இலங்கை- இந்திய -பங்களாதேஷ் அணிகள் விளையாடும் முத்தரப்புத் தொடர் கடந்த நான்க்காம் திகதி பங்களாதேஷின் தலை நகர் டாக்காவில் மிர்பூர் மைதானத்தில் இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பித்து இதுவரையில் நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன, அந்தவகையில் இந்தத் தொடரில் இதுவரையில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கையணி மூன்று போட்டிகளையும் வெற்றிகொண்டுள்ளது. மேலும் மூன்று போட்டிகளில் விளையாடிய பங்களாதேஷ் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
இந்த முத்தரப்பு தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 31 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் தனது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தது இலங்கையணி. அந்த வகையில் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்துமாறு பங்களாதேஷை இலங்கையணி பணித்ததற்கு இணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் சார்பாக முஹம்மத் அஷ்ரபுல் அதிகூடிய ஓட்டங்களாக 91 பந்து வீச்சுக்களில் 75 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் வேறு எந்தவொரு வீரரும் 50 ஓட்டங்களை பங்களாதேஷ் சார்பாக கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பங்களாதேஷ் அணி சார்பாக தனது முதலாவது ஒரு நாள் சர்வதேசப்போட்டியில் விளையாடிய ஷாபியுல் இஸ்லம் 5 ஓவர்கள் பந்து வீசி 39 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார்.
எனவே பதிலுக்கு 261 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கையணி 44 .5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கையணி சார்பாக TM டில்ஷான் 104 ஓட்டங்களையும், அணித் தலைவர் குமார் சங்கக்கார 74 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர். TM டில்ஷான் ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் பெற்ற 6 ஆவது சதம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் TM டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தத் தொடரின் முதலாவது போட்டி இவ்வாறு அமைய இரண்டாவது போட்டி மறு நாள் ஐந்தாம் திகதி இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் ஆரம்பித்தது. இந்தப் போட்டியிலும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் களத் தடுப்பையே தெரிவு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாட களம் புகுந்த இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பாக யுவராஜ்சிங் 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். வேறு எந்தவொரு வீரரும் இந்திய அணி சார்பாக 50 ஓட்டங்களைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் 280 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கையணி 48 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியீட்டியது. இலங்கையணி சார்பாக திலான் சமரவீர ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும், அணித் தலைவர் குமார் சங்கக்கார 60 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக் கொண்டார்கள். வேறு எந்தவொரு வீரர்களும் இலங்கையணி சார்பாக அரைச் சதம் கடக்கவில்லை. மேலும் இந்தப் போட்டியில் TM டில்ஷான் விளையாடவில்லை என்பதுடன் அவருக்கு பதிலாக லகிரு திரிமென்ன தனது ஒரு நாள் சர்வதேச அறிமுகப் போட்டியில் விளையாடியிருந்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உப்புல் தரங்கவுடன் களமிறங்கிய இவர் 24 பந்து வீச்சுக்களை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டப் பெறுதிகள் அடங்கலாக 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் திலான் சமரவீர தெரிவு செய்யப்பட்டார்.
உண்மையில் சச்சினைத் தவிர அத்தனை முழுமையான வீரர்களையும் கொண்ட இந்திய அணியுடன் TM டில்ஷான், சனத் ஜெயசூரிய, மஹேலஜெயவர்த்தன, முரளிதரன் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இலங்கையணி வெற்றி பெற்றமை முக்கியமான ஒரு விடயம் என்றே சொல்லவேண்டும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இந்திய மண்ணில் வைத்து இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த இலங்கை அணிக்கு இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்குமென்பதில் சந்தேகமில்லை.
இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி பங்களாதேஷ்-இந்திய அணிகளுக்கிடையில் கடந்த ஏழாம் திகதி இடம்பெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களம் புகுந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக இம்ருல் கயேஸ் 70 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 60 ஓட்டங்களையும், மஹ்முத்துல்லா ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும் அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.
அந்தவகையில் 297 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47 .3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணி சார்பாக அணித் தலைவர் மகேந்திரசிங் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் முறையே ஆட்டமிழக்காமல் 101 , 51 ஓட்டங்களையும், விராட் கொஹ்லி 91 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.விராட் கொஹ்லிக்கு இது நான்க்காவது அரைச்சதம் என்பதுடன் மகேந்திரசிங் டோனிக்கு இது 7 ஆவது சதமும் ஆகும். நெருக்கடியான நிலையில் இந்திய அணி போராடி வெற்றி பெற்ற இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி தெரிவு செய்யப்பட்டார்.
இங்கு பங்களாதேஷ் சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்த இம்ருல் கயேஸ் மற்றும் தமிம் இக்பால் இருவரும் அரைச் சத்தங்களைக் கடந்திருந்தார்கள். அந்தவகையில் பங்களாதேஷ் சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்த இரண்டு வீரர்களும் அரைச் சதம் கடந்தமை இதுவே முதற்தடவை என்பதுடன் பங்களாதேஷ் இந்தப்போட்டியில் பெற்றுக்கொண்ட 296 ஓட்டங்களே பங்களாதேஷ் அணியினால் டெஸ்ட் அந்தஸ்த்துள்ள ஒரு அணிக்கெதிராக ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக மூன்றாவது போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணி அடுத்த நாள் எட்டாம் திகதி அணியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் இலங்கை அணியுடன் நான்க்காவது போட்டியில் விளையாடியது. அந்த வகையில் இந்தப் போட்டியிலும் இலங்கையணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைக்க களம் புகுந்த பங்களாதேஷ் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக இந்தப் போட்டியில் எந்தவொரு வீரரும் அரைச் சதம் கடக்காத நிலையில் அணித் தலைவர் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றார்.
பதிலுக்கு 250 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கையணி 42 .5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அந்தவகையில் இந்தப் போட்டியில் இலங்கை அணியில் உப்புல் தரங்கவுடன் காயத்திலிருந்து மீண்டு போட்டிகளுக்கு திரும்பிய மஹேல ஜெயவர்த்தன ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இணைந்தார். இதில் உப்புல் தரங்க மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களையும், மஹேல 108 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். உப்புல் தரங்கவை பொறுத்தவரையில் இது அவரது எட்டாவது சதம் என்பதுடன், மஹேலவுக்கு இது 12 ஆவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் உப்புல் தரங்க தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததன. அந்தவகையில் புஷ்பகுமார, வெலகெதர, சுரங்க லக்மல் போன்றோர் அணியிலிருந்து நீக்கப்பட்டதுடன் மஹேல ஜெயவர்த்தன, மலிங்க பண்டார, நுவான் குலசேகர ஆகியோர் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டனர். மேலும் இதே அணியே இந்தியாவுடன் நாளைய தினம் நடைபெறவுள்ள போட்டியிலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறாக இலங்கை-இந்திய-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இலங்கையணி ஒவ்வொரு போட்டியிலும் தலா 4 புள்ளிகள் வீதம் பெற்று முன்னணியில் உள்ளதுடன் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 4புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வி என்கின்ற நிலையில் புள்ளிகள் எதனையும் பெறாத நிலையில் உள்ளது.
உண்மையில் இந்தத் தொடரில் பங்களாதேஷின் துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தபோதிலும் பந்து வீச்சாளர்கள் பெரியளவில் பிரகாசிக்கத் தவறியமையே அந்த அணியின் தோல்விக்கான பிரதான காரணமாக உள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் பங்களாதேஷ் பெரும்பாலும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது என்றே தெரிகிறது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி எவ்வாறு அமையும் பொறுத்திருந்து பார்க்கலாம்???
Saturday, January 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment