உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, July 22, 2012

இலங்கை+முஸ்லிம் அரசியல்வாதிகள்+முடிவுகள்.

இன்றைய இலங்கை அரசியலில் அதிகமாக பேசப்படும் விடயங்களாக முஸ்லீம் அரசியல்வாதிகளும் அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. 
குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முடிவு செய்து அறிவித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இட ஒதுக்கீடுகள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் சிக்கல்களால் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்த விடயத்தையும், மன்னார் மாவட்ட நீதிமன்றம் தாக்கப்பட்டு நீதவான் அமைச்சர் ரிஷாட்பதியுதீனால் அச்சுறுத்தப்பட்ட விடயத்தையும், முக்கிய விடயங்களாக அடையாளப்படுத்த முடியும்.
இலங்கை வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் நீதித் துறையில் அரசியல் தலையீடுகள் அதிகம் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான் என்கின்ற போதிலும் மன்னார் மாவட்டத்தில் அண்மையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட நீதவானை அச்சுறுத்திய விடயம் நீதித் துறைக்கு விழுந்த மிகப்பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றுவரை இலங்கையில் அதிகம் விமர்சிக்கப்படாத, ஒடுக்கப்படும் இனத்துக்கு சற்று ஆறுதல் தருகின்ற துறையாக நீதித்துறை நோக்கப்படும் நிலையில் மன்னார் மாவட்ட நீதவானை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்த விடயம் இலங்கை நாட்டிற்கும், இன்றைய அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய அவமானம் என்பதில் சந்தேகம் இல்லை.
மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நீதவான் வழங்கிய தீர்ப்பிற்காகவே அவரை ரிஷாட் பதியுதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நீதவானை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்னவை சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இதனை மஞ்சுள திலகரட்ணவும்  உறுதி செய்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
மேலும் தன்னை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்று அறிமுகப்படுத்திய ஒருவர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவாளர்களை விடுவிக்காவிட்டால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவில் புகார் செய்துள்ளார். அத்துடன் ரிஷாட் பதியுதீன் தனது உத்தியோகபூர்வ தொலைபேசியினூடாகவே  மேற்படி அச்சுறுத்தலை விடுத்தமையும்  விசாரணைகளின் மூலமாக தெரிய வந்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க இங்கே  வேடிக்கையான விடயம் என்னவென்றால் குறித்த மன்னார் மீனவ சமூகத்தின் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று கூறும் முஸ்லீம் சமய பீடங்கள் விடுதலைப் புலிகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும், அவர்களின் ஆதரவாளர்களால்தான் இந்த பிரச்சினை உருவானதாக மன்னார் மாவட்ட ஆயர் மீது மறைமுகமாக பழி சுமத்தும் வகையிலும், மாவட்ட நீதவான் அமைச்சர் ரிஷாட்பதியுதீனால் அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன.  ரிஷாட் பதியுதீனுக்கு ஆதராவாக போராட்டங்களையும் மேற் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வேண்டியது அவசியமான ஒன்றுதான் என்கின்ற போதிலும் நீதவானை ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்திய விடயத்தை நியாயப்படுத்துவதையோ, இப்போது இலங்கையில் இல்லாத விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதையோ ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

மன்னார் மாவட்ட நீதவான் அச்சுறுத்தப்பட்ட விடயம் இவ்வாறு இருக்க கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான விடயங்களும் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் முடிவிலிருந்து விலகி தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முடிவு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள், வரவேற்புக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. 
குறிப்பாக இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுமாக இருந்தால் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் ஓரளவுக்கேனும் குறையலாம் என்னும் எதிர்பார்ப்பில் அரசாங்கம் சபையை கைப்பற்றுவதற்காக கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை விரைவுபடுத்த வேண்டுமானால் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளது. 
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் சமூகத்தின் மனங்களை வென்றெடுக்காத நிலையில் தேர்தல் காலங்களில் தமிழ் சம்மூகத்தின்  வாக்குகளை கவர முடியாது என்னும் நிலையில் அவர்களின் வாக்குகளை சிதைப்பதிலையே அதிக கவனம் செலுத்தியிருக்கின்றன. 
இன்றைய அரசாங்கமும் அதனையே செய்துவருகின்றது. 

கிழக்கு மாகாண சபையின் களத்திலும் திட்டமிட்ட பிரதேசவாத கருத்துக்களை திணித்தும், தமிழ் முஸ்லீம் சமூகத்தின் அரசியல் சக்திகளை பிளவுபடுத்தியும் வாக்குகளை சிதறடிக்க செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. எனினும் அரசாங்கம் எதிர்பார்க்கும் பலாபனை பெற முடியாது என்கின்ற போதிலும் எந்தவொரு இனமும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை கிழக்கு களத்தில் உள்ளது. 

இந்த நிலையில் கிழக்கு களத்தில் தனித்து களமிறங்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசிடமிருந்து தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாதகமான கருத்துக்கள் எதுவும் இதுவரை வெளிவந்ததாக தெரியவில்லை. 
அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பில் இது பற்றி கூறுகின்ற போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறினார். இதன் மூலம்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது பற்றி சிந்தித்துக் கூட பார்க்கவில்லை என்றே தெரிகின்றது. மேலும் அவர் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அவர்களுக்கு வழி விடுவோம் என்றும் சொல்லியுள்ளார். 
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதை விட அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது அனுகூலமானது. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிழக்கு களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதால் பெரிய அளவில் நன்மைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாதகமானதாகவே இருக்கும். இதனால்தான் முஸ்லீம் காங்கிரசை தம்முடன் இணைந்து போட்டியிடாவிட்டாலும், அரசாங்கத்துடன் இணையாது தனித்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வந்தது. 
இந்த நிலையில்தான் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னர் தனித்து போட்டியிடவுள்ளதாக முடிவை மாற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இந்த திடீர் மாற்றங்கள் தொடர்பில் வெவ்வேறு வகையான பார்வைகள் விமர்சகர்கள் மத்தியில் உள்ளன. 

குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு இறுதியில் அரசாங்கத்துடன் இணைந்தே ஆட்சி அமைக்க முன்வரும் என்று சொல்லப்படுவதுடன், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் முடிவிலிருந்து திடீரென விலகி தனித்து போட்டியிடும் முடிவுக்கு அவர்கள் வந்தமை ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. 

அதாவது ஏற்கனவே கிழக்கு களத்தில் அரசாங்க சின்னத்தில் முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் அரசியல் சக்திகள் அரசாங்கத்துடன் இணைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மர சின்னத்தின் கீழ் அதிகளவு வாக்குகள் பதிவாகும் இடங்களையும் தமதாக்கும் நோக்குடன் முஸ்லீம் காங்கிரசை அரசாங்கம் பயன்படுத்துகின்றதா என்கின்ற சந்தேகமும் நிலவுகின்றது. 
இதே வேளை கிழக்கு மாகாண சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சிங்களவர்களின் காணிகள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களும், தமது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அபிவிருத்திகள் தொடர்பில் பட்டியலிட்டுள்ளமையும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள அவர்கள் முன்னெடுக்கும் பிரச்சார உத்திகள். 
இவ்வாறான உத்திகள், கபடங்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தனியொரு சக்தியாக அரசாங்கத்தை எதிர்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....

No comments: