எனது "எப்பிடி இருந்ததை எல்லாம் இப்பிடியாக்கீட்டாங்க" என்ற பதிவைத் தொடர்ந்து அவ்வாறான பல பதிவுகளை பதிய நினைத்திருந்தேன். ஆனாலும் துரதிஷ்டவசமாக மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலப்பகுதியாக வலைப்பதிவுப் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. இந்த நிலையில் இன்றைய பதிவின் மூலம் திரிபடைந்துள்ள சில அர்த்தங் கொள்ளல்களை பகிர்த்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
எனது "எப்பிடி இருந்ததை எல்லாம் இப்பிடியாக்கிட்டாங்க" என்ற பதிவில் "களவும் கற்று மற" என்பது "களவும், கத்தும் மற" என்பதிலிருந்து திரிபடைந்த ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அண்மையில் ஒரு பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர், "களவும் கற்று மற" என்றால் சங்க காலத்தில் களவு என்பது காதலைக் குறித்ததாகவும் "காதலும் கற்று மற" என்பதே இதன் உண்மையான அர்த்தம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கு நான் முதலில் சொன்ன "களவும், கத்தும் மற" என்பதில்தான் அதிக உடன்பாடு என்கின்ற போதிலும் இந்த இரண்டு கருத்துக்களையும், இதனைப் போன்று சொல்லப்படுகின்ற ஏனைய கருத்துக்களையும் நன்கு அலசி ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். (தயவு செய்து உங்களுக்கு தெரிந்த இது பற்றிய விடயங்களை கருத்துரையில் மறக்காமல் குறிப்பிடுங்கள். மிகுந்த உதவியாக இருக்கும்.)
சரி இந்த விடயம் இவ்வாறு இருக்க இனி அடுத்த விடயத்திற்கு வருவோம். இது சில வேளைகளில் வேடிக்கையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் என்னை இது கொஞ்சம் சிந்திக்க வைத்த ஒன்று என்பதால் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். அதாவது "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்று நமது தமிழ்ச் சமுதாயத்திடம் ஒரு கருத்து நிலவுகின்றது. இதனைச் சாதாரணமாக நாங்கள் ஊரில் உள்ள மற்றைய பிள்ளைகளுக்கு உணவு, அறிவு ஊட்டி வளர்த்தால் தனது பிள்ளை தானாக வளரும் என்று அர்த்தம் கொள்கின்றோம். ஆலயங்கள் தேவையில்லை என்று ஆரம்பிக்கும் காமராசு திரைப்படப் பாடலிலும் "ஊராரை ஊட்டி வளர்த்தேன் உலகே உன் உறவாய் மாறும்.." என்று ஒரு வரியும் இந்த அர்த்தத்தைத்தான் உணர்த்துகிறது. ஆனால் இதற்கு இன்னுமொரு அர்த்தம் சொல்லப்படுகின்றது. அதாவது ஒரு கணவனுக்கு தனது மனைவி ஊரான் பிள்ளையாகத்தான் இருப்பாளாம். அந்த வகையில் ஊரான் பிள்ளையான மனைவி கருவுற்றிருக்கும் காலப் பகுதியில் அவளுக்கு சத்தான உணவுகளைக் கொடுத்தால் அவள் வயிற்றில் வளரும் கணவனின் பிள்ளை (தன் பிள்ளை) தானாய் வளரும் என்று பொருள் கொள்கின்றார்கள். வேடிக்கையாகப் பார்க்காமல் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் இதுவும் சரியானது என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் எமது தமிழ்ச் சமுதாயத்தின் ஆரம்ப காலங்கள் பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியவையாக அல்லது முதன்மைப்பசுத்தியவையாகவே அமைந்திருக்கின்றன.. ஆகவே ஆண்களுக்கான ஒரு தத்துவமாக இது உருவாகியிருக்கலாம்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கின்ற விடயம் இவ்வாறு இருக்க இனி அடுத்த விடயத்துக்கு வருவோம். இது பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையிலான ஒரு உறவை சொல்லுவது. அதாவது "ஏவா மக்கள் மூவா மருந்து" என்கின்ற தத்துவத்திற்கு நம்மில் பலரும் "சொல்லாமலே பெற்றோர்களின் தேவைகளை உணர்ந்து செயற்படும் பிள்ளைகள் சிறப்பானவர்கள்" என்று பொருள்கொள்கின்றோம். அதாவது "மூவா மருந்து" என்றால் என்ன அதற்கான முழுமையான அர்த்தம் என்னவென்று நம்மில் பெரும்பாலானவர்கள் சிந்தித்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த "ஏவா மக்கள் மூவா மருந்து" என்பதற்கு "பெற்றோர்களின் தேவைகள் என்னவென்று அவர்கள் சொல்லாமலே பிள்ளைகள் செய்தால் பெற்றோர்களின் நரை, திரை, முதுமை ஆகிய மூன்று வியாதிகளுக்கும் அதுவே சிறந்த மருந்து" என்று பொருள்கொள்ளப்படுகின்றது. இங்கு நரை என்பது தலை நரைத்தலையும், திரை என்பது கண்பார்வை குறைதலையும், முதுமை என்பது வயது அதிகரிப்பதால் வெளித்தெரியும் உடலமைப்பையும் குறிக்கின்றது. (ஆஹா நாங்களெல்லாம் எவ்வளவு முக்கியமான வியாதிகளுக்கு மருந்துகளாக இருக்கின்றோம் என்று பெருமைகொள்ள வேண்டுமென்றால் முதலில் ஏவா மக்களாக இருக்க வேண்டும்.)
இந்த வேளையில் எனது தந்தையார் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகின்றது. சொல்லாமல் செய்வார் பெரியார், சொல்லிச் செய்வார் சிறியார், சொல்லியும் செய்யார் கயவர்.
ஆகமொத்தம் நமது தமிழ் மொழியில் பல விடயங்கள் திரிபடைந்துதான் உள்ளன. அவற்றிற்கான உண்மையான அர்த்தங்களை அறிந்துகொள்வது கடினமென்றாலும் அறிந்து கொண்டாலும் இந்தக் காலத்துக்கு அவைபொருத்தமாக அமையாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை இலகுவாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இருந்தாலும் ஆரம்ப அல்லது மாற்று அர்த்தங்களை அறிந்து வைத்திருப்பதிலும், அறிகின்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் தப்பில்லை என்று நினைக்கின்றேன். எனவே எனது இவ்வாறான பதிவுகளும் அவ்வப்போது தொடரும்.....
No comments:
Post a Comment