பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு அறிவிக்கப்பட்டு அதன் பரபரப்பு மக்களிடத்தில் தொற்றிக் கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தந்தையார் வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பனாகொடை இராணுவ முகாமில் தனது 86 ஆவது வயதில் காலமானார் என்கின்ற செய்தி வெளியாகியது.
இந்த நிலையில் காலஞ் சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் அவரின் உறவினர்களின் வேண்டுதலுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் வல்வையில் இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளன. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயாரை சிவாஜிலிங்கத்தின் பொறுப்பில் விடுதலை செய்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் 22 பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுதொடர்பான இறுதித் தீர்மானங்களை எடுத்த கூட்டத்துக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவில்லை என்று தெரிகிறது.
அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி வெளிநாட்டில் தங்கியிருப்பதாலும், பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் கைது செய்யப்பட்டிருப்பதனாலும் இந்தக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோர் கட்சிக் கொள்கைகளுக்கு கட்டுப்படாத காரணத்தினாலும் மேற்படி கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறாக பல பல சிக்கல்களுக்கு மத்தியில் எல்லா அரசியல் முடிச்சுக்களையும் முடிந்தவரை அவிழ்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா-சம்பந்தன் கட்சியின் கட்டுக்கோப்பு குலையாமல் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றமை உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு சரியானதா?? என்கின்ற கேள்வி பொதுவாக எல்லோரிடமும் இயல்பாக எழுந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதைவிட நல்ல முடிவை எடுக்க முடியாது என்கின்ற நிலையிலையே இந்த முடிவுக்கு வந்துள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
அண்மையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 20 தமிழ்ப் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்றும், பேரம் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் கூறியதன் அடிப்படையில் பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர் தங்களால் முடிந்தளவு பேரம் பேசியே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதாக தெரிகின்றது.
அந்தவகையில் வடக்குக் கிழக்கு இணைப்பு, கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் விடுதலை, இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு என்கின்ற மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய சாதகமான பதில்களின் அடிப்படையிலையே இந்த ஆதரவு முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது. இவை தொடர்பில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் பேசிய போது வடக்குக் கிழக்கு இணைப்பை அவர் நிராகரித்ததாக தெரிகின்றது.
எனவே தனது கட்சி அங்கத்தவர்களையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் அதே நேரம் கட்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இதனைவிட இன்னுமொரு நல்ல முடிவை எடுக்கமுடியும் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் 20 புத்தி ஜீவிகள் ஒன்றாக வெளியிட்ட அறிக்கை தொடர்பிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அத்துடன் இந்த புத்திஜீவிகள் மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கவும் இடமுண்டு.
எது எப்படியிருப்பினும் தீர்க்க தரிசனமும், தூர நோக்கும் கொண்ட அரசியல் முடிவுகளை எடுப்பதற்கும், தமிழ் அரசியல் தலைமைகளை வழிநடாத்திச் செல்வதற்கும் பொருத்தமான தமிழ்ப் புத்திஜீவிகள் அரசியலுக்குள் நேரடியாக ஆலோசகர்களாகவும், வேட்பாளர்களாகவும் களமிறங்க வேண்டியது இன்றைய தமிழர் தரப்பு தேவையாக உள்ளது என்பதையும் கவனத்தில்க் கொள்ள வேண்டும்...
ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான நிலைமைகள் இவ்வாறு இருக்க அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரான சிவாஜிலிங்கத்திடம் காலஞ் சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடலை கையளித்து இறுதிக் கிரியைகளை அவரின் பொறுப்பில் ஒப்படைத்தமை சிவாஜிலிங்கத்துக்கு மேலும் அரசியல் பலத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்வு கூறப்படுவதுடன், இதனைக் கொண்டு தமிழ்ச் சமுகத்தின் வாக்குகளை சிதைப்பது அரசின் நோக்கமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டலாம், அதாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளிவந்த காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் வாங்கப்போவதில்லை என்றும், முன்னாள் ராணுவத் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் பிரபாகரனின் பெற்றோரை வைத்து அரசியல் பேசினார்கள்.
நிலைமை இவ்வாறாக இருக்க இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் மும்முரமான பிரச்சாரங்களில் குதித்துள்ளார்கள். அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற ஜெனரல் சரத் பொன்சேகா உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுமென்று அறிவித்தார். மேலும் தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாளைய தினம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். அரசாங்கம் ஏற்கனவே தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக கடும் பிரயத்தனம் எடுத்துள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரலிற்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் இன்னுமின்னும் கடும் முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
உண்மையில் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் அது பல பலவீனங்களைக் கண்டுவருவதாகவே தெரிகின்றது. அந்தவகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரதியமைச்சர் செல்லச்சாமி விலகிச்ச் சென்று ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கின்றார். அத்துடன் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகிச்சென்று அரசாங்கத்துடன் இணைந்திருந்த மட்டக்களப்பு நகர மேயர் சிவகீத்தா பிரபாகரனும் ஜெனரலின் "நம்பிக்கைக்குரிய மாற்றம்" என்கின்ற தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியினருடன் இணைந்துள்ளார்.மேலும் சனல் 4 தொலைக்காட்சி ஒளி நாடா தொடர்பிலும் அரசு சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றது.
இந்த நிலையில் அண்மையில் மறைந்த அமரர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நம்பிப் பலன் இல்லை என்றும் இந்தியா இனப்பிரச்சினைத் தீர்வில் உதவப்போவதில்லை என்றும் மக்கள் தமக்கான உரிமைகளை தாமே பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஒரு பத்திரிக்கை நேர்காணலில் சொல்லியுள்ளார்.
ஆக மொத்தம் இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்றபோது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்ப்பால் இலங்கை அரசியல் கலங்கிய குட்டை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கூட்டமைப்பு பற்றி நானும் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருகன்
pongal valthukkal
எழுதுங்க.. எழுதுங்க வரோ... வாழ்த்துக்கள்...
ரொம்ப நன்றி இலங்கன்.. உங்களுக்கும் இனிய தைத் திரு நாள் வாழ்த்துக்கள்...
Post a Comment