உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, September 23, 2012

முஸ்லிம் காங்கிரசின் துரோகத்தை சாதகமாக்கி...

இலங்கை அரசியல் அரங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாகாண சபைக்கான தேர்தல்கள் மூன்றும் நிறைவடைந்து பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமை தொடர்பான விமர்சனங்கள் ஊடகங்களில் இன்னமும் எதிரொலித்த வண்ணமே உள்ளன. 
குறிப்பாக தமிழ்-முஸ்லிம் சமூகம் இணைந்த தமிழ் பேசும் மக்கள் என்னும் ஐக்கியத்தை எதிர்பார்த்தவர்கள் முஸ்லிம் காங்கிரசின் முடிவால் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். உண்மையில் முஸ்லிம் காங்கிரசின் முடிவு அரசுடன் இணைவதாகவே அதிகமானதாக இருக்கும் என்பது தேர்தலுக்கு பின்னரான அவர்களின் செயற்பாடுகள் மூலம் நன்றாக வெளிப்பட்ட போதிலும் இறுதி நேரத்திலாவது முஸ்லிம் காங்கிரஸ் தமது முடிவை மாற்றும் என்றே பலரும் எதிர்பார்த்திருக்க அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கில் ஆட்சியமைக்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் உத்தியோக பூர்வமாக அறிவித்து தமக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களையும், முஸ்லிம்-தமிழ் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை எதிர்பார்க்கும் தரப்பினரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமது கட்சியின் தவிசாளர் உட்பட்ட முக்கியஸ்தர்களையும், அசாத் சாலி போன்ற மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அரச எதிர்ப்புள்ள உறுப்பினர்களையும் ஏமாற்றியது ஒரு வரலாற்று தவறு என்பதில் சந்தேகமில்லை. 
கிழக்கு மாகாண சபையை பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பது தேர்தலுக்கு முன்னமே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தால் என்ன முஸ்லீம் காங்கிரசாக இருந்தால் என்ன  இந்த விடயத்தை நன்கு புரிந்த நிலையில்தான் தேர்தலில் களம் புகுந்திருந்தார்கள். எனினும் அரச எதிர்ப்பு என்பது இவ்விரு கட்சிகளினதும் தேர்தல் பிரசாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் இந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளில் பாதிக்கு மேற்பட்டவை அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் உணர்வுகளையே வெளிப்படுத்தியிருந்தன. இந்த நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அரசிற்கு ஆதரவளித்துள்ளது. 
முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் இந்த முடிவை பெரும்பாலான ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் இந்த முடிவை விமர்சிக்கும் அதேசமயம் யாருக்கும் இதுவரையில் சோரம் போகாத தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான அரசியல் அடையாளமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசின் முடிவை எவ்வாறு தமக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு வலுவான அரசியல் சக்தியாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரையில் இப்போது பல்வேறு மாறுபட்ட விமர்சனங்களை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் எதிர்கொண்டு வருகின்றமை என்னவோ கசப்பான உண்மைதான். ஆனாலும் யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரும் இதுவரையில் அரசாங்கத்திடம் மண்டியிடாத தமிழ் மக்களின் ஆதரவுள்ள ஒரே அரசியல் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளமை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பான தீர்வுகளை நோக்கிய நகர்வுக்கு மிகப் பெரிய பலம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

சர்வதேச நாடுகளில் பரந்து வாழும் தாயக சொந்தங்களின் உணர்வுகளும், தாயகத்தில் வாழும் சொந்தங்களின் உணர்வுகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை இல்லை என்கின்ற போதிலும் அடக்கப்பட்டு, அடிமை வாழ்வு வாழும் உறவுகளால் தமது உணர்வுகளை ஒரு போதும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது என்பது வெள்ளிடை மலை. 

இந்த நிலையில் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற  தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்கள் மக்களின் பலம் கூட்டமைப்புத்தான் என்றும், அதை சிதைக்கும் உரிமையை மக்கள் யாருக்கும் வழங்கவில்லை என்றும், நாம் கூட்டமைப்பாகவே மக்களிடம் செல்கின்றோம் எனவும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களது தனித்துவங்களை பேணுவது தொடர்பில் ஆட்சேபனை இல்லை என்றும்  தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. 

அதுமட்டுமல்லாது 2001 , 2004 ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கொள்கை அடிப்படையில், புரிந்துணர்வு அடிப்படையில் ஒத்து இயங்குவதற்கு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சக்தியாக விளங்குகின்றது என அவர் குறிப்பிட்ட கருத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும். 


உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தமிழர்களின் அரசியல் சக்தி அரசாங்கத்திடம் மண்டியிடாத வரை நமது சக்தியை பலவீனப்படுத்தும் ஊடக விமர்சனங்களும், கருத்துக்களும் தமிழர்களின் ஒன்றிணைந்த வாக்கு வங்கியைக் கொண்ட கூட்டமைப்பை சிதைப்பது மட்டுமன்றி, அரசாங்கத்தையும் பலமாக்கும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். 

இது இவ்வாறு இருக்க கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் ஏமாற்றியதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு சாதகமான அரசியல் நகர்வாக மாற்றுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதாவது ஏமாற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பொருத்தமான, மக்கள் செல்வாக்குள்ள முஸ்லிம் உறுப்பினர்களை உள்வாங்கி எதிர்வரும் தேர்தல் களங்களில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கான செயற்றிட்டங்களை ஆரம்பிப்பதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் எந்தவொரு கட்சியின் துணையுமின்றி கிழக்கில் ஆட்சியமைக்கும் நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். 

மேலும் எதிர்வரும் காலங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வடமாகாண சபைக்கான தேர்தலிலும் வடக்கு வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அடையாளத்துக்கு கிடைக்கும் வகையில் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். 

கதிரையிலும், வெற்றிலையிலும், யானையிலும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற முடியும் என்றால் ஏன் வீட்டு சின்னத்திலோ அல்லது பிறிதொரு சின்னத்திலோ தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து வெற்றியீட்டி தமது ஒற்றுமையால் உயர்வடைய முடியாது?

No comments: