உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, July 19, 2009

புலிகளின் பின்னடைவின் பின்னணி...

இன்று இலங்கை உட்பட உலகில் உள்ள பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான பின்னடைவு பற்றியே ஆராய்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்..

அந்த வகையில் புலிகள் "ஆயுதத்தின்மேல் அதீத நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், இதனால் அரசியல் ராஜதந்திரம் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் இதுவே அவர்களின் தோல்விக்கு வித்திட்டது என்று பெரும்பாலான அரசியல் விற்பன்னர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்


மேலும் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மரணம், கருணா அம்மான் உட்பட்ட போராளிகளின் பிரிவு, முதன்மை தளபதிகளான பால்ராஜ்,தீபன் போன்றோரின் மரணம், சமாதான உடன்படிக்கை,அரசியல் ஆலோசகர் அன்டன்பாலசிங்கம் அவர்களின் மரணம் போன்றவையும் புலிகள் அமைப்பின் இராணுவ பின்னடைவுக்கான காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன


ஏதோ ஒரு வகையில் இந்தக்காரணங்களை ஏற்றுக்கொண்டாலும் இவ்வளவுதான் காரணங்கள் என்று திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் புலிகளின் இராணுவ ரீதியான பின்னடைவின் இன்னுமொரு பின்னணிபற்றி இந்தப்பதிவினூடாக பேசுகின்றேன்...

ஒரு கெரில்லா போராட்ட வடிவிலிருந்து மரபுவழி இராணுவமாக முப்படைக் கட்டுமானங்களுடன் பலம் பொருந்திய அமைப்பாக இருந்த புலிகள் இராணுவ ரீதியில் பின்னடைவை சந்தித்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்துவது உண்மைதான்.,


அந்த வகையில் புலிகளின் இந்த இராணுவ வழிப்பின்னடைவுக்கு போராட்டங்களின் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது பலத்தை புலிகள் இழந்திருந்தமையே முதன்மைக்காரணம் என்று சொல்லவேண்டும்..

அது என்ன போராட்டங்களின் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது பலம் என்று சிந்திக்கின்றீர்களா????


உண்மையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட முன்னர் ஒரு போராட்டத்தின் வெற்றி ஆட்பலம் என்னும் ஒரே ஒரு பலத்தினால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது, அதாவது போராட்ட அணிகளில் ஆட்கள் தொகை கூடிய அணிக்கே வெற்றி என்ற நிலைமை இருந்தது.

எனினும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், (பொல்லு.. கத்தி.. கோடரி.... வாள்.. துப்பாக்கி..) போராட்டங்களின் வெற்றி என்பது ஆட்பலம், ஆயுதபலம் ஆகிய இரண்டு பலங்களில் தங்கியிருக்க ஆரம்பித்தது.

இருந்தபோதிலும் இந்த இரண்டு பலங்களுடன் போராட்டத்தை தீர்மானிக்கும் பலங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை.

அதாவது ஆயுதபலம் உணரப்பட்டதன் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த காலத்தில் போராட்ட வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது பலமாக மனோபலம் உணரப்பட்டது.

உண்மையில் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது வியட்நாம் அமெரிக்காவைவிட ஆள்,ஆயுத பலங்களில் பலமடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. எனினும் அவர்களின் அதீத மனோபலம் (உளவுரண்) அவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது.


இதன் காரணமாக அன்று முதல் போரியல் பலங்களில் மனோபலம் முதன்மையானது என்ற கருத்துருவமும் தோற்றம் பெற்றது.


உண்மையை சொல்லவேண்டும் என்றால் கடற்படை, தரைப்படை, வான்படை என முப்பெரும் படைக்கட்டுமானம் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஆட்பலம், ஆயுதபலம், மனோபலம் ஆகிய முப்பலங்களிலும் குறைவு இருந்ததாக தெரியவில்லை.


இதில் அவர்கள் வீட்டிட்கொருவரை போராட்டத்தில் இணைத்தமையையும், தற்போது பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இராணுவத்திடம் சரணடைந்துள்ளதையும் ஆட்பலத்தின் சான்றாக சொல்லலாம். (புலிகளிடம் இருபத்து நான்காயிரத்திற்கும் அதிகமான போராளிகள் இருந்ததாக களத்திலிருந்து வெளியேறிய அரசியல் எழுத்தாளர் ஒருவர் தெயவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.)


அதேபோன்று சமாதான காலத்தில் புலிகள் ஏராளமான ஆயுதங்களை தரையிரக்கியிருந்தமை, யுத்தத்தில் அவர்கள் பயன்படுத்திய தாராள ஆயுத பயன்பாடு, படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் என்பவற்றை நோக்கும்போது புலிகளின் ஆயுத பலத்தின் மேலாதிக்கத்தை புரிந்துகொள்ளலாம்.


மனோபலம் தொடர்பில் இங்கு சான்றுகளை முன்வைக்காவிட்டாலும் ஆள், ஆயுத பலங்களில் பின்தங்கியிருந்த காலத்தில் புலிகளின் மனோபலமே அவர்களுக்கு பாரிய வெற்றிகளைத் தேடிக்கொடுத்தது என்ற அடிப்படையில் அவர்களின் மனோபலம் தொடர்பாக மதிப்பிட முடியும்.


இவ்வாறாக மூன்று பலங்களிலும் உயர்நிலையில் இருந்த புலிகள் இராணுவ ரீதியில் பின்னடைவை சந்திக்க அவர்களிடமிருந்த போராட்டத்தை தீர்மானிக்கின்ற நான்காவது பலமான புலனாய்வுப் பலம் சிதைக்கப்பட்டமையே காரணம் என்று சொல்லலாம்.


உண்மையில் இதுவரை காலமும் போராட்டத்தை தீர்மானிக்கும் பலங்களில் மூன்று பலங்கள் பற்றியே பேசப்பட்டுவந்தது. ஆனால் இப்போது நான்காவது பலமான புலனாய்வுப்பலம் பற்றியும் பேசவேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த நான்காவது பலமான புலனாய்வு பலம் படிப்படியாக உணரப்பட்ட ஒன்று என்றாலும் ஈராக் மீது அமெரிக்கா போர்தொடுத்து வெற்றிகொண்ட போதுதான் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் இப்பலாம் குறித்து பேச ஆரம்பித்தார்கள்.

அதாவது அன்று ஈராக்கும் அமெரிக்காவும் ஆள், ஆயுத, மனோ பலங்களில் சமநிலையில் இருந்ததாக கணிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம் நீண்டு செல்லலாம் என்றும், ஒருவேளை அமெரிக்காவிற்கு இது இன்னுமொரு வியட்நாம் யுத்த அனுபவத்தை கொடுக்கலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டது.

ஆனால் அனைத்து எதிர்வு கூறல்களையும் தவிடுபொடியாக்கி அமெரிக்கா தனது யுத்த நிகழ்ச்சி நிரலை ஈராக்கில் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றியதன் பின்னரே யுத்த வெற்றிகளை தீர்மானிக்கும் பலங்களில் நான்காவது பலமாக புலனாய்வுப்பலம் உள்ளது என்ற உண்மையை உரத்துசொல்லவேண்டியிருந்தது.


அதாவது ஈராக் ஆள், ஆயுத, மனோ பலங்களில் அமெரிக்காவிற்கு நிகராக இருந்தபோதிலும் புலனாய்வுப்பலத்தில் அமெரிக்கா ஈராக்கைவிட பன்மடங்கு உயர்வாக இருந்தமையே அமெரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்ததாக ஆய்வாளர்கள் சொல்லியிருந்தார்கள்.


இதேபோன்றே நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் இராணுவ ரீதியில் பின்னடைவை சந்திக்க அவர்களின் புலனாய்வுப்பலம் சிதைக்கப்பட்டமை காரணமாக அமைந்திருக்கிறது.


கடந்த இரண்டாயிரத்து ஓராம் ஆண்டிற்கு முற்பட்ட காலங்களில் புலிகளிடம் உலகமே வியந்து பார்க்குமளவுக்கு ஒரு ஆரோக்கியமான புலனாய்வுக்கட்டமைப்பு தமது கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளும் அதற்கு வெளியிலும் இருந்தது.
இதன் பலனாகத்தான் அவர்கள் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் உட்பட்ட அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் பெருமளவு வெற்றிகர தாக்குதல்களை நடாத்தியிருந்தார்கள்.


மேலும் தமது அமைப்புக்குள்ளும், கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்ளும் ஊடுருவியிருந்த இராணுவப்புலனாய்வாளர்களை இனங்கண்டு கொள்ளவும், துரோகங்களை முறியடிக்கவும் அவர்களால் முடிந்ததும் இதனாலையே.


எனினும் சமாதான உடன்படிக்கையின் பின்னர் அந்தக் கட்டமைப்பு உள்ளகத்திலும், வெளியகத்திலும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்தது. இதற்கு சமாதான உடன்படிக்கை, கருணா அம்மான் உள்ளிட்ட போராளிகளின் பிரிவு என்பவற்றை காரணங்களாக சொன்னாலும் இலங்கை படையினரின் புலனாய்வுக் கட்டமைப்பின் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியும், பல்வேறு நாட்டு புலனாய்வு அமைப்புக்களுடனான அவர்களின் கூட்டும் காரணங்களாக இருப்பதையும் மறுக்க முடியாது.


மேலும் இலங்கை இராணுவம் புலிகள் மீது பாரியபோரினை தொடுத்தபோது அரசுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் தமது உதவிகளை வழங்கியிருக்கின்றன. இவற்றில் பெருமளவு நாடுகள் புலனாய்வு ரீதியிலும் உதவியதாக தெரியவருகின்றது. அதாவது தமது நாட்டு புலனாய்வு செய்மதிகளை பயன்படுத்தி புலிகளின் நகர்வுகள் குறித்த தகவல்களை இலங்கை படையினருக்கு வழங்கியிருந்தன.


இதனால் களத்தில் புலிகளின் வேவுப்புலனாய்வு மிகுந்த நெருக்கடிகளை சந்தித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதாவது தொழில்நுட்ப வளம் குன்றிய, இரவுப்பொழுதுகளையே வேவு பார்க்க பயன்படுத்தும் வேவுப்புலிகளுக்கு இது பெரும் சவாலாகவே இருந்திருக்கும்.

அத்துடன் புலிகளின் ஆயுத நகர்த்தல்கள், போராளிகளின் ஒன்றுகூடல்கள் என்பனவும் இந்த புலனாய்வு செய்மதிகளின் மூலமாக படையினருக்கு உடனுக்குடன் தெரியவந்திருக்க வாய்ப்புள்ளது.
இதனைவிட இராணுவத்தின் வேவுவிமானங்களின் மூலமாகவும் இந்த தகவல்களை படையினர் பெற்றிருப்பார்கள்.

இதற்கு உதாரணமாக, புலிகள் கிளிநொச்சியில் தாக்குதல் ஒன்றிற்கு தயாராக இருந்தபோது படையினர் நடாத்திய மிகவும் துல்லியமான விமான, பீரங்கி தாக்குதல்களையும், ஆனந்தபுரத்தில் புலிகள் தாக்குதல் திட்டத்துடன் இருந்தபோது அவர்கள்மீது நடாத்தப்பட்ட எரிவாயு தாக்குதலையும் குறிப்பிட முடியும். (ஆனந்தபுரத்தில் படையினர் நடாத்திய எரிவாயு தாக்குதலிலையே புலிகளின் முன்னணி தளபதி தீபன் உட்ப்பட்ட பல தளபதிகள், போராளிகள் உயிரிழந்தார்கள்.)


இவ்வாறாக வெவ்வேறு நாடுகளின் கூட்டு புலனாய்வுச் செயற்பாட்டால் களத்தில் புலிகளின் வேவுப் புலனாய்வும், தாக்குதல் திட்டங்களும் படையினரால் முறியடிக்கப்பட்டதுடன், களத்திற்கு வெளியே கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் செயற்பட்ட புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்பும் சிதைக்கப்பட்டிருந்தது.


உண்மையில் புலிகளின் வெளியக புலனாய்வு (களத்திற்கு வெளியே) செயற்பாடுகள் முடக்கம் பெறுவதற்கு கருணா அம்மான் உள்ளிட்ட போராளிகளின் பிரிவையே பிரதான காரணமாக சொல்லவேண்டும்.

அதாவது கருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் அனுபவம் மிக்க ஏராளமான புலனாய்வுப்புலிகள் தென்னிலங்க்கைக்குள்ளும், அதனை அண்டிய அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளும் செயற்பட்டதாக நம்பப்படுகின்றது. (உயிரிழந்த புலிகளால் கேணல் இராணுவ தரநிலை வழங்கப்பட்ட சார்ல்ஸ் என்ற புலனாய்வுப்போராளி கொழும்பில் தங்கியிருந்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.)


எனினும் கருணா அம்மான் உள்ளிட்ட போராளிகளின் பிரிவின் பின்னர் அந்த புலனாய்வு போராளிகளை படையினரால் இலகுவாக அடையாளம்காண முடிந்ததால் சிலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள், சிலர் உயிரிழந்திருந்தார்கள், பலர் தப்பிச்சென்றிருந்தார்கள்.


அதன் பின்னர் புலிகளுக்கு வெளியகத்தில் ஒரு புதிய புலனாய்வுக்கட்டமைப்பை உருவாக்கவேண்டுய தேவை ஏற்பட்டிருக்கவேண்டும். எனினும் இலங்கைப்படையினரின் இறுக்கமாக்கப்பட்ட அதீத பாதுகாப்புக்குள் அந்த அனுபவமில்லாத புதிய கட்டமைப்பால் தொடர்ந்து ஆரோக்கியமாக செயற்பட முடியாது. அந்த வகையில் அர்ப்பணிப்பு உணர்வு குறைவு என்பதாலும், அனுபவம் குறைவு என்பதாலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையாலும் புதிய கட்டமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்


இவ்வாறாக புலிகளின் வெளியாக புலனாய்வு சிதைக்கப்பட்டமையால் புலிகளால் துல்லியமான போராட்டத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களை தென்னிலங்கையில் நிகழ்த்தமுடியவில்லை


புலிகளைப்பொறுத்தவரையில் களத்தில் நூறு இராணுவ வீரர்களை கொல்வதை விட கொழும்புபோன்ற பகுதிகளில் ஐந்து இராணுவ வீரர்களை கொல்வது அதிக அனுகூலம். அதாவது இதனால் களத்தில் இருக்கும் போராளிகளின் உளவுரனை அதிகரிக்கமுடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.


மேலும் தென்னிலங்கையில் இராணுவ இலக்கு ஒன்றின்மீதோ அல்லது பொருதார இலக்கு ஒன்றின்மீதோ நடாத்தும் தாக்குதலானது களத்தில் இராணுவச்செறிவை குறைத்து அவர்களை தென்னிலங்கை நோக்கி நகர்த்தும் கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டால் அது படையினருக்கான ஆயுத கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்துவது தொடங்கி ஒரு பெரும் அரசியல் மாற்றத்துக்குக்கூட வித்திடலாம் என்பது புலிகளின் போரியல் மூலோபாயங்களில் ஒன்றாகும்.


இவ்வாறான ஒரு சூழ்நிலையில் புலிகளுக்கு வலுவான ஒரு வெளியாக புலனாய்வுக்கட்டமைப்பு இன்றி எதனையும் செய்யமுடியாது. இதனால்தான் அவர்களால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய போரின்போக்கில் மாற்றத்தை எட்படுத்தக்கூட்டிய எந்தவொரு வலுவான தாக்குதலையும் வெளியகத்தில் மேற்கொள்ள முடியாமல் போனது.


இங்கு புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்பு சிதைக்கப்பட்டமைக்கு ஆதாரமாக அவர்கள் நடாத்திய வான்வழி தாக்குதல்களையும் குறிப்பிடலாம். அதாவது விமானப்படையை வெளிப்படுத்தாத காலத்தில் மூன்றாம்கட்ட ஈழப்போரின்போது கட்டுநாயக்கா என்ற மிகப்பெரிய விமானப்படைத்தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் தொடுத்து அழித்தவர்களுக்கு பின்னர் அவ்வாறு தரை வழியே நுழையமுடியாமையும், தென்னிலங்கையில் அவசரமாக ஒரு தாக்குதலை நடாத்தி அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய தேவையும் விமான வழித்தாக்குதலுக்கு அடிகோலியது என்றும் சொல்லலாம்.


இவ்வாறாக புலிகளின் புலனாய்வுப் பலம் வெவ்வேறு வழிகளில் சிதைக்கப்பட்டமை அவர்களின் பின்னடைவுக்கான இன்னுமொரு காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் போரின் வெற்றியை தீர்மானிக்கும் பலங்களில் நான்காவது பலமாக இணைந்திருக்கும் புலனாய்வுப் பலமே ஐந்தாவது பலம் உணரப்படும் வரை போர்களில் செல்வாக்கு செலுத்துவதுடன் ஏனைய பலங்களையும் தீர்மானிப்பதாக அமையும் என்ற கருத்துருவத்தையும் வழங்கலாம்...


(புலிகள் இலங்கை விமானப்படையின் தளங்களை குறிவைத்தமை மிக், கிபிர் விமானங்களால் பாரிய சவால்களை புலிகள் சந்தித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் களத்தில் பல்குழல் பீரங்கிகள் அவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்க வாய்ப்புண்டு.)

No comments: