இலங்கையில் புதிய ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புடனும், மலையாக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மரணத்துடனும் பிறந்திருக்கிறது. ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு கூட இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு தமிழ் அரசியல்வாதியான காலஞ் சென்ற மகேஸ்வரனின் மரணத்துடன்தான் ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டிலும் ஒரு அரசியல்வாதியின் மரணத்துடன் மலர்ந்திருக்கும் புத்தாண்டு என்ன என்ன நன்மைகளை, தீமைகளை கொண்டுவரும் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் மீது மக்களின் கவனம் அதிகமாக குவிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல சர்வதேச நாடுகளினது பார்வையும் கூட இந்தத் தேர்தலின் மீதுதான் உள்ளது.
இந்த நிலையில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்கின்ற எந்தவொரு உறுதியான தகவலையும் வெளியிட முடியாத நிலையில் அரசியல் ஆய்வாளர்கள் உள்ளார்கள். அதுமட்டுமல்லாது இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அறிந்துகொள்ள புலம்பெயர் வாழ் தமிழர்களும், இலங்கை வாழ் தமிழர்களும் ஆவலாக உள்ளார்கள்.
உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரையில் அவர்கள் எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அது அவர்களுக்கு தற்போது உள்ள பலத்தில் அதாவது மக்கள் செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்ற நிலை உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் செல்வாக்கை தக்க வைக்க வேண்டும் என்பதுடன் தமது கட்சி உறுப்பினர்களையும் பிரிந்து செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்கின்ற நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் உள்ளார்கள்..
இந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையிலும், அதில் அங்கம் வகிக்கும் கட்சியினர்களுக்கு மத்தியிலும் சின்னச்ச் சின்ன பிரைச்சினைகள், கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் அவை பூதாகரமாகியிருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்படாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிட முடிவு செய்தமை, அவருக்கு இன்னுமொரு சக பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீகாந்தா ஆதரவு வழங்கிவருகின்றமை என்பவற்றை இதற்கான உதாரணங்களாக சொல்ல முடியும். மேலும் அண்மையில் நடைபெற்ற தமித் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழ் காங்கிரசின் கூட்டத்தில் அக்கட்சி தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.
உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஜானதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை கட்சி, கொள்கை என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் வரவேற்கலாம். இதே போன்றதொரு கருத்தைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தனும் அண்மையில் வெளியிட்டிருந்தார். மேலும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு பிரதான வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஜானாதிபதித் தேர்தலில் எந்தவொரு பிரதான வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளை பெற்றுக் கொள்ளாமல் தடுப்பதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆகமொத்தம் இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு என்னவென்று அறிவிக்கும்போது கிட்டத் தட்ட அதன் பலம் பாதியாக குறைந்துபோய்விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும் அண்மையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொடர்பில் வெளியிட்ட கருத்து புலம் பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். ஆகவே எல்லா நிலைமைகளையும் கவனத்தில்க் கொண்டு கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் என்ன முடிவை எடுப்பார்?? ஏற்கனவே சொன்னது போல எதிர்வரும் நான்காம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு வெளிவருமா?? பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் இவ்வாறு இருக்க ஜானாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் யுத்த வெற்றியின் பிரதான பங்கு தமக்கே என்று சொல்வதிலும், ஒருவரின் முகத்தில் இன்னொருவர் கரி பூசுவதான கருத்துக்களை வெளியிடுவதுமாக தேர்தல் பிரசாரங்களிலும், ஊடக அறிக்கைகளிலும் வலம் வந்துகொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் மக்களுக்கான சலுகைகள் தொடர்பாகவும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். விரைவில் தேர்தல் விஞ்ஞாபனமும் முன்வைக்கப்படவுள்ளது.
இன்றைய நிலையில் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை கருத்தில்க்கொண்டு பொருட்களின் விலைகளைக் குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கையின் அதியுயர் துறையான நீதித் துறையால் அதாவது நீதிமன்றத்தால் பெற்றோலின் விலை குறைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட போது அதனை கவனத்திலெடுக்காத அரசாங்கம் அண்மையில் பெற்றோலின் விலையை 15 ரூபாவினால் குறைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லாப் எரிவாயுவும் கணிசமான அளவு விலைக் குறைப்பு செய்யப்பட்டிருக்கின்றது.மேலும் இடம்பெயர் மக்களினதும், யாழ்ப்பாண மக்களினதும், கிழக்கு மாகாண மக்களினதும் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் மீள்குடியேற்றம், கட்டுபாடற்ற போக்குவரத்து, அனுமதியின்றிய மீன்பிடித் தொழில், புதிய போக்குவரத்து ரயில்பஸ் சேவைகள் என்பனவும் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இடம்பெயர் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை என்று தேர்தல் செயலகம் அறிவித்திருக்கின்றது. ஏற்கனவே பல்வேறு அமைப்புக்கள் இதனை சொன்னபோது அதனை மறுத்து தேர்தலுக்கான பதிவுகள் இடம்பெயர் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சொன்ன தேர்தல் செயலகம், இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட இடம்பெயர் வாக்காளர்களில் இதுவரை
23000 வரையிலான வாக்காளர்களே தங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், இடம்பெயர் வாக்காளர்கள் தேதர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லியுள்ளது.
இடம்பெயர் மக்கள் இறுதிவரை இதே நிலைப்பாட்டிலையே இருப்பார்களானால் அரசாங்கம் மிக வேகமாக இடம் பெயர் மக்களுக்கு செய்து வரும் சலுகைகளெல்லாம் வீணாகிவிடும். அதாவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தகர்ந்துபோயவிடும். மேலும் இடம்பெயர் மக்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆர்வங்காட்டாமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு வெளிவராமையும் ஒரு காரணமாக இருக்கலாம். உண்மையில் இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலோ விரைவாக வராவிட்டால் இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறாக அரசாங்கம் சார்பிலான ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் இருக்க எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா யுத்த கால உண்மைகளை ஊடகங்களுக்கு சொல்வதாகவும், அரசாங்கம் செய்கின்ற பிழைகளை சுட்டிக்காட்டுவதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவும் தனது அரசியல் தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் ஒரு காலத்தில் தமிழர்கள் இந்த நாட்டின் வந்தேறுகுடிகள் என்று சொன்ன ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது இடம்பெயர் மக்கள் பாதுகாப்பற்ற வகையில் மீள்குடி ஏற்றப்படுவதாகவும், அவர்களுக்கு போதியளவு வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் கண்ணீர் வடிக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் அண்மைக்காலமாக அவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கின்றார். அதாவது ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் கருத்துக்களாலும், அவர் தொடர்பில் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களாலும் பல சர்ச்சைகள், குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அண்மையில் முன்னாள் கடற்படைத் தளபதி தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகம் ஒன்றில் வெளியிட்ட கருத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறி முன்னாள் கடற்படைத் தளபதி ஜெனரலிடம் நஷ்ட ஈடு கோரியிருப்பதை குறிப்பிட்டு சொல்லமுடியும். இவ்வாறாக ஆரம்பமே சர்ச்சைகள், குழப்பங்கள் என தனது அரசியல் வாழ்வில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கியதேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என இரண்டு பெரும்பான்மை இனக் கட்சிகள் ஆதரவாக உள்ளமை பலம் என்றே சொல்ல வேண்டும்.
இங்கு இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆசிய நாடுகளில்ன் குறிப்பாக இந்தியாவின் செல்லப் பிள்ளையாகவும், ஜெனரல் சரத் பொன்சேகா மேற்குலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் வலம் வருகிறார்கள் என்றே தெரிகிறது. இந்த இடத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவினால் மூளைச் சலவை செய்யப்பட்டே ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதையும் நினைவுபடுத்தலாம்.
நிலைமை இவ்வாறு இருக்க ஜெனரல் சரத் பொன்சேகா உண்மையில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்தால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை இந்தியாவின் கைகளிலிருந்து அமெரிக்காவின் கைகளுக்கு இடம்மாற வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையிலான புரிந்துணர்வு, ராஜதந்திர உறவு என்பவற்றின் அடிப்படையில் இந்தக் கைமாற்றத்தை குறுகிய காலத்திற்குள் எதிர்பார்க்க முடியாது.
இந்த இடத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் சின்ன சின்ன விரிசல்கள் கைமாற்றத்துக்கு வித்திடலாம். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் பார்வையும் ஆசிய நாடுகள் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு அடிப்படையாக அமையலாம். மேலும் இந்தியாவில் இப்போதுள்ள தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பிலான குழப்பங்களும், தீவிரவாத அச்சுறுத்தல்களும் இந்தியா இலங்கையின் மீது வைத்திருக்கும் ஆதிக்கங்களை குறைத்து உள்நாட்டுக்குள் கவனத்தை திருப்ப வாய்ப்பாக அமையக்கூடும். இவ்வாறு இந்தியாவின் ஆதிக்கம் குறையும்போது அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை புதிய பாதையில் பாணிப்பதற்குரிய சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லலாம்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முன்னெடுப்புக்களும் அதன் விளைவுகளும் இவ்வாறு இருக்க மலையாக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மரணத்தால் மலையாக மக்கள் முன்னணியின் எதிர்காலம் தொடர்பான கேள்விகள் இப்போதே எழுந்திருக்கின்றன.அதாவது மலையாக மக்கள் முன்னணியின் அடுத்த தலைவராக பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மறைந்த மலையாக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் மனைவி சந்திராதேவி சந்திரசேகரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.ஆனாலும் அவரின் தலைமையில் அனைவரும் ஒன்றுபட்டு மலையாக மக்கள் முன்னணி கட்டுக்கோப்புடன் இருக்குமா?? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் சந்திரசேகரனின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு புதிதாக யாரை நியமிப்பது என்பது தொடர்பிலும் மலையாக மக்கள் முன்னணி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது.
மலையாக மக்கள் முன்னணியின் நிலை இவ்வாறு இருக்க மலையகத்தின் மற்றுமொரு பிரதான அரசியல்க் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பலவீனமடைந்திருக்கிறது.. அதாவது அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களான கட்சியின் தேசிய அமைப்பாளர் R .ஜோகராஜனும், பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான M .சச்சிதானந்தனும் கட்சியிலிருந்து விலகிச் சென்று ஐக்கியதேசியக் கட்சியில் இணைந்துள்ளார்கள். இதனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இந்தக் கட்சித் தாவலால் அரசாங்கமும் பாதிப்படந்திருக்கின்றது. மேலும் எதிரணிக்கு இது மேலும் பலம் சேர்க்கும் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவு உள்ள நிலையில் மலையாக வாக்காளர்களை கவருவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பிளவு எதிரணிக்கு வலுச் சேர்த்திருக்கின்றது.
உண்மையில் மலையாக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் மரணமும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பிளவும் அந்தந்தக் கட்சிகளின் பலவீனம் என்பதுமட்டுமல்லாமல் அவை மலையாக மக்களுக்கும் நிறைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.. ஏற்கனவே மலையகத்தில் புதிய புதிய கட்சிகளின் தோற்றங்களால் வாக்குகள் சிதறடிக்கப்பட்ட நிலையில் இனிவருங் காலங்களில் இன்னும் இன்னும் மலையாக சமூகம் அரசியல் ரீதியில் பலவீனமடைய மேற்படி சம்பவங்கள் இரண்டும் வழிவகுத்திருக்கின்றன.
இவ்வாறாக ஒரு புதிய தசாப்தத்துக்குள், புதிய ஆண்டு ஒன்றில் இலங்கையின் அரசியல் நகரப்போகின்றது. பெரும்பாலும் இலங்கையின் அரசியல் போக்கில் நிகழப்போகும் மாற்றங்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலே தீர்மானிக்கப்போகின்றது. ஆனாலும் தமிழ் பேசும் சமூகத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு தேர்தலும் எந்தவொரு பெரியளவு மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை. தமிழ் பேசும் சமூகம் எத்தனையோ தேர்தல் வாக்குறுதிகளைக் கண்டவர்கள். எத்தனையோ ஒப்பந்தக்களைக் கண்டவர்கள்.
ஒரு விடயத்தை சிந்தித்தால் தேர்தலில் வாக்களிக்காமலே இருதுவிடலாம் போல தோன்றுகிறது. அதாவது வட கிழக்கில் ஒருகுறிப்பிட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்து அவர் ஜனாதிபதியாக தெரிவாகாமல் மற்றவர் தெரிவு செய்யப்பட்டால் நமது நிலை??? பிச்சை வேண்டாம் நாயைப் பிடி!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment