உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, July 26, 2009

முன்னேற்றப் பாதைக்கான ஒரு முயற்சி...

உலகமே நவீன தொழில்நுட்பம், விஞ்ஞானத்தின் விந்தை என்று பல்வேறு வியக்கவைக்கும் வளர்ச்சிப்படிகளை கடந்து செல்கின்ற இன்றைய நவீன யுகத்திலும் மானிடவர்க்கம் ஒரு சில விடயங்களில் பின்னடைவுகளையும், வீழ்ச்சிகளையும் சந்தித்துள்ளமை, சந்தித்துவருகின்றமை வெளிப்படை.

அந்தவகையில் ஈழத்து தமிழ் சினிமாவும் யாருமே எதிர்பார்க்காதளவுக்கு மிகவும் பின்தங்கியிருக்கிறது. உண்மையில் ஈழத்து தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தையும், இன்றைய காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஈழத்து தமிழ் சினிமா எவ்வளவு தூரத்திற்கு பின் தங்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இந்தப் பதிவில் இவ்வாறான ஒரு ஒப்பீட்டை செய்யாவிட்டாலும் ஓரளவுக்கு ஈழத்து தமிழ் சினிமா பற்றி பேசுவதுடன், இன்றைய நிலையில் ஈழ்த்து தமிழ் சினிமாவை வளப்படுத்தக்கூடிய ஒரு விடயத்தையும் பரிந்துரைக்கலாம் என நினைக்கிறேன்...

உண்மையில் இன்று ஈழத்து தமிழ் சினிமாவைப்பற்றி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக உணரமுடிகின்றது. மாறாக ஈழ்த்து இசைத்துறை தொடர்பிலையே இன்று அதிகமானவர்கள் பேசுகின்றார்கள்.

அந்தவகையில் இசையுலகம் என்னும் இலங்கையில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் இசைக்கான சங்க்சிகையில் இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஈழத்து தமிழ் இசைத்துறையை தரம் உயர்த்துவது அல்லது அதற்கான உரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பது என்னும் நோக்கில் இசையாலே இசையாலே என்னும் ஒரு தொடரை எழுதி வருகின்றார்.

அதாவது இவரின் இந்த முயற்சியால் ஈழத்து இசைக்கலைஞர்களை ஒன்று சேர்க்கக்கூடிய சந்தர்ப்பம் அமையப்பெற்று நமது தமிழ் இசைத்துறை ஒரு படி நிலை மாற்றத்தை காணும் என்பதில் சந்தேகம் இல்லை. (இவரின் இந்தத்தொடர் தனிமனிதர்களை நேரடியாக தாக்குவதாக சில சந்தர்ப்பங்களில் அமைந்தமையும், கடந்த இசையாலே இசையாலே பகுதி இலங்கையில் இனமுரன்பாடுகளே கிடையாது போன்றதான ஒரு பாணியில் அமையப்பெற்றமையும் எனக்கு உடன்பாடு இல்லாதவை. இது பற்றி பின்னர் பேசலாம்.)

இசைத்துறை பற்றி பேசி அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் விளைகின்றார் எனின் அதே போன்று ஈழ்த்து சினிமாவோடு தொடர்புடையவர்களும் நமது சினிமாவின் மாற்றத்திற்காக செயற்பட வேண்டும் என்ற நோக்குடனேயே இதனை இங்கு குறிப்பிடுகின்றேன்.

ஈழத்து தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் 1982ஆம் ஆண்டு வரை மொத்தமாக 27திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. தொழில்நுட்ப வளம் இல்லாத காலத்தில் 27தமிழ் திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விடயம் அல்ல.

இவ்வாறு தொழில்நுட்பம் வளராத அந்தக்காலத்தில் 27திரைப்படங்கள் வெளிவந்த போதிலும் இதற்கு பிற்பட்ட காலங்களில் ஈழ்த்து தமிழ் சினிமாவின் வருகையில் வீழ்ச்சி ஏற்படத்தொடங்கியது.அந்தவகையில் ஈழத்து தமிழ் சினிமா இவ்வாறு நலிவடைந்தமைக்கு இங்கு நிலவும் இன முரண்பாடுகள், இந்திய தமிழ் சினிமாவின் இலங்கை ரசிகர்கள் மீதான ஆதிக்கம், இந்திய தமிழ் சினிமாக்களின் பிரமாண்ட வளர்ச்சி, முதலீட்டு சிக்கல் போன்றவை காரணங்களாக சொல்லப்படுகின்றன.

இந்த இடத்தில் விரும்பியோ விரும்பாமலோ மேற்படி காரணங்களை ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும் என்ற போதிலும் காரணங்களை கண்டறிந்துவிட்டு தீர்வைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த உலகில் உள்ள பெரும்பாலான விடயங்கள் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பது உண்மைதான். ஆனாலும் அதற்காக அவற்றால் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாதுள்ளது என்று சொல்லிவிட்டு இருந்துவிட முடியாது/ கூடாது. மாறாக முடிந்தவரை தடைகளை தாண்டியோ அல்லது தகர்த்தோ முன்னகர்த்த வேண்டியது அவசியம்.

இதே போன்றதொரு நிலைதான் இன்றைய ஈழத்து சினிமாவுக்கும் ஏற்பட்டுள்ளது. அதாவது இவ்வாறான ஒரு முன்னகர்த்தலை செய்யவேண்டிய கட்டாய கடமை ஒவ்வொரு ஈழ்த்து சினிமா ஆர்வலர்களிடமும், பொறுப்பானவர்களிடமும் உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் ஈழத்து தமிழ் சினிமாவில் முழுநீள திரைப்படங்களின் வருகை குறைவு அல்லது இல்லை என்ற போதிலும், குறும்படங்களின் வருகை தாராளமாக உள்ளது.அந்த வகையில் இந்தக் குறும்படங்களை அடிப்படையாக வைத்தே வீழ்ந்திருக்கும் நமது சினிமாவை அடுதத கட்டத்திற்கு அல்லது அதன் ஆரம்ப நிலைக்கு நகர்த்த வேண்டியுள்ளது.

அதாவது வியாபார சிக்கல்களால் முதலீட்டாளர்கள் ஈழத்து தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய முன்வராத நிலையில் இப்போதைக்கு நேரடியாக அல்லது ஒரே முயற்சியாக முழு நீளத் திரைப்படங்களை உருவாக்குவதில் உள்ள இடர்பாடு காரணமாக முதலில் குறும்படங்களின் உருவாக்கங்களை ஊக்குவிப்பதே ஒரே வழியாக இருக்கிறது.

உண்மையில் அண்மைக்காலமாக ஈழத்தில் குறும்படங்களின் உருவாக்கம் அதிகரித்துள்ளபோதிலும் அக்குறும்படங்களிற்கான சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதாவது வெளிவரும் குறும்படங்கள் ஒரு குறித்த பிரதேசத்திற்குள் அல்லது வட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றன. எனவே நாம் முதலில் அக்குறும்படங்களுக்கு சரியான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுத்து ஒரு ஆரோக்கியமான குறும்பட அடிப்படை கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக ஈழத்து தமிழ் சினிமாவோடு தொடர்புடையவர்கள், ஆர்வலர்கள் ஒரு நிர்வாக கட்டமைப்பை அமைக்க முன்வர வேண்டும். இந்த நிர்வாக கட்டமைப்பின் ஊடாக முதலில் ஈழத்து திரையரங்குகளில் ஒரு இந்திய தமிழ் சினிமா காட்சிப்படுத்தப்படுவதற்கு முன்னர் நமது குறும்படம் ஒன்றை காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்யலாம்.(இந்த முயற்சி ஆரம்பத்தில் சில பண வலு பிரச்சினைகளை உண்டுபண்ணினாலும் அதனை பெருந்தன்மையோடு பொறுத்துக்கொள்ள வேண்டும் அல்லது அரச ரீதியான உதவிகளினால் அதனை நிவர்த்தி செய்யலாம்.)

இவ்வாறாக நல்ல குறும்படங்களை தெரிவு செய்து காட்சிப்படுத்துகின்றபோது அது ரசிகர்களிடையே வரவேற்பை பெறுவதுடன் ஈழத்து தமிழ் சினிமாவை ரசிப்பதற்கான ரசனை மாற்றத்திற்கும் வித்திடும். அத்துடன் ஈழத்து தமிழ் சினிமாவின் முழு நீளத் திரைப்படங்களுக்கு ரசிகர்களை பழக்கப்படுத்தவும் செய்யும். (ஈழத்து தமிழ் சினிமாவிற்கான புதிய அடையாளத்தின் ஆரம்பமாக அமையும்.)

மேலும் இவ்வாறான ரசனை மாற்றம் ஈழத்து தமிழ் சினிமாவின் எதிர்கால பண வலுவிற்கு உதவியாக அமையும். அதாவது முதலீட்டாளர்கள் நம்பி முதலீடு செய்ய முன்வருவார்கள். இதன் பலனாக நமது சினிமா குறும்படங்களில் இருந்து முழு நீளத் திரைப்படங்கள் என்ற நிலைக்கு ஆரோக்கியமாக நகரும்.

எனவே இவ்வாறாக ஈழத்து குறும்படங்களை அடிப்படையாக கொண்டு நமது சினிமாவில் பல மாற்றங்களை செய்யலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இங்கு இசையாலே இசையாலே தொடரில் இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சொன்ன ஒரு விடயம் ஈழத்து தமிழ் சினிமாவுக்கும் பொருந்தும். அதாவது "நம்மால் பிரமாண்டத்தை வழங்க முடியாதுதான். ஆனால் பிரமாதத்தை வழங்க முடியும்."

உண்மையில் ஈழத்தில் ஏராளமான சினிமாக்கலைஞர்கள் பட்டை தீட்டப்படாத இரத்தினக் கற்களாக சிதறிக்கிடக்கிறார்கள். எனவே அவர்களை இனங்கண்டு பட்டை தீட்டி ஒன்று சேர்க்க வேண்டியுள்ளது. இதற்கு தமிழ் ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக அவசியம்.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவது இன்று ஈழத்து தமிழ் தொலைக்காட்சிகள் இசைக்கலைஞர்களை இனங்க்கான்பதிலையே அதிக ஆர்வம் காட்டுகின்றன. என்னைப்பொறுத்த வரையில் இசை என்பது ஒரு ஒலிவடிவமாக இருப்பதால் அதனை அல்லது இசைக்கலைஞர்களை அடையாளப்படுத்த ஓலி ஊடகங்களான வானொலிகள் மிகுந்த முனைப்புடன் செயற்பட வேண்டும். அத்துடன் சினிமா என்பது காட்சி, நடிப்பு, கமரா என ஒளி வடிவமாக இருப்பதால் அதனை அல்லது சினிமாக் கலைஞர்களை அடையாளப்படுத்த ஒளி ஊடகமான தொலைக்காட்சிகள் மிகுந்த முனைப்புடன் செயற்பட வேண்டும்.

எனினும் நமது ஊடகங்கள் தம்மால் செய்யக்கூடிய ஒரு பெரும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்காமல் குறுகிய வேலைத்திட்டங்களையே முன்னெடுத்து செல்கின்றன. அதாவது தொலைக்காட்சிகள் ஈழத்து தமிழ் சினிமாவை அல்லது கலைஞர்களை அடையாளப்படுத்த வேண்டியவர்கள் வானொலிகளால் செய்யக்கூடிய இசைக்கலைஞர்களை அடையாளப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஈழத்து இசைக்கலைஞர்களை அடையாளப்படுத்த வேண்டிய நமது வானொலிகள் இன்னும் இந்திய சினிமா பாடல்களை முதிக்கொண்டு வழங்குவதிலையே முதன்மை ஊக்கம் காட்டுகின்றார்கள். இது ஒரு மாணவன் நூறு புள்ளிகளை பெறக்கூடிய வல்லமை இருந்தும் ஐம்பது புள்ளிகள் போதுமென திருப்திப்படுவதற்கு ஒப்பானது. உண்மையில் இவை வருந்தத்தக்க பக்கங்கள்...

எனக்கு வானொலிகள் தொலைக்காட்சிகள் தொடர்பாக பல சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு. எனினும் இப்போது அந்த சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள முடிகின்றது.
எனினும் தொலைக்காட்சி தொடர்பில்,
"ஏன் நமது தொலைக்காட்சிகள் ஈழ்த்து தமிழ் குறும்படங்களை அடையாளப்படுத்துவதில்லை அல்லது ஒளிபரப்ப முடியாது????"
"இசைக்கலைஞர்களிடையே போட்டிகளை நடாத்தும் நமது தொலைக்காட்சிகளால் ஏன் குறும்பட கலைஞர்களிடையே போட்டிகளை நடாத்த முடியாமல் இருக்கிறது????"
இவற்றை சந்தேகக் கேள்விகளாக விட்டுவிட்டு செல்கின்றேன்.

""""மாற்றங்கள் மறுமலர்ச்சிக்காகவே.. அது நமது ஈழத்து சினிமாவிலும் ஏற்பட வேண்டும்.""""

இது நான் ஏற்கனவே பதிந்த ஒரு கவிதை இந்தப்பதிவுக்கு பொருத்தமாக அமைவதால் மீண்டும் பதிகிறேன்...

இயக்குனர்..
இது எனக்கு முதல் படம் -அதனால்
காட்சிகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.
என் படத்தின் பெயரை
பாசம் என்று பவ்வியமாய் சூட்டியுள்ளேன்.
"பாசம்"
இது கிராமத்து வாசம் வீசும் கதை.
பலருக்கும் இப்படம்
ஓசை இன்றி ஓர் கதை சொல்லும்- அதனால்
ஆசை ஆசையாய்
அரங்கிற்கு நீங்கள் அணிதிரண்டு வரலாம்.
பயப்படாதீர்கள்,
பணம் கொடுத்து பார்த்தாலும்
பாசம் உங்களை மோசம் போகச் செய்யாது- மாறாக
மாசற்ற உங்கள் மனதை பாசம் பரவசப்படுத்தும்.
வன்முறைக்குள் வாழும் உங்கள் வாழ்வின்
மூன்று மணி நேர மகிழ்ச்சிக்காய்
படத்தில் வன்முறைக் காட்சிகளை
பாதி அளவு குறைத்துள்ளேன்-ஆனால்
ஆங்கில வார்த்தைகள் ஆங்காங்கே உண்டு.
அதுதானே இன்றைய தமிழ் சினிமாவின் நாகரீகம்.
நாகரீக வரம்பை நான் மட்டும் எப்படி மீறுவது?
அடுத்ததடுத்து அரைத்த மாவையே அரைக்கும்
அகன்ற திரைக்கு பாசம் புதுசு.

இன்று,
என் "பாசம்" படத்தின்
தொடக்க பூசை.
படப்பிடிப்பையும் இன்றே ஆரம்பித்து விட்டேன்.
காட்சிகள் சிதறாமல் கட்டு கோப்புடன் இருக்க்க
கமரா கோணம் பார்க்கிறேன்.
அந்த காட்சி அவ்வளவு அழகாக தெரியவில்லை.
இன்னும் கொஞ்சம் இடப்பக்கம் திருப்பி கமராவை நிலைப்படுத்தினால்
நிச்சயம் நல்ல காட்சி கிடைக்கும்.
கமராவை அசைக்கிறேன்,
அற்புதமான அந்த காட்சியையும்
அவர்கள் நடிப்பையும் கமரா சுட்டுத்தள்ளுகிறது.
இனி அடுத்த காட்சிக்காய் கமராக் கோணம் திரும்புகிறது.
இப்படி திருப்பி திருப்பி எடுத்த காட்சிகள்
எடிட்டிங் அறையில் ஏராளமாய்
காட்சிக் கோர்ப்பிட்காய் காத்திருக்கின்றன.
இனி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.

அதற்குள்......
அம்மாவின் அலறல்,....
தம்பி விடிஞ்சிட்டு எழும்படா.....
இலங்கையில் தமிழ் பட இயற்குனராகும்
இலட்சியத்துடன் இருக்கும் எனக்காக
இந்த இரவு பொழுது தானும்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்க கூடாதா?

No comments: