உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, December 5, 2009

பதும நாதம்!!!!!!!!!!!!
இது எனது தந்தையார் அமரர் உயர்-திரு.குமாரவேலு மயில்வாகனம் (பதுமநாயக முதலியார்) அவர்களின் வாழ்க்கை வரலாறு..

ஈழவள நாட்டின் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வியங்காட்டில் குமாரவேலு மீனாட்சியம்மை தம்பதியினருக்கு 1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வந்துதித்த ஆண் மகவிற்கு மயில்வாகனம் எனப் பெயர் காணப்பட்டது. இவரின் பாசத்திய்குரிய சகோதரியாக வேதநாயகி வந்துதித்தார்.

இவர் தனது கல்வியை யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆரம்பித்து தொடர்ந்ததுடன், அன்னை வழித் தொடர்பில் சைவை சமயத்தின் ஆச்சார ஒழுக்கங்களை சீராகக் கடைப்பிடித்து கீரிமலையில் உள்ள சடையம்மா மடத்திலிருந்து சைவக் கிரியைகள் சம்பந்தமான விளக்கங்களை குருவிடம் முறையாக கற்றுக்கொண்டார்.

இவர் இளைஞராக இருக்கும் காலத்திலேயே தமது வீட்டின் அருகில் அமைந்திருந்த பூதவராயர் ஆலயம், வெள்ளைப் பிள்ளையார் ஆலயம், சிவஞான பிள்ளையார் ஆலயம் (கலட்டிப் பிள்ளையார்) என்பவற்றில் அதீத பற்றுக் கொண்டவராவார் என்பதுடன் வெள்ளைப் பிள்ளையார், சிவாஞானப் பிள்ளையார் ஆலயங்களின் ஆரம்ப கால பூசகராகவும் இருந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளியவளை பிராதன வீதியில் உள்ள ஞான வைரவர் ஆலயமும் இவராலேயே ஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் இவர் நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெறும் சூர சங்கார நிகழ்வுகளில் நவவீரர்களில் ஒருவராக முடிதரித்தவர்.

தனது இளம் பராயத்தை யாழ்ப்பாணத்தில் கழித்த இவர் முல்லைத்தீவு முள்ளியவளையில் குமாரசாமி மகேஸ்வரி தம்பதியரின் மூத்த புதல்வியான சுசிலாதேவியை (லீலாவதி) விரும்பி மனம் செய்து முறையே சத்தியசீலன்(கண்ணன்), ஞானசீலன்(ஞானம்), ஜெயசீலி(ஜெயா), மயூதரன்(மயூ), செந்தூரன்(செந்துவா) ஆகியோருக்கு தந்தையுமானார்.பிள்ளைகள் தங்கள் கல்வியைத் தொடர ஆரம்பத்திலிருந்தே தேவையான வசதிகளையும், உதவிகளையும் வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டார். அதன் பெறுபேறாக பிள்ளைகள் அரச துறையிலும், இதர துறைகளிலும் கடமை புரிவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். மேலும் தனது மூன்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது கடமையை செவ்வனே நிறைவேற்றினார்.

உயர்-திரு.குமாரவேலு மயில்வாகனம் அவர்கள் திருமணம் செய்து முள்ளியவளையில் குடியேறிய பின்னரும் இவரது சமயப்பணி தொடர்ந்தது. அந்த வகையில் தனது வீட்டிற்கு முன் புறமாக அமைக்கப்பட்ட ஞான வைரவர் ஆலயத்தின் பூஜை, பராமரிப்பு என்பவற்றை மிகவும் நேர்த்தியான முறையில் மேற்கொண்டார். மேலும் இவர் முள்ளியவளையில் இருந்த காலத்தில் அவரது மனைவியின் தாயார் காலமானபோது அவருக்கு செய்யவேண்டிய அபரக் கிரியைகளை செய்வதற்கு அவ்வூரில் குருமார் எவரும் இல்லாத காரணத்தினால் தான் முன்பு கற்று வைத்திருந்த அபரக் கிரியையை முதன் முதலாக தனது மனைவியின் தாயாருக்கு செய்து வைத்தார்.

இதனைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் தங்களுக்கு இவ்வாறான கிரியைகளை ஆற்றக்கூடியவர்கள் அவ்வூரில் இல்லாத காரணத்தினாலும், கிரியை முறைகளை இவர் மிகவும் திருப்தியான முறையில் செய்கின்றார் என்பதாலும் இவரை, அவ்வூரில் இடம்பெறும் அபரக் கிரியைகளை செய்ய வேண்டுமென மிகவும் வினயத்துடன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவ்வூரில் குருக்கள் ஐயா என எல்லோராலும் நேசிக்கப்பட்டதுடன், தனது இந்து சமயத் தொண்டை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு மிகவும் திறம்படச் செய்து வந்தார்.

இவ்வாறு சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வந்த இவர் காலத்தின் கோலம் காரணமாக இடம்பெற்ற வன்னி மக்களின் பேரவல இடப்பெயர்வின்போது கடைசிவரை அங்கிருந்துவிட்டு இறுதியில் வவுனியா வந்து பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்களின் அன்பான அரவணைப்பில் தனது நொந்த உள்ளத்தையும் உடலையும் தேற்றிவந்த வேளையில் காலனவனின் கணக்கு வந்துவிட்டது.

தாராள மனதும், இரக்க சுபாவமும் கொண்ட இவர் ஊர் மக்களால் பதுமை ஐயர், பதுமண்ணா என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டார். ஒரு மதத்தின் அடையாளச்சின்னமாக இருந்தாலும், பிற மதங்களையும் நேசித்த ஆனால் மத மாற்றங்களை வன்மையாகக் கண்டித்த உயர்-திரு.குமாரவேலு மயில்வாகனம் அவர்கள் தனது 71 ஆவது வயதில் 04 .11 .2009 புதன் கிழமை அன்று காலைப் பொழுதில் இறைவன் திருவடி சேர்ந்தார். தனது நாளாந்தக் கடமைகளை நிறைவு செய்துவிட்டு தன்வீட்டு பூஜை அறையில் இறைவனை பூக்களால் அலங்கரித்துவிட்டு அடுத்த சில நொடிகளில் உடல் தளர்ந்து வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அரை மணி நேரத்துக்குள் அன்னாரின் ஆத்மா உடலைவிட்டு பிரிந்தது.....

திதி வெண்பா...
ஆண்டு விரோதியின் ஐப்பசித் திங்களது
அபரபக்க துதியை திதி தனில்
பதுமு என்னும் செம்மல் மயில்வாகனனார்
பரம்பொருள் நல்லடி சேர்ந்தார் சிறந்து!!!!!


ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

No comments: