உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, September 30, 2012

முடிவுக்கு வந்தது பரபரப்பு யுத்தம். கோலி அதிரடி இந்தியா இலகு வெற்றி.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் இருபதாவது போட்டியில்  super eight சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிய பரபரப்பான போட்டி சற்று முன்னர் கொழும்பு R பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தனர். 
இதன்படி பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

அணியின் சார்பில்  மலிக் 28 ஓட்டங்களையும், உமர் அக்மல் 21 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹபீஸ் 15 ஓட்டங்களையும், அப்ரிடி 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
                           
இந்திய அணியின் பந்து வீச்சில் பாலாஜி 3 இலக்குகளையும், யுவராஜ்சிங், ,அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளையும், கோலி, இர்பான்பதான் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து இருபது ஓவர்களில் 129 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17 ஓவர்களில் இரண்டு இலக்குகளை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் விராட் கோலி 78 ஓட்டங்களையும் வீரேந்திர சேவாக் 25 ஓட்டங்களையும், யுவராஜ் சிங்  19 ஓட்டங்களையும் பெற்றனர். 


பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் ஹசன், அப்ரிடி ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களை பந்து வீச்சில் இந்திய அணியின் தலைவர் டோணி அதிகமாக பயன்படுத்தியமை இருபது-இருபது போட்டிகளுக்கான சிறந்த பந்து வீச்சு வியூகம் என்கின்ற போதிலும் பாகிஸ்தான் அணியுடனான பரபரப்பான போட்டியில் இவ்வாறான உத்தியை கையாண்டமை டோனியின் அசாத்தியமான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.

அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி.

இலங்கையில் நடைபெற்று வரும் இருபதுக்கு-இருபது உலகக் கிண்ண போட்டியின் பத்தொன்பாவது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. கொழும்பு R பிரேமதாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தனர். 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியினர் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் ஐந்து இலக்குகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

அணியின் சார்பில் பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும், Behardien ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும், JP டுமினி 30 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் டொஹெர்தி 3 இலக்குகளையும், வொட்சன் 2 இலக்குகளையும் பதம்பார்த்தனர்.

பதிலுக்கு இருபது ஓவர்களில் 147 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர் 17.4 ஓவர்களில் இரண்டு இலக்குகளை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தனர்.

அணி சார்பில் வொட்சன் 70 ஓட்டங்களையும், மைக் ஹசி ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் மோர்கல், பீட்டர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தினர்.

அந்த வகையில் இந்த போட்டியில் 14 பந்துவீச்சுக்கள் மீதமிருக்க அவுஸ்திரேலிய அணியானது 8 இலக்குகளினால் வெற்றியீட்டியுள்ளது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் பிரகாசித்த வொட்சன் தெரிவு செய்யப்பட்டார். 
தோற்றது தென்னாபிரிக்கா என்றாலும் தென்னாபிரிக்க அணியை நம்பியுள்ள பந்தயக்காரர்கள் தோற்று விடாமல் இருப்பார்களா?

இது இவ்வாறு இருக்க  இருபதுக்கு-இருபது உலகக் கிண்ண போட்டியின் இருபதாவது போட்டியில் தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Sunday, September 23, 2012

முஸ்லிம் காங்கிரசின் துரோகத்தை சாதகமாக்கி...

இலங்கை அரசியல் அரங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாகாண சபைக்கான தேர்தல்கள் மூன்றும் நிறைவடைந்து பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமை தொடர்பான விமர்சனங்கள் ஊடகங்களில் இன்னமும் எதிரொலித்த வண்ணமே உள்ளன. 
குறிப்பாக தமிழ்-முஸ்லிம் சமூகம் இணைந்த தமிழ் பேசும் மக்கள் என்னும் ஐக்கியத்தை எதிர்பார்த்தவர்கள் முஸ்லிம் காங்கிரசின் முடிவால் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். உண்மையில் முஸ்லிம் காங்கிரசின் முடிவு அரசுடன் இணைவதாகவே அதிகமானதாக இருக்கும் என்பது தேர்தலுக்கு பின்னரான அவர்களின் செயற்பாடுகள் மூலம் நன்றாக வெளிப்பட்ட போதிலும் இறுதி நேரத்திலாவது முஸ்லிம் காங்கிரஸ் தமது முடிவை மாற்றும் என்றே பலரும் எதிர்பார்த்திருக்க அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கில் ஆட்சியமைக்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் உத்தியோக பூர்வமாக அறிவித்து தமக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களையும், முஸ்லிம்-தமிழ் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை எதிர்பார்க்கும் தரப்பினரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமது கட்சியின் தவிசாளர் உட்பட்ட முக்கியஸ்தர்களையும், அசாத் சாலி போன்ற மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அரச எதிர்ப்புள்ள உறுப்பினர்களையும் ஏமாற்றியது ஒரு வரலாற்று தவறு என்பதில் சந்தேகமில்லை. 
கிழக்கு மாகாண சபையை பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பது தேர்தலுக்கு முன்னமே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தால் என்ன முஸ்லீம் காங்கிரசாக இருந்தால் என்ன  இந்த விடயத்தை நன்கு புரிந்த நிலையில்தான் தேர்தலில் களம் புகுந்திருந்தார்கள். எனினும் அரச எதிர்ப்பு என்பது இவ்விரு கட்சிகளினதும் தேர்தல் பிரசாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் இந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளில் பாதிக்கு மேற்பட்டவை அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் உணர்வுகளையே வெளிப்படுத்தியிருந்தன. இந்த நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அரசிற்கு ஆதரவளித்துள்ளது. 
முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் இந்த முடிவை பெரும்பாலான ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் இந்த முடிவை விமர்சிக்கும் அதேசமயம் யாருக்கும் இதுவரையில் சோரம் போகாத தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான அரசியல் அடையாளமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசின் முடிவை எவ்வாறு தமக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு வலுவான அரசியல் சக்தியாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரையில் இப்போது பல்வேறு மாறுபட்ட விமர்சனங்களை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் எதிர்கொண்டு வருகின்றமை என்னவோ கசப்பான உண்மைதான். ஆனாலும் யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரும் இதுவரையில் அரசாங்கத்திடம் மண்டியிடாத தமிழ் மக்களின் ஆதரவுள்ள ஒரே அரசியல் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளமை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பான தீர்வுகளை நோக்கிய நகர்வுக்கு மிகப் பெரிய பலம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

சர்வதேச நாடுகளில் பரந்து வாழும் தாயக சொந்தங்களின் உணர்வுகளும், தாயகத்தில் வாழும் சொந்தங்களின் உணர்வுகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை இல்லை என்கின்ற போதிலும் அடக்கப்பட்டு, அடிமை வாழ்வு வாழும் உறவுகளால் தமது உணர்வுகளை ஒரு போதும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது என்பது வெள்ளிடை மலை. 

இந்த நிலையில் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற  தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்கள் மக்களின் பலம் கூட்டமைப்புத்தான் என்றும், அதை சிதைக்கும் உரிமையை மக்கள் யாருக்கும் வழங்கவில்லை என்றும், நாம் கூட்டமைப்பாகவே மக்களிடம் செல்கின்றோம் எனவும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களது தனித்துவங்களை பேணுவது தொடர்பில் ஆட்சேபனை இல்லை என்றும்  தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. 

அதுமட்டுமல்லாது 2001 , 2004 ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கொள்கை அடிப்படையில், புரிந்துணர்வு அடிப்படையில் ஒத்து இயங்குவதற்கு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சக்தியாக விளங்குகின்றது என அவர் குறிப்பிட்ட கருத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும். 


உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தமிழர்களின் அரசியல் சக்தி அரசாங்கத்திடம் மண்டியிடாத வரை நமது சக்தியை பலவீனப்படுத்தும் ஊடக விமர்சனங்களும், கருத்துக்களும் தமிழர்களின் ஒன்றிணைந்த வாக்கு வங்கியைக் கொண்ட கூட்டமைப்பை சிதைப்பது மட்டுமன்றி, அரசாங்கத்தையும் பலமாக்கும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். 

இது இவ்வாறு இருக்க கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் ஏமாற்றியதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு சாதகமான அரசியல் நகர்வாக மாற்றுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதாவது ஏமாற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பொருத்தமான, மக்கள் செல்வாக்குள்ள முஸ்லிம் உறுப்பினர்களை உள்வாங்கி எதிர்வரும் தேர்தல் களங்களில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கான செயற்றிட்டங்களை ஆரம்பிப்பதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் எந்தவொரு கட்சியின் துணையுமின்றி கிழக்கில் ஆட்சியமைக்கும் நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். 

மேலும் எதிர்வரும் காலங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வடமாகாண சபைக்கான தேர்தலிலும் வடக்கு வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அடையாளத்துக்கு கிடைக்கும் வகையில் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். 

கதிரையிலும், வெற்றிலையிலும், யானையிலும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற முடியும் என்றால் ஏன் வீட்டு சின்னத்திலோ அல்லது பிறிதொரு சின்னத்திலோ தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து வெற்றியீட்டி தமது ஒற்றுமையால் உயர்வடைய முடியாது?

சுருண்டது இங்கிலாந்து.. இந்திய அணி அபாரம்.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் பத்தாவது போட்டியில் குழு A இல் இந்திய மற்றும், இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி சற்று  முன்னர் கொழும்பு R பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டோனி தலைமையிலான இந்திய அணியினர் நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் நான்கு இலக்குகளை இழந்து 170 ஓட்டங்களை சேர்த்தனர்.

அணி சார்பில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 33 பந்து வீச்சுக்களை எதிர்கொண்டு ஐந்து நான்கு ஓட்ட பெறுதிகள், ஒரு ஆறு ஓட்ட பெறுதி அடங்கலாக 55 ஓட்டங்களையும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கம்பீர் 45 ஓட்டங்களையும், கோலி 40 ஓட்டங்களையும் குவித்தனர்.


பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் fin இரண்டு இலக்குகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இருபது ஓவர்களில் 171 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்னும் இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த நியுசிலாந்து அணி 14.4 ஓவர்கள் நிறைவில் 80 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து சுருண்டது.

அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கீஸ்வேட்டர் 35 ஓட்டங்களை பெற்றார்.

இந்திய அணியின் பந்து வீச்சில் ஹர்பஜன்சிங் நான்கு இலக்குகளையும், இர்பான் பதான், பியு சாவ்லா ஆகியோர் தலா இரண்டு இலக்குகளையும் இலக்குகளையும் வீழ்த்தினர்.

அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணியானது 90 ஓட்டங்களினால் அபாரமான வெற்றியினை பெற்றது. 
போட்டியின்  ஆட்ட நாயகனாக அணி  இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் பிரகாசித்த ஹர்பஜன்சிங் தெரிவு செய்யப்பட்டார்.

13 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்.

இலங்கையில் நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் ஒன்பதாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகல்ல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. 

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற முஹமட்  ஹபீஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்து நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் ஆறு இலக்குகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றனர். 
அணி சார்பில் ஜம்சேத் 35 பந்து வீச்சுக்களை எதிர் கொண்டு இரண்டு நான்கு ஓட்ட பெறுதிகள் நான்கு ஆறு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக  56 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹபீஸ் 38 பந்து வேச்சுக்களை எதிர் கொண்டு தலா இரண்டு நான்கு மற்றும் ஆறு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 43 ஓட்டங்களையும் சேர்த்தனர். 
பந்து வீச்சில் நியுசிலாந்து அணி சார்பில் சௌத்தி, ஓரம் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இருபது ஓவர்களில் 178 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த நியுசிலாந்து அணியினர் 9 இலக்குகளை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். 

அணி சார்பில் நிக்கோல் 33 ஓட்டங்களையும், மக்கலம் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் சஜிட் அஜ்மல் நான்கு இலக்குகளை பதம்பார்த்தார்.
அந்த வகையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியானது 13 ஓடங்களினால் வெற்றியீட்டியுள்ளது.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் பிரகாசித்த நசிர் ஜம்சேத் தெரிவு செய்யப்பட்டார்.

Saturday, September 8, 2012

தேர்தல் முடிவுகள்-சிந்திக்க தவறிய சில மக்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபை தேர்தல்களில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தேர்தலாக அமைந்த போதிலும் இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது மொத்தமாக 200 044 வாக்குகளைப் பெற்று இரண்டு போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 14 ஆசனங்களையும், இலங்கை தழரசுக் கட்சி 193 827 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 132 917 வாக்குகளைப் பெற்று 07 ஆசங்கங்களையும், ஐக்கியதேசியக் கட்சி 74 893 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும், விமல் வீரவன்ச தலைமயிலான தேசிய சுதந்திர முன்னணி 9 522 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது. 


கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள்

திருகோணமலை மாவட்டம்    வாக்குகள்    ஆசனங்கள் 
இலங்கை தமிழரசுக் கட்சி                    44 396          03
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி    43 324         03
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்          26 176         02
ஐக்கிய தேசியக் கட்சி                               24 439         01
தேசிய சுதந்திர முன்னணி                       9 522          01

மட்டக்களப்பு  மாவட்டம் 
இலங்கை தமிழரசுக் கட்சி                      104 682        06           
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி       64 190         04
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்              23 083         01
ஐக்கிய தேசியக் கட்சி                                  2437

அம்பாறை மாவட்டம் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி     92 530          05
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்           83 658          04
ஐக்கிய தேசியக் கட்சி                               48 020          03
இலங்கை தமிழரசுக் கட்சி                      44 749         02
                    

Monday, September 3, 2012

கோலி ஆட்ட நாயகன் இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா வெற்றி.

இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது. கடந்த 31 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது. 

இதன்படி முதலாவது இனிங்க்சில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணியானது 90 .1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

நியுசிலாந்து அணி சார்பில் அணியின் தலைவர் ரோஸ் டெய்லர் 113 ஓட்டங்களையும், இலக்கு காப்பாளர் van wky 71 ஓட்டங்களையும், குப்டில் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முதல் இனிங்க்சில் ஓஜா ஐந்து இலக்குகளையும், சகீர் கான் இரண்டு இலக்குகளையும் பதம்பார்த்தனர். 

இதனைத் தொடர்ந்து தனது முதல் இனிங்க்சை ஆரம்பித்த இந்திய அணியானது 96 .5 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து  353 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்தது. 

இந்திய அணி சார்பில் விராட் கோலி 103 ஓட்டங்களையும், அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி 62 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 55 ஓட்டங்களையும் பெற்றனர். 

                                     
பந்து வீச்சில் நியுசிலாந்து அணி சார்பில் சௌத்தி ஏழு இலக்குகளையும், பிரஸ்வெல் இரண்டு இலக்குகளையும் பதம்பார்த்தனர். 

தொடர்ந்து இரண்டாவது இனிங்க்ஸ்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணியானது 73 .2 ஓவர்களில் 248 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் பறிகொடுத்தது. 

நியுசிலாந்து அணி சார்பில் பிராங்க்ளின் 41 ஓட்டங்களைப் பெற்றார். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அஸ்வின் ஐந்து இலக்குகளையும், உமேஷ் ஜாதவ், ஓஜா ஆகியோர் தலா இரண்டு  இலக்குகளையும் கைப்பற்றினர். 


பதிலுக்கு இரண்டாவது இனிங்க்சில் 261 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்னும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 63 .2 ஓவர்கள் நிறைவில் ஐந்து இலக்குகளை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று ஐந்து இலக்குகளினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றீயீட்டியுள்ளது. 

இரண்டாவது இனிங்க்சில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும், மகேந்திரசிங் டோனி ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், புஜாரா 48 ஓட்டங்களையும் சேர்த்தனர். 

நியுசிலாந்து அணி சார்பில் பட்டேல் மூன்று இலக்குகளை பதம்பார்த்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் நாயகனாக தமிழக வீரர் அஷ்வின் தெரிவு செய்யப்பட்டார். இந்தப் போட்டியின் முதல் இனிங்சில் கோலி பெற்றுக் கொண்ட 103 ஓட்டங்களானது  டெஸ்ட் போட்டியில் அவரின் இரண்டாவது சதமாகும். 

அந்த வகையில் இந்தப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றமையால் நியுசிலாந்து 0 - 2 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.