உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Monday, December 7, 2009

ஜனாதிபதித் தேர்தல்- யுத்த வெற்றியின் பிரதான பங்காளி யார்?? வாக்கெடுப்பு!!!



இன்றைய இலங்கையின் அரசியல் நிலைமையைப் பொறுத்தவரையில் யாருமே எதிர்பார்க்காத ஒரு திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எல்லாம் செயல் வடிவம் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத்பொன்சேகா எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிற்கு எதிராக போட்டியிடவுள்ளமை யாருமே எதிர்பார்க்காத ஒரு அரசியல் மாற்றம் என்றே சொல்ல வேண்டும்.
அரசாங்கம் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அறிவித்ததன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை இன்னும் சில ஆண்டுகளுக்கு யாருமே அசைக்க முடியாது என்கின்ற ரூ கருத்து எல்லா அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகள் மத்தியில் தோன்றியமை உண்மைதான். ஆனாலும் ஜெனரல் சரத்பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் இந்த கருத்துருவத்தை மீள் பரிசீலனைக்குட்படுத்தியுள்ளது. மேலும் யுத்தத்தின் வெற்றி என்கின்ற மிகப் பெரிய அரசியல் பலம் கிட்டத்தட்ட இரண்டாக உடைக்கப்பட்டிருப்பதனால் அரசாங்கத்தின் ஆயுட்காலம் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது யுத்த வெற்றியின் பிரதான பங்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை சாருமா?? அல்லது முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை சாருமா?? என்று சிந்திக்கும் நிலைக்கு சிங்கள மக்கள் தள்ளப்ப்பட்டிருக்கிறார்கள்.

முன்பு அரசாங்கம் யுத்த வெற்றியை வைத்துக் கொண்டு நீண்ட காலம் அரசியல் நடாத்த முடியாது என்றும் இன்னும் சில வருடங்களில் படித்த மக்கள் பொருளாதாரம் குறித்து சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் அப்போது யுத்த வெற்றி இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் அந்த நீண்ட ஆய்ட்காலத்தைக் கடந்து யுத்தம் நிறைவடைந்திருக்கும் ஆறு மாதத்துக்குள் அரசாங்கம் தனது இருப்புப் பற்றி சிந்திக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேசப்பட்டபோது ஜனாதிபதி யுத்த வெற்றியின் பரபரப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்கக் கூடும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த யுத்த வெற்றி யாருக்கு சொந்தமானது??? என்று தீர்மானிக்கும் சக்தியாக சிங்கள மக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் அரசியலுக்குள் நுழையப்போவதில்லை என்றுகூறிய சரத்பொன்சேகா திடீரென அரசியலுக்குள் நுழைந்ததன் பின்னணியில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க புலனைவுத்துறையையே சந்தேகிக்கின்றார்கள்.


நிலைமை இவ்வாறு இருக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என சிறுபான்மைக் கட்சிகள் தீர்மானித்து அறிவித்துக் கொண்டிருக்கின்றன. எனினும் பாராளு மன்றத்தில் அதிக ஆசனத்தைக் கொண்ட சிறுபான்மைக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்து நிலைப்பாடு குறித்து இன்னமும் தெளிவான ஒரு நிலைப்பாட்டிற்கு வரவில்லை. எந்த அடிப்படையில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிறைய சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. பலவாறான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டமைப்புக்குள் இவ்வாறான சிக்கல்கள் இருப்பது இயல்பானதுதான்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள்ள ஐந்து சாத்தியமான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்திருப்பதாக தெரிய வருகின்றது. இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பது, விக்கிரமபாகு கருணாரட்னவை ஆதரிப்பது, தேர்தலை புறக்கணிப்பது, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது, மக்களை தங்கள் தங்கள் விருப்பின்படி செயற்படுமாறு பணிப்பது ஆகியவையே அந்த ஐந்து வழிமுறைகளுமாகும்.

இதில் முதல் இரண்டு வழிமுறைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல் அடையாளத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன. கடைசி மூன்று வழி முறைகளில் தேர்தலைப் புறக்கணிக்கக்கோருவது தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இலங்கையில் குறைவடைந்திருக்கும் நிலையில் ஒரு அரசியல் தற்கொலையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமையக்கூடும். அதாவது கடந்த முறைக்கு பின்னர் இன்னுமொரு தடவை தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் மக்கள் தயாராக இருப்பார்களா என்கின்ற சந்தேகம் உள்ளது. மேலும் தமிழ் மக்களை தங்கள் விருப்பின்படி செயற்படுமாறு பணிப்பது ஒரு பொறுப்புவாய்ந்த அரசியல் கட்சிக்கட்சிக்கு நாகரீகமாக இருக்காது. மேலும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது என்பதும் குறுகிய காலத்துக்குள் மிகுந்த சவாலான ஒன்றாக இருக்கும்.. மேலும் எல்லா சிறுபான்மைக் கட்சிகளினதும் ஆதரவுடன் இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளுமானால் அது வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ் சமூகத்திற்கோ ஜனாதிபதித் தேர்தல் முக்கியமான ஒன்று இல்லை என்றாலும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற தீர்மானமே அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதன் வாக்கு வங்கியை தீர்மானிக்கும் என்ற அடிப்படையில் தெளிவாகச் சிந்திக்கவேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. ஆனால் அண்மைக் கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது. அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்படிக்கை, ஒப்பந்தம், உறுதிமொழி என்கின்ற சொற்களைப் பயன்படுத்தி ஆதரவு வாழங்கினால் அதுவும் ஒரு அரசியல் தற்கொலைக்கு சமனாகும் என்பது பொதுவான கருத்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பிலான நிலைமைகள் இவ்வாறு இருக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மைச் சமூகம் இருக்கும் என்கின்ற ஒரு வகையிலான கருத்து முன்னைய காலங்களைப் போல முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதாவது முன்னைய காலங்களுக்கு பொருத்தமாக இருந்த ஒரு கருத்து மீள் பரிசீலனை இன்றி தொடர்ந்தும் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிச் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள இலங்கையில், சிறுபான்மைக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத சூழலில் தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகமே தீர்மானிக்கும் சக்திகளாக இந்தத் தேர்தலிலும் இருக்கப்போகின்றன என்று அறுதியிட்டு சொல்லிவிட முடியாது. அதாவது தற்போது சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள் திட்டமிட்டு சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மைச் சமூகம் இருக்கும் என்கின்ற கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

உண்மையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கட்சிகளின் வாக்கு வங்கியை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் வெற்றி வாய்ப்பு மிக மிக அதிகம் என்கின்றபோதிலும் ஜனாதிபதித் தேர்தல் கட்சிக்கும் அப்பால் தனிப்பட்ட மரியாதைகளின் அடிப்படையிலானது என்பதால் தேர்தல் முடிவுகளை எளிதில் எடைபோட்டுவிட முடியாது. மேலும் இரண்டு வேட்பாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கதாநாயகர்கள் என்பதால் சிங்கள மக்கள் மத்தியில் இருவருக்கும் அதிகமான மரியாதை நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறான ஒரு சூழலில் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை தவிர்த்துப் பார்க்கின்றபோது நடைபெற இருப்பது யுத்த வெற்றியின் பிரதான பங்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை சாருமா?? அல்லது முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவைச் சாருமா?? என்கின்ற ஒரு கருத்துக்கணிப்பாகவே அமையவுள்ளது.. அன்றி தமிழ் பேசும் சமூகத்திற்கு இதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்பதே உண்மை...



2 comments:

KANA VARO said...

//அதாவது யுத்த வெற்றியின் பிரதான பங்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை சாருமா?? அல்லது முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை சாருமா?? என்று சிந்திக்கும் நிலைக்கு சிங்கள மக்கள் தள்ளப்ப்பட்டிருக்கிறார்கள்.//

மக்கள் எங்க சிந்தித்து போடுறாங்க ? ஆண்டாண்டு காலமா தங்கட தலைவனுக்கு தான் போடுறாங்க. மலையகத்திலையும் இது தான் நடக்குது...

//ஆனால் அண்மைக் கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது. அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்படிக்கை, ஒப்பந்தம், உறுதிமொழி என்கின்ற சொற்களைப் பயன்படுத்தி ஆதரவு வாழங்கினால் அதுவும் ஒரு அரசியல் தற்கொலைக்கு சமனாகும் என்பது பொதுவான கருத்து.//

இவங்க தமிழ் மக்களுக்கு என்ன செய்து கிழித்தவங்க?
எந்த முஞ்சியை வைத்துகொண்டு திருப்ப வாக்கு கேக்க போறாங்க ..
சொந்த புத்தி இல்லாத சொல் புத்தி கேக்கிறவங்க தானே...

மயில்வாகனம் செந்தூரன். said...

//VARO said...///

///மக்கள் எங்க சிந்தித்து போடுறாங்க ? ஆண்டாண்டு காலமா தங்கட தலைவனுக்கு தான் போடுறாங்க. மலையகத்திலையும் இது தான் நடக்குது...///

உண்மைதான் வரோ... சிங்கள மக்களைப் பற்றி நாங்கள் பேசிக்கொன்டிருப்பதவிட நமது மலையாக மக்கள் மத்தியில் அவசரமாய் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன்.

///இவங்க தமிழ் மக்களுக்கு என்ன செய்து கிழித்தவங்க?
எந்த முஞ்சியை வைத்துகொண்டு திருப்ப வாக்கு கேக்க போறாங்க ..
சொந்த புத்தி இல்லாத சொல் புத்தி கேக்கிறவங்க தானே...///
ஆதங்கம் புரிகிறது வரோ.. அண்மையில் ஒரு எழுத்தாளர் தமது சக உறுப்பினர் ஒருவரின் உரிமைகள் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜனநாயகம் செத்துப் போயுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தல் அவசியம்தானா??? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.