தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தனி நாட்டுக் கொள்கை ஒன்றும் எழுந்தமான சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அதாவது இந்த கொள்கை சர்வதேச நியதிகளுக்கு உட்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இங்கு தனித் தேசம் ஒன்று தோற்றம் பெறுவதற்கான சர்வதேச நியமங்கள் தொடர்பிலும், அதன் அடிப்படையில் தமிழ்ச் சமூகம் இலங்கையில் ஒரு தனித் தேசத்தை கட்டியமைக்கும் உரிமைகள் தொடர்பிலும், அதனை சிங்களத் தலைமைகள் கடந்த காலங்களில் எவ்வாறு கையாண்டிருந்தன என்பது பற்றியும் நோக்குவோம்.
ஒரு தனித் தேசத்துக்கான உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் ஐந்து அடிப்படை விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.
01 ) தொடர்ச்சியான தொன்மையான நிலப்பரப்பு.
02 ) அந்த நிலப்பரப்பிற்கேற்ற குடிப்பரம்பல்.
03 ) தொன்மையான மொழிப்பயன்பாடு.
04 ) தன்நிறைவுப் பொருளாதாரம். (உணவுத் தேவைக்கு)
05 ) நீண்ட வரலாறுடன் கூடிய கலை கலாச்சாரம்.
இவையே ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள மேற்படி ஐந்து அடிப்படை அம்சங்களுமாகும்.
தொடர்ச்சியான தொன்மையான நிலப்பரப்பு.
ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஐந்து அடிப்படை அம்சங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்தவகையில் ஒரு குறிப்பிட்ட துண்டுபடாத தொடர் நிலப்பரப்பில் நீண்ட வரலாறுடன் ஒரு குறித்த இனம் வாழ்ந்துவர வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
உண்மையில் இலங்கையைப் பொறுத்தவரையில் லாட நாட்டிலிருந்து வந்த விஜையனதும், எழுநூறு தோழர்களினதும் வருகையைத் தொடர்ந்தே ஆரிய இனம் (சிங்களவர்கள்) இங்கு வருகை தந்ததாக வரலாற்றின் வழியே அறியமுடிகின்றது. மேலும் முஸ்லீம் சமூகமும் வியாபார நோக்கில் இங்கு வருகை தந்ததாகவும் சொல்லப்படுகின்றது. (இதை அவர்கள் மறுக்கவுமில்லை.)
ஆனால் தமிழ் இனம் இலங்கைக்கு எப்போது வந்தார்கள் என்பது தொடர்பில் எந்தவொரு வரலாற்று குறிப்புக்களும் இல்லை என்பதுடன் இலங்கையின் பூர்வீகக் குடிகளான இயக்கர், நாகர் பரம்பரையில் நாகர் குலத்திலிருந்து வந்தவர்களே தமிழர்கள் என்றும் நம்பப்படுகின்றது.
எனவே இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற போது தமிழ் இனம் இந்த நாட்டுக்கு வந்தேறு குடிகளல்ல என்பதுடன் தமிழர்களே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் இந்தத் தமிழ் இனம் நாகர் காலம் முதலே இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பில் வாழ்ந்து வந்தமை வெள்ளிடை மலை.
இவ்வாறாக தமிழ் இனத்திற்கென ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பு தொன்றுதொட்டே உள்ளமை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் "தொடர்ச்சியான, தொன்மையான நிலப் பரப்பு" என்கின்ற அம்சத்துடன் பொருந்துகின்றமை தமிழ்ச் சமூகத்துக்கு பிரிந்து சென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்குவதற்கு சாதகமாக உள்ளது.
தமிழ் சமூகத்திடம் ஒரு தொன்மையான, தொடர் நிலப்பரப்பு உள்ளதை நன்கு அறிந்துதான் சிங்களத் தலைமைகள் வடக்குக் கிழக்கு பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டன. இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை சிங்களத் தலைமைகள் வடக்குக் கிழக்கு மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களில் அமைத்துள்ளமை இதனை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
அந்தவகையில் வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தையும் கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தையும் பிரிக்கும் நோக்கில் "வெலிஓயா" குடியேற்றமும், கிழக்கில் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பிரிக்கும் வகையில் "அல்லைக் கந்தளாய்" குடியேற்றமும், மட்டக்களைப்பையும், அம்பாறையையும் பிரிக்கும் நோக்கில் "கல்லோயா" குடியேற்றமும் சிங்களத் தலைமைகளால் இந்த நோக்கத்துக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களில் மிகவும் முக்கியமானவையாகும். தவிர மாவட்டங்களின் உட்பகுதியிலும் திட்டமிட்ட பல சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த நிலப்பரப்பிற்கேற்ற குடிப்பரம்பல்.
இலங்கையில் தமிழ்ச் சமூகத்தின் வீதத்தை சிங்கள இனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோதும் வட கிழக்கில் செறிவாக வாழ்ந்த, வாழ்ந்துவருகின்ற தமிழ்ச் சமூகத்தின் எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்றபோதும் நமது இனம் போதியளவு குடிப்பரம்பலுடனே உள்ளது.அதாவது மாகாணப் பிரிப்பில் ஏழு மாகாணங்களில் சிங்களவர்களும், இரண்டு மாகாணங்களில் தமிழர்களும் என்ற அடிப்படையில் இதனை நோக்கலாம்.
மேலும் இப்போது தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரர்களையும் ஒரு தனித் தேசத்துக்குள் உள்வாங்கும் போக்கு உள்ளமையால் இது மேலும் வலுவடைகின்றது. அதுமட்டுமன்றி அண்மையில் தனி தேசப் பிரகடனம் செய்த கொசோவா போன்ற நாடுகளின் குடிப்பரம்பல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போதும் நமது இனத்தின் குடிப்பரம்பலில், மக்கள் தொகையில் போதுமான தன்மை இருக்கின்றது.
இவ்வாறாக தமிழர்களுக்கு ஒரு தனித் தேசத்தை கட்டியமைக்க போதுமான மக்கள் தொகை, குடிப் பரம்பல் இருப்பதையும் சிங்களத் தலைமைகள் அன்று நன்கு அறிந்திருந்ததன் காரணமாகத்தான் வட கிழக்கின் அபிவிருத்திகளில் அக்கறை செலுத்தாமல் என்ன தேவை என்றாலும் அவற்றை கொழும்பு போன்ற இடங்களிற்கு வந்து நிறைவேற்ற வேண்டுமென்கின்ற நிலையை தோற்றுவித்து வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களை தலை நகர் கொழும்புக்கு இடம்பெயரச் செய்து வடகிழக்கில் தமிழர் செறிவை குறைக்க முயன்றன.
மேலும் சிங்கள தேசம் ஒன்றுபட்டு வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லீம்,தமிழ் சமூகத்துக்குள் கலவரங்களை ஏற்படுத்த முயன்றதும் இதன் அடிப்படையில்தான்.அத்துடன் திட்டமிட்ட இனக் கலவரங்களை ஏற்படுத்தி சிங்களத் தலைமைகள் தமிழர்களை வெளிநாடுகளுக்கு புலம்பெயரச் செய்ததும் இவ்வாறான ஒரு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே.
தொன்மையான மொழிப்பயன்பாடு.
நமது இனத்திற்கென மிகவும் தொன்மையான, இனிமையான எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் அமைந்த நம் தாய் மொழியாம் தமிழ் மொழி உள்ளமை "தொன்மையான மொழிப் பயன்பாடு" என்கின்ற அடிப்படை அம்சத்தில் நமக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு அரசியல் சாசனத்தை எழுதவோ, தொடர்பாடல்களுக்காகவோ ஒரு தனித் தேசத்திற்கென ஒரு சொந்த மொழி வேண்டும் என்கின்ற அடிப்படையில்தான் ஐக்கியநாடுகள் சாசனம் "தொன்மையான மொழிப் பயன்பாடு" என்கின்ற அம்சத்தை சேர்த்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் சமூகத்திடம் சொந்தமான ஒரு மொழி உள்ளமை எதிர்காலத்தில் அவர்கள் பிரிந்து செல்ல வலுச் சேர்க்கும் என்பதை நன்கு அறிந்ததன் விளைவாகத்தான் அன்றைய சிங்களத் தலைமைகள் தமிழ் மொழியை அரச கரும மொழிகளுக்குள் உள்ளடக்காமல் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்தன. இதன் ஊடாக தமிழர்கள் அரச சேவைகளையும் இதர சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்காக சிங்களம் கற்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி தமிழ் மொழியின் பயன்பாட்டை குறைக்கலாம், இலங்கையில் தமிழ் மொழியை அழித்துவிடலாம் என்று சிங்களத்தலைமைகள் சிந்தித்தன.
எது எப்படியோ நமது தந்தை செல்வநாயகம் போன்ற அரசியல் தலைமைகளால் இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.இலங்கையில் ஒரு தனித் தேசம் உருவாக்க நமக்கென ஒரு மொழி வேண்டுமென்கின்ற அடிப்படையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட தமது கட்டுப் பாட்டுப் பகுதியில் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியதாக நம்பலாம்.
தன்நிறைவுப் பொருளாதாரம். (உணவுத் தேவைக்கு)
உண்மையில் ஒரு புதிய தேசத்தின் உருவாக்கம் இன்னுமொரு நாட்டில் பொருளாதாரத்தை சுரண்டும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்கின்ற வகையில்தான் "தன்நிறைவுப் பொருளாதாரம்" என்னும் அம்சம் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே ஒரு தேசத்துக்குள் வாழ்ந்து பின்னர் பிரிந்து செல்வதனால் அந்த மக்களால் புதிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும்.
எது எப்படி இருப்பினும் இலங்கைத் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யும் அளவுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏராளமான வளங்களை தன்னகத்தே வைத்திருக்கின்றார்கள். உதாரணமாக உணவுத் தேவைக்காக வட கிழக்கில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வயல், தோட்ட நிலங்கள் உள்ளன. அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கான கடல் வளமும் காணப்படுகின்றது. எனவே இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் இன்னுமொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு போதியளவு வசதிகளை தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது.
உண்மையில் சிங்களத் தலைமைகள் இந்த விடயத்திலும் தங்கள் பார்வையை பலமாகச் செலுத்தத் தவறவில்லை. அதாவது எவ்வளவோ வயல்,தோட்ட நிலங்களை சிங்களத் தலைமைகள் சிங்கள விவசாயிகளிடம் கையளித்த வரலாறுகளும் உண்டு என்பதுடன் வட கிழக்கில் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதற்கு சிங்களத் தலைமைகளால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. இவை எல்லாம் நமது பொருளாதாரத்தை சிதைக்க சிங்கள தலைமைகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதித் திட்டங்களாகும்.
நீண்ட வரலாறுடன் கூடிய கலை கலாச்சாரம்.
தமிழ் சமூகத்துக்கென ஒரு கட்டமைக்கப்பட்ட கலாச்சாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் கலைத் துறை என்று வருகின்றபோது தமிழர்களுக்கு நிகர் யாருமே இல்லை என்கின்ற அளவுக்கு இயல்,இசை,நாடகம் என்கின்ற முத்தமிழும் முழங்கும் கலைத்துறை சான்றுபகர்கின்றது.
சிங்களத் தலைமைகளால் திட்டமிட்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது பல வரலாற்று ஆவணங்களை அழிக்கும் நோக்குடன் மட்டுமன்றி தமிழர்களின் பாரம்பரிய கலைத் துறைகள் தொடர்பான நூல்களை சிதைப்பதற்குமாகும். அத்துடன் ஆலயங்களில் சிங்களத் தலைமைகளால் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகளும் இதன் நோக்கிலமைந்தவைதான் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறாக ஒரு தனித் தேசத்தை உருவாக்குவதற்கான சர்வதேச நியதிகளுக்கு உட்பட்டுள்ள தமிழ் இனம் தந்தை செல்வநாயகம் அவர்களினால் உருவாக்கப்பட்ட தனித் தேசக் கோட்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றால் மேற்சொல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து முக்கியமான அடிப்படை அம்சங்களில் எப்போதும் வலுவான நிலையில் இருப்பது அவசியமாகும்.
ஒரு தனித் தேசத்துக்கான அங்கீகாரம் முற்றும்..
Saturday, January 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment