனாய்வு ரீதியிலும் உதவியதாக தெரியவருகின்றது. அதாவது தமது நாட்டு புலனாய்வு செய்மதிகளை பயன்படுத்தி புலிகளின் நகர்வுகள் குறித்த தகவல்களை இலங்கை படையினருக்கு வழங்கியிருந்தன.


இதனால் களத்தில் புலிகளின் வேவுப்புலனாய்வு மிகுந்த நெருக்கடிகளை சந்தித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதாவது தொழில்நுட்ப வளம் குன்றிய, இரவுப்பொழுதுகளையே வேவு பார்க்க பயன்படுத்தும் வேவுப்புலிகளுக்கு இது பெரும் சவாலாகவே இருந்திருக்கும்.

அத்துடன் புலிகளின் ஆயுத நகர்த்தல்கள், போராளிகளின் ஒன்றுகூடல்கள் என்பனவும் இந்த புலனாய்வு செய்மதிகளின் மூலமாக படையினருக்கு உடனுக்குடன் தெரியவந்திருக்க வாய்ப்புள்ளது.
இதனைவிட இராணுவத்தின் வேவுவிமானங்களின் மூலமாகவும் இந்த தகவல்களை படையினர் பெற்றிருப்பார்கள்.

இதற்கு உதாரணமாக, புலிகள் கிளிநொச்சியில் தாக்குதல் ஒன்றிற்கு தயாராக இருந்தபோது படையினர் நடாத்திய மிகவும் துல்லியமான விமான, பீரங்கி தாக்குதல்களையும், ஆனந்தபுரத்தில் புலிகள் தாக்குதல் திட்டத்துடன் இருந்தபோது அவர்கள்மீது நடாத்தப்பட்ட எரிவாயு தாக்குதலையும் குறிப்பிட முடியும். (ஆனந்தபுரத்தில் படையினர் நடாத்திய எரிவாயு தாக்குதலிலையே புலிகளின் முன்னணி தளபதி தீபன் உட்ப்பட்ட பல தளபதிகள், போராளிகள் உயிரிழந்தார்கள்.)


இவ்வாறாக வெவ்வேறு நாடுகளின் கூட்டு புலனாய்வுச் செயற்பாட்டால் களத்தில் புலிகளின் வேவுப் புலனாய்வும், தாக்குதல் திட்டங்களும் படையினரால் முறியடிக்கப்பட்டதுடன், களத்திற்கு வெளியே கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் செயற்பட்ட புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்பும் சிதைக்கப்பட்டிருந்தது.


உண்மையில் புலிகளின் வெளியக புலனாய்வு (களத்திற்கு வெளியே) செயற்பாடுகள் முடக்கம் பெறுவதற்கு கருணா அம்மான் உள்ளிட்ட போராளிகளின் பிரிவையே பிரதான காரணமாக சொல்லவேண்டும்.

அதாவது கருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் அனுபவம் மிக்க ஏராளமான புலனாய்வுப்புலிகள் தென்னிலங்க்கைக்குள்ளும், அதனை அண்டிய அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளும் செயற்பட்டதாக நம்பப்படுகின்றது. (உயிரிழந்த புலிகளால் கேணல் இராணுவ தரநிலை வழங்கப்பட்ட சார்ல்ஸ் என்ற புலனாய்வுப்போராளி கொழும்பில் தங்கியிருந்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.)


எனினும் கருணா அம்மான் உள்ளிட்ட போராளிகளின் பிரிவின் பின்னர் அந்த புலனாய்வு போராளிகளை படையினரால் இலகுவாக அடையாளம்காண முடிந்ததால் சிலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள், சிலர் உயிரிழந்திருந்தார்கள், பலர் தப்பிச்சென்றிருந்தார்கள்.


அதன் பின்னர் புலிகளுக்கு வெளியகத்தில் ஒரு புதிய புலனாய்வுக்கட்டமைப்பை உருவாக்கவேண்டுய தேவை ஏற்பட்டிருக்கவேண்டும். எனினும் இலங்கைப்படையினரின் இறுக்கமாக்கப்பட்ட அதீத பாதுகாப்புக்குள் அந்த அனுபவமில்லாத புதிய கட்டமைப்பால் தொடர்ந்து ஆரோக்கியமாக செயற்பட முடியாது. அந்த வகையில் அர்ப்பணிப்பு உணர்வு குறைவு என்பதாலும், அனுபவம் குறைவு என்பதாலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையாலும் புதிய கட்டமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்


இவ்வாறாக புலிகளின் வெளியாக புலனாய்வு சிதைக்கப்பட்டமையால் புலிகளால் துல்லியமான போராட்டத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களை தென்னிலங்கையில் நிகழ்த்தமுடியவில்லை


புலிகளைப்பொறுத்தவரையில் களத்தில் நூறு இராணுவ வீரர்களை கொல்வதை விட கொழும்புபோன்ற பகுதிகளில் ஐந்து இராணுவ வீரர்களை கொல்வது அதிக அனுகூலம். அதாவது இதனால் களத்தில் இருக்கும் போராளிகளின் உளவுரனை அதிகரிக்கமுடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.


மேலும் தென்னிலங்கையில் இராணுவ இலக்கு ஒன்றின்மீதோ அல்லது பொருதார இலக்கு ஒன்றின்மீதோ நடாத்தும் தாக்குதலானது களத்தில் இராணுவச்செறிவை குறைத்து அவர்களை தென்னிலங்கை நோக்கி நகர்த்தும் கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டால் அது படையினருக்கான ஆயுத கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்துவது தொடங்கி ஒரு பெரும் அரசியல் மாற்றத்துக்குக்கூட வித்திடலாம் என்பது புலிகளின் போரியல் மூலோபாயங்களில் ஒன்றாகும்.


இவ்வாறான ஒரு சூழ்நிலையில் புலிகளுக்கு வலுவான ஒரு வெளியாக புலனாய்வுக்கட்டமைப்பு இன்றி எதனையும் செய்யமுடியாது. இதனால்தான் அவர்களால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய போரின்போக்கில் மாற்றத்தை எட்படுத்தக்கூட்டிய எந்தவொரு வலுவான தாக்குதலையும் வெளியகத்தில் மேற்கொள்ள முடியாமல் போனது.


இங்கு புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்பு சிதைக்கப்பட்டமைக்கு ஆதாரமாக அவர்கள் நடாத்திய வான்வழி தாக்குதல்களையும் குறிப்பிடலாம். அதாவது விமானப்படையை வெளிப்படுத்தாத காலத்தில் மூன்றாம்கட்ட ஈழப்போரின்போது கட்டுநாயக்கா என்ற மிகப்பெரிய விமானப்படைத்தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் தொடுத்து அழித்தவர்களுக்கு பின்னர் அவ்வாறு தரை வழியே நுழையமுடியாமையும், தென்னிலங்கையில் அவசரமாக ஒரு தாக்குதலை நடாத்தி அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய தேவையும் விமான வழித்தாக்குதலுக்கு அடிகோலியது என்றும் சொல்லலாம்.


இவ்வாறாக புலிகளின் புலனாய்வுப் பலம் வெவ்வேறு வழிகளில் சிதைக்கப்பட்டமை அவர்களின் பின்னடைவுக்கான இன்னுமொரு காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் போரின் வெற்றியை தீர்மானிக்கும் பலங்களில் நான்காவது பலமாக இணைந்திருக்கும் புலனாய்வுப் பலமே ஐந்தாவது பலம் உணரப்படும் வரை போர்களில் செல்வாக்கு செலுத்துவதுடன் ஏனைய பலங்களையும் தீர்மானிப்பதாக அமையும் என்ற கருத்துருவத்தையும் வழங்கலாம்...


(புலிகள் இலங்கை விமானப்படையின் தளங்களை குறிவைத்தமை மிக், கிபிர் விமானங்களால் பாரிய சவால்களை புலிகள் சந்தித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் களத்தில் பல்குழல் பீரங்கிகள் அவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்க வாய்ப்புண்டு.)

Saturday, July 18, 2009

விடைகொடு எங்கள் நாடே... வைரமுத்து....

இது கொஞ்சம் பிந்திய பதிவுதான்..
அதாவது கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கடந்த ஜூலை பதின்மூன்றாம் திகதி தனது ஐம்பத்தியாறாவது அகவையை பூர்த்தி செதிருந்தார்...(அவர் இம்முறை ஈழத்தமிழர்களுக்காக தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை.) எனவே இந்த பதிவை கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

உண்மையில் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களின் கவிதைகளாக இருந்தாலென்ன, பாடல்களாக இருந்தாலென்ன, கருத்துக்களாக இருந்தாலென்ன எனக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன் நான் எழுதும் சில கவிதைகளில் அவரின் பாதிப்பு இருப்பதாக நண்பர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு மிகவும் ஒரு தீவிர ரசிகன். கவிப்பேரரசர்வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையை பிடிக்காத உள்ளங்களே இல்லை என்று சொல்லலாம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறாம் ஆண்டு ஜூலை மாதம் பதின்மூன்றாம் திகதி இந்த பாரினில் அவதரித்தவர்தான் கவிப்பேரரசர் வைரமுத்து. அவர் வெளியிட்ட முதலாவது கவித்தொகுப்பு வைகறை மேகங்கள். இதனை அவர் தனது பதினேழாவது வயதில் வெளியிட்டதாக அறியமுடிகிறது. மேலும் அதனைத்தொடர்ந்தும் வைரமுத்துவின் வைர வரிகளை தாங்கிய தொகுப்புக்கள் பல வெளிவந்திருக்கின்றன, வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் பல திரைப்படங்களுக்கு பாடல்களை மிகவும் தத்துருபமாக எழுதியிருக்கிறார் என்பது முக்கியமானது. அந்த வகையில் நமது ஈழத்தமிழர் நிலைமையை தெளிவுபடுத்திய வைரமுத்துவின் பாடல்தான் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெறும் விடைகொடு எங்கள் நாடே... என்று ஆரம்பிக்கும் பாடல்.

உண்மையில் ஈழத்தில் இருக்கின்ற ஒரு படைப்பாளியால்கூட இவ்வளவுக்கு உணர்வுபூர்வமாக சிந்திக்க முடியுமா? என்று வியக்கும் அளவுக்கு அந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் அமைந்துள்ளன..

விடைகொடு எங்கள் நாடே.....
கடல் வாசல் தெளிக்கும் வீடே.....
பனைமரக்காடே பறவைகள் கூடே....
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா??....
இந்த ஆரம்பம் ஒன்றே போதும். இடப்பெயர்வே வாழ்வாக கொண்ட நமது மக்களின் நிலையினை சொல்ல..

உதட்டில் புன்னகை புதைத்தோம் .....
உயிரை உடம்புக்குள் புதைத்தோம் ....
வெறுங்கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...
இந்த வரி போதும் இடப்பெயர்வையே கண்டிராத ஒருவனுக்கு அதன் வலியை புரியவைக்க.....

கந்தல் ஆனாலும் தாய்மடி போல் ஒரு சுகம் வருமா?? வருமா?? சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் சுதந்திரம் வருமா?? வருமா??...
மனச்சாட்சி இல்லாதவனை கூட உலுக்கும் வரி.. சுதந்திரத்தின் உறைவிடம் நமது சொந்த ஊர்தானே அன்றி வேறேது...???

கண் திறந்த தேசம் அங்கே ....
கண் மூடும் தேசம் எங்கே???
சொந்த தாயகத்தில் பிறந்தவன் கண்மூடுகிறான் வேற்றுத்தாயகத்தில்... இதை விட இன்னும் எப்படி சொல்ல முடியும்..????

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்.....
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்..
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம்.....
மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் தான் நேசிக்கும் இயற்கையோடு பேசுவான்... நீராடிய நதிகளுடன் பேசுகிறார்கள் இடம்பெயரும் எம் சொந்தங்கள்..... மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்... எம்மவர்களுக்கு சொந்த தாயகம் அழைக்கும் என்ற நம்பிக்கையும் கூட... இடம்பெயரும் நேரத்திலும் தாயகம் மீண்டும் அழைக்கும் என்ற நம்பிக்கையுடன் நகர்கிறார்கள்... அந்த பொழுதுகளில் எம்மவர்கள் கடைசியாய் கண்ணீர் திரையுடன் தாயகத்தை பார்க்கிறார்கள்.... உண்மையில் கவிப்பேரரசர் ஈழத்தமிழ் உணர்வுள்ள கவிஞரே...

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்..
எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு புகையிலே புதைத்தோம்...
முன்னிரவில் மலரில் கிடந்தோம் பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்....
எங்கள் சொந்தங்கள் இடம்பெயரும் மனிதர்கள்தான்.. ஆனாலும் அவர்களுக்கும் காதல் காம உணர்வுகள் உண்டு... கவிப்பேரரசர் மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்....

கடல் நீர் பறவையாய் இருந்தால் சந்திப்போம்...
மனமே மலைகளாய் வாழ்ந்தால் சந்திப்போம்...
எந்த இடத்திலும் எங்கள் நம்பிக்கைகள் தளராதவை...

தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்....
நமக்கு நெஞ்சில்தான் அதிக பாரங்கள்... உடைமைகள் இழந்தோம் உறவுகள் இழந்தோம்.... நெஞ்சில் மட்டும் பாரங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது..

இவ்வாறாக அந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மகத்தானவை...
இசைப்புயல் ரஹ்மானின் இசையும், பாடகர்களின் உணர்வுபூர்வமான உருக்கமான குரலும் வரைமுத்துவின் வைரவரிகளுக்கு உயிர் கொடுக்கின்றன...

ஒரு சிறந்த படைப்பாளி கவிப்பேரரசர் வைரமுத்துவுக்கு இனிய வாழ்த்துக்களும் நன்றிகளும் சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.....

Friday, July 17, 2009

படைப்பாளியும்,, விமர்சகனும்...

ஆரோக்கியமான விமர்சனங்கள் ஒரு படைப்பாளியை முழுமையடைய செய்வதற்கு அவசியம் என்பது பொதுவான கருத்து.. இருந்தபோதிலும் சில சந்தர்ப்பங்களில் சில விமர்சனங்களால் படைப்பாளிகள் பாதிக்கப்படுவதுமுண்டு. உதாரணமாக சினிமாவை விமர்சிக்கும் சிலர் அதனை முழுமையாக மக்களுக்கு சொல்லிவிடுவதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஏன் நடிகர்களும் பாதிப்படைய நேரிடுவதுண்டு.

அத்துடன் இது தொடர்பாக தமிழ்கத்தில் இயக்குனர் ஒருவர் "படைப்பாளிகள் அணுவணுவாக வெயிலிலும் மழையிலும் நின்று செதுக்கும் படங்களை தொலைக்காட்சி கலையகத்தில் சொகுசு கதிரையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து கொண்டு விமர்சிக்கின்றார்கள்" என்று விமர்சகர்களை சாடியிருந்தார்.

எது எப்படி இருந்தாலும் நல்ல ஆரோக்கியமான விமர்சனம் ஒன்றினால் ஒரு படைப்பாளியை பூரணமாக்க முடியும் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது..

இப்படித்தான் நான் கல்லூரியில் கற்கின்ற காலங்களிலும் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. அதாவது எனது கல்லூரி நண்பர்களில் ஒருவன் மிகவும் திறைமையான படைப்பாளி. (குறிப்பாக கவிதை...) ஒரு நாள் அவன் எழுதிய ஒரு கவிதையை எம்மிடம் காட்டினான். அந்த கவிதையில் என்னால் எந்த குறையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதாவது அவனின் கவிதையில் குறை கண்டுபிடிக்கும் அளவுக்கு அப்போது எனக்கு அனுபவம் இருக்கவில்லை. ஆனாலும் எனது இன்னுமொரு நண்பன் அந்த கவிதையில் இருந்த குறைகள் சிலவற்றை சுட்டிக்காட்டினான்.

என்னதான் சிறந்த படைப்பாளி என்றாலும் எனது நண்பனுக்கு குறைகளை சுட்டிக்காட்டும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. இதனால் தனது கவிதையில் குறைகண்டுபிடித்த எனது மற்றைய நண்பனிடம் இவன் விளக்கம் கேட்க ஆரம்பித்தான். அவனும் ஒவ்வொன்றுக்கும் மிகவும் தெளிவாக விளக்கமளித்தான். படைப்பாளி நண்பன் விடுவதாக இல்லை. அவனுக்கு தெரிந்த எல்லாவற்றையும் கேள்விகளாக தொடுக்கலானான். விமர்சித்த என் நண்பனும் சளைக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தான்.

விமர்சனத்தில் ஆரம்பித்த இந்த நிகழ்வு நீண்டுகொண்டேபோனது. ஆற்றாமையில் இருந்த படைப்பாளி நண்பன் "அது சரி இவ்வளவு சொல்கிறாயே உன்னால் இப்படி ஒன்றை படைக்க முடியுமா???" என்று கேட்டான்.

உண்மையில் இந்த கேள்வி நம்ம விமர்சகருக்கு நெத்தியடியாக இருக்குமென்றுதான் நான் நினைத்தேன். ஆனால் நமது விமர்சகன் ரொம்ப புத்திசாதுரியமாக "நண்பா என்னால் முட்டை இட முடியாது, பால் கொடுக்க முடியாது. ஆனால், அந்த கோழிதரும் முட்டையின் சுவையையும், பசு தரும் பாலின் சுவையையும் கோழியையும், பசுவையும் விட நான் நன்றாக விமர்சிப்பேன்." என்று கூறினான்.

நம்ம படைப்பாளி மட்டுமல்ல நாங்களும் ஒரு கணம் அமைதியாகிவிட்டோம். அந்தளவுக்கு நண்பனின் விளக்கம் பிரமிக்க வைத்துவிட்டது. இதற்குமேல் அந்த விவாதம் தொடர்ந்திருக்குமா என்ன?? இரண்டு கோடுகளாக இருந்த என் நண்பர்கள் இருவரும் இணைந்தகோடுகளாக மாறிவிட்டனர்.

ஆம் படைப்பாளி நண்பன் நம்ம விமர்சக நண்பனுக்கு கைகொடுத்து தனது தவறை திருத்திக்கொண்டான். இதில் இன்னுமொரு விடயமும் உண்டு அதாவது அந்த சம்பவத்தின் பின்னர் தனது படைப்புக்கள் எதுவாக இருந்தாலும் படைப்பாளி நண்பன் முதலில் விமர்சக நண்பனிடம்தான் காட்டுவான்..

உண்மையில் விமர்சிப்பது ஒன்றும் சாதாரண விடயமல்ல. அத்துடன் படைப்பாளிகள் எல்லோரும் சிறந்த முறையில் விமர்சனத்தை முன்வைப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. மேலும் படைப்பாளிகள் நல்லதோ, கெட்டதோ வருகின்ற ஒவ்வொரு விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் ம்நோபக்குவமுடையவர்களாக இருந்தால் அவர்களின் படைப்பில் பூரணத்துவங்கள் எதிர்காலத்தில் அமைவதை யாராலும் தடுத்துவிட முடியாது.. அதேபோன்று விமர்சிப்பவர்களும் படைப்பாளிகளின் படைப்பை பாதிக்காத வகையில் விமர்சிப்பது அவசியம்..

இப்படி பல சம்பவங்கள் கல்லூரிக்காலத்தில் நடந்துள்ளன. ஒவ்வொன்றையும் தேவையான நேரத்தில் உங்களோடு பகிர்ந்துகொள்ளவேன் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு நிறைவடைகின்றது.

Saturday, July 11, 2009

தீர்வுத்திட்டம் சாத்தியப்படுமா???????

கொஞ்ச நாளாய் அரசியல் பக்கம் போகக்கிடைக்கவில்லை. அதனால் இந்த பதிவில் கொஞ்சம் அரசியல் பேசலாம் என்று எண்ணி இந்த பதிவை இடுகின்றேன்.. இது தொடர்பான உங்கள் கருத்துக்களயும் எதிர்பார்க்கின்றேன்...

இன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு ஒரு பெரும் வெற்றிக்களிப்பில் உள்ளது... இந்த வெற்றிக்களிப்பு ஒரு புறம் இருக்க தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றமை ஒரு பெரும் பிரச்சினையாக தலைதூக்க ஆரம்பித்துள்ளது..

இதனால் உலக நாடுகளிடமிருந்து ஏதாவது ஒரு வகையில் நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாததாக உள்ளது.(நம்ம நாட்டிற்கு எப்பத்தான் இது தவிர்க்ககூடியதாக இருந்திருக்கு..)

இருந்த போதிலும் இலங்கையின் போர் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ள மேற்குலக நாடுகள் உதவிகள் தொடர்பில் சில, பல நிபந்தனைகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றன.

அந்த வகையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம், நீண்ட கால இன முரண்பாடுகளிற்கான நிரந்தர தீர்வு என்பன இதில் முதன்மை பெறுகின்றன.(நமக்கு தெரிந்தவரை இவைதான் முதன்மை ஆனால் அந்தந்த நாடுகள் திரை மறைவில் எவற்றை முதன்மைப்படுத்துகின்றனவோ..??????) எனவே இவை தொடர்பில் அரசு விரும்பியோ விரும்பாமலோ ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது.


இருந்தபோதிலும் இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையும் இன முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் தமிழ்மகளுக்கு திருப்திகரமானதாக இருப்பதாக தெரியவில்லை என்றே கூற வேண்டும்..

இந்த நிலையில் இன முரண்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி உட்பட அரச பிரதிநிதிகள் வெளியிடும் கருத்துக்களும் குழப்பம் நிறைந்தவையாகவும், ஒன்றுக்கு ஒன்று முரணானதாகவும் உள்ளன. இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

கடந்த மே மாதம் பத்தொன்பதாம் திகதி பயங்கரவாதம் அழிக்கப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி "இந்த நாட்டில் இரண்டு இனங்கள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஒன்று நாட்டை நேசிக்கும் இனம் என்றும் மற்றையது நாட்டை நேசிக்காத சிறிய குழு என்றும்" கூறியிருந்தார். அதாவது ஜனாதிபதியின் பார்வையில் சிறுபான்மையினர் என்றோ அல்லது பெரும்பான்மையினர் என்றோ தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் என்றோ எந்தவொரு இனமும் இலங்கையில் கிடையாது.

அப்படியானால் இலங்கையில் நாட்டை நேசிக்கின்ற இனத்திற்கும் நாட்டை நேசிக்காத சிறிய குழுவிற்கும் இடையிலா முரண்பாடுகள் உள்ளன என எண்ண தோன்றுவதுடன் ஜனாதிபதி நாட்டில் இன முரண்பாடுகள் இல்லை என்று சொல்ல விழைகின்றாரா??? என்ற சிந்தனையையும் உண்டுபண்ணுகின்றது..

ஆனால் ஜனாதிபதயும் அரசாங்கமும் இலங்கையில் நீண்டகால இனமுரண்பாடு உள்ளதை நேரடியாக இதுவரை மறுக்கவில்லை என்பதனாலும் இப்போது பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் அது, இது என்று பேசுவதாலும் இலங்கையில் இனமுரண்பாடுகள் உள்ளன என்பதை ஜனாதிபதியும் அரசும் மறுக்கவில்லை என்றும் கொள்ள இடமுண்டு.

சரி இலங்கையில் இனமுரண்பாடுகள் உண்டு என்றால் ஜனாதிபதியின் பார்வையில் அது இலங்கையில் வாழும் நாட்டை நேசிக்கும் இனத்திற்கும் நாட்டை நேசிக்காத இனத்திற்கும் இடையில்தான் இருக்கவேண்டும்.அப்படியானால் அரசாங்கம் நாட்டை நேசிக்காத சிறிய குழுவிற்குத்தான் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க போகின்றதா?? என்ற கேள்வியும் தவிர்க்கமுடியாததாக உள்ளது..

இந்த நிலையில் அந்த நாட்டை நேசிக்காத சிறிய குழுதான் சம உரிமை தொடர்பிலும், அதிகாரங்கள் தொடர்பிலும் பேசுபவர்களாக இருக்க வேண்டும். கணிசமான தமிழ், முஸ்லீம் மக்கள் சம உரிமை தொடர்பிலும் அதிகாரங்கள் தொடர்பிலும் பல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். (அரசியல்,ஆயுதம்) ஆகவே ஜனாதிபதியின் கருத்துப்படி நாட்டை நேசிக்காதவர்கள் என்று சொல்லலாம்.

ஜனாதிபதியின் கருத்து இவ்வாறு இருக்க நூற்று இருபது தடவைகள் கூடி தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்த சர்வகட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸவிதாரண அண்மையில் சிங்கள நாளேடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் "தமிழ் மக்கள் ஆயுத ரீதியில் உரிமைகளை வென்றெடுக்கலாம் என எண்ணி புலிகளை ஆதரித்ததாகவும் அவர்களுக்கு வலுவூட்டியதாகவும் ஆனால் அந்த வழிமுறை தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வைப்பெறுவதே தற்போது சாத்தியம்" என்றும் கூறினார். அத்துடன் ஜனாதிபதியின் நாட்டைநேசிப்போர் நேசிக்காதோர் தொடர்பில் கேட்டபோது "அது ஜனாதிபதியின் கருத்து வெளியிடும் உரிமை என்றும் யாரும் எப்படியும் கருத்துக்களை முன்வைக்கமுடியும்" எனவும் பதிலளித்திருந்தார்.

அந்த வகையில் பேராசிரியர் திஸ்ஸவிதாரண அவர்கள் தனது இந்த செவ்வியின் மூலமாக தமிழ்ர்களின் ஏக பிரதிநிதிகளாக புலிகள் இருந்தமையை ஏற்றுக்கொண்டுவிட்டாரா? என்ற கேள்வி எழுவதுடன் இனங்கள் தொடர்பில் பேராசிரியரின் கருத்து தமிழ்ர்கள், சிங்களவர்கள்,முஸ்லீம்கள்...என்று அமைகின்றமை ஜனாதிபதியின் வகைப்படுத்தலில் இருந்து முற்றிலும் முரண்படுகின்றது.

இவை இவ்வாறு இருக்க இந்த நேர்காணலின் ஒரு இடத்தில் பேராசிரியர் "முதலில் தமிழ் மக்களின் கையில் ஒரு அதிகாரத்தை கொடுக்கவேண்டும் பின்னர் படிப்படியாக அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இதனை வரவேற்றே ஆகவேண்டும். அதாவது நீண்டகால இன முரண்பாட்டை ஒரே நாளில், ஒரே முயற்சியில் தீர்ப்பது என்பது சாத்தியமற்றது. படி நிலை வழியில்தான் அதனை தீர்க்கமுடியும்.

மேலும் இப்பத்திரிகை நேர்காணலின்போது "புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தால் தீர்வை விரைவாக பெற முடியும் எனவும், புலிகளிற்கு வழங்கிய நிதியுதவிகளை அரசாங்கத்திற்கு வழங்க முன்வர வேண்டும்" எனவும் கோரியிருந்தார். அவரின் இக்கோரிக்கையானது, அரசாங்கம் சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியையும், புலம்பெயர் நாடுகளில் தமிழ்ர்கள் நடாத்தும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கும் மிகப்பெரிய அழுத்தத்தையும் வெளிப்படுத்துகின்றது.

இவை ஒருபுறமிருக்க அரசில் அங்கம்வகிக்கின்ற, வகிக்காத பெரும்பான்மை இனவாத கட்சிகளின் கருத்துக்கள் வேடிக்கையானவையாகவும், முரண்பட்டவையாகவும் அமைகின்றன. அண்மையில் ஜனாதிபதி வெளியிட்ட ஒரு கருத்தும் குழப்பம் நிறைந்ததாகவும், சிறுபான்மை சமூகத்திடம் இருந்த ஒரு சின்ன நம்பிக்கையை கூட இழக்க வைப்பதாகவும் உள்ளது. மேலும் வடக்கில் அவசரமாக நடாத்தப்படும் தேர்தலும், பொதுத்தேர்தலின் பின்னரே தீர்வுத்திட்டம் என்ற அரசின் அறிவிப்பும் தீர்வு பற்றிய நம்பிக்கைகளை சீர்குலைக்க செய்துள்ளன என்பது நிதர்சனம்..

இந்த நிலையில் தீர்வுத்திட்டம் சாத்தியப்படுமா?????????

Friday, July 10, 2009

காதல் கவிதைகளும் நானும்...எனக்கு கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் இருந்து ஒரு சின்ன கவலை. அதாவது வழ்க்கமாக கவிதைகளை எழுதுவதில் அதீத ஆர்வம் என்னுள் இருந்தாலும் கொஞ்சம் புரட்சிகரமான கவிதைகளை எழுதுவதே எனக்கு எப்போதும் சாத்தியமாவதுண்டு. மாறாக காதல் கவிதைகளை எழுதுவது சாத்தியப்படுவது குறைவு. (நான் எழுதுவது கவிதைகள்தானா...????)

இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தபோது ஆரோக்கியமான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால் உண்மையை மட்டுமே எழுதவேண்டுமென நினைப்பது இந்த காதல் கவிதைகளை எழுதுவதை தடுக்கிறதோ என்று நினைப்பதுண்டு..
இப்படியான என்னால் எழுதப்பட்ட ஒரு சில காதல் கவிதைகளை இன்று பதிகின்றேன். பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டல்களையும் இட்டுவிடுங்கள்....

என் இனியவளே...உலக தரிசனத்தில் நீ ஓர்
உயிர்கொண்ட ஓவியம்.
வாழ்வின் எல்லை வரை
வார்த்தைக்காற்றும் வாழ்க நீ என்று
வாயார வாழ்த்தும்.
உன் நினைவு மறந்து தனியாய் நடந்தால்
என் நிழாலே என்னைவிட்டு விலகிவிடும்.
நீ என் பயணத்தில் எல்லாம்
கூடவே வருகிறாய்.

என் இனியவளே,
நீ என் இதயத்தில் அல்ல
உதிரத்தில் உறைந்திருக்கிறாய்.
அதனால்தான் உதிரத்தில்
உறைந்துள்ள உனக்காக
என் இதயம்
இன்றுவரை இடைவிடாது துடிக்கிறது.
இடைவேளை இல்லா இந்த இயந்திர வாழ்வில்
நிமிடக்காற்றும் நித்தம் நித்தம்
உன் பெயரை சத்த சஞ்சலமின்றி உச்சரிக்கிறது.

அன்பே,
நீ பேசிய வார்த்தைகள்
நினைவுப்பொக்கிஷங்களாய் உள்ளத்து நூலகத்தில்
உயரிய ஏடுகளில் பாதுகாக்கப்படுகின்றன.
புத்தம் புதிய அந்த புத்தகங்களின்
வாசகன் நான் மட்டும்தான்.
நிறைந்த அந்த நினைவுப்பூங்க்காவில்
மலர்ந்திருக்கும் மலர்கள்
வாடா வரம்பெற்றவை.
வாழ்வின் எல்லைவரை
அவை வாசம் வீசிக்கொண்டேயிருக்கும்.


மெளனம் கலைத்துவிடு..!
தேவதையே உன்னை தேடிவந்தேன்,
காதல் என்னும் ராகம் பாடி வந்தேன்
நீ மட்டும் என்முன்னே
என்றும் மெளனமாய் ஏன்?
அன்பே, உன்னை அடைய
ஆர்ப்பரிக்கும் அலைகடல் நடுவே
ஆயிரம் படகுகளில் தத்தளித்து
கரை சேர்ந்து
காதல் மொழி பேச காத்திருக்கிறேன்,
கலைத்துவிடு உன் மெளனத்தை,
இல்லையேல்,
இங்கொரு இதயம் சடப்பொருளாகி சுடச்சுட எரியும்.....சூரியன் இல்லாத பூமியாக...
உறங்கும்போதும்
உன் நினைவுகள் உறங்குவதில்லை,
ஏனெனில் நீ என் உண்மைக்காதலி.
உன் விம்பம்
என் விழித்திரைக்கு ஒளியூட்டும்
அழாகான வைப்பகப்படம்.

பெண்ணே,
நீ என்
அன்பான அழாகான உள்ளக்காதலி.
உள்ளத்துடிப்பு நின்று உயிர்பிரியும்வரை
உன் நினைவுகள் அழியாது,
இது உறுதி.

அன்பே,
மறப்பதற்கு நீ
உன் நினைவுகளை மட்டுமா என்னிடம் தந்தாய்?
இல்லையே,
உன் உள்ளத்தையல்லவா தந்திருக்கிறாய்..
தந்த உன் உள்ளத்தை தொலைத்துவிடால்
இந்த உலகில் எனக்கு என்ன வேலை.

மங்கையே,
அன்பை ஆட்சிசெய்யும்
உண்மையான உன்னை மறந்தால்
உலகில் எனக்கென எஞ்சும் உள்ளம்
சூரியன் இல்லாத சூனிய பூமியைப்போல
மணித்துளிகள் ஒவ்வொன்றும்
மரணத்தை நோக்கி பயணிக்கும்.

Wednesday, July 1, 2009

முடியும்.. உன்னால்...முடியும்....

இன்னும் பல லட்சம் ஆண்டுகளில்
தமிழ் மொழி அழிந்துவிடுமாம்
அதன் பின்....
அனைவர் உதடும் ஆங்கிலம் உச்சரிக்குமாம்..
தமிழ் மொழிக்கு வர இருக்கும்
இந்த அவல நிலை பற்றி சிந்தித்தபோது...

தமிழ் மொழிக்கு இன்றுதான் இறுதி மூச்சு..
நாளை முதல்
முக்கனி சுவைகொள் முத்தமிழ்
ஆங்கில ஆப்பிளிற்க்குள் அடக்கப்படும்..
சங்கம் வைத்து காத்த செந்தமிழ்
சாமாதிக்குள் சங்கமமாகும்...

இனி,
தமிழ் அகராதிகள் அதிகாரம் இழக்கும்....
ஆங்கில அகராதிக்கு தமிழன் அடிமையாகுவான்..
ஆங்கில பத்திரிகைகள்
தமிழன் கரங்களை அலங்கரிக்கும்..
தமிழ் பத்திரிகைகள்
நிரந்தர நித்திரை செய்யும்..
தமிழ் இலக்கியங்கள்
இலட்சணம் இழக்கும்...
ஆங்கில இலக்கியங்களை
ஆர்வத்துடன் கற்பான்
தமிழ் மொழி மறந்த தமிழன்...

நாளை முதல்
தமிழ் ஊடகங்கள்
தங்கள் கடந்த கால தவறுகளால்
தகுதி இழந்து தவிப்பர்...
மெல்லினிய தமிழ் மொழியின் பிரிவால்
காற்றலைகள் கனத்த கவலை கொள்ளும்...
தமிழ்ற்காய் உழைத்த தவப்புதல்வர்கள்
தமிழர் மனங்களில் மறக்கப்பட்டு விடுவார்கள்....

தமிழா!
இன்றுதான் உன் தாய்மொழிக்கு
இறுதி மூச்சு...
நாளை முதல்
உன் தாய்மொழியாம்
தமிழ் மொழி அழிந்துவிடும்..
அதன் பின்
மாற்றான் தாயிடம்
மொழிப்பிச்சை கேட்டு மண்டியிடப்போகின்றாய்..
அது சரி.. தமிழனே!
மரணிக்கும் உன் செம்மொழியின்
நீண்ட தொன்மையை
எப்படி உன்னால் ஆங்கிலத்திற்குள்
அடக்கி தொகுக்கமுடியும்?

ஓ... தமிழனே!
இன்று நீ வாழ்விடம் இழந்து தவிக்கும்
அகதி மட்டும்தான்.. ஆனால்
நாளை முதல்
தாய்மொழி இழந்து தவிக்கும்
அகதியும் ஆகப்போகின்றாய்..

கூடாது தமிழா.. கூடாது..
எந்த மொழி அழிந்தாலும்
எங்கள் மொழி அழிந்துவிடக்கூடாது...
விழித்திடு தமிழா விழித்திடு...
தமிழா உன் மொழிக்குள் ஊடுருவியிருக்கும்
ஒவ்வொரு பிற மொழயும்
ஒவ்வொரு வைரசுகள்..
முதலில் அவற்றை களையெடு..
நீ இலக்கியங்கள் புனைய தேவையில்லை..
இறந்து போகும் நிலையில்
இருக்கும் உன் மொழி இலக்கியங்களை
புதிய அச்சேற்று..
முடியும் உன்னால் முடியும்..
நீ உலக வரலாறுகளையே மாற்றியமைக்கும்
வல்லமை படைத்த மறத்தமிழன்..


பிற்குறிப்பு: கவிப்பேரரசு வைரமுத்துவின் பூமிக்கு வர இருக்கும் கடைசி பகல் என்ற கவிதையின் பாதிப்பே இதனை எழுத தூண்டியது