பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதின் நான்காவது ஐரோப்பியக் கிண்ண கால்ப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதின. உக்ரைன் நாட்டின் தலைநகரான கிவ் இல் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. அந்த வகையில் போட்டி ஆரம்பித்து 14 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் David Silva முதலாவது கோலை போட்டார். இத்தாலி அணிக்கு கோல் போடும் வாய்ப்புக்கள் ஓரளவுக்கு இருந்தும் அவர்கள் அதனை தவற விட்டனர். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி சார்பாக இடைவேளைக்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக அதாவது போட்டியின் 41 ஆவது நிமிடத்தில் Jordia Alba ஸ்பெயின் அணி சார்பில் இரண்டாவது கோலை போட்டார். அந்த வகையில் இடைவேளையின் போது ஸ்பெயின் அணி 2 - 0 என்கின்றகணக்கில் முன்னிலை வகித்தது.
இடைவேளையின் பின்னர் இத்தாலி அணிக்கு கோல் போடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே இருந்தது. மேலும் இடைவேளையின் பின்னர் இத்தாலி அணியின் ஆதிக்கம் இடைவேளைக்கு முன்பை விட அதிகமாக இருந்ததையும் காண முடிந்தது. எனினும் ஸ்பெயின் அணியின் கோல் காப்பாளரின் சாமர்த்தியத்தால் இத்தாலி அணியால் கோல் எதனையும் போட முடியவில்லை. ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் இடைவேளையின் பின்னர் மிகவும் குறைவாக இருந்த போதிலும் போட்டியின் 84 ஆவது நிமிடத்தில் Torres ஸ்பெயின் அணி சார்பில் 3 ஆவது
கோலை போட்டார். 3 ஆவது கோல் போடப்பட்ட நான்கு நிமிடங்களின் பின்னர் அதாவது போட்டியின் 88 ஆவது நிமிடத்தில் Torres இடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட Juana Mata 4 ஆவது கோலைப்போட்டார்.
அந்த வகையில் 4 - 0 என்ற கோல் கணக்கில் இந்த போட்டியில் இத்தாலியை வீழ்த்தி சம்பியனானது ஸ்பெயின். இதன் மூலம் இரண்டாவது தடவையாக தொடர்ந்து (2008 , 2012) ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளதுடன், நடப்பு உலக கோப்பை சாம்பியன், நடப்பு ஐரோப்பிய கோப்பை சாம்பியன் உலகின் நம்.1 அணியென தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது. மேலும் ஸ்பெயின் இதுவரை மூன்று முறை ஐரோப்பியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன் (1964 , 2008 , 2012 ), ஒரு முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி சம்பியன் பட்டத்தை பெற முடியாமலும் போயிருந்தது(1984 ). அத்துடன் இத்தாலியானது இரண்டாவது முறையாக இறுதிப்போட்டி வரை சென்று சம்பியன் பட்டத்தை பெற தவறியுள்ளது(2000 , 2012 ) என்பதுடன் இதுவரையில் சம்பியன் பட்டம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment