உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, July 21, 2012

21 ஓட்டங்களால் வென்றது இந்திய அணி.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் பகல் இரவு போட்டியாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி தலைமையிலான இந்திய அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தனர். 
அந்தவகையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 6 இலக்குகளை இழந்து 314 ஓட்டங்களை சேர்த்துக் கொண்டது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 113 பந்து வீச்சுக்களில் 9 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 106 ஓட்டங்களையும், வீரேந்திர சேவாக் 97 பந்து வீச்சுக்களில் 10 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 96 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 45 பந்து வீச்சுக்களில் 3 நான்கு ஓட்ட பெறுதிகள் 1 ஆறு ஓட்ட பெறுதி அடங்கலாக 50 ஓட்டங்களையும் சேர்த்தனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திசார பெரேரா 10 ஓவர்கள் பந்து வீசி 70 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு 50 ஓவர்களில் 315 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்னும் இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அணியினரால் 50 ஓவர்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 293 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 

இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 151 பந்துவீச்சுக்களில் 12 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 133 ஓட்டங்களையும், திசார பெரேரா 28 பந்து வீச்சுக்களில் 3 நான்கு ஓட்ட பெறுதிகள், 1 ஆறு ஓட்ட பெறுதி அடங்கலாக 44 ஓட்டங்களையும் பெற்றனர். 
இந்திய அணியின் பந்து வீச்சில் இர்பான் பதான், உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் 10 ஓவர்கள் பந்துவீசி தலா 2 இலக்குகள் வீதம் வீழ்த்தினர். அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளதுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றது.

இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் விராட் கோலி பெற்றுக் கொண்ட சதமானது ஒரு நாள் போட்டிகளில் அவர் பெற்றுக் கொண்ட 12 ஆவது சதம் என்பதுடன், விரேந்திர சேவாக் பெற்றுக்கொண்ட அரைச் சதமானது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் பெற்றுக் கொண்ட 38 ஆவது அரைச்சதமாகும்.  இதேவேளை இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார இன்றைய தினம் ஒரு நாள் போட்டிகளில் தனது 14 ஆவது சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். 

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார். 
இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டம் பலமாக இருந்த போதிலும் களத்தடுப்பு வியூகங்கள் பலவீனமாகவே இருந்தன. இலங்கை அணியை பொறுத்தவரையில் களத்தடுப்பு வியூகங்களும், துடுப்பாட்ட வரிசையும் சிறப்பாக இருந்த போதிலும் இந்திய அணி நிர்ணயித்த 315 ஓட்டங்கள் என்னும் இலக்கை அடைய முடியவில்லை. இலங்கை அணி உதிரி ஓட்டங்களாக 12 ஓட்டங்களையும் , இந்திய அணியினர் 23  ஓட்டங்களையும்  எதிரணிக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

No comments: