அப்போது நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் கல்லூரி (வித்தியானந்தக் கல்லூரி) முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து கிட்டத்தாட்ட ஐந்து ஆறு கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்திருக்கும் முள்ளியவளை என்னும் இடத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்திருந்தது. அந்த வகையில் பெரும்பாலும் முல்லைத்தீவையும் அதனை அண்டிய கரையோர கிராமங்களிலும் வசித்த பெரும்பாலான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்காக வித்தியானதக் கல்லூரிக்கே வருவதுண்டு.

மிகுந்த சந்தோஷத்துடன் அவர்களின் வீட்டிற்கு உந்துருளியில் ஆண்களும் ஈருருளியில் பெண்களும் என பெரும்பாலான வகுப்பு உறவுகள் அனைவரும் கள்ளப்பாட்டு கிராமத்திற்கு சென்றோம். அன்றுதான் நான் முதன்முதலாக அந்தக் கிராமத்துக்கு சென்றிருந்தேன். கள்ளப்பாடு யுத்தத்தின் பிடிக்குள் சிக்குண்டு அப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ச்சியடையத் தொடங்கிக் கொண்டிருந்தது. பாதைகள் பல செப்பனிடப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனாலும் கள்ளப்பாட்டின் அழகே தனி அழகுதான் என்று சொல்லுமளவுக்கு மிகவும் அமைதியான ஒரு கிராமமாக காட்சி தந்தது. உண்மையில் கள்ளப்பாடு என்பது அந்தக் கிராமத்தின் திரிபடைந்த ஒரு பெயர் என்றே நான் அறிகிறேன். அதாவது பல கல்விமான்கள் வாழ்ந்த இடமென்பதால் அந்த இடத்துக்கு கல்விப்பாடு என்றே பெயர் வழங்கப்பட்டிருந்தது. எனினும் பின்நாளில் அது கள்ளப்பாடு எனப் பெயர் மாறிப்போனது.
அன்று நாங்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கள்ளப்பாட்டுக்குள் கால்பதித்தோம். ஒரு சந்தோஷமான பண்டிகை. அதாவது மக்களின் பாவங்களைப் போக்க ஜேசு பாலன் பூமியில் அவதரித்த நாள். பெரும்பாலான கிறிஸ்தவ மக்களால் மட்டுமன்றி எல்லோராலும் கொண்டாடப்படுக் கொண்டிருந்தது. அன்று முதலில் நாங்கள் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 100 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த நண்பன் ஒருவனின் வீட்டுக்கு சென்றோம். அங்கேதான் எங்களுக்கு மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த நண்பனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து அப்படியே கடற்கரைக்கு சென்றோம். கடற்கரையில் இனிமையாக பொழுதுகளை கழித்துவிட்டு அப்படியே அடுத்ததாக மற்றைய நண்பனின் வீட்டிற்கு சென்றோம். மற்ற நண்பனின் வீடு கடற்கரையிலிருந்த சற்று தொலைவிலையே அமைந்திருந்தது. 

அங்கே சென்ற போது அங்கே எமக்காக சிற்றுண்டிகள், மென்பானங்கள் பரிமாறப்பட்டன. நண்பனின் பெற்றோர், சொந்தங்கள் அன்போடு உபசரித்து வழியனுப்பி வைக்க மீண்டும் முதலாவது நண்பனின் வீட்டிற்கு வந்தோம். அங்கே எமக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. மிகவும் சுவையான உணவு நண்பனின் பெற்றோரினதும், உறவுகளதும் அன்பான உபசரிப்பினால் இன்னும் இன்னும் சுவையாக இருந்தது. கிட்டத்தட்ட காலை 10 மணிக்கு கள்ளப்பாட்டுக்கு சென்ற நாங்கள் மாலை 5 மணியளவில்தான் அங்கிருந்து புறப்பட்டு வந்தோம். நாங்கள் வந்தபோதிலும் நமது நண்பர்கள் அவர்களது வீட்டிலையே தங்கிக்கொண்டார்கள்.
இவ்வாறாக அன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைய, மறு நாள் 26 .12 .2004 பொழுது புலர்ந்தது. இந்தப் பொழுது புலர்ந்திருக்கவே கூடாது. அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. காலையில் உயிரியல் வகுப்பு 8 .30 இற்கு இருந்தது. அதனால் கள்ளப்பாட்டிலிருந்து எமது நண்பர்கள் முள்ளியவளைக்கு வந்திருந்தார்கள். இதில் கடற்கரைக்கு அண்மையில் வீடு அமைந்திருந்த நண்பன் பேரூந்தை தவறவிட்டிருந்ததால் முல்லைத்தீவு மாகா வித்தியாலத்தில் கணிதப்பிரிவில் கல்விகற்றுக்கொண்டிருந்த எமது சக நண்பன் ஒருவன் தனது உந்துருளியில் கொண்டுவந்து முள்ளியவளையில் சேர்த்திருந்தான். ஆனாலும் நேரம் தாமதமாகியமையால் மேற்படி நண்பன் அன்று வகுப்புக்கு வரவில்லை.
நாங்கள் கல்விகற்றுக் கொண்டிருந்தோம். வீதியால் சென்ற ஒருவர் அந்த தனியார் கல்விநிலைய நிர்வாகியைப் பார்த்து கடல் வருகுதாம் ஏன் பிள்ளைகளை வைச்சுக் கொண்டிருக்கிறியள் என்று கத்திக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் வேகமாக சென்றுகொண்டிருந்தார். உடனே அவசரமாக நிர்வாகி எங்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியையிடம் சொல்லிவிட்டு எங்களை வீடுகளுக்கு செல்லுமாறு சொன்னார். நாங்களும் மிகவும் வேகமாக எங்கள், எங்கள் துவிச்சக்கர வண்டிகளை மிதித்துக்கொண்டு வீடுகளுக்கு புறப்பட்டோம். நான் எனது வீட்டை அடைந்த போது அம்மா வீட்டு வாசலில் வீதியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
வீதியால் வாகனங்கள், மிக வேகமாக நகர்துகொண்டிருந்தன.. நேரம் தாமதித்ததால் வகுப்புக்கு வராத எனது நண்பன் ஒரு துவிச்சக்கர வண்டி சகிதம் அம்மாவுடன் கதைத்துக்கொண்டிருந்தான். அம்மாவின் கையில் வானொலிப்பெட்டி இருந்தது. உடனே அம்மா என்னிடம் என்ன கடல்வருகாதாம் என்று சொல்லிறாங்களே உண்மையா?? என்று கேட்டார். நானும் எனக்குத் தெரிந்ததை சொன்னேன். அப்போது அம்மா குறித்த நண்பனின் பெயரை விளித்து "இவன் கள்ளப்பாட்டுக்கு போகப்போறானாம் வேண்டாம் என்று சொல்லு" என்று என்னிடம் கூற நான் நண்பனை சமாதானம் செய்துகொண்டே விடுமுறையில் வவுனியாவிலிருந்து வந்து இச் சம்பவங்களைக் கண்டு கலங்கிப்போய் அழுதுகொண்டிருந்த உறவினர்களை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்புவதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் நண்பனைத் தேடினால் எங்கும் அவனைக் காணவில்லை.,
காணாமல்போயிருந்த நண்பனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வைத்தியசாலையில் சென்று பார்த்தால் அங்கேயும் அவன் இல்லை. அப்போதுதான் அவனது அப்பா சுமாரான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். உடனே அவரிடம் சென்று அவருக்கு தேவையானவற்றை செய்துவிட்டு உரையாடியபோது. அவர் தனது மனைவி மற்றும் அங்கிருந்த இரண்டு பெண் பிள்ளைகளும் உயிர் தப்ப வாய்ப்பேயில்லை என்ற அந்த துயரச் செய்தியை சொன்னார். அவர் அப்படி சொன்னாலும் அவர்கள் நிச்சயம் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்றே நான் நம்பினேன்.
அவர் தனது மகன் எங்கே என்று என்னிடம் கேட்டார். அவனைக் காணவில்லை என்று இந்தச் சந்தர்ப்பத்தில் சொன்னால் அவரின் மனம் துன்பப்படும் என்று எண்ணியவனாக "அவன் இப்ப என்னோட நின்றவன் நான் கூட்டி வாறன் நீங்கள் வாங்கோ" என்று அவரை அழைத்துக் கொண்டுபோய் நண்பன் தங்கியிருந்த அறையில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு, நண்பனை மீண்டும் தேடத் தொடங்கினேன். கிட்டத்தாட்ட மதியப்பொழுது அம்மாவுக்கு சொல்லாமல் முல்லைத்தீவை நோக்கிச் சென்றேன். அங்கே நண்பனைத் தேடினேன். நான் பயணித்த உந்துருளி கடல் நீர் உட்புகுந்தமையால் இயங்க மறுத்தது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் அங்கும் நண்பனைக் காணாத ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினேன்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில்தான் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கிய எம் உறவுகள் சிலர் தங்கவைக்கப்பட்டிருந்தமையால் அங்கு சென்று விசாரித்தபோது நண்பன் அங்கே வந்து சென்றமை தெரியவந்தது. ஆனாலும் அவனை அங்கே காணக்கிடைக்கவில்லை. உடனே நானும் என்னுடன் வந்த அண்ணாவும் எமது உந்துருளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு வந்தோம். நல்ல வேளையாக நமது இரு நண்பர்கள் எங்களைத் தேடி இன்னுமொரு உந்துருளியில் வந்தமையால் அவர்களின் உதவியுடன் எமது உந்துருளி சக்கரத்தை கழற்றிக்கொண்டு ஒட்டுசுட்டானிலிருந்து நான்க்கைந்து கிலோமீற்றருக்கு அப்பாலிருந்த கற்சிலைமடுவுக்கு கொண்டுபோனால் டியுப் ஒட்ட முடியாதளவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. பிறகு ஒரு புது டியுப் வாங்கி பொருத்திக் கொண்டு ஒட்டுசுட்டானிலிருந்து முள்ளியவளையை நோக்கி புறப்பட்டோம்.

கடைசிவரையும் நண்பனின் அம்மாவினதோ அல்லது அக்காமாரினதோ உடலங்களை காணக்கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களில் அம்மாவினதும், ஒரு அக்காவினதும் உடலம் முதலிலும் பின்னர் மற்ற அக்காவினது உடலமும் கண்டெடுக்கப்பட்டு அந்த இடத்திலையே அடக்கம் செய்யப்பட்டதாக அறியமுடிந்தது. இப்படி பல பல கதைகள்.. பலருக்கும் பல பல சோகங்கள்.. மறக்கச் சொன்னாலும் உள்ளம் இன்றும் அழுகிறது.. ஒன்றா, இரண்டா.. எத்தனை சொந்தங்கள் இந்த ஆழிப்பேரலை என்னும் அரக்கனால் பலிகொள்ளப்பட்டார்கள்... இந்த நாளில் இழந்த எம் உறவுகளை மனதில்கொண்டு தியானிப்போம்.. ஏய் ஆழிப்பேரலையே இனி ஒருபோதும் உன் அகோரதாண்டவத்தை அரங்க்கேற்றிவிடாதே!!
1 comment:
///தமிழினி said...///
உங்கள் வருகைக்கும், உதவிக்கும் இதயத்தால் இனிய நன்றிகள்.. அடிக்கடி வாருங்கள்..
Post a Comment