தை பிறந்தால் வழி பிறக்குமென்பது காலம் காலமாக தமிழர்களின் மத்தியில் இருந்து வரும் ஒரு நம்பிக்கையாகும். அந்த வகையில் பல இழப்புக்களையும், துன்பங்களையும் சுமந்துகொண்டிருக்கும் தமிழர்கள் இந்தத் தைப்பொங்கலையும் அன்புடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்த நிலையில் தைப்பொங்கலும் வந்துவிட்டது. ஆனபோதிலும் எமது எத்தனையோ உறவுகள் சொந்த வீட்டில் சொந்த பூமியில் தைப்பொங்கலை கொண்டாட முடியாத அளவுக்கு நிலைமை அமைந்துள்ளமை துரதிஸ்டவசமானது.
இவ்வாறான சூழ்நிலையில் தைப்பொங்கலை நம்மவர்கள் கேளிக்கைகளை குறைத்து கொஞ்சம் அடக்கமாகத்தான் கொண்டாடியிருக்கின்றார்கள். குறிப்பாக புலம்பெயர் வாழ் சொந்தங்கள் தாயகத்தின் நிலைமைகளை கருத்தில்க்கொண்டு இந்தப் பொங்கலை வரவேற்றிருக்கிறார்கள். உண்மையில் நன்றி மறப்பது நன்றன்று என்பதுக்கு இணங்க சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக உழவர்களும், சூரியனுக்கும், உழவர்களுக்கும் நன்றி செலுத்துவதற்காக ஏனையவர்களும் கொண்டாடும் பண்டிகைதான் தைப்பொங்கல் என்று அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் ஒரு புதிய கண்டுபிடிப்பாக சில வருடங்களுக்கு முன்னர் தைப்பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. பெரும்பாலானவர்களைப் போலவே எனக்கும் இதில் உடன்பாடு கிடையாது. அதாவது தமிழ் மரபின்படி தை மாதம்தான் வருடத்தின் முதலாவது மாதம் என்று சொல்வதற்கில்லை. ஆங்கில நாட்காட்டிகளின் பிரகாரம்தான் தைமாதத்தை வருடத்தின் முதலாவது மாதமாக நாம் கொள்கின்றோமே தவிர தமிழ் மரபின்படி சித்திரை மாதமே வருடத்தின் முதலாவது மாதம் என்பது காலங்காலமாக நமது மரபின் வழி தொடர்கின்ற ஒரு விடயம்.
எனவே தமிழ் நாட்காட்டியின் பிரகாரம் தைப்பொங்கல் தைமாதம் முதலாம் திகதி வருகின்றது என்பதற்காக அதனை தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வது பொருத்தமற்றது. மேலும் தைப்பொங்கலை தமிழர்கள் என்ன நோக்கத்துக்காக கடைப்பிடிக்கின்றார்களோ அதனை இது சிதைக்கும் என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும். மேலும் சித்திரை வருடப்பிறப்பு (தமிழ்ப் புத்தாண்டு.) சூரியன் முதலாவது ராசியான மேட ராசியிலிருந்து இறுதி ராசியான மீன ராசியில் சஞ்சரிக்கும் நாளில் அனுஷ்டிக் கப்படுகின்றது.
உண்மையில் நமக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதற்காக நம் முன்னோர்கள் வகுத்த சித்திரைப்புத்தாண்டை மாற்றி தைப்பொங்கலை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிப்பது பொருத்தமற்றது. ஒரு விடயம் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதனை இறுதி வரை அதே நோக்கத்துக்காக பயன்படுத்துவது முக்கியமானது.
இங்கு தைப்பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகை என்கின்ற நிலை மாறி அது இந்துக்களின் பண்டிகை என்கின்ற நிலை தற்போது காணப்படுகின்றமை வருத்தத்துக்குரியது. நமது முன்னோர்கள் எல்லோரும் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருந்த போது எல்லா தமிழர்களும் தைப்பொங்கலை கொண்டாடியதனால் அது தமிழர்களின் பண்டிகையாக இருந்தது. எனினும் இப்போது தமிழர்கள் மத்தியில் பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் உள்ளமையினால் தைப்பொங்கல் இந்துக்களுக்கான பண்டிகை என்கின்ற அடையாளத்துடன் உள்ளது.
எது எப்படி இருப்பினும் தைப்பொங்கல் வேறு தமிழ்ப் புத்தாண்டு வேறு என்பது எனது கருத்து. மேலும் எனது வலைத் தளத்துக்கு வந்து செல்லும் வாசகர்களுக்கும், கருத்துரைகளால் உற்சாகம் தரும் உறவுகளுக்கும், திரட்டிகளில் எனது பதிவுகளுக்கு வாக்களிக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிமையான தைப்பொங்கல் வாழ்த்துக்கள். இந்த தைப்பொங்கல் நாளில் உங்கள் அன்பையும், ஆதரவையும் இன்னும் இன்னும் எதிர்பார்ப்பதுடன் பதிவுகளும், பார்வைகளும் தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இந்து என்ற சொல்லே எந்த புரணத்திலோ வேதத்திலோ இல்லை .பண்டைய காலத்தில் சைவம் ,வைணவன்,சமணம்,பௌத்தம் என்று 4 சமயங்களை கடைபிடித்தனர்.இதில் வைணவ சமயத்தின் புராணத்தை அடிப்படையாக கொண்ட சித்திரை புத்தாண்டை பண்டைய தமிழர் அனைவரும் எப்படி கொண்டாடி இருப்பர்.வைணவ புத்தாண்டை எப்படி தமிழ் புத்தாண்டு என்று கூற இயலும்
வாழ்த்துக்கள்.. செந்தூரன்
பொங்கலை தமிழ் புத்தாண்டாக அரசு அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.தமிழ் நாட்டு
கருணா செய்த ஒரே நல்ல செயல் இது தான்.
சித்திரை 1 ,வைணவ புத்தாண்டு.
ஒரு நாள் நாரதன் தன்க்கு மனைவி இல்லை என்று பெருமாளிடம் கூறினானாம்.அதற்கு பெருமாள் பெண் உருவம் பூண்டு நாரதனுடன் 600 ஆண்டுகள் புணர்ந்து,60 குட்டிகளை போட்டானாம்.அந்த அறுபது குட்டிகளுக்கும் 60 வடமொழி பெயர்கள்
அந்த வடமொழி பெயர்களை ஆண்டுகளுக்கு வைத்து அவற்றை தமிழ் ஆண்டுகள் என்கிறனர்.அந்த ஆண்டுகளை வரலாற்றை பதிவு செய்ய பயன்படுத்த முடியாது.ஏன் என்றால் 60 ஆண்டுகள் கழித்து முன்பு வந்த ஆண்டே மீண்டும் வரும்.ஆகையால் எந்தனையாவது பார்த்திப ஆண்டிலோ ,விரோதி ஆண்டிலோ ஒரு நிகழ் நிகழ்ந்தது என்று பழைய ஆவணங்களை பார்த்து கூற இயலாது. மேலும் பண்டைய தமிழர்கள் சைவம்,வைணவம் ,சமணம்,பௌத்தம் என்று பல சமயங்களை பின்பற்றினர்.ஆகையால் அந்த காலத்தில் மற்ற சமயத்தினர் எப்படி இந்த வைணவ புத்தாண்டை கொண்டாடி இருப்பர்? ஆகியால் திருவள்ளுவரின் பிறப்பை அடிப்படையாக கொண்ட தொடர் ஆண்டுகளை உடைய ஒரு நாள் காட்டியாக தமிழ் நாட்டு அரசு ஏற்று இருக்கிறது.பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்து இருக்கிறது.இப்போது நாம் தமிழ் ஆண்டு ௨0௪௧ [2041] இல் இருக்கிறோம்
பொங்கல் வாழ்த்துகள் அண்ணா
///கொற்றவன் KOTRAVAN said...///
உங்கள் வருகையும், கருத்துக்களும் நன்று...
ஆனால் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளை எவ்வாறு தமிப்புத்தாண்டு என்று சொல்வது... இதனை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிப்பதால் தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதனை பின்பற்றுவார்கள் என்றால் பரவாயில்லை...
எந்தவொரு காரணமும் இல்லாமல் ஏன் தைப்பொங்கலை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்க வேண்டும்... மரபுகளை தவிர்த்து புதிய விடயங்களை உருவாக்க முதலமைச்சர் கருணாநிதி என்ன தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் தோற்றுவித்த ஒருவரா??? இப்படி எனக்குள் பல கேள்விகள்...
ஆனால் அதற்காக எனது கருத்தைத்தான் எல்லோரும் கொண்டிருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை... உங்களிடம் இது தொடர்பில் ஏராளமான ஆரோக்கியமான கருத்துக்கள் உள்ளமையை வரவேற்கிறேன்...
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்... அடிக்கடி வாருங்கள்...
////அண்ணாமலையான் said...///
//வாழ்த்துக்கள்.. செந்தூரன்///
அண்ணா உங்கள் வருகை சந்தோசம் தருகின்றது... ரொம்ப நன்றி அண்ணா.. உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்...
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் இதயத்தால் இனிய நன்றிகள் அண்ணா ... அடிக்கடி வாருங்கள்...
///Subankan said...///
//பொங்கல் வாழ்த்துகள் அண்ணா///
எனக்கு இப்ப ஒரு சந்தேகம் நான் உங்களுக்கு தம்பியா?? அண்ணாவா?? இவ்வளவு நாளும் தம்பிஎன்றுதான் நினைத்தேன், ஆனால் நீங்களே அண்ணா என்று சொல்லீட்டீங்க இனியென்ன...
ரொம்ப நன்றி சுபாங்கன்...
உங்கள் வருகை சந்தோஷத்தையும்,உற்சாகத்தையும் தருகின்றது.. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் இதயத்தால் இனிய நன்றிகள் அண்ணா ... அடிக்கடி வாருங்கள்...
Post a Comment