உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, July 22, 2012

இலங்கை+முஸ்லிம் அரசியல்வாதிகள்+முடிவுகள்.

இன்றைய இலங்கை அரசியலில் அதிகமாக பேசப்படும் விடயங்களாக முஸ்லீம் அரசியல்வாதிகளும் அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. 
குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முடிவு செய்து அறிவித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இட ஒதுக்கீடுகள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் சிக்கல்களால் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்த விடயத்தையும், மன்னார் மாவட்ட நீதிமன்றம் தாக்கப்பட்டு நீதவான் அமைச்சர் ரிஷாட்பதியுதீனால் அச்சுறுத்தப்பட்ட விடயத்தையும், முக்கிய விடயங்களாக அடையாளப்படுத்த முடியும்.
இலங்கை வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் நீதித் துறையில் அரசியல் தலையீடுகள் அதிகம் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான் என்கின்ற போதிலும் மன்னார் மாவட்டத்தில் அண்மையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட நீதவானை அச்சுறுத்திய விடயம் நீதித் துறைக்கு விழுந்த மிகப்பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றுவரை இலங்கையில் அதிகம் விமர்சிக்கப்படாத, ஒடுக்கப்படும் இனத்துக்கு சற்று ஆறுதல் தருகின்ற துறையாக நீதித்துறை நோக்கப்படும் நிலையில் மன்னார் மாவட்ட நீதவானை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்த விடயம் இலங்கை நாட்டிற்கும், இன்றைய அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய அவமானம் என்பதில் சந்தேகம் இல்லை.
மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நீதவான் வழங்கிய தீர்ப்பிற்காகவே அவரை ரிஷாட் பதியுதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நீதவானை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்னவை சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இதனை மஞ்சுள திலகரட்ணவும்  உறுதி செய்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
மேலும் தன்னை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்று அறிமுகப்படுத்திய ஒருவர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவாளர்களை விடுவிக்காவிட்டால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிச் சேவைகள் ஆணைக் குழுவில் புகார் செய்துள்ளார். அத்துடன் ரிஷாட் பதியுதீன் தனது உத்தியோகபூர்வ தொலைபேசியினூடாகவே  மேற்படி அச்சுறுத்தலை விடுத்தமையும்  விசாரணைகளின் மூலமாக தெரிய வந்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க இங்கே  வேடிக்கையான விடயம் என்னவென்றால் குறித்த மன்னார் மீனவ சமூகத்தின் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று கூறும் முஸ்லீம் சமய பீடங்கள் விடுதலைப் புலிகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும், அவர்களின் ஆதரவாளர்களால்தான் இந்த பிரச்சினை உருவானதாக மன்னார் மாவட்ட ஆயர் மீது மறைமுகமாக பழி சுமத்தும் வகையிலும், மாவட்ட நீதவான் அமைச்சர் ரிஷாட்பதியுதீனால் அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன.  ரிஷாட் பதியுதீனுக்கு ஆதராவாக போராட்டங்களையும் மேற் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வேண்டியது அவசியமான ஒன்றுதான் என்கின்ற போதிலும் நீதவானை ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்திய விடயத்தை நியாயப்படுத்துவதையோ, இப்போது இலங்கையில் இல்லாத விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதையோ ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

மன்னார் மாவட்ட நீதவான் அச்சுறுத்தப்பட்ட விடயம் இவ்வாறு இருக்க கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான விடயங்களும் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் முடிவிலிருந்து விலகி தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முடிவு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள், வரவேற்புக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. 
குறிப்பாக இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுமாக இருந்தால் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் ஓரளவுக்கேனும் குறையலாம் என்னும் எதிர்பார்ப்பில் அரசாங்கம் சபையை கைப்பற்றுவதற்காக கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை விரைவுபடுத்த வேண்டுமானால் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளது. 
இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் சமூகத்தின் மனங்களை வென்றெடுக்காத நிலையில் தேர்தல் காலங்களில் தமிழ் சம்மூகத்தின்  வாக்குகளை கவர முடியாது என்னும் நிலையில் அவர்களின் வாக்குகளை சிதைப்பதிலையே அதிக கவனம் செலுத்தியிருக்கின்றன. 
இன்றைய அரசாங்கமும் அதனையே செய்துவருகின்றது. 

கிழக்கு மாகாண சபையின் களத்திலும் திட்டமிட்ட பிரதேசவாத கருத்துக்களை திணித்தும், தமிழ் முஸ்லீம் சமூகத்தின் அரசியல் சக்திகளை பிளவுபடுத்தியும் வாக்குகளை சிதறடிக்க செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. எனினும் அரசாங்கம் எதிர்பார்க்கும் பலாபனை பெற முடியாது என்கின்ற போதிலும் எந்தவொரு இனமும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை கிழக்கு களத்தில் உள்ளது. 

இந்த நிலையில் கிழக்கு களத்தில் தனித்து களமிறங்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசிடமிருந்து தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாதகமான கருத்துக்கள் எதுவும் இதுவரை வெளிவந்ததாக தெரியவில்லை. 
அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பில் இது பற்றி கூறுகின்ற போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறினார். இதன் மூலம்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது பற்றி சிந்தித்துக் கூட பார்க்கவில்லை என்றே தெரிகின்றது. மேலும் அவர் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அவர்களுக்கு வழி விடுவோம் என்றும் சொல்லியுள்ளார். 
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதை விட அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது அனுகூலமானது. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிழக்கு களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதால் பெரிய அளவில் நன்மைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாதகமானதாகவே இருக்கும். இதனால்தான் முஸ்லீம் காங்கிரசை தம்முடன் இணைந்து போட்டியிடாவிட்டாலும், அரசாங்கத்துடன் இணையாது தனித்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வந்தது. 
இந்த நிலையில்தான் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னர் தனித்து போட்டியிடவுள்ளதாக முடிவை மாற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இந்த திடீர் மாற்றங்கள் தொடர்பில் வெவ்வேறு வகையான பார்வைகள் விமர்சகர்கள் மத்தியில் உள்ளன. 

குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு இறுதியில் அரசாங்கத்துடன் இணைந்தே ஆட்சி அமைக்க முன்வரும் என்று சொல்லப்படுவதுடன், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் முடிவிலிருந்து திடீரென விலகி தனித்து போட்டியிடும் முடிவுக்கு அவர்கள் வந்தமை ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. 

அதாவது ஏற்கனவே கிழக்கு களத்தில் அரசாங்க சின்னத்தில் முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் அரசியல் சக்திகள் அரசாங்கத்துடன் இணைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மர சின்னத்தின் கீழ் அதிகளவு வாக்குகள் பதிவாகும் இடங்களையும் தமதாக்கும் நோக்குடன் முஸ்லீம் காங்கிரசை அரசாங்கம் பயன்படுத்துகின்றதா என்கின்ற சந்தேகமும் நிலவுகின்றது. 
இதே வேளை கிழக்கு மாகாண சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சிங்களவர்களின் காணிகள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களும், தமது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அபிவிருத்திகள் தொடர்பில் பட்டியலிட்டுள்ளமையும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள அவர்கள் முன்னெடுக்கும் பிரச்சார உத்திகள். 
இவ்வாறான உத்திகள், கபடங்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தனியொரு சக்தியாக அரசாங்கத்தை எதிர்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....

Saturday, July 21, 2012

21 ஓட்டங்களால் வென்றது இந்திய அணி.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் பகல் இரவு போட்டியாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி தலைமையிலான இந்திய அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தனர். 
அந்தவகையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 6 இலக்குகளை இழந்து 314 ஓட்டங்களை சேர்த்துக் கொண்டது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 113 பந்து வீச்சுக்களில் 9 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 106 ஓட்டங்களையும், வீரேந்திர சேவாக் 97 பந்து வீச்சுக்களில் 10 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 96 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 45 பந்து வீச்சுக்களில் 3 நான்கு ஓட்ட பெறுதிகள் 1 ஆறு ஓட்ட பெறுதி அடங்கலாக 50 ஓட்டங்களையும் சேர்த்தனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திசார பெரேரா 10 ஓவர்கள் பந்து வீசி 70 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு 50 ஓவர்களில் 315 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்னும் இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அணியினரால் 50 ஓவர்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 293 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 

இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 151 பந்துவீச்சுக்களில் 12 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 133 ஓட்டங்களையும், திசார பெரேரா 28 பந்து வீச்சுக்களில் 3 நான்கு ஓட்ட பெறுதிகள், 1 ஆறு ஓட்ட பெறுதி அடங்கலாக 44 ஓட்டங்களையும் பெற்றனர். 
இந்திய அணியின் பந்து வீச்சில் இர்பான் பதான், உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் 10 ஓவர்கள் பந்துவீசி தலா 2 இலக்குகள் வீதம் வீழ்த்தினர். அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளதுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றது.

இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் விராட் கோலி பெற்றுக் கொண்ட சதமானது ஒரு நாள் போட்டிகளில் அவர் பெற்றுக் கொண்ட 12 ஆவது சதம் என்பதுடன், விரேந்திர சேவாக் பெற்றுக்கொண்ட அரைச் சதமானது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் பெற்றுக் கொண்ட 38 ஆவது அரைச்சதமாகும்.  இதேவேளை இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார இன்றைய தினம் ஒரு நாள் போட்டிகளில் தனது 14 ஆவது சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். 

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார். 
இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டம் பலமாக இருந்த போதிலும் களத்தடுப்பு வியூகங்கள் பலவீனமாகவே இருந்தன. இலங்கை அணியை பொறுத்தவரையில் களத்தடுப்பு வியூகங்களும், துடுப்பாட்ட வரிசையும் சிறப்பாக இருந்த போதிலும் இந்திய அணி நிர்ணயித்த 315 ஓட்டங்கள் என்னும் இலக்கை அடைய முடியவில்லை. இலங்கை அணி உதிரி ஓட்டங்களாக 12 ஓட்டங்களையும் , இந்திய அணியினர் 23  ஓட்டங்களையும்  எதிரணிக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

Saturday, July 14, 2012

கிழக்கு மாகாண சபை தேர்தல்-மற்றுமொரு வரலாற்றுத் தவறு..

 இலங்கை அரசியலில் இன்று அதிகமாக சூடு பிடித்துள்ள விடயம் கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசியற் கட்சிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளாகவே உள்ளன. அந்த வகையில் தமிழ் பேசும் சமூகத்தை பொறுத்தவரையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மிக மிக முக்கியமான ஒன்று என்று சொல்லலாம். இலங்கையில் வட, கிழக்கில் தமிழ் மக்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தொடக்கம் தமது ஒற்றுமையை வாக்களிப்பில் காட்டி வருகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. 


அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது ஏகோபித்த ஆதரவை தமிழ்ச் சமூகம் தேர்தலில் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் களம் என்பது கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. 
உண்மையில் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் கிழக்கு மாகாண சபையை கலைத்து அதற்கு ஒரு தேர்தலை அவசர அவசரமாக நடாத்துவதன் நோக்கம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ் சமூகம் கிழக்கில் அரசின் பின்னால் நிற்கிறது  என உலக நாடுகளுக்கு பரப்புரை செய்யலாம் என்பதேயாகும். வடக்கில் மாகாண சபை தேர்தலை 2013 ஆண்டுவரை அரசு பின்தள்ளி வைத்துள்ளமை வடமாகாணத்தில் தமது வெற்றிகள் தொடர்பில் நம்பகத் தன்மையில்லை என்பதாலாகும்.


யுத்தம் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்ற தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் போன்றன இலங்கையின் வட, கிழக்கில் தமிழ் சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டிருப்பதை உலகிற்கு பறை சாற்றியது. இது அரசிற்கு மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்திருந்தது என்பதுடன் இவ்வாறான நிலைமையை மாற்ற அரசாங்கம் கடும் பிரயத்தனத்திலும் ஈடுபட்டது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகள் கிடைக்காத நிலையில்தான் கிழக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. 


மூவின மக்களும் வாழும் இன்றைய கிழக்கு மாகாண தேர்தல் களத்தை எடுத்துக் கொள்ளுமிடத்து எந்தவொரு இனமும் தனித்து போட்டியிட்டு வெற்றி ஈட்டுவதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை அவசியம் என்றே தோன்றுகின்றது. 


அந்த வகையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களாலும், கடந்த கால யுத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்களாலும், வேற்று நாடுகளுக்கான புலம்பெயர்வுகளாலும் வாக்காளர் தொகையில் தமிழ் மக்கள்  நலிவடைந்திருக்கும் நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும். மேலும் திட்டமிட்ட பிரதேச வாத பரப்புரைகளும் இந்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க அல்லது தம் பக்கம் ஈர்த்துக் கொள்ள அரசாங்கம் கையாளும் உத்தியாக உள்ளது. 


இவ்வாறான இக்கட்டான சூழலில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் சமூகமும், முஸ்லீம் சமூகமும் அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒரு உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக களம் இறங்கினால் நிச்சயம் அரசாங்கத்துக்கு அது நெருக்கடியான ஒன்றாக இருக்கும் என்று நம்பப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 
நேற்றைய தினம் (13 . 07 .2012 ) வெள்ளிக் கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
தமிழ்தேசியக் கூட்டமைப்புடனும், அரசாங்கத்துடனும் பல சுற்று பேச்சுக்களில் ஈடுபட்ட பின்னரே இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை இரண்டு வருடங்கள் முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்க முடியும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. 


இவ்வாறான சூழ் நிலையில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எவ்வாறான  நிபந்தனைகளின் அடிப்படையில் அல்லது உடன்பாடுகளின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்தது என்று தகவல்கள் வெளிவராத போதிலும் கட்சியைக் காப்பாற்றுதல் என்கின்ற வழக்கமான நிலைமையும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறையில் முஸ்லீம் காங்கிரசுக்கு 6 இடங்களும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தலா 3 இடங்களும் ஒதுக்கியுள்ளமையே இந்த இணைவுக்கு காரணம் என்றும் தெரிய வருகின்றது. 


பொதுவாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தேர்தலும் முஸ்லீம் காங்கிரசை பலவீனப்படுத்துவதாகவே அமைந்து விடுவது அவர்களுக்கும், முஸ்லீம் சமூகத்துக்கும் துரதிஷ்டவசமானது. கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் எடுத்த முடிவால் கட்சி பாரியளவில் பலவீனமடைந்ததை மறுப்பதற்கில்லை என்கின்ற போதிலும் இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியில்  முஸ்லீம் சமூகமும், தமிழ் சமூகமும் பேரினவாத சக்திகளால் அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகும் நிலையில் கட்சியை காப்பாற்றுதல் என்னும் நோக்கோடு அரசாங்கத்தின் திட்டமிட்ட நகர்வுகளின் வலைக்குள் சிக்கி முஸ்லீம் சமூகத்தையும், தமிழ் சமூகத்தையும் காட்டிக் கொடுப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் முஸ்லீம் காங்கிரஸ் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடானது மற்றுமொரு வரலாற்றுத் தவறாகவும் இருக்கலாம். 


அண்மையில்தான் இலங்கையில் முஸ்லீம்களின் தொழுகை இடங்களான பள்ளி வாசல்கள் மீது பேரின வாத சக்திகளால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.. இதற்கு இதுவரையில் எந்தவொரு உருப்படியான நடைவடிக்கையையும் அரசாங்கம் எடுத்ததாக தெரியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க அரசியல் இருப்பிற்காக, கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ளும் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எடுத்துள்ளமை தூர நோக்கில் அமைந்த நிதானமான முடிவாக இருக்குமா என்பது சந்தேகமே!! 


முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கொள்கை உடன்பாடுகளை ஏற்படுத்தித்தான் இந்த முடிவுக்கு  வந்திருக்கின்றார்கள்  என்றாலும் அரசாங்கத்தின் உடன்பாடுகள் தொடர்பான கடந்த கால நம்பகத் தன்மை பற்றியும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். 


கடந்த கிழக்கு மாகாண சபை  தேர்தலில் முஸ்லீம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று செயற்பட்ட ஹிஸ்புல்லாஹ் தலைமையிலானவர்களுக்கு அரசாங்கத்தின் உடன்பாடுகள் தொடர்பான நம்பகத் தன்மை குறித்து  நல்ல அனுபவம் இருக்கும். அதாவது அதிகபடியான உறுப்பினர்களை பெறும் இனம் எதுவோ அந்த இனத்தை சேர்ந்தவர்தான் கிழக்கு மாகாண சபையின் முதல்வர் என்று அரசு வழங்கிய உறுதி மொழியை நம்பி எமார்ந்ததை அவர்களும், முஸ்லீம் மக்களும் மறந்திருக்கமாட்டார்கள். தமக்கான தனிப்பட்ட அரசியல் அடையாளம் பிரகாசமானதால் குறித்த அரசியல்வாதிகள்  அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பது தனிக் கதை. இருப்பினும் வாக்களித்த முஸ்லீம் மக்கள்  எமார்ந்ததுதான் மிச்சம். மீண்டுமொரு முறை வாக்காளர்களுக்கு இதே நிலைமையைத்தான் முஸ்லீம் காங்கிரஸ் ஏற்படுத்தப் போகின்றதா? 
மேலும் முன்பு ஹிஸ்புல்லாஹ் தலைமியிலானவர்கள் இவ்வாறன ஒரு முடிவை எடுத்த  போது  கடுமையாக விமர்சித்த முஸ்லீம் காங்கிரஸ் இப்போது தாங்களே அதே முடிவை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளார்களா? அல்லது தள்ளப்பட்டுள்ளார்களா? எது எப்படியோ பாதிக்கப்பட போவது தமிழ், முஸ்லீம் சமூகமே அன்றி சிங்கள சமூகம் அல்ல.


கிழக்கு மாகாணத்தின் முதல்வர் தமிழரா? முஸ்லீமா? என்று போட்டி வைத்து கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னம் இல்லாத நிலையில் தமிழர்களினதும், முஸ்லீம்களினதும் வாக்குகளை கவர்ந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இம்முறை முஸ்லீம்களின் தேசியக் கட்சியாக நோக்கப்படும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசினதும், கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் ஆதரவுடன் இரண்டு இனங்களினதும் வாக்குகளை கவரலாம் என களம் இறங்கியுள்ளது. 
மேலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னம் உள்ள நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை தம் பக்கம் ஈர்க்க அரசாங்கம் வடக்கு, கிழக்கு என்னும் பிரதேச வாத பரப்புரைகளில் ஈடுபடுவதையும் காண முடிகின்றது.... 


கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான நிலைமைகள் இவ்வாறு இருக்க சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் இழந்த தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெறும் நோக்குடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறுமுகன் தொண்டமான்  தலைமையிலான  இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், எதிரணியில் இருக்கும் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளார்கள். அதாவது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சேவல் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்வதென முடிவு செய்துள்ளார்கள்.. இந்த கூட்டணியில் காலஞ் சென்ற பெரியசாமி சந்திரசேகரன் உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியும் சேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது. 

பொதுவாக அரசாங்கத்துடன் சேர்ந்திருந்தால்தான் மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்னும் நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மலையக மக்கள் முன்னணியும் கொழும்பை மையப்படுத்தி ஆரம்பித்து இப்போது மலையகத்திலும் மக்கள் ஆதரவை பெற்று வரும் தமிழர் உரிமைகளுக்காக துணிந்து குரல் கொடுக்கும் மனோகணேஷன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இழந்த தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் நோக்கோடு உடன்பாட்டை எட்டியுள்ளமை புத்திசாலித்தானமான, இன்றைய நிலையில் தமிழ் சமூகத்துக்கு மிகவும் அவசியமான ஒரு முடிவாகும்.  


அண்மைக் காலத்தில் இலங்கையின் வடகிழக்கில் தமிழ் அரசியல் சக்திகளிற்கிடையில் கொள்கை அளவில் இல்லாவிட்டாலும் செயற்பாட்டளவில் பல்வேறு ஒற்றுமை தன்மைகள் வெளிப்பட்டதை போல இப்போது மலையக தமிழ் அரசியல் சக்திகள் பொது நோக்கோடு ஒன்று சேர்ந்துள்ளமையை வரவேற்போம்.  


ஒற்றுமையே பலம்... ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு... சுய லாப அரசியல் சக்திகளுக்கு இவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்...

Sunday, July 8, 2012

ஐயோ பாவம் அவுஸ்திரேலியா...

கிரிக்கட்டின் தாயகம் இங்கிலாந்து என்றாலும் கிரிக்கட்டில் ஜாம்பவனாக திகழ்ந்து நான்கு முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பெருமையுடன் ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தையும் தக்க வைத்துள்ள அணியாக அவுஸ்திரேலிய அணி திகழ்வதை மறுப்பதற்கில்லை. 


எனினும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்திற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணி தொடரின் நான்காவது போட்டி நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில் தொடரை 3 - 0 என்ற கணக்கில் இழந்துள்ளது. 


நேற்றைய தினம் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குக் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை சேர்த்தனர். அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் கசி மாத்திரமே அரைச்சதம் கடந்த ஒரே வீரராக இருந்தார் (73 பந்துகளில் 9 நான்கு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 70 ஓட்டங்கள்). 
இங்கிலாந்து அணி சார்பில் Fin 4 இலக்குகளையும் அண்டர்சன், பிரஸ்னன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினர். 
அந்தவகையில் பதிலுக்கு 50 ஓவர்களில் 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த இங்கிலாந்து அணியினர் 47 .5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 201 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்கினை அடைந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பெல்(69 ),  trrot (ஆட்டமிழக்காமல் 64 ) ஆகியோர் அரைச் சதம் கடந்தனர். 
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் McKay 2 இலக்குகளையும் வீழ்த்தினார்.  
மேலும் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் பிரகாசித்த Fin ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.   
இவ்வாறாக நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி 13 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 8 இலக்குகளினால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியே நேற்றைய தினம் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் இரண்டாவது போட்டியில் 26 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 6 இலக்குகளினால் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்றாவது போட்டி பந்து வீச்சு எதுவும் மேட்கொள்ளப்படாத நிலையில் கைவிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் வெற்றியீட்டினால் மாத்திரமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற நிலையில் அவுஸ்திரேலிய அணியினரும், மீதமிருந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து அணியும் நான்காவது போட்டியில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. இதில் வெற்றி பெற்றதன் மூலமாகவே இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறாத அவுஸ்திரேலிய அணி நாளை மறு தினம் மான்செஸ்டரில் நடைபெறவுள்ள ஐந்தாவது போட்டியிலாவது வெற்றி பெறுமா? 


உண்மையில் அண்மைக் காலமாக இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பல்வேறு வெற்றிகளை பெற்றுவருகின்ற போதிலும், வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது சாதிக்க தவறுகின்றது என்னும் குற்றச்சாட்டும் நிலவுகின்றது. இதற்கு எதிர் வரும் காலங்களில் இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைக்குமா? மேலும் அவுஸ்திரேலிய அணியுடன் ஒரு நாள் போட்டியில் பெற்ற வெற்றியை ஜூலை 19 ஆம் திகதி ஆரம்பிக்க போகும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தக்க வைக்குமா இங்கிலாந்து அணி? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Thursday, July 5, 2012

ஜூலை 6 நான்+வானொலி

2001 ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் 6 ஆம் நாள் எனது வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாள். ஆம் அன்றுதான் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வொன்றில் செய்த வானவில் மாணவர் ஒலிபரப்பு சேவையினூடாக நான் என்னை ஒரு ஒலிபரப்பாளனாக  அறிமுகப்படுத்தினேன். 


மேலும் 2008 ஆம் ஆண்டும் இதே ஜூலை 6 ஆம் நாள் எனக்கு முக்கியமான நாள்தான். ஆம் அந்த நாளில்தான் நான் தாளம் fm இணைய வானொலியில் அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டேன். அந்த வகையில் தாளம் fm இணைய வானொலியில் 2008 ஜூலை 06 ஆம் நாள் தொடக்கம் 2009 நவம்பர் 03 ஆம் திகதி வரை ஒரு அறிவிப்பளனாகவும், அதன் பின்னர் 2009 நவம்பர் 23 ஆம் திகதி முதல் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி வரை டான் தமிழ் ஒளித் தொலைக்காட்சி, டான் தமிழ் ஒலி செய்மதி வானொலி என்பவற்றில் ஓளி,ஒலிபரப்பாளனாகவும்  பணி புரிந்துவிட்டு அதன் பின்னர் எனது சொந்த ஊரான முல்லைத்தீவு மாவட்டத்தில் Vanavil Media Networks என்னும் நிறுவனத்தை  நல்ல உள்ளங்களின் உயரிய அர்ப்பணிப்புடன் உருவாக்கி  அதன் ஊடாக www.sanjeevaoli.com என்னும் இணையம் வழியே சஞ்ஜீவ ஒலி வானொலியில்  (இப்போது அந்த வானொலியை தமிழருவி வானொலி என்னும் நாமத்துடன் இயக்குகின்றோம்) இயக்குனராகவும், அறிவிப்பாளராகவும் இன்றுவரை வானொலிப் பயணத்தை  தொடர்கின்றேன். 


2001 ஜூலை 06 ஆம் திகதி முதல் இன்றுவரை வானொலித்துறை தொடர்பில் பல்வேறு புதிய, புதிய அனுபவங்களை பெற முடிந்ததுடன் எனது சொந்த மண்ணில் வானொலித் துறையின் மீது ஆர்வமாய் இருந்தவர்களுக்கு என்னால் இயன்ற, எனக்கு தெரிந்த விடயங்களை சொல்லிக் கொடுத்த திருப்தியும் உண்டு. மேலும்  சஞ்ஜீவ ஒலி ( தமிழருவி ) வானொலியினூடாக  இதுவரை 20 இற்கும் அதிகமானவர்கள் அறிவிப்பாளர் என்னும் அடையாளத்தை பெற்றுள்ளார்கள் என்பதுடன் இப்போது இலங்கையின் வெவேறு பாகங்களிலுமிருந்து நமது வானொலியில் அறிவிப்பாளர்களாக பணிபுரிய பலரும் முல்லைத்தீவை நோக்கி வருகை தரவுள்ளமை பெருமை கொள்ள செய்கின்றது. 


அந்தவகையில் நான் வானொலித் துறைக்குள் காலடி பதித்து 11 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 09 ஆம் திகதி இலங்கையிலிருந்து வெளிவரும் மித்திரன் வார மலரில் பிரசுரமான எனது நேர்காணலினை   எனது வலைப்பூவில் பதிகின்றேன்.



கலைத்துறைக்கான களங்கள் உருவாகுவது ஆரோக்கியமானதே!

 தென்னகத்தை போன்று கலைத்துறைக்கான களங்கள் எமக்கில்லை. ஊடகங்கள் மட்டுமே எமக்கிருக்கும் உயரிய களங்களாகும். இதில் வானொலி, தொலைக்காட்சி என்பன மட்டுமே தமிழர்களுக்குள்ள சிறப்பான இடங்களாகும். எனவே இத்துறையில் புதிய சேவைகள் ஆரம்பமாவது வரவேற்க வேண்டியதே.
இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சஞ்ஜீவ ஒலி இணைய வானொலியின் பணிப்பாளர் மயில்வாகனம் செந்தூரன். மித்திரன் கலைஞர் சந்திப்பிற்காக அவரை நேர்கண்ட போது...

முதலில் உங்களை பற்றி சற்றுக் கூற முடியுமா?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் முல்லைத்தீவில்தான். தண்ணீரூற்று சீ.சீ.தமிழ்க் கலவன் பாடசாலை, முள்ளியவளை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை(இப்போது முள்ளியவளை தமிழ் வித்தியாலயம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியையும், முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றேன். சிறிய வயது முதல் ஊடகத் துறையில் அதிலும் குறிப்பாக அறிவிப்புத் துறையில் அதிக நாட்டமும், ஆர்வமும் இருந்தது. எனவே எனது எதிர்கால இலக்காக அறிவிப்புத் துறையை விரிவுபடுத்திக் கொண்டேன்.

உங்களது வானொலிப் பிரவேசம் எவ்வாறு அமைந்தது?
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி கல்லூரியில் ஒரு கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் வானொலியின் பால் அதிகம் ஈர்க்கப்பட்ட நானும், எனது நண்பர்களும் சேர்ந்து வானவில் மாணவர் ஒலிபரப்பு சேவை என்னும் பெயரில் ஒரு வானொலியை  ஒலிபரப்பினோம். 
நவீன தொலைத்தொடர்பு வசதிகள் எதுவும் இல்லாது இருந்த நமது பிரதேசத்தில் தொலை பேசி மூலம் எப்படி ஒரு வானொலியோடு இணையலாம் என்பதை விளக்குவதற்காக ஒரு தொலைபேசிக் கூடத்தையும் செய்தோம். 
சிறிய வயதில் நாம் செய்த இந்த முயற்சி பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதிபர், ஆசிரியர்கள், பெரியவர்கள், நண்பர்கள் என எல்லோரும் எம்மை பாராட்டினார்கள். அன்றைய அந்த ஒலிபரப்பில்தான் நான் எனது அறிவிப்பு திறனை வெளிப்படுத்தினேன். 
இவவாறன ஒரு ஆர்வம், திறன் உருவாக 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சக்தி fm வானொலியில் லோஷன் அண்ணாவும், எழில்வேந்தன் அண்ணாவும் சேர்ந்து செய்த நிகழ்ச்சிகளே காரணமாய் அமைந்தன . 
எனவே அவர்கள் இருவரும்தான் வானொலித் துறையில் எனது முதலாவது குருநாதர்கள். அதன் பின்னர் இலங்கை  வெகுஜன ஊடக நிறுவனத்தின் (MMIC ) இயக்குனர் திருS.K. ரமேஷ் , தாளம் fm வானொலியின் பணிப்பாளர் திரு R . தர்ஷன் ஆகியோர் வானொலித் துறை பற்றி நேரடியான பயிற்சிகளையும், நுட்பங்களையும் கற்றுத் தந்தார்கள். 

சில பயிற்சி பட்டறைகளில் மூத்த அறிவிப்பாளர்களின் ஆலோசனைகளும் கிடைத்தன. 
இவ்வாறாக ஆரம்பித்த ஊடகப்பயணம் தாளம் fm வானொலியில் அறிவிப்பாளராகவும், டான் தமிழ் ஒளித் தொலைக் காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் தொடர்ந்து இப்போது எனது சொந்த மண்ணிலிருந்து இயக்குனராகவும், அறிவிப்பாளராகவும் தொடர்கின்றது.

அறிவிப்புத் துறை தவிர்ந்த வேறெந்த துறைகளில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது?
எழுத்துத் துறையில் ஆர்வம் உண்டு. இதன்படி கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் www.senthuva.blogspot.com என்னும் வலைப்பூவில் எனது எண்ணங்களை பதிவு செய்து வருகின்றேன். 

இது தவிர இலத்திரனியல், தொழில்நுட்ப ரீதியான ஆர்வமும் உண்டு. சிறிய வயதில் துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் போன்றவற்றிலும் எனது தடங்களை பதித்துள்ளேன்.

உங்களது இணைய வானொலிச் சேவையின் நோக்கம் எவ்வாறானது என்பதை விளக்க முடியுமா?
உண்மையில் நமது பிரதேசத்தில் என்னைப் போன்று ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர். எனினும் நமது இன்றைய பொருளாதார நிலைமையில் கொழும்பு போன்ற நகருக்கு சென்று அங்கு ஊடகப்பயிற்சி பெற்று அறிவிப்பாளராக வானொலியில் இணைந்து பின்னர் அங்கு பயிற்சி அறிவிப்பாளர் என்ற நிலையிலிருந்து அறிவிப்பாளர் என்ற நிலையை அடைவதென்பது மிகவும் கடினமானதாகும். 
எனவே இவ்வாறான அறிவிப்புத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் அடிப்படை பயிற்சி களமாகவும், வன்னி மண்ணின் ஊடக அடையாளமாகவும் வன்னி fm சஞ்ஜீவ ஒலியை (தமிழருவி வானொலி) பண்பலையில் மேம்படுத்த வேண்டும் என்பதே நமது பிரதான நோக்கமாகும். 
இதனை விட புதிய புதிய குரல்களை வானொலியில் அறிமுகம் செய்து ஏராளமான அறிவிப்பாளர்களை  உருவாக்க வேண்டும். 

நம்மால் இயன்றவரை நமது பிரதேசத்தில் வாழும் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும். இதன் முதற் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளித்தோம். 


இதனை விட கலைத்துறையிலும் நமது பங்களிப்புக்கள் அதிகமானதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். உதாரணமாக இப்போது நமது முல்லைத்தீவு மாவட்டத்தில் இசைக் கச்சேரிகளை செய்யக் கூடிய தனித்துவமான இசைக் குழு ஒன்று இல்லை. எனவே அதனை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடுள்ளோம். 

உங்கள் இணைய வானொலிக்கு ரசிகர்களின் வரவேற்பு எவ்வாறுள்ளது?
பொதுவாக இணைய வானொலிகள் இளைய தலை முறையினரை குறிவைத்தே நிகழ்ச்சிகளை படைக்கும். இதற்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல. எனினும் நமது வானொலியை இளைய தலைமுறையினரை தாண்டியும் ஏராளமானவர்கள் கேட்கிறார்கள். 
உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் நம்முடன் நேயர்கள் தொடர்புகொள்கிறார்கள். மேலும் உள்நாட்டிலும் இப்போது இணைய பாவனை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, மன்னார், கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி என்று இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான உறவுகள் நமது வானொலியை செவிமடுப்பதுடன் உலக வாழ் தமிழர்களும் நம்முடன் இணைந்துள்ளார்கள். 
யுத்தத்தின் கொடிய பிடியில் சிக்கிய முல்லைத்தீவிலிருந்து ஒரு வானொலிச் சேவை என்பது உண்மையிலையே எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் நமது வானொலியானது கடல் கடந்து கண்டம் கடந்து உலகெங்கும்  பரந்து  வாழும் தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு ஓர் உறவுப்பாலம் என்பதால் நம்மை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்களும், தவறுகளை திருத்தி கட்டமைக்க கூடிய வகையிலான கருத்துக்களும் கிடைப்பது ஆரோக்கியமானதே.

வானொலி அலைவரிசைகள் இணைய வானொலிகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழ் மொழியின் நிலைமை என்ன?
உண்மையில் தனியார் வானொலிகளின் வருகையின் பின்னர் வானொலி மொழி நடையில் மாற்றங்கள் வந்திருப்பதை மறுப்பதற்கில்லை. இந்த மாற்றங்கள் நேயர்களுக்கும் வானொலிக்கும் இடையில் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 
இருந்த போதிலும் சாதாரணமாக பேச்சு வழக்கில் உள்ள சொற்பதங்களை வானொலியில் கேட்கும் போது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கின்றது. காரணம் வானொலியின் உயர்ந்த தரத்தை இது பாதிக்கின்றது என்பதாகும். பிரதேச வழக்குகளும் அவ்வப்போது தலை தூக்குவதும் தவிர்க்கப்படுவது நல்லது என நினைக்கின்றேன். 
இவற்றிற்கப்பால் ஒவ்வொரு சொற்களையும் சரியான மாத்திரை பெருமானத்துடன் உச்சரிப்பதில் கவனம் செலுத்தினால் சாலச் சிறந்தது. இப்போது நிறைய வானொலிகள் உருவாகுவது நல்லது என்றே நினைக்கிறேன். காரணம் அதிகமானவர்களுக்கு அது களமாக அமையும்.  இந்தியாவை பொறுத்தவரையில் சினிமாத் துறையானது கலைஞர்களுக்கு களம் கொடுக்கிறது. எனினும் இலங்கையில் கலைஞர்களுக்கான களங்கள் குறைவு. எனவே இப்போதைக்கு ஊடகங்கள் மட்டுமே நமக்கு பெரிய களங்கள் என்பதால் புதிய ஊடகங்கள், வானொலிகள் என்பவற்றை வரவேற்போம்.

இறுதியாக அறிவிப்பு துறைக்கு வர விரும்பும் நமது வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் இந்த துறை சார்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள். அதிக அர்ப்பணிப்பும், ஆர்வமும், திறைமையும் இருந்தால் மட்டுமே இந்த துறை இனிக்கும். அறிவிப்பாளராக பிரபலமாவது ஒன்றும் சாதாரணமான விடயமல்ல. அவாறு பிரபலமானாலும் அந்த பிரபலத்தை தக்க வைப்பதென்பது சுலபமானதல்ல. மேலும் அறிவிப்புத் துறை என்பது ஒன்றும் மிமிக்கிரி கலை அல்ல. நமது தனித்துவம் வெளிப்படும் வகையில் பிரகாசிக்க வேண்டும். இந்த துறைக்குள் வர விரும்புபவர்கள் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். 

(மித்திரன் வார மலரில் மேற்படி நேர்காணல் வெளிவருவதற்கு காரணமாய் இருந்தவர் நமது வானொலியில் முன்பு அலுவலக முகாமையாளராகவும், அறிவிப்பாளராகவும் பணி புரிந்த ராமசாமி ரமேஷ் எனவே இந்த இடத்தில் அவருக்கு நன்றி சொல்வதும் பொருத்தமாய் இருக்கும் என நம்புகிறேன்.)

இந்த பதினொரு வருட வானொலிப் பயணத்தில் பலரும் பல்வேறு வழிகளிலும் உதவியுள்ளார்கள். எல்லோருக்கும் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். நன்றி..நன்றி..நன்றி...

Sunday, July 1, 2012

ஐரோப்பியக் கிண்ணம் 2012 ஸ்பெயின் வசம்....

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதின் நான்காவது ஐரோப்பியக் கிண்ண  கால்ப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதின. உக்ரைன் நாட்டின் தலைநகரான கிவ் இல் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. அந்த வகையில் போட்டி ஆரம்பித்து 14 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் David Silva முதலாவது கோலை போட்டார்.  இத்தாலி அணிக்கு கோல் போடும் வாய்ப்புக்கள் ஓரளவுக்கு இருந்தும் அவர்கள் அதனை தவற விட்டனர். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி சார்பாக இடைவேளைக்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக அதாவது போட்டியின் 41 ஆவது நிமிடத்தில் Jordia Alba ஸ்பெயின் அணி சார்பில் இரண்டாவது கோலை போட்டார். அந்த வகையில் இடைவேளையின் போது ஸ்பெயின் அணி 2 - 0 என்கின்றகணக்கில் முன்னிலை வகித்தது.
  இடைவேளையின் பின்னர் இத்தாலி அணிக்கு கோல் போடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே இருந்தது. மேலும் இடைவேளையின் பின்னர் இத்தாலி அணியின் ஆதிக்கம் இடைவேளைக்கு முன்பை விட அதிகமாக இருந்ததையும் காண முடிந்தது. எனினும் ஸ்பெயின் அணியின் கோல் காப்பாளரின் சாமர்த்தியத்தால் இத்தாலி அணியால் கோல் எதனையும் போட முடியவில்லை. ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் இடைவேளையின் பின்னர் மிகவும் குறைவாக இருந்த போதிலும் போட்டியின் 84 ஆவது நிமிடத்தில் Torres ஸ்பெயின் அணி சார்பில் 3 ஆவது  கோலை  போட்டார். 3 ஆவது கோல் போடப்பட்ட நான்கு நிமிடங்களின் பின்னர் அதாவது போட்டியின் 88 ஆவது நிமிடத்தில் Torres இடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட Juana Mata 4 ஆவது கோலைப்போட்டார். 
அந்த வகையில் 4 - 0 என்ற கோல் கணக்கில் இந்த போட்டியில் இத்தாலியை வீழ்த்தி சம்பியனானது ஸ்பெயின். இதன் மூலம்  இரண்டாவது தடவையாக தொடர்ந்து (2008 , 2012) ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளதுடன், நடப்பு உலக கோப்பை சாம்பியன், நடப்பு ஐரோப்பிய கோப்பை சாம்பியன் உலகின் நம்.1 அணியென தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது. மேலும் ஸ்பெயின் இதுவரை  மூன்று முறை ஐரோப்பியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன் (1964 , 2008 , 2012 ), ஒரு முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி சம்பியன் பட்டத்தை பெற முடியாமலும் போயிருந்தது(1984 ). அத்துடன் இத்தாலியானது இரண்டாவது முறையாக இறுதிப்போட்டி வரை சென்று சம்பியன் பட்டத்தை பெற தவறியுள்ளது(2000 , 2012 ) என்பதுடன் இதுவரையில் சம்பியன் பட்டம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.