உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, July 14, 2012

கிழக்கு மாகாண சபை தேர்தல்-மற்றுமொரு வரலாற்றுத் தவறு..

 இலங்கை அரசியலில் இன்று அதிகமாக சூடு பிடித்துள்ள விடயம் கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசியற் கட்சிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளாகவே உள்ளன. அந்த வகையில் தமிழ் பேசும் சமூகத்தை பொறுத்தவரையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மிக மிக முக்கியமான ஒன்று என்று சொல்லலாம். இலங்கையில் வட, கிழக்கில் தமிழ் மக்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தொடக்கம் தமது ஒற்றுமையை வாக்களிப்பில் காட்டி வருகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. 


அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது ஏகோபித்த ஆதரவை தமிழ்ச் சமூகம் தேர்தலில் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் களம் என்பது கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. 
உண்மையில் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் கிழக்கு மாகாண சபையை கலைத்து அதற்கு ஒரு தேர்தலை அவசர அவசரமாக நடாத்துவதன் நோக்கம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ் சமூகம் கிழக்கில் அரசின் பின்னால் நிற்கிறது  என உலக நாடுகளுக்கு பரப்புரை செய்யலாம் என்பதேயாகும். வடக்கில் மாகாண சபை தேர்தலை 2013 ஆண்டுவரை அரசு பின்தள்ளி வைத்துள்ளமை வடமாகாணத்தில் தமது வெற்றிகள் தொடர்பில் நம்பகத் தன்மையில்லை என்பதாலாகும்.


யுத்தம் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்ற தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் போன்றன இலங்கையின் வட, கிழக்கில் தமிழ் சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டிருப்பதை உலகிற்கு பறை சாற்றியது. இது அரசிற்கு மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்திருந்தது என்பதுடன் இவ்வாறான நிலைமையை மாற்ற அரசாங்கம் கடும் பிரயத்தனத்திலும் ஈடுபட்டது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகள் கிடைக்காத நிலையில்தான் கிழக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. 


மூவின மக்களும் வாழும் இன்றைய கிழக்கு மாகாண தேர்தல் களத்தை எடுத்துக் கொள்ளுமிடத்து எந்தவொரு இனமும் தனித்து போட்டியிட்டு வெற்றி ஈட்டுவதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை அவசியம் என்றே தோன்றுகின்றது. 


அந்த வகையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களாலும், கடந்த கால யுத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்களாலும், வேற்று நாடுகளுக்கான புலம்பெயர்வுகளாலும் வாக்காளர் தொகையில் தமிழ் மக்கள்  நலிவடைந்திருக்கும் நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும். மேலும் திட்டமிட்ட பிரதேச வாத பரப்புரைகளும் இந்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க அல்லது தம் பக்கம் ஈர்த்துக் கொள்ள அரசாங்கம் கையாளும் உத்தியாக உள்ளது. 


இவ்வாறான இக்கட்டான சூழலில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் சமூகமும், முஸ்லீம் சமூகமும் அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒரு உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக களம் இறங்கினால் நிச்சயம் அரசாங்கத்துக்கு அது நெருக்கடியான ஒன்றாக இருக்கும் என்று நம்பப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 
நேற்றைய தினம் (13 . 07 .2012 ) வெள்ளிக் கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
தமிழ்தேசியக் கூட்டமைப்புடனும், அரசாங்கத்துடனும் பல சுற்று பேச்சுக்களில் ஈடுபட்ட பின்னரே இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை இரண்டு வருடங்கள் முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்க முடியும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. 


இவ்வாறான சூழ் நிலையில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எவ்வாறான  நிபந்தனைகளின் அடிப்படையில் அல்லது உடன்பாடுகளின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்தது என்று தகவல்கள் வெளிவராத போதிலும் கட்சியைக் காப்பாற்றுதல் என்கின்ற வழக்கமான நிலைமையும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறையில் முஸ்லீம் காங்கிரசுக்கு 6 இடங்களும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தலா 3 இடங்களும் ஒதுக்கியுள்ளமையே இந்த இணைவுக்கு காரணம் என்றும் தெரிய வருகின்றது. 


பொதுவாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தேர்தலும் முஸ்லீம் காங்கிரசை பலவீனப்படுத்துவதாகவே அமைந்து விடுவது அவர்களுக்கும், முஸ்லீம் சமூகத்துக்கும் துரதிஷ்டவசமானது. கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் எடுத்த முடிவால் கட்சி பாரியளவில் பலவீனமடைந்ததை மறுப்பதற்கில்லை என்கின்ற போதிலும் இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியில்  முஸ்லீம் சமூகமும், தமிழ் சமூகமும் பேரினவாத சக்திகளால் அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகும் நிலையில் கட்சியை காப்பாற்றுதல் என்னும் நோக்கோடு அரசாங்கத்தின் திட்டமிட்ட நகர்வுகளின் வலைக்குள் சிக்கி முஸ்லீம் சமூகத்தையும், தமிழ் சமூகத்தையும் காட்டிக் கொடுப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் முஸ்லீம் காங்கிரஸ் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடானது மற்றுமொரு வரலாற்றுத் தவறாகவும் இருக்கலாம். 


அண்மையில்தான் இலங்கையில் முஸ்லீம்களின் தொழுகை இடங்களான பள்ளி வாசல்கள் மீது பேரின வாத சக்திகளால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.. இதற்கு இதுவரையில் எந்தவொரு உருப்படியான நடைவடிக்கையையும் அரசாங்கம் எடுத்ததாக தெரியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க அரசியல் இருப்பிற்காக, கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ளும் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எடுத்துள்ளமை தூர நோக்கில் அமைந்த நிதானமான முடிவாக இருக்குமா என்பது சந்தேகமே!! 


முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கொள்கை உடன்பாடுகளை ஏற்படுத்தித்தான் இந்த முடிவுக்கு  வந்திருக்கின்றார்கள்  என்றாலும் அரசாங்கத்தின் உடன்பாடுகள் தொடர்பான கடந்த கால நம்பகத் தன்மை பற்றியும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். 


கடந்த கிழக்கு மாகாண சபை  தேர்தலில் முஸ்லீம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று செயற்பட்ட ஹிஸ்புல்லாஹ் தலைமையிலானவர்களுக்கு அரசாங்கத்தின் உடன்பாடுகள் தொடர்பான நம்பகத் தன்மை குறித்து  நல்ல அனுபவம் இருக்கும். அதாவது அதிகபடியான உறுப்பினர்களை பெறும் இனம் எதுவோ அந்த இனத்தை சேர்ந்தவர்தான் கிழக்கு மாகாண சபையின் முதல்வர் என்று அரசு வழங்கிய உறுதி மொழியை நம்பி எமார்ந்ததை அவர்களும், முஸ்லீம் மக்களும் மறந்திருக்கமாட்டார்கள். தமக்கான தனிப்பட்ட அரசியல் அடையாளம் பிரகாசமானதால் குறித்த அரசியல்வாதிகள்  அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பது தனிக் கதை. இருப்பினும் வாக்களித்த முஸ்லீம் மக்கள்  எமார்ந்ததுதான் மிச்சம். மீண்டுமொரு முறை வாக்காளர்களுக்கு இதே நிலைமையைத்தான் முஸ்லீம் காங்கிரஸ் ஏற்படுத்தப் போகின்றதா? 
மேலும் முன்பு ஹிஸ்புல்லாஹ் தலைமியிலானவர்கள் இவ்வாறன ஒரு முடிவை எடுத்த  போது  கடுமையாக விமர்சித்த முஸ்லீம் காங்கிரஸ் இப்போது தாங்களே அதே முடிவை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளார்களா? அல்லது தள்ளப்பட்டுள்ளார்களா? எது எப்படியோ பாதிக்கப்பட போவது தமிழ், முஸ்லீம் சமூகமே அன்றி சிங்கள சமூகம் அல்ல.


கிழக்கு மாகாணத்தின் முதல்வர் தமிழரா? முஸ்லீமா? என்று போட்டி வைத்து கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னம் இல்லாத நிலையில் தமிழர்களினதும், முஸ்லீம்களினதும் வாக்குகளை கவர்ந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இம்முறை முஸ்லீம்களின் தேசியக் கட்சியாக நோக்கப்படும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசினதும், கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் ஆதரவுடன் இரண்டு இனங்களினதும் வாக்குகளை கவரலாம் என களம் இறங்கியுள்ளது. 
மேலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னம் உள்ள நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை தம் பக்கம் ஈர்க்க அரசாங்கம் வடக்கு, கிழக்கு என்னும் பிரதேச வாத பரப்புரைகளில் ஈடுபடுவதையும் காண முடிகின்றது.... 


கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான நிலைமைகள் இவ்வாறு இருக்க சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் இழந்த தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெறும் நோக்குடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறுமுகன் தொண்டமான்  தலைமையிலான  இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், எதிரணியில் இருக்கும் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளார்கள். அதாவது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சேவல் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்வதென முடிவு செய்துள்ளார்கள்.. இந்த கூட்டணியில் காலஞ் சென்ற பெரியசாமி சந்திரசேகரன் உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியும் சேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது. 

பொதுவாக அரசாங்கத்துடன் சேர்ந்திருந்தால்தான் மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்னும் நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மலையக மக்கள் முன்னணியும் கொழும்பை மையப்படுத்தி ஆரம்பித்து இப்போது மலையகத்திலும் மக்கள் ஆதரவை பெற்று வரும் தமிழர் உரிமைகளுக்காக துணிந்து குரல் கொடுக்கும் மனோகணேஷன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இழந்த தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் நோக்கோடு உடன்பாட்டை எட்டியுள்ளமை புத்திசாலித்தானமான, இன்றைய நிலையில் தமிழ் சமூகத்துக்கு மிகவும் அவசியமான ஒரு முடிவாகும்.  


அண்மைக் காலத்தில் இலங்கையின் வடகிழக்கில் தமிழ் அரசியல் சக்திகளிற்கிடையில் கொள்கை அளவில் இல்லாவிட்டாலும் செயற்பாட்டளவில் பல்வேறு ஒற்றுமை தன்மைகள் வெளிப்பட்டதை போல இப்போது மலையக தமிழ் அரசியல் சக்திகள் பொது நோக்கோடு ஒன்று சேர்ந்துள்ளமையை வரவேற்போம்.  


ஒற்றுமையே பலம்... ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு... சுய லாப அரசியல் சக்திகளுக்கு இவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்...

No comments: