உள்நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகளாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்து ஆறாவது ஜனாதிபதியாக ஆளும் கட்சியின் பிரதான வேட்பாளராகக் களம் புகுந்த மகிந்தராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். உண்மையில் இந்தத் தேர்தலில் பெரும்பாலான ஆய்வுகள் கருத்துக் கணிப்புக்கள் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவே அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்வுகூறியிருந்தன. இன்னும் சில ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுகளில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றும் சில வேளைகளில் இருவருமே ஐம்பது வீத வாக்குக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறியிருந்தனர்.
ஆனால் அனைத்து கருத்துக் கணிப்புக்களையும் எதிர்வு கூறல்களையும் பொய்யாக்கி கிட்டத்தட்ட பத்தொன்பது இலட்ச வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் ஜனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். நிலைமை இவ்வாறு இருக்கும்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இந்த ஜனாதிபதித் தேர்தலில் பதின்நான்கு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன்னிலை வகித்ததாகவும் ஆனால் ஆளும் கட்சியின் அழுத்தத்தின் பிரகாரம் தேர்தல் திணைக்களம் தனது வெற்றியை அரசாங்கத்தின் வெற்றியாக அறிவித்ததாகவும் சொல்லியுள்ளார். இதுதொடர்பில் ஐக்கியதேசியக் கட்சி நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இணைய மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் இவ்வாறான குற்றச்ச்சாட்டுக்களை முன்வைக்கின்றபோதிலும் இவற்றை நிரூபிக்கக் கூடிய வகையில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை, மேலும் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட அமைப்புக்கள் இந்தத் தேர்தல் நீதியான முறையில் நடைபெற்றதாக சொல்லியுள்ளமையையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்தவரும், இன்னுமொரு வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர் எதிர் முனைகளில் போட்டியிட்டமை இதுவே முதற்தடவையாகும் என்பதுடன் சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் முன்னின்ற இருவரில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலை. இவ்வாறன ஒரு சூழலில் இலங்கையில் உள்ள இருபத்தியிரண்டு தேர்தல் மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாகவுள்ள ஆறு மாவட்டங்களில் மாத்திரமே எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். ஏனைய பதினாறு மாவட்டங்களிலும் சிங்கள மக்கள் தங்கள் தலைவராக மீண்டும் மகிந்தராஜபக்ஷவையே தெரிவு செய்துள்ளார்கள்.
உண்மையில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குறிப்பாக வடகிழக்கில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றமைக்கு இரண்டு விடயங்களை காரணங்களாக சொல்ல முடியும். ஒன்று தமிழ் சமூகம் தற்போதைய ஆளும் கட்சி ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் திருப்தி கொள்ளாமல் மாற்றம் ஒன்றை விரும்பியிருக்கலாம், அல்லது தமது தேசியக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு கட்டுப்பட்டு சரத் பொன்சேகாவிற்கு மக்கள் வாக்களித்திருக்கலாம்.
எது எப்படியோ கடந்த பாராளுமன்றத்தில் தமது தேசியக் கட்சியான தமித் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்த தமிழ் சமூகம் நிச்சயமாக இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வழிநடத்தப்பட்டதாகவே தெரிகின்றது. இங்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியில் இருக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசுக்கு அதாவது ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தபோதிலும் கிழக்கு மாகான மக்கள் பொன்சேகாவிற்கு வாக்களித்துள்ளார்கள் என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள செல்வாக்கை மீண்டுமொரு முறை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
மேலும் அண்மைக்காலமாக யாழ் மக்களின் அபிவிருத்தி, வட மாகாண மக்களின் நலன் என்று சொல்லி அரசியலில் பயணித்த அரசாங்க அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு இருந்தும் தமிழ் சமூகம் தமித் தேசியக் கூட்டமைப்பின் தெரிவான சரத் பொன்சேகாவை ஆதரித்திருப்பதன் மூலம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலின் நீதி, நேர்மை தொடர்பில் வலுவான சந்தேகம் எழுகின்றது.
இங்கு ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட கிழக்கில் அமோக வெற்றியீட்டி 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போது தேர்தல் மோசடி, புலிகளின் வன்முறை, நீதியற்ற தேர்தல் போன்ற காரணங்களைச் சொன்ன வடகிழக்கை சேர்ந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ் கட்சிகளினால் இந்தத் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததாக கூறமுடியாத நிலை. அதாவது ஜனாதபதியாக மகிந்த வெற்றி பெற்றுள்ளமையால் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததாகக் கூற முடியாத நிலைக்கு மேற்படி கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.
இப்படியான ஒரு சூழலில்தான் அரசாங்க அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து பின்னர் இன்றைய தினம் காலையில் அந்த முடிவை மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக சொல்லியுள்ளார்.
இவ்வாறான விடயங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற போது இலங்கையில் அடுத்துவருகின்ற பொதுத் தேர்தலில் இந்தத் தமிழ்க் கட்சிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் ஓரளவுக்கு ஊகிக்க முடிகின்றது..
உண்மையில் தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் இப்போது அவர்களிடம் போதுமான அரசியல் அடிப்படைத் தெளிவு இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். தமிழர்கள் வன்னி இறுதி யுத்தத்தில் முன்னின்ற சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதா??, தமிழ் வேட்பாளர் ஒருவருக்கே வாக்களிப்போம் என்று சிந்தித்து சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து வாக்குகளை சிதறடிக்காமை இதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் தமிழ் சமூகம் இனவாத சமூகம் அல்ல என்பதற்கும் இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
ஆனால் சிங்கள சமூகம் தமது இனவாத கட்டமைப்புக்குள் இருந்து இன்னமும் வெளிவராதவர்களாகவே உள்ளார்கள். இந்தத் தேர்தலில் இடது சாரிக் கொள்கைகொண்ட விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கு சிங்கள மக்களிடம் கிடைத்திருக்கும் மிகக் குறைந்தளவு வாக்குகள் இதனை எடுத்துகாட்டுவதாக உள்ளன. அத்துடன் சரத் பொன்சேகா இந்தத் தேர்தலில் சிங்கள மக்கள் அதிகம் வாழும் தேர்தல் மாவட்டங்களில் தோல்வியடையக் காரணமாக இருந்தமையும் அவர் இனவாதம் பேசியது சிங்கள மக்களுக்கு திருப்தியளிக்காமைதான்.
அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சரத்பொன்சேகாவுக்கு கிடைத்தததும் சிங்கள சமூகத்திடம் அவர் தோல்வியடையக் காராணமாக இருந்ததையும் மறுக்கமுடியாது. அதாவது சிங்களவர்களைப் பொறுத்தவரையில் அவர்களிடத்தில் சரத் பொன்சேகாவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உடன்பாடுகள் தொடர்பில் பிழையான கற்பிதமளிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றியும் சிங்கள அரசியல் கட்சிகள் தவறான ஒரு கண்ணோட்டத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன.
எனவே இவ்வாறான ஒரு பின்னணியில் சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவை ஏற்க மறுத்துள்ளார்கள். சிங்கள மக்களிடத்தில் இனவாதம் எவ்வளவுக்கு வளர்க்கப்பட்டுள்ளது என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறான நிலைமை காலங் காலமாக தொடர்கின்ற ஒன்றுதான். அதாவது தமிழர் தரப்புடன் நெருங்கி வருகின்ற கட்சிகளை அதற்கு போட்டியாக உள்ள கட்சியின் பிரசாரங்களால் சிங்கள மக்கள் நிராகரிப்பது காலங்காலமாக தொடர்வதுதான். கடந்த ஐக்கிய தேசியின் ஆட்சி 2004 ஆம் ஆண்டில் பறிபோனதும் இதனால்தான்.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ஒரு போதுமே அரசியல் ரீதியில் ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை எந்தவொரு ஆட்சிக்கு வருகின்ற கட்சியாலும் முன்வைத்து நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மையாகும்.இந்த நிலையில்தான் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மகிந்தராஜபக்ஷ அடுத்த பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறும் தமிழ் அரசியல் கட்சியுடன் இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதாக சொல்லியுள்ளார். இப்போது பாராளுமன்றத்தில் அதிக ஆசனத்துடன் இருக்கும் தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மேலும் தமித் தேசியக் கூட்டமைப்புக்கு வடகிழக்கில் உள்ள செல்வாக்கை ஜனாதிபதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நன்கு அறிந்திருப்பார்.
அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளாரா??? அல்லது இது அடுத்த தேர்தலில் தன்னுடன் உள்ள தமிழ்க் கட்சிகளை ஒன்று சேர்த்து நீதியற்ற முறையில் வெற்றி பெறச் செய்து அரைகுறைத் தீர்வுத் திட்டமொன்றை தமிழர்கள் மீது திணிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட கருத்தா??? தமிழ் சமூகம் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆலோசனை வழங்கிய புத்தி ஜீவிகள் தமிழ் சமூகத்தை இன்னும் தெளிவுபடுத்த வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment