உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, July 28, 2012

மே மே மேற்கிந்தியத் தீவுகள்... அ அ அதிரடி...

ஒரு பக்கம் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் லண்டனில் கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பாதுகாப்பு சிக்கல்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் இம்முறை ஒலிம்பிக் போட்டி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


பலரின் பார்வைகளும் இந்தப் போட்டிகளின் மீது பதிந்திருக்க நியுசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையில் சத்தமே இல்லாமல் நடைபெற்று வரும் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நியுசிலாந்து அணியை துவம்சம் செய்து வருகின்றது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2 போட்டிகளைக் கொண்ட 20 - 20 தொடரை 
2-0 என கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 05 போட்டிகளைக் கொண்ட 50 ஓவர்கள் ஒருநாள் தொடரை 4 - 1 என கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

இந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 இலக்குகளினால் வெற்றியீட்டியுள்ளது
கடந்த 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. இதன்படி முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணியானது 129.1 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 351 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

நியுசிலாந்து அணி சார்பில் முதல் இனிங்சில் குப்டில் 97 ஓட்டங்களை பெற்றார். 
பந்து வீச்சில் முதல் இனிங்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் நரைன் 05 இலக்குகளையும் , ராம்பவுல், ரோச் ஆகியோர் தலா 02 இலக்குகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு முதல் இனிங்கசில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 163.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 522 ஓட்டங்களை பெற்றது. 

அணிசார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கெயில் 150 ஓட்டங்களையும், பவல் 134 ஓட்டங்களையும் குவித்தனர். இது பவல் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக் கொண்ட கன்னிச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டியோனரின் 79 ஓட்டங்களையும், (f)புடடின் 55 ஓட்டங்களையும், அணித்தலைவர் டரன் சமி  50 ஓட்டங்களையும் பெற்றனர். 



பந்துவீச்சில் நியுசிலாந்து அணிசார்பில் மார்டின் 03 இலக்குகளையும், பிரஸ்வல் , வில்லியம்சன் ஆகியோர் தலா 02 இலக்குகளைவும் வீழ்த்தினர். 
இந்தப் போட்டியின் மூலமாக தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணியின் வீரர் நெய்ல் வாக்னர் தனது கன்னி விக்கட்டினை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து  இரண்டாவது இனிங்க்சை ஆரம்பித்த நியுசிலாந்து அணியானது இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது இரண்டாவது இனிங்க்சில் மொத்தமாக 105.2 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் 102 ஓட்டங்கள் முன்னிலை வகிக்க 272 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

நியுசிலாந்து அணிசார்பில் இரண்டாவது இனிங்க்சில் மக்கலம் 84 ஓட்டங்களையும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குப்டில் 67 ஓட்டங்களையும் பெற்றனர். 
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ரோச் 5  இலக்குகளையும், நரைன் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது  இனிங்சில் 102 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்னும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.3 ஓவர்களில் ஒரு இலக்கினை இழந்து வெற்றியிலக்கினை எட்டியது.

அணி சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கெயில் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 49 பந்துவீச்சுக்களில் 8 நான்கு ஓட்ட  பெறுதிகள், 2 ஆறு ஓட்ட பெறுதிகள்  அடங்கலாக 64 ஓட்டங்களையும், பவல் 30 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சில் சேர்த்தனர். 

பந்துவீச்சில் நியுசிலாந்து அணி சார்பில் பிரஸ்வல் ஒரு இலக்கினை கைப்பற்றினார். 

போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணிசார்பில் பந்து வீச்சில் முதலாவது இனிங்க்சில் 05 இலக்குகளையும் இரண்டாவது இனிங்க்சில் 03 இலக்குகளையும் வீழ்த்திய நரைன் தெரிவுசெய்யப்பட்டார்

இவ்விரு அணிகளுக்குமிடையிலான இத் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 2 ஆம் திகதி கிங்ஸ்டனில் ஆரம்பமாகவுள்ளது.

கம்பீர், ரெய்னா அதிரடி..இந்திய அணி விறு விறுப்பு வெற்றி..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்திய அணியானது 02 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 05 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. 
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியானது சற்று முன்னர் கொழும்பு R பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது துடுப்பாட்டத்தை முதலில் தேர்வு செய்து களம் புகுந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 286 ஓட்டங்களை சேர்த்துக் கொண்டது. 


இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார (73), அஞ்சலோ மத்தியுஸ்(ஆட்டமிழக்காமல் 71), மஹேல ஜெயவர்த்தன(65) ஆகியோர் அரைச் சதம் கடந்தனர். 
 

தினேஷ் சந்திமல் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார்.  
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக சகீர்கான் 10 ஓவர்கள் பந்து வீசி 39 ஓட்டங்களை கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார். ஏனைய வீரர்களான இர்பான் பதான், டிண்டா, ராகுல் சர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை பதம்பார்த்தனர்.



அந்த வகையில் 50 ஓவர்களில் இலங்கை அணி நிர்ணயித்த 287 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 49.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்று இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கெளதம் கம்பீர் (102),  சுரேஷ் ரெய்னா (ஆட்டமிழக்காமல் 65) ஆகியோர் சிறப்பாக செயற்பட்டனர். 
ரோஹித் சர்மா ஓட்டமெதனையும் பெறாத நிலையில் எதிர்கொண்ட முதலாவது பந்திலையே ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 10 ஓவர்கள் பந்து வீசி  60 ஓட்டங்களை கொடுத்து  02 இலக்குகளையும்,  ரங்கன ஹேரத், திசார பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணி சார்பில் சதம் கடந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெளதம் கம்பீர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பில் மத்தியுஸ் பெற்றுக் கொண்ட 71 ஓட்டங்களானது ஒரு நாள் போட்டிகளில் அவர் பெற்றுக் கொண்ட 11 ஆவது அரைச்சதமாகும் என்பதுடன், குமார் சங்கக் கார பெற்றுக் கொண்ட 73 ஓட்டங்களானது அவருடைய 73 ஆவது ஒரு நாள் அரைச்சதமாகும், மஹேல ஜெயவர்த்தன பெற்றுக் கொண்டது 68 ஆவது அரைச்சதமாகும். இதே வேளை இந்திய அணி சார்பில்  கெளதம் கம்பீர் பெற்றுக் கொண்ட 102 ஓட்டங்களானது அவர் ஒரு நாள் போட்டிகளில் பெற்றுக் கொண்ட 11 ஆவது சதமாகும்.சுரேஷ் ரெய்னா பெற்றுக் கொண்ட 65 ஓட்டங்களானது ஒருநாள் போட்டிகளில் அவரின் 23 ஆவது அரைச்சதமாகும். 

இந்தப் போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்றதன் மூலமாக இரு அணிகளுக்குமிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 2 - 1 என முன்னணியில் உள்ளது . எனவே இந்தத் தொடரைக் கைப்பற்ற வேண்டுமென்றால் இலங்கை அணியானது அடுத்து நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதுடன் இந்திய அணியானது அடுத்து வருகின்ற இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றலாம் என்கின்ற நிலையில் அடுத்து வரவுள்ள இரண்டு போட்டிகளையும் எதிர் கொள்ளவுள்ளது. 

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இந்தத் தொடரின் நான்காவது போட்டியானது எதிர்வரும் 31 ஆம் திகதி கொழும்பு R பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

Tuesday, July 24, 2012

இலங்கை அணி அபார வெற்றி...

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று செவ்வாய்க் கிழமை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. 
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்திய அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது. 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது  33.3 ஓவர்களில்  சகல விக்கட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது   அணி சார்பாக கெளதம் கம்பீர் (65) அரைச்சதம் கடந்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திசார பெரேரா(03)  மத்தியுஸ்(03) மலிங்க(02) ஆகியோர் பிரகாசித்தனர்.
அந்த வகையில் இந்திய அணி நிர்ணயித்த 139 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 19.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து  வெற்றி இலக்கை அடைந்தது.  
அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உப்புல் தரங்க (ஆட்டமிழக்காமல் 59) டில்ஷான் (50) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்ததுடன், இந்திய அணி சார்பில் அஸ்வின் வீழ்த்தப்பட்ட ஒரு விக்கட்டினை கைப்பற்றியிருந்தார்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் 8 ஓவர்கள் பந்து வீசி 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்திய திசார பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணியானது வெற்றிபெற்றதனால் ஐந்து போட்டிகளை கொண்ட தொடரானது 1 - 1 என சம நிலையில் உள்ளது. 
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு R . பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே முதலாவது போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு இந்தப் போட்டியில் இலங்கை அணியானது பதிலடி கொடுத்துள்ளது. மூன்றாவது போட்டி எவ்வாறு அமையும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sunday, July 22, 2012

இலங்கை+முஸ்லிம் அரசியல்வாதிகள்+முடிவுகள்.

இன்றைய இலங்கை அரசியலில் அதிகமாக பேசப்படும் விடயங்களாக முஸ்லீம் அரசியல்வாதிகளும் அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. 
குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முடிவு செய்து அறிவித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இட ஒதுக்கீடுகள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் சிக்கல்களால் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்த விடயத்தையும், மன்னார் மாவட்ட நீதிமன்றம் தாக்கப்பட்டு நீதவான் அமைச்சர் ரிஷாட்பதியுதீனால் அச்சுறுத்தப்பட்ட விடயத்தையும், முக்கிய விடயங்களாக அடையாளப்படுத்த முடியும்.
இலங்கை வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் நீதித் துறையில் அரசியல் தலையீடுகள் அதிகம் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான் என்கின்ற போதிலும் மன்னார் மாவட்டத்தில் அண்மையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட நீதவானை அச்சுறுத்திய விடயம் நீதித் துறைக்கு விழுந்த மிகப்பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றுவரை இலங்கையில் அதிகம் விமர்சிக்கப்படாத, ஒடுக்கப்படும் இனத்துக்கு சற்று ஆறுதல் தருகின்ற துறையாக நீதித்துறை நோக்கப்படும் நிலையில் மன்னார் மாவட்ட நீதவானை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்த விடயம் இலங்கை நாட்டிற்கும், இன்றைய அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய அவமானம் என்பதில் சந்தேகம் இல்லை.
மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நீதவான் வழங்கிய தீர்ப்பிற்காகவே அவரை ரிஷாட் பதியுதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நீதவானை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்னவை சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இதனை மஞ்சுள திலகரட்ணவும்  உறுதி செய்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
மேலும் தன்னை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்று அறிமுகப்படுத்திய ஒருவர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவாளர்களை விடுவிக்காவிட்டால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவில் புகார் செய்துள்ளார். அத்துடன் ரிஷாட் பதியுதீன் தனது உத்தியோகபூர்வ தொலைபேசியினூடாகவே  மேற்படி அச்சுறுத்தலை விடுத்தமையும்  விசாரணைகளின் மூலமாக தெரிய வந்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க இங்கே  வேடிக்கையான விடயம் என்னவென்றால் குறித்த மன்னார் மீனவ சமூகத்தின் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று கூறும் முஸ்லீம் சமய பீடங்கள் விடுதலைப் புலிகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும், அவர்களின் ஆதரவாளர்களால்தான் இந்த பிரச்சினை உருவானதாக மன்னார் மாவட்ட ஆயர் மீது மறைமுகமாக பழி சுமத்தும் வகையிலும், மாவட்ட நீதவான் அமைச்சர் ரிஷாட்பதியுதீனால் அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன.  ரிஷாட் பதியுதீனுக்கு ஆதராவாக போராட்டங்களையும் மேற் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வேண்டியது அவசியமான ஒன்றுதான் என்கின்ற போதிலும் நீதவானை ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்திய விடயத்தை நியாயப்படுத்துவதையோ, இப்போது இலங்கையில் இல்லாத விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதையோ ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

மன்னார் மாவட்ட நீதவான் அச்சுறுத்தப்பட்ட விடயம் இவ்வாறு இருக்க கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான விடயங்களும் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் முடிவிலிருந்து விலகி தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முடிவு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள், வரவேற்புக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. 
குறிப்பாக இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுமாக இருந்தால் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் ஓரளவுக்கேனும் குறையலாம் என்னும் எதிர்பார்ப்பில் அரசாங்கம் சபையை கைப்பற்றுவதற்காக கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை விரைவுபடுத்த வேண்டுமானால் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளது. 
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் சமூகத்தின் மனங்களை வென்றெடுக்காத நிலையில் தேர்தல் காலங்களில் தமிழ் சம்மூகத்தின்  வாக்குகளை கவர முடியாது என்னும் நிலையில் அவர்களின் வாக்குகளை சிதைப்பதிலையே அதிக கவனம் செலுத்தியிருக்கின்றன. 
இன்றைய அரசாங்கமும் அதனையே செய்துவருகின்றது. 

கிழக்கு மாகாண சபையின் களத்திலும் திட்டமிட்ட பிரதேசவாத கருத்துக்களை திணித்தும், தமிழ் முஸ்லீம் சமூகத்தின் அரசியல் சக்திகளை பிளவுபடுத்தியும் வாக்குகளை சிதறடிக்க செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. எனினும் அரசாங்கம் எதிர்பார்க்கும் பலாபனை பெற முடியாது என்கின்ற போதிலும் எந்தவொரு இனமும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை கிழக்கு களத்தில் உள்ளது. 

இந்த நிலையில் கிழக்கு களத்தில் தனித்து களமிறங்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசிடமிருந்து தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாதகமான கருத்துக்கள் எதுவும் இதுவரை வெளிவந்ததாக தெரியவில்லை. 
அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பில் இது பற்றி கூறுகின்ற போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறினார். இதன் மூலம்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது பற்றி சிந்தித்துக் கூட பார்க்கவில்லை என்றே தெரிகின்றது. மேலும் அவர் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அவர்களுக்கு வழி விடுவோம் என்றும் சொல்லியுள்ளார். 
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதை விட அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது அனுகூலமானது. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிழக்கு களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதால் பெரிய அளவில் நன்மைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாதகமானதாகவே இருக்கும். இதனால்தான் முஸ்லீம் காங்கிரசை தம்முடன் இணைந்து போட்டியிடாவிட்டாலும், அரசாங்கத்துடன் இணையாது தனித்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வந்தது. 
இந்த நிலையில்தான் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னர் தனித்து போட்டியிடவுள்ளதாக முடிவை மாற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இந்த திடீர் மாற்றங்கள் தொடர்பில் வெவ்வேறு வகையான பார்வைகள் விமர்சகர்கள் மத்தியில் உள்ளன. 

குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு இறுதியில் அரசாங்கத்துடன் இணைந்தே ஆட்சி அமைக்க முன்வரும் என்று சொல்லப்படுவதுடன், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் முடிவிலிருந்து திடீரென விலகி தனித்து போட்டியிடும் முடிவுக்கு அவர்கள் வந்தமை ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. 

அதாவது ஏற்கனவே கிழக்கு களத்தில் அரசாங்க சின்னத்தில் முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் அரசியல் சக்திகள் அரசாங்கத்துடன் இணைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மர சின்னத்தின் கீழ் அதிகளவு வாக்குகள் பதிவாகும் இடங்களையும் தமதாக்கும் நோக்குடன் முஸ்லீம் காங்கிரசை அரசாங்கம் பயன்படுத்துகின்றதா என்கின்ற சந்தேகமும் நிலவுகின்றது. 
இதே வேளை கிழக்கு மாகாண சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சிங்களவர்களின் காணிகள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களும், தமது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அபிவிருத்திகள் தொடர்பில் பட்டியலிட்டுள்ளமையும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள அவர்கள் முன்னெடுக்கும் பிரச்சார உத்திகள். 
இவ்வாறான உத்திகள், கபடங்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தனியொரு சக்தியாக அரசாங்கத்தை எதிர்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....

Saturday, July 21, 2012

21 ஓட்டங்களால் வென்றது இந்திய அணி.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் பகல் இரவு போட்டியாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி தலைமையிலான இந்திய அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தனர். 
அந்தவகையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 6 இலக்குகளை இழந்து 314 ஓட்டங்களை சேர்த்துக் கொண்டது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 113 பந்து வீச்சுக்களில் 9 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 106 ஓட்டங்களையும், வீரேந்திர சேவாக் 97 பந்து வீச்சுக்களில் 10 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 96 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 45 பந்து வீச்சுக்களில் 3 நான்கு ஓட்ட பெறுதிகள் 1 ஆறு ஓட்ட பெறுதி அடங்கலாக 50 ஓட்டங்களையும் சேர்த்தனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திசார பெரேரா 10 ஓவர்கள் பந்து வீசி 70 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு 50 ஓவர்களில் 315 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்னும் இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அணியினரால் 50 ஓவர்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 293 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 

இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 151 பந்துவீச்சுக்களில் 12 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 133 ஓட்டங்களையும், திசார பெரேரா 28 பந்து வீச்சுக்களில் 3 நான்கு ஓட்ட பெறுதிகள், 1 ஆறு ஓட்ட பெறுதி அடங்கலாக 44 ஓட்டங்களையும் பெற்றனர். 
இந்திய அணியின் பந்து வீச்சில் இர்பான் பதான், உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் 10 ஓவர்கள் பந்துவீசி தலா 2 இலக்குகள் வீதம் வீழ்த்தினர். அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளதுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றது.

இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் விராட் கோலி பெற்றுக் கொண்ட சதமானது ஒரு நாள் போட்டிகளில் அவர் பெற்றுக் கொண்ட 12 ஆவது சதம் என்பதுடன், விரேந்திர சேவாக் பெற்றுக்கொண்ட அரைச் சதமானது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் பெற்றுக் கொண்ட 38 ஆவது அரைச்சதமாகும்.  இதேவேளை இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார இன்றைய தினம் ஒரு நாள் போட்டிகளில் தனது 14 ஆவது சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். 

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார். 
இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டம் பலமாக இருந்த போதிலும் களத்தடுப்பு வியூகங்கள் பலவீனமாகவே இருந்தன. இலங்கை அணியை பொறுத்தவரையில் களத்தடுப்பு வியூகங்களும், துடுப்பாட்ட வரிசையும் சிறப்பாக இருந்த போதிலும் இந்திய அணி நிர்ணயித்த 315 ஓட்டங்கள் என்னும் இலக்கை அடைய முடியவில்லை. இலங்கை அணி உதிரி ஓட்டங்களாக 12 ஓட்டங்களையும் , இந்திய அணியினர் 23  ஓட்டங்களையும்  எதிரணிக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.