Sunday, January 3, 2010
புதிய எழுத்துக்கள் வேண்டும்!!!
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்று சொல்வது கொஞ்சம் மிகையானது என்றாலும் தமிழர்களும், நமது தமிழ் மொழியும் நீண்ட வரலாறுகளைக் கொண்டவர்களாக இருக்கின்றோம் என்பதை யாருமே மறுத்துவிட முடியாது. அந்தவகையில் நமது மொழி முன்பிருந்த வடிவில்தான் இப்பொழுதும் உள்ளதா?? நமது மொழியின் எழுத்துக்கள் ஆரம்பத்திலிருந்தது போலவா இப்பொழுதும் உள்ளன?? என்று கேட்டால் எல்லோரும் இல்லை என்றே சொல்வோம். உண்மையும் அதுதான்.
அதாவது இயல்பான காலமாற்றங்களுக்கும், உலக ஒழுங்குகளுக்கும் அமைவாக நமது மொழியிலும் நாமது அறிஞர்கள், பண்டிதர்கள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள், இன்னும் உருவாக்கிவருகிறார்கள். அந்தவகையில் பெரும்பாலும் கலைச் சொல் உருவாக்கங்கள் நமது மொழியில் அதிகளவில் நிகழ்கின்றன.
ஆனாலும் னா,ணா,றா போன்ற எழுத்துக்களின் மாற்றங்களுக்கு பிறகு அண்மைக்காலத்தில் நமது தாய்மொழி எழுத்துக்களில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவில்லை. மேலும் தமிழ் மொழியின் எழுத்துக்களின் எண்ணிக்கை 247 என்கின்ற அளவிலையே தொடர்ந்தும் பேணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் நாம் வடமொழியிலிருந்து கடன் வாங்கிவைத்திருக்கும் கிட்டத்தட்ட ஐந்து எழுத்துக்களை இன்னமும் திருப்பிக் கொடுக்காமல் வைத்திருக்கின்றோம்.
சொல்லப்போனால் நமது இளஞ் சந்ததி அவற்றையும் நமது தமிழ் எழுத்துக்கள் என்று கருதுகின்ற அளவுக்கு இப்போது குறிப்பிட்ட வடமொழி எழுத்துக்களின் ஆதிக்கம் நமது கட்டுரைகள், கவிதைகள், படைப்புக்களில் அதிகளவில் உள்ளன. அதாவது நாம் அவற்றை நமது அன்றாட வாழ்வில் அதிகளவில் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இந்த நிலையில் தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் நோக்கில் சில வட மொழி எழுத்துக்களை தவிர்த்து அவற்றுக்கு பதிலாக தமிழ் எழுத்துக்கள் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. (உதாரணம்-ஜனாதிபதி=சனாதிபதி.) இருப்பினும் குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரையோ அல்லது இடத்தையோ குறிப்பிடும்போது இவை சாத்தியமற்றவையாகிவிடுகின்றன. அந்தவகையில் முதலில் தமிழ்ச் சமூகத்தினராகிய நாம் முதலில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அதாவது நமது தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி வடமொழி எழுத்துக்களை நமது மொழிப் பயன்பாட்டிலிருந்து நீக்கி அவற்றுக்கு பதிலான புதிய தனித்துவமான தமிழ் எழுத்துக்களை உருவாக்க முன்வரவேண்டும்.
வடமொழி எழுத்துக்களுக்கான மாற்றீட்டு தனித்துவ தமிழ் எழுத்துக்களின் உருவாக்கத்துக்கான தேவை இவ்வாறு இருக்க, தமிழ் மொழியின் எழுத்துக்களில் இன்னும் புதிய மூன்று எழுத்துக்களுக்கான தேவை உள்ளது. அதாவது நாம் இன்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல் பரந்துவிரிந்த உலகத்துக்குள், ஆங்கில மொழியின் அதிக ஆதிக்கப் பிடிக்குள் பிரவேசித்திருப்பதால் இந்த மூன்று புதிய எழுத்துக்களுக்கான தேவையும் தவிர்க்கமுடியாததாக உள்ளது.
அந்தவகையில் இன்று நம்மில் அதாவது நமது ஊடகத் துறைக்குள் BANKIMOON என்பதை பான்கிமூன் என்று உச்சரிக்கும் எத்தனையோ மூத்த, இளைய அறிவிப்பாளர்கள், தொகுப்பாளர்களை காணமுடிகின்றது. அதுமட்டுமல்லாமல் இடங்களின் பெயர்களை சொல்லும்போதும் இவ்வாறான பிரைச்சினைகளை அறிவிப்பாளர்களும், தொகுப்பாளர்களும் எதிர்கொள்வது என்னவோ உண்மைதான். உதாரணங்களாக BANDARAWALA என்பதை பண்டாரவளை என்றும், BERUWALA என்பதை பேருவளை என்றும், பண்டாரிக்குளம் என்பதை BANDAARIKKULAM என்றும், பண்டத்தரிப்பு என்பதை BANDATHTHARIPPU என்றும் உச்சரிக்கும் பலர் உள்ளனர்.
எனவே இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில்க் கொண்டு பெரும்பாலான ஊடகங்களில் இடங்கள், பெயர்கள் என்பன ஆங்கிலத்திலையே எழுதப்பட்டு வாசிக்கப்படுவதுண்டு.. ஆனாலும் அச்சுத் தமிழ் ஊடகங்களில் இவை சாத்தியமற்றவை. ஆகவே அச்சு ஊடகங்களை வாசிக்கும் தமிழர்கள் பிழையான உச்சரிப்பை பின்தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக தொடர்வதை அவதானிக்க முடிகின்றது.எனவே நாம் B உச்சரிப்புக்குரிய ஒரு புதிய தூய தனித்துவமான தமிழ் எழுத்தை உருவாக்கவேண்டியவர்களாக உள்ளோம்.
நமது முதலாவது புதிய தமிழ் எழுத்துக்கான தேவை இவ்வாறு இருக்க, அடுத்து நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு ஆங்கில எழுத்தான F உச்சரிப்பில் ஒரு புதிய தூய தமிழ் எழுத்தை தோற்றுவிக்க வேண்டியுள்ளது. இங்கு நாம் தற்போது F உச்சரிப்புக்காக "ஃ ப்" என்பதையே அதிகளவில் பயன்படுத்துகின்றோம். ஆனாலும் உச்சரிப்பு ரீதியில் அது முற்றிலும் முரணான ஒன்றாகவே உள்ளது. அதாவது இந்தப் பயன்பாடு காரணமாக "ஃ" என்பதன் உண்மையான உச்சரிப்பு சிதைக்கப்படுகின்றது.
எனவே மேற்படி F ஒலிக்கு அமைய ஒரு புதிய எழுத்து தமிழில் அவசியம். குறிப்பாக இலங்கை, தமிழ்நாடு வாழ் தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகள் தங்கள் பெயர்களை தமிழில் எழுதுவதற்கு இந்த எழுத்து உருவாக்கம் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் பெயர்களையும், ஏனையவர்ல்களின் பெயர்களையும், இடங்களையும்(உதாரணம்-FRANCE =பிரான்ஸ்.) ஊடகங்களில் உச்சரிக்கவும், அச்சேற்றவும் F உச்சரிப்பில் ஒரு தூய தமிழ் எழுத்து வேண்டும்.
F உச்சரிப்பு இவ்வாறு இருக்க, அடுத்து நம்மிடம் இப்போது W என்கின்ற எழுத்தின் பயன்பாடும் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் WATS என்பதை நம்மவர்கள் வாற்று என்று அழைக்கின்றார்கள். உண்மையில் WATS என்பது ஒரு சர்வதேச அலகு மட்டுமல்லாமல் அது ஒரு விஞ்ஞானியின் பெயருமாகும். ஆகமொத்தம் நாம் வாற்று என்று அழைப்பதன் மூலம் ஒரு குறித்த நபரின் பெயரை பிழையாக உச்சரிக்கின்றோம்.
அண்மையில் நமது நாட்டில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் LASANTHA WIKKIRAMATHUNGA அவர்கள் கொல்லப்பட்டபோது அவரின் பெயரை நமது இலத்திரனியல் ஊடகங்கள் லசந்த விக்கிரமதுங்க என்று உச்சரித்துக் கொண்டிருந்தன. நமது மொழியில் நாம் உச்சரிப்பு பிழைகளை விடுகின்றபோது அது எவ்வளவு பிழையானதோ அதேபோன்றுதான் குறித்த நபரின் பெயரை பிழையாக உச்சரிப்பதும் பிழையானதாக இருக்கும்.ஆகவே இவற்றை எல்லாம் பார்க்கின்றபோது W என்கின்ற ஆங்கில எழுத்துக்கான உச்சரிப்பில் ஒரு தூய தமிழ் எழுத்தின் உருவாக்கமும் அவசியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
இங்கு இன்னுமொரு விடயத்தையும் சொல்லலாம் அதாவது முன்பு சிங்கள மொழியில் B ,F உச்சரிப்புக்களுக்கான சிங்கள எழுத்துக்கள் இருக்கவில்லை. எனினும் பிற்பட்ட காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அறிஞர்கள் இரண்டு எழுத்துக்களுக்கும் நிகரான சிங்கள எழுத்துக்களை உருவாக்கியிருந்தார்கள்.
ஆகமொத்தம் இவற்றை எல்லாம் தொகுத்துப்பார்க்கின்றபோது நாம் நமது மொழிக்குள் ஊடுருவியிருக்கும் வடமொழி எழுத்துக்களுக்கு பொருத்தமான தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதுடன், புதிய மூன்று எழுத்துக்களையும் இப்போதைக்கு உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். இங்கு ஆங்கில மொழியின் ஆதிக்கத்துக்கு தமிழ் உட்படாது, அதனை பின்பற்றி புதிய தமிழ் எழுத்துக்களை உருவாக்குவது தமிழ் மொழியின் தனித் துவத்தை பாதிக்கும் போன்ற விடயங்கள் இருந்தாலும் நாம் இவ்வாறான மாற்றம் ஒன்றைச் செய்யாவிட்டால் நமது எழுத்துப் பயன்பாடுகளில் ஆங்கிலம் அதிகம் ஊடுருவும் என்பதையும் கவனத்தில்க் கொள்ளவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ARMAYANA PATHIU ROMMBA NAALAKA MANATHAI VARUDIYA ORU NKALU
///nawab said...///
///ARMAYANA PATHIU///
நன்றி நவாப்... உங்கள் பெயரை தமிழில் எழுதுவதிலும் சிரமம் இல்லையா??
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்..
அடிக்கடி வாருங்கள்...
சிந்திக்க வைத்த கருத்தாக்கம்.. சிந்திப்போம்
Post a Comment