மூன்று போட்டிகளைக் கொண்ட பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியின் இரண்டாவது போட்டி இன்று வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியானது 38 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க ஏழு இலக்குகளினால் வெற்றியீட்டியுள்ளது..
அபுதாபியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது இலக்குகளை இழந்து அவுஸ்திரேலிய அணியால் 248 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் மைக்கல் ஹசி 61 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சஜித் அஜ்மல் நான்கு இலக்குகளையும், ஜுனைட் கான் மூன்று இலக்குகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 50 ஓவர்களில் 249 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் களம்புகுந்த பாகிஸ்தான் அணியானது 43.4 ஓவர்கள் நிறைவில் மூன்று இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான நசீர் ஜெம்ஷேத் அபாரமாக செயற்பட்டு 97 ஓட்டங்களையும், அஸ்கர் அலி ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பற்றின்சன், ஜோன்சன், கிறிஸ்டியான் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நசீர் ஜம்ஷேத் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றமையால் தொடர் 1 - 1 என உள்ள நிலையில் எதிர்வரும் 3 ஆம் திகதி சார்ஜாவில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment