உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Wednesday, December 30, 2009

விடைகொடுத்து.. வரவேற்கிறோம்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

எனது பதிவுகளால் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் எனது இதற்கு முந்தைய "தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள புதுவழி சங்க்காவின் சாதுரியம்" என்ற தலைப்பிலமைந்த பதிவானது இலங்கையணி மீது சேறு பூசுவதாக அமைந்துள்ளது என நான் அதிகம் மதிக்கும் எனது ஊடகத் துறையிலும், வலைத் துறையிலும் குருநாதராக இருக்கும் மதிப்புக்குரிய
திரு A . R .V .லோஷன் அவர்கள் தனது கருத்துரையின் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்தப் பதிவின் தலைப்பு இலங்கையணி ரசிகர்களை சீண்டியது என்பது உண்மைதான். எனவே மேற்படி தலைப்புக்காக வருந்துகிறேன். இந்தத் தலைப்பால் அசெளகரியங்களுக்கு உள்ளான இலங்கை அணி ரசிகர்களை மன்னிக்க வேண்டுகிறேன்.. மேலும் இனிவருங் காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுவேனெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்...

சரி, நிலைமை இவ்வாறு இருக்க ஒரு பிரபல தனியார் தமிழ் வானொலியில் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு பற்றிய கருத்துக் கணிப்பின் உந்துதலால் எனது மனக் கிடைக்கைகளைக் கொட்டி இந்த 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து புதிய 2010 ஆம் ஆண்டை வரேவேற்கும் முகமாக ஒரு அவசரப்பதிவாக இதனைத் தருகின்றேன்.

உண்மையில் ஒவ்வொரு ஆண்டிலும் இன்பங்களும், துன்பங்களும் வரும் என்றாலும் 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் வாழ்வில் சொல்லணா துயரங்களைத் தந்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டு எனது பார்வையில் மிகவும் மோசமான ஒரு ஆண்டு. கிட்டத் தட்ட 30 ஆண்டுகள் நீரூற்றி வளர்த்த விருட்சத்தை வேரோடு சாய்த்த 2009 ஆம் ஆண்டை நான் வெறுக்கிறேன். எமது உறவுகளின் உயிர்களை வகை தொகையின்றி வாரிக் குடித்த இந்த ஆண்டு ஏன் வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் இந்த ஆண்டில் இழந்தவை ஏராளம் ஆனால் பெற்றவை என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இன்று இலங்கையில் உள்ள தமிழர்களை அடிமைகள் என்கின்ற நிலைக்கு கொண்டு வந்த ஆண்டு இது. வெறுமைகளையும், ஏமாற்றங்களையும் ஏராளமாக அள்ளித் தந்த 2009 ஆம் ஆண்டே உனக்கு விடைகொடுக்கின்றோம்.
சரி 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்தால் அடுத்து என்ன 2010 ஆம் ஆண்டு வரப்போகின்றது.. வருக!! வருக!! 2010 . நீயாவது நமது வாழ்வில் ஒளியேற்றுவாய் என்கின்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் உன்னை வரவேற்கிறோம். வந்து எம் வாழ்வில் வசந்தம் தருவாய் என்று அன்போடு வரவேற்கிறோம். அந்தவகையில் மலரப்போகும் 2010 ஆம் ஆண்டு எமக்கான இனிய எதிர்காலத்தின் புதிய ஆரம்பமாக அமையட்டும்.

என் வலைத் தளத்துக்கு வந்து செல்லும் வாசகர்களுக்கும், கருத்துரைகளால் உற்சாகமூட்டும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இதயங் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டிலும் எனது பார்வைகளும், பதிவுகளும் உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் தொடரும்.

Sunday, December 27, 2009

தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள புது வழி சங்காவின் சாதுரியம்!!

இலங்கை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய டெஸ்ட்,20 -20 ,ஒரு நாள் தொடர்கள் ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளன. அந்தவகையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை ஒன்றைத்தானும் வெல்ல முடியாமல்போனதுடன் ஒரு போட்டியை சமன் செய்திருந்தது. இருந்தபோதிலும் 20 -20 போட்டியில் இலங்கை ஒருபோட்டியில் வெற்றிபெற்று தொடரை சமநிலை செய்தது. மேலும் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3 -1 என்ற கணக்கில் வென்று தொடரை வெற்றிகொண்டிருக்கின்றது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டி மோசமான ஆடுகளம் என்ற இலங்கையனித் தலைவர் குமார் சங்கக்காரவின் புகாரையடுத்து 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் டில்லியில் இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

எனவே முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கையணி 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட நிலையில் 5 விக்கட்டுகளை இழந்து 85 ஓட்டங்களை பெற்று தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான் அணியின் தலைவர் சங்கக்காரவினால் டில்லி மைதானம் மோசமானது என்கின்ற புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இன்றைய போட்டியில் இலங்கையணி வீரர்கள் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அந்தவகையில் நான்காவது ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தரங்க போட்டியின் முதலாவது பந்துவீச்சிலையே ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். உண்மையில் இதன் காரணமாக இலங்கையணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். இருந்தபோதிலும் நான்காவது போட்டியில் சொதப்பியவர்களும், இரவு நேர மதுபான விடுதிச் சர்ச்சையில் சிக்கியவர்க்களுமான டில்ஷான், சனத் ஜெயசூரிய ஆகிய இருவரும் இந்தப்போட்டியில் கொஞ்சம் நிதானமாக செயற்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இதில் சனத் இலங்கையணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக 31 ஓட்டங்களையும், டில்ஷான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய எந்தவொரு வீரரும் இலங்கையணி சார்பில் 20 ஓட்டங்களைக் கடக்கவில்லை. உதிரிகளாக இந்தியணியினரால் 10 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இன்னுமொரு முக்கியமான விடயம் இன்றையதினம் இலங்கையணி சார்பாக தனது முதலாவது ஒரு நாள்போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட முதுமலிங்க புஷ்பகுமார ஆட்டம் கைவிடப்படும்போது ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இன்றையபோட்டியில் இலங்கையணியின் சராசரி ஓட்டப்பெறுமானம் 3 .53 ஆகக் காணப்பட்டது.

இந்தியணி சார்பாக இன்றைய தினம் சஹீர்ஹான் 8 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 31 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இன்றைய தினம் தனது ஒருநாள் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட சுதீப் தைகி 6 .3 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 15 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். ஹர்பஜன்சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 12 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். நேஹரா 5 ஓவர்கள் பந்து வீசி 24 ஓட்டங்களைக்கொடுத்த போதிலும் எந்தவித விக்கட்டினையும் அவரால் வீழ்த்த முடியாமல்போனது.

இந்தியஅணியின் பந்து வீச்சு இவ்வாறு இருக்க இன்றைய போட்டி கைவிடப்பட்டமையால் மோசமான ஒரு தோல்வியிலிருந்து இலங்கையணி தப்பியதாக சொல்லிக்கொள்ள முடியும். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அதாவது டில்லி ஆடுகளம் மோசமானது என்பது சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது??? மேலும் இன்றையபோட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படாத ஒரு போட்டி என்றாலும் கொஞ்சம் விறுவிறுப்பான போட்டியாக இருக்குமென்றே பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஏமாற்றியது இலங்கையணி... சரி இனி வங்கதேசத்தில் நடைபெறவுள்ள முக்கோணத் தொடரிலாவது இந்தியாவை இலங்கை பழிதீர்க்குமா??? வழமைபோல பொறுத்திருந்துதான் பார்ப்போமே!!!

Saturday, December 26, 2009

ஐந்தாண்டுகள் அசைந்தோடியும் உள்ளம் இன்றும் அழுகிறது...

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்த நாள் ஏன் வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆம் நமது உறவுகளின் உயிர்களைக் குடித்த ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த வேளையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னரும், அதற்கு பின்னரும் நிகழ்ந்த பல சம்பவங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

அப்போது நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் கல்லூரி (வித்தியானந்தக் கல்லூரி) முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து கிட்டத்தாட்ட ஐந்து ஆறு கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்திருக்கும் முள்ளியவளை என்னும் இடத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்திருந்தது. அந்த வகையில் பெரும்பாலும் முல்லைத்தீவையும் அதனை அண்டிய கரையோர கிராமங்களிலும் வசித்த பெரும்பாலான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்காக வித்தியானதக் கல்லூரிக்கே வருவதுண்டு.

இவ்வாறாக எமது வகுப்பில் கள்ளப்பாட்டு (கல்விப்பாடு) கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் நாங்கள் சாதாரண தரம் படிக்கும்போதே எமது வகுப்பில் வந்து இணைத்திருந்தார்கள். பின்னர் உயர்தரத்திலும் அவர்கள் எமது பிரிவிலையே (உயிரியல் பிரிவு) தொடர்ந்தார்கள். அவர்கள் இருவரும் கல்வியில் மிகுந்த ஆர்வமுடையவர்கள் என்பதுடன் இருவருமே கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள். (இங்கு அவர்கள் கிறிஸ்தவ சமயத்தவர்கள் என்று குறிப்பிடுவதால் மத ரீதியான வேற்றுமை காட்டுவதாக அர்த்தம் கொள்ளவேண்டாம்.) எனவே 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகைக்காக எங்களை அழைத்திருந்தார்கள்.

மிகுந்த சந்தோஷத்துடன் அவர்களின் வீட்டிற்கு உந்துருளியில் ஆண்களும் ஈருருளியில் பெண்களும் என பெரும்பாலான வகுப்பு உறவுகள் அனைவரும் கள்ளப்பாட்டு கிராமத்திற்கு சென்றோம். அன்றுதான் நான் முதன்முதலாக அந்தக் கிராமத்துக்கு சென்றிருந்தேன். கள்ளப்பாடு யுத்தத்தின் பிடிக்குள் சிக்குண்டு அப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ச்சியடையத் தொடங்கிக் கொண்டிருந்தது. பாதைகள் பல செப்பனிடப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனாலும் கள்ளப்பாட்டின் அழகே தனி அழகுதான் என்று சொல்லுமளவுக்கு மிகவும் அமைதியான ஒரு கிராமமாக காட்சி தந்தது. உண்மையில் கள்ளப்பாடு என்பது அந்தக் கிராமத்தின் திரிபடைந்த ஒரு பெயர் என்றே நான் அறிகிறேன். அதாவது பல கல்விமான்கள் வாழ்ந்த இடமென்பதால் அந்த இடத்துக்கு கல்விப்பாடு என்றே பெயர் வழங்கப்பட்டிருந்தது. எனினும் பின்நாளில் அது கள்ளப்பாடு எனப் பெயர் மாறிப்போனது.

அன்று நாங்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கள்ளப்பாட்டுக்குள் கால்பதித்தோம். ஒரு சந்தோஷமான பண்டிகை. அதாவது மக்களின் பாவங்களைப் போக்க ஜேசு பாலன் பூமியில் அவதரித்த நாள். பெரும்பாலான கிறிஸ்தவ மக்களால் மட்டுமன்றி எல்லோராலும் கொண்டாடப்படுக் கொண்டிருந்தது. அன்று முதலில் நாங்கள் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 100 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த நண்பன் ஒருவனின் வீட்டுக்கு சென்றோம். அங்கேதான் எங்களுக்கு மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த நண்பனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து அப்படியே கடற்கரைக்கு சென்றோம். கடற்கரையில் இனிமையாக பொழுதுகளை கழித்துவிட்டு அப்படியே அடுத்ததாக மற்றைய நண்பனின் வீட்டிற்கு சென்றோம். மற்ற நண்பனின் வீடு கடற்கரையிலிருந்த சற்று தொலைவிலையே அமைந்திருந்தது.
அங்கே சென்ற போது அங்கே எமக்காக சிற்றுண்டிகள், மென்பானங்கள் பரிமாறப்பட்டன. நண்பனின் பெற்றோர், சொந்தங்கள் அன்போடு உபசரித்து வழியனுப்பி வைக்க மீண்டும் முதலாவது நண்பனின் வீட்டிற்கு வந்தோம். அங்கே எமக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. மிகவும் சுவையான உணவு நண்பனின் பெற்றோரினதும், உறவுகளதும் அன்பான உபசரிப்பினால் இன்னும் இன்னும் சுவையாக இருந்தது. கிட்டத்தட்ட காலை 10 மணிக்கு கள்ளப்பாட்டுக்கு சென்ற நாங்கள் மாலை 5 மணியளவில்தான் அங்கிருந்து புறப்பட்டு வந்தோம். நாங்கள் வந்தபோதிலும் நமது நண்பர்கள் அவர்களது வீட்டிலையே தங்கிக்கொண்டார்கள்.

இவ்வாறாக அன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைய, மறு நாள் 26 .12 .2004 பொழுது புலர்ந்தது. இந்தப் பொழுது புலர்ந்திருக்கவே கூடாது. அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. காலையில் உயிரியல் வகுப்பு 8 .30 இற்கு இருந்தது. அதனால் கள்ளப்பாட்டிலிருந்து எமது நண்பர்கள் முள்ளியவளைக்கு வந்திருந்தார்கள். இதில் கடற்கரைக்கு அண்மையில் வீடு அமைந்திருந்த நண்பன் பேரூந்தை தவறவிட்டிருந்ததால் முல்லைத்தீவு மாகா வித்தியாலத்தில் கணிதப்பிரிவில் கல்விகற்றுக்கொண்டிருந்த எமது சக நண்பன் ஒருவன் தனது உந்துருளியில் கொண்டுவந்து முள்ளியவளையில் சேர்த்திருந்தான். ஆனாலும் நேரம் தாமதமாகியமையால் மேற்படி நண்பன் அன்று வகுப்புக்கு வரவில்லை.

நாங்கள் கல்விகற்றுக் கொண்டிருந்தோம். வீதியால் சென்ற ஒருவர் அந்த தனியார் கல்விநிலைய நிர்வாகியைப் பார்த்து கடல் வருகுதாம் ஏன் பிள்ளைகளை வைச்சுக் கொண்டிருக்கிறியள் என்று கத்திக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் வேகமாக சென்றுகொண்டிருந்தார். உடனே அவசரமாக நிர்வாகி எங்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியையிடம் சொல்லிவிட்டு எங்களை வீடுகளுக்கு செல்லுமாறு சொன்னார். நாங்களும் மிகவும் வேகமாக எங்கள், எங்கள் துவிச்சக்கர வண்டிகளை மிதித்துக்கொண்டு வீடுகளுக்கு புறப்பட்டோம். நான் எனது வீட்டை அடைந்த போது அம்மா வீட்டு வாசலில் வீதியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வீதியால் வாகனங்கள், மிக வேகமாக நகர்துகொண்டிருந்தன.. நேரம் தாமதித்ததால் வகுப்புக்கு வராத எனது நண்பன் ஒரு துவிச்சக்கர வண்டி சகிதம் அம்மாவுடன் கதைத்துக்கொண்டிருந்தான். அம்மாவின் கையில் வானொலிப்பெட்டி இருந்தது. உடனே அம்மா என்னிடம் என்ன கடல்வருகாதாம் என்று சொல்லிறாங்களே உண்மையா?? என்று கேட்டார். நானும் எனக்குத் தெரிந்ததை சொன்னேன். அப்போது அம்மா குறித்த நண்பனின் பெயரை விளித்து "இவன் கள்ளப்பாட்டுக்கு போகப்போறானாம் வேண்டாம் என்று சொல்லு" என்று என்னிடம் கூற நான் நண்பனை சமாதானம் செய்துகொண்டே விடுமுறையில் வவுனியாவிலிருந்து வந்து இச் சம்பவங்களைக் கண்டு கலங்கிப்போய் அழுதுகொண்டிருந்த உறவினர்களை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்புவதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் நண்பனைத் தேடினால் எங்கும் அவனைக் காணவில்லை.,
காணாமல்போயிருந்த நண்பனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வைத்தியசாலையில் சென்று பார்த்தால் அங்கேயும் அவன் இல்லை. அப்போதுதான் அவனது அப்பா சுமாரான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். உடனே அவரிடம் சென்று அவருக்கு தேவையானவற்றை செய்துவிட்டு உரையாடியபோது. அவர் தனது மனைவி மற்றும் அங்கிருந்த இரண்டு பெண் பிள்ளைகளும் உயிர் தப்ப வாய்ப்பேயில்லை என்ற அந்த துயரச் செய்தியை சொன்னார். அவர் அப்படி சொன்னாலும் அவர்கள் நிச்சயம் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்றே நான் நம்பினேன்.

அவர் தனது மகன் எங்கே என்று என்னிடம் கேட்டார். அவனைக் காணவில்லை என்று இந்தச் சந்தர்ப்பத்தில் சொன்னால் அவரின் மனம் துன்பப்படும் என்று எண்ணியவனாக "அவன் இப்ப என்னோட நின்றவன் நான் கூட்டி வாறன் நீங்கள் வாங்கோ" என்று அவரை அழைத்துக் கொண்டுபோய் நண்பன் தங்கியிருந்த அறையில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு, நண்பனை மீண்டும் தேடத் தொடங்கினேன். கிட்டத்தாட்ட மதியப்பொழுது அம்மாவுக்கு சொல்லாமல் முல்லைத்தீவை நோக்கிச் சென்றேன். அங்கே நண்பனைத் தேடினேன். நான் பயணித்த உந்துருளி கடல் நீர் உட்புகுந்தமையால் இயங்க மறுத்தது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் அங்கும் நண்பனைக் காணாத ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினேன்.
பொழுது இருண்டது அன்றைய நாளில் நண்பனைக் காணவில்லை என்ற ஏக்கத்துடன் வீட்டுக்கு சென்றேன். அடுத்த நாள் காலையில் நண்பனின் அப்பாவிடம் சென்றபோது அவர் எங்கே மகன் என்று கேட்டார்?? எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு ஒருவர் சொன்ன குறிப்பினடிப்படையில் அவன் உங்களைத் தேடி ஒட்டுசுட்டான் சென்றுவிட்டான் என்று சொன்னேன். ஒட்டுசுட்டான் என்பது முள்ளியவளையிளிருந்து 16 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. உடனே நண்பனின் அப்பா அங்கே போய் அவனைக் கூட்டிவர முடியுமா?? என்று கேட்க போகிறோம் என்று சொல்லிவிட்டு நானும் இன்னுமொரு அண்ணாவும் உந்துருளியில் ஒட்டுசுட்டான் நோக்கி புறப்பட்டோம். ஒட்டுசுட்டானுக்கு செல்லும் பாதை (மாங்குளம்-முல்லைத்தீவு வீதியின் ஒரு பகுதி) குன்றும் குழியும் நிறைந்த செப்பனிடப்படாத பாதையாக இருந்தது. அதனால் நாங்கள் ஒட்டுசுட்டானை அண்மித்தபோது எமது உந்துருளி பஞ்ச்சராகிவிட்டது. ஒருவாறு உந்துருளியைத் தள்ளிக்கொண்டுபோய் ஒரு தெரிந்தவர்களின் வீட்டில் விட்டுவிட்டு அவர்களிடம் ஒரு துவிச்சக்கர வண்டியை வாங்கிக்கொண்டு நண்பனைத் தேடிப்புறப்பட்டோம்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில்தான் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கிய எம் உறவுகள் சிலர் தங்கவைக்கப்பட்டிருந்தமையால் அங்கு சென்று விசாரித்தபோது நண்பன் அங்கே வந்து சென்றமை தெரியவந்தது. ஆனாலும் அவனை அங்கே காணக்கிடைக்கவில்லை. உடனே நானும் என்னுடன் வந்த அண்ணாவும் எமது உந்துருளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு வந்தோம். நல்ல வேளையாக நமது இரு நண்பர்கள் எங்களைத் தேடி இன்னுமொரு உந்துருளியில் வந்தமையால் அவர்களின் உதவியுடன் எமது உந்துருளி சக்கரத்தை கழற்றிக்கொண்டு ஒட்டுசுட்டானிலிருந்து நான்க்கைந்து கிலோமீற்றருக்கு அப்பாலிருந்த கற்சிலைமடுவுக்கு கொண்டுபோனால் டியுப் ஒட்ட முடியாதளவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. பிறகு ஒரு புது டியுப் வாங்கி பொருத்திக் கொண்டு ஒட்டுசுட்டானிலிருந்து முள்ளியவளையை நோக்கி புறப்பட்டோம்.
நாங்கள் முள்ளியவளை வந்தபோது நண்பனின் அப்பாவும், நண்பனும் கயட்டையடி நல்லடக்க இடத்துக்கு சென்றுவிட்டார்கள் என்றும் நண்பனின் அம்மா, ஒரு அக்காவின் உடலங்கள் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்தத் துயரச் செய்தியுடன் கயட்டையடி நோக்கி சென்றால் அழுகை...அழுகை... நிறைந்த உறவுகள்.. உறவுகளின் உடலங்கள் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.... நண்பனின் துன்பத்தில் பங்கெடுத்தேன்.. ஆனாலும் கடைசிவரை அவனது அம்மா, அக்கா ஆகியோரின் உடலங்கள் அங்கு வரவேயில்லை.. இரவாகியமையால் நண்பனையும் அழைத்துக் கொண்டு அவனது தங்குமிடத்துக்கு வந்தோம்..

கடைசிவரையும் நண்பனின் அம்மாவினதோ அல்லது அக்காமாரினதோ உடலங்களை காணக்கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களில் அம்மாவினதும், ஒரு அக்காவினதும் உடலம் முதலிலும் பின்னர் மற்ற அக்காவினது உடலமும் கண்டெடுக்கப்பட்டு அந்த இடத்திலையே அடக்கம் செய்யப்பட்டதாக அறியமுடிந்தது. இப்படி பல பல கதைகள்.. பலருக்கும் பல பல சோகங்கள்.. மறக்கச் சொன்னாலும் உள்ளம் இன்றும் அழுகிறது.. ஒன்றா, இரண்டா.. எத்தனை சொந்தங்கள் இந்த ஆழிப்பேரலை என்னும் அரக்கனால் பலிகொள்ளப்பட்டார்கள்... இந்த நாளில் இழந்த எம் உறவுகளை மனதில்கொண்டு தியானிப்போம்.. ஏய் ஆழிப்பேரலையே இனி ஒருபோதும் உன் அகோரதாண்டவத்தை அரங்க்கேற்றிவிடாதே!!

Saturday, December 19, 2009

APPLE சாப்பிட்டு ICE CREAM குடிக்கலாமா???

இரண்டாவது வலைப் பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றி பல விடயங்களை எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனாலும் ஒரே விடயத்தை திரும்பத் திரும்ப எல்லோரும் எழுதுவதை விட புதிதாக ஏதாவது எழுதலாம் என்று இரண்டாவது சந்திப்பில் மூத்த பதிவர் ஒருவர் சொன்ன ஆலோசனையின் அடிப்படையில் அதைப் பற்றி எழுதவில்லை.. (ஆஹா!! நேரம் இல்லை என்று நான் சொன்னால் என்ன இவர் வெட்டிப் பிடுங்கிறார் என்று நீங்கள் சொல்லுவீங்கள் அதுதான் இந்த சமாளிப்பிக்கேஷன்..)
கடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் பயனுறப் பதிவெழுதுதல் தொடர்பாக அதிகமாக பேசப்பட்டது. பயனுறப் பதிவெழுதும் பலருக்கும் அதற்கான பின்னூட்டங்கள் முறையாகக் கிடைப்பதில்லை என்கின்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. நிலைமை இப்படி இருக்க பயனுறப் பதிவெழுதுகிறவர்கள் தொடர்ந்தும் பயனுறவே எழுதுங்கள், பின்னூட்டங்களைக் கொண்டு உங்கள் தளத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்காதீர்கள் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.. அந்தவகையில் எனது இந்தப் பதிவும் ஏதாவது ஒரு வகையில் பயனுள்ள பதிவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு தொடர்கின்றேன்..
எனது இந்தப் பதிவில் நான் புதிதாக எதையும் சொல்லப்போவதில்லை. இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்பதால் பதிகின்றேன். அந்த வகையில் இந்தப்பதிவில் நான் அறிந்த தூய தமிழ்ச் சொற்கள் இரண்டை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நாங்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் சில சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களை தவிர்த்து அவற்றை அப்படியே ஆங்கிலத்திலையே உச்சரிக்கின்றோம். அந்தவகையில் நம்மில் பெரும்பாலானவர்கள் சிறிய வயது முதல் APPLE என்பதை தமிழிலும் ஆப்பிள் என்றே அழைத்துவருகின்றோம்.. அதற்கான முறையான தமிழ்ச் சொல் என்ன என்பது தொடர்பாக கொஞ்சம் தேடிப்பார்த்தால் மதுரையில் ஒரு கடையில் ஆப்பிள் என்பதற்கு மேலைநாட்டுக் கோலை இலந்தை என்று தமிழ் வடிவம் கொடுத்திருக்கின்றார்களாம்.
உண்மையில் நாம் ஆப்பிளை இலந்தைப் பழத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும்பாலும் இரண்டும் ஒரே மாதிரியான அமைப்புடையவையாகவே காட்சி தருகின்றன. உருவத்தில் மட்டும் ஆப்பிள் பெரிதாகவும் இலந்தப்பழம் சிறிதாகவும் இருக்கின்றன. சுவை இரண்டும் வேறுபட்டவை என்றாலும் இரண்டிலும் ஒரு வகையான மாத்தன்மை இருக்கின்றது. ஆக மொத்தம் நமது இலந்தைப் பழத்தின் அண்ணன்தான் இந்த ஆப்பிள். அதாவது மேலைநாட்டுக் கோலை இலந்தை. (ஆஹா!! APPLE என்ற நான்கு எழுத்து சொல்லுக்கு இவ்வளவு பெரிய தமிழ் அர்த்தமா?? என்று நீங்கள் யோசிக்கிறது புரியுது.. என்ன செய்ய நாங்கள் தமிழர் எதையும் முறையான அர்த்தத்துடன்தான் தமிழ்ப்படுத்த வேண்டும்.)
சரி இனி அடுத்த தூய தமிழ்ச் சொல்லுக்கு வருவோம். இதுவும் மதுரையில் உள்ள அந்தக் கடையில் தமிழ் வடிவில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் இருந்த ஒரு விடயம்தான். அதாவது நாங்கள் ICE CREAM என்பதை தமிழிலும் பெரும்பாலும் ஐஸ்கிரீம் என்றே அழைக்கின்றோம். இருப்பினும் இதனை சிலர் குளிர்களி என்றும் தமிழில் சொல்கின்றார்கள். உண்மையில் ICE என்றால் தமிழில் குளிர் என்று அர்த்தமில்லையே!!! மாறாக ICE என்றால் தமிழில் பனி என்றே அர்த்தம். ஆகவே ICE CREAM ஐ குளிர்களி என்று அழைப்பது பொருத்தமற்றது என்றே சொல்ல தோன்றுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க மதுரையில் உள்ள மேற்படி கடையில் ICE CREAM என்பதற்கு பால்பனி வெண் குழைவு என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறார்களாம்.
ஒரு வேளை ICE CREAM என்பதில் MILK என்கின்ற சொல் வரவில்லையே பிறகு எப்படி தமிழ்ப்படுத்தும்போது பால் என்ற சொல் வந்தது என்றும், ஏன் எல்லா ICE CREAM உம் வெள்ளை நிறத்திலா உள்ளது என்றும் தர்க்கிக்க முடியும். ஆனாலும் ICE CREAM தயாரிக்கும்போது அதற்குள் பால் உள்ளீட்டுப் பொருளாக அமைவதால் பால்பனி வெண் குழைவு என்பதில் "பால்" என்ற சொல்லை சேர்த்ததை நியாயப்படுத்தலாம். மேலும் ஆரம்ப காலங்களில் ICE CREAM வெள்ளை நிறத்திலையே இருந்தமையால் பால்பனி வெண் குழைவில் "வெண்" என்ற சொல்லை சேர்த்ததை நியாயப்படுத்த முடியும். ஆகமொத்தம் நாங்கள் பயன்படுத்தும் குளிர்களி என்ற தமிழ்ப் பதத்தை விட பால்பனி வெண் குழைவு என்கின்ற தமிழ் சிறந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

Saturday, December 12, 2009

ஏமாற்றியது இலங்கை...தப்பியது இந்தியா!!!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றுமொரு இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-இருபது தொடர் சம நிலையில் முடிவடைந்திருக்கின்றது. அந்த வகையில் ஏற்கனவே கடந்த 09 ஆம் திகதி நடைபெற்ற இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கையணி 29 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டியை வென்றால் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்கின்ற எதிர்பார்ப்பில் இன்றைய தினம் இலங்கை அணி களமிறங்கியது. மறுபுறத்தில் இந்தப் போட்டியை எப்படியாவது வெற்றிகொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் புகுந்தது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றும் முதலில் துடுப்பெடுத்தாமல் இலங்கையணியை துடுப்பெடுத்த ஆட பணித்தமைதான் தோல்விக்கான காரணம் என்று சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கை நேரப்படி மாலை 5 .30 இற்கு மொஹாலியில் ஆரம்பமாகிய இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.


இலங்கையணி சார்பாக அணித்த் தலைவர் குமார்சங்கக்கார (59 ) அரைச் சதம் கடந்தார். மேலும் சிந்திக்க ஜெயசிங்க 38 ஓட்டங்களையும், சனத் ஜெயசூரிய 31 ஓட்டங்களையும் பெற்று ஓரளவுக்கு பிரகாசித்திருந்தார்கள். உதிரிகளாக இந்திய அணியினரால் இந்தப் போட்டியில் 24 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்தவகையில் இருபது ஓவர்கள் நிறைவில் இலங்கையணி ஏழு விக்கட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மேலும் இந்தப் போட்டியில் சனத் ஜெயசூரிய 25 ஓட்டங்கை பெற்றபோது 20 -20 போட்டியில் 600 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது வீரராக தன்னைப் பதிவு செய்துகொண்டார். இதுவரையில் 23 இருபதுக்கு-இருபது போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இன்று பெற்ற 31 ஓட்டங்கள் அடங்கலாக மொத்தமாக 606 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். ஏற்கனவே இந்திய அணியுடன் நடைபெற்ற இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கையணியின் மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டில்ஷான் 600 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரராக தன்னை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையணி நிர்ணயித்த 207 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணி 19 .1 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பாக வீரேந்திர ஷேவாக் (64 ), யுவராஜ்சிங் (60 ) அரைச் சதம் கடந்தனர். மேலும் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி 46 ஓட்டங்களையும், கெளதம்கம்பீர் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்கள். உதிரிகளாக இலங்கையணியினரால் இந்தப் போட்டியில் 7 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டி யுவராஜ்சிங்கின் 06 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இன்றைய தினம் தனது இருபத்தெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டே போட்டியிலும் கலக்கிய இந்திய அணியின் யுவராஜ்சிங் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடிவரும் உத்ரபிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இருபத்தியிரண்டு வயதான சுதீப் தையகி என்கின்ற வலது கைப் பந்துவீச்சாளர் தனது முதலாவது சர்வதேச இருபதுக்கு-இருபது போட்டியில் விளையாடியிருந்தார்.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்தபோது இலங்கையணி ரசிகர்கள் இருபதுக்கு-இருபது தொடரை இலங்கை கைப்பற்றும் என்று நம்பியிருந்தார்கள்..... இனி எதிர்வரும் பதினைந்தாம் திகதி ராஜ்கோர்ட்டில் ஆரம்பமாகும் நான்கு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கையணி கைப்பற்றுமா??? வழக்கம்போல பொறுத்திருந்துபார்ப்போம்...

கவனம் ஒபாமா கறுப்பு முகமூடி அணிந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ்!!!

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா தேசத்தை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் இணக்கப்பாட்டினை வெளியிட்டதன் பின்னர் அங்கு 117 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அத்துடன் கடலோர ஆந்திர மாநிலம், ராஜலசீமா பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. 1972 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை ராஷ்டிர சமித்தி தலைவர் சந்திரசேகர ராவின் 11 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைதொடர்ந்து ஒரு கொள்கை அளவிலான உடன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதன் பின்னணியில்தான் இவையனைத்தும் நிகழ்கின்றன..

இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பின்னர் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்திற்காக பல வழிகளிலும் போராடிய இலங்கைச் சிறுபான்மைச் சமூகத்திற்காக குறைந்தபட்சம் ஒரு மாநிலச் சுயாட்சிகூட இதுவரை உறுதிப் படுத்தப்படாத நிலை இலங்ககையின் இனப்பிரச்சினை தொடர்கின்றது.. ஒரு தனித் தெலுங்கானா தேசம் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இந்தியாவில் அவசியமாகின்ற பொது மனித உரிமை மீறல்கள் இன ஒடுக்கு முறைகள் நிகழும் இலங்கையில் ஏன் ஒரு சுயாட்சி சிறுபான்மைச் சமூகத்திற்கு வழங்கப்படக் கூடாது என்கின்ற ஒரு கேள்வி இயல்பாக எழுவதை தவிர்க்க முடியவில்லை.


சரி இனி விடயத்துக்கு வருவோம் அமெரிக்கா சம்பந்தமாக அண்மைக் காலங்களில் வெளிவரும் செய்திகள் விசித்திரமானவையாகவும், வித்தியாசமானவையாகவும் அமைகின்றன. அந்த வகையில் அண்மையில் சமாதானத்துக்கான நோபல் பரிசை நோர்வேயில் பெற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தப் பரிசுக்கு தன்னைவிட பொருத்தமான பலர் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பராக் ஒபாமா பொருத்தமற்றவர் என்கின்ற கருத்து பொதுவாகா எல்லோரிடமும் நிலவுகின்றது.



இவ்வாறான ஒரு சூழலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க்கப்பட்டிருக்குன்றது. இங்கு அமெரிக்காவைப் பொறுத்த வரையில் அவர் அந்த நாட்டுக்கு ஒரு மாறுதலான ஜனாதிபதி மட்டுமே அன்றி உலக நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் அவரால் எந்த மாற்றங்களும் பெரியளவில் கொண்டுவரப்படவில்லை என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அது உலக அரங்கில் நிறைய மாறுதல்களைக் கொண்டு வரும் என்றே பலரும் நம்பியிருந்தார்கள். ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட ஒபாமாவின் வருகை போரியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்திற்கும், தமக்கும் சாதகமாக அமையும் என்றே கருதியிருந்தார்கள். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டு அவர் மென்போக்கை கடைப்பிடித்தால் அது அமெரிக்காவின் வல்லரசு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் பரவலான கருத்துக்கள் வெளிவந்திருந்தன.
ஆனால் கருத்துக்கள் அனைத்தையும் பொய்யாக்கியதாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் பழைய குருடி கதவைத் திறவடி என்பதாகவே அமைந்திருக்கின்றது. அதாவது அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேலும் முப்பதாயிரம் துருப்புக்களை அனுப்பபோகின்றதாம். அத்துடன் ஈரானின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தேவை ஏற்படும் பட்சத்தில் அதன் மீது போர் தொடுக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ரொபேர்ட் ஹேர்ட்ஸ் தெரிவித்திருக்கிறார். ஆக மொத்தம் ஒரு பக்கம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு இன்னுமொரு பக்கம் அமெரிக்காவின் யுத்த மோகங்கள் கலையவில்லை. இந்த நிலையில் ஆசிய நாடான பாகிஸ்தான் மீதும் அமெரிக்காவின் கவனம் திரும்பியிருக்கின்றது. அந்த வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக உதட்டளவில் மட்டுமே சொல்லிக் கொள்வதாகவும் ஆனால் உண்மையாகச் செயற்படவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது. இதேவேளை தமது நாடு தொடர்பிலான அணுகு முறையில் அமெரிக்கா மாற்றம் ஒன்றைக் கொண்டுவரவேண்டுமென்று பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறைகள் இவ்வாறு இருக்க இலங்கைக்கும்- அமெரிக்காவுக்கும் இடையில் மீண்டும் சுமுகமான உறவு உருவாகி வருவதாகவும், இலங்கைக்கு வழங்கி வந்த இராணுவ உதவிகளை அமெரிக்க நிறுத்தியதன் பின்னர் இருதரப்பு உறவில் இருந்த விரிசல் நிலை தற்போது நீங்கி வருவதாகவும், அமெரிக்கா நிபந்தனைகளுடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கும் என்றும், நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா யாருக்கும் அதரவு தெரிவிக்காது என்றும் அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார். (ஆமா இனி எதுக்கையா இராணுவ உதவி??? இன்னும் மக்களின் உயிர்களைக் கொல்லவோ???) மேலும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார் (இது வழமையான வலியுறுத்தல்தானுங்கோ)
ஆகமொத்தம் அமெரிக்காவின் நடவடிக்கைகளை பார்க்கின்றபோது அமெரிக்கா உலக நாடுகளிடையே ஒரு ஆரோக்கியமான உறவைப் பேணிக் கொள்ளாமல் , ஒரு வல்லரசாக தனது பலத்தை நீதி, நியாயங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் சுய லாபங்களுக்காக செயற்படுவதிலையே இன்னமும் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறது. கவனம் ஒபாமா கறுப்பு முகமூடி அணிந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ் என்று எச்சரிக்க மட்டுமே எம்மால் முடிகின்றது...

Thursday, December 10, 2009

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்?????


எனது "எப்பிடி இருந்ததை எல்லாம் இப்பிடியாக்கீட்டாங்க" என்ற பதிவைத் தொடர்ந்து அவ்வாறான பல பதிவுகளை பதிய நினைத்திருந்தேன். ஆனாலும் துரதிஷ்டவசமாக மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலப்பகுதியாக வலைப்பதிவுப் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. இந்த நிலையில் இன்றைய பதிவின் மூலம் திரிபடைந்துள்ள சில அர்த்தங் கொள்ளல்களை பகிர்த்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
எனது "எப்பிடி இருந்ததை எல்லாம் இப்பிடியாக்கிட்டாங்க" என்ற பதிவில் "களவும் கற்று மற" என்பது "களவும், கத்தும் மற" என்பதிலிருந்து திரிபடைந்த ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அண்மையில் ஒரு பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர், "களவும் கற்று மற" என்றால் சங்க காலத்தில் களவு என்பது காதலைக் குறித்ததாகவும் "காதலும் கற்று மற" என்பதே இதன் உண்மையான அர்த்தம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கு நான் முதலில் சொன்ன "களவும், கத்தும் மற" என்பதில்தான் அதிக உடன்பாடு என்கின்ற போதிலும் இந்த இரண்டு கருத்துக்களையும், இதனைப் போன்று சொல்லப்படுகின்ற ஏனைய கருத்துக்களையும் நன்கு அலசி ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். (தயவு செய்து உங்களுக்கு தெரிந்த இது பற்றிய விடயங்களை கருத்துரையில் மறக்காமல் குறிப்பிடுங்கள். மிகுந்த உதவியாக இருக்கும்.)
சரி இந்த விடயம் இவ்வாறு இருக்க இனி அடுத்த விடயத்திற்கு வருவோம். இது சில வேளைகளில் வேடிக்கையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் என்னை இது கொஞ்சம் சிந்திக்க வைத்த ஒன்று என்பதால் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன். அதாவது "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்று நமது தமிழ்ச் சமுதாயத்திடம் ஒரு கருத்து நிலவுகின்றது. இதனைச் சாதாரணமாக நாங்கள் ஊரில் உள்ள மற்றைய பிள்ளைகளுக்கு உணவு, அறிவு ஊட்டி வளர்த்தால் தனது பிள்ளை தானாக வளரும் என்று அர்த்தம் கொள்கின்றோம். ஆலயங்கள் தேவையில்லை என்று ஆரம்பிக்கும் காமராசு திரைப்படப் பாடலிலும் "ஊராரை ஊட்டி வளர்த்தேன் உலகே உன் உறவாய் மாறும்.." என்று ஒரு வரியும் இந்த அர்த்தத்தைத்தான் உணர்த்துகிறது. ஆனால் இதற்கு இன்னுமொரு அர்த்தம் சொல்லப்படுகின்றது. அதாவது ஒரு கணவனுக்கு தனது மனைவி ஊரான் பிள்ளையாகத்தான் இருப்பாளாம். அந்த வகையில் ஊரான் பிள்ளையான மனைவி கருவுற்றிருக்கும் காலப் பகுதியில் அவளுக்கு சத்தான உணவுகளைக் கொடுத்தால் அவள் வயிற்றில் வளரும் கணவனின் பிள்ளை (தன் பிள்ளை) தானாய் வளரும் என்று பொருள் கொள்கின்றார்கள். வேடிக்கையாகப் பார்க்காமல் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் இதுவும் சரியானது என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் எமது தமிழ்ச் சமுதாயத்தின் ஆரம்ப காலங்கள் பெரும்பாலும் ஆண்களை மையப்படுத்தியவையாக அல்லது முதன்மைப்பசுத்தியவையாகவே அமைந்திருக்கின்றன.. ஆகவே ஆண்களுக்கான ஒரு தத்துவமாக இது உருவாகியிருக்கலாம்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கின்ற விடயம் இவ்வாறு இருக்க இனி அடுத்த விடயத்துக்கு வருவோம். இது பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையிலான ஒரு உறவை சொல்லுவது. அதாவது "ஏவா மக்கள் மூவா மருந்து" என்கின்ற தத்துவத்திற்கு நம்மில் பலரும் "சொல்லாமலே பெற்றோர்களின் தேவைகளை உணர்ந்து செயற்படும் பிள்ளைகள் சிறப்பானவர்கள்" என்று பொருள்கொள்கின்றோம். அதாவது "மூவா மருந்து" என்றால் என்ன அதற்கான முழுமையான அர்த்தம் என்னவென்று நம்மில் பெரும்பாலானவர்கள் சிந்தித்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த "ஏவா மக்கள் மூவா மருந்து" என்பதற்கு "பெற்றோர்களின் தேவைகள் என்னவென்று அவர்கள் சொல்லாமலே பிள்ளைகள் செய்தால் பெற்றோர்களின் நரை, திரை, முதுமை ஆகிய மூன்று வியாதிகளுக்கும் அதுவே சிறந்த மருந்து" என்று பொருள்கொள்ளப்படுகின்றது. இங்கு நரை என்பது தலை நரைத்தலையும், திரை என்பது கண்பார்வை குறைதலையும், முதுமை என்பது வயது அதிகரிப்பதால் வெளித்தெரியும் உடலமைப்பையும் குறிக்கின்றது. (ஆஹா நாங்களெல்லாம் எவ்வளவு முக்கியமான வியாதிகளுக்கு மருந்துகளாக இருக்கின்றோம் என்று பெருமைகொள்ள வேண்டுமென்றால் முதலில் ஏவா மக்களாக இருக்க வேண்டும்.)
இந்த வேளையில் எனது தந்தையார் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகின்றது. சொல்லாமல் செய்வார் பெரியார், சொல்லிச் செய்வார் சிறியார், சொல்லியும் செய்யார் கயவர்.
ஆகமொத்தம் நமது தமிழ் மொழியில் பல விடயங்கள் திரிபடைந்துதான் உள்ளன. அவற்றிற்கான உண்மையான அர்த்தங்களை அறிந்துகொள்வது கடினமென்றாலும் அறிந்து கொண்டாலும் இந்தக் காலத்துக்கு அவைபொருத்தமாக அமையாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை இலகுவாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இருந்தாலும் ஆரம்ப அல்லது மாற்று அர்த்தங்களை அறிந்து வைத்திருப்பதிலும், அறிகின்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் தப்பில்லை என்று நினைக்கின்றேன். எனவே எனது இவ்வாறான பதிவுகளும் அவ்வப்போது தொடரும்.....

Monday, December 7, 2009

ஜனாதிபதித் தேர்தல்- யுத்த வெற்றியின் பிரதான பங்காளி யார்?? வாக்கெடுப்பு!!!



இன்றைய இலங்கையின் அரசியல் நிலைமையைப் பொறுத்தவரையில் யாருமே எதிர்பார்க்காத ஒரு திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எல்லாம் செயல் வடிவம் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத்பொன்சேகா எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிற்கு எதிராக போட்டியிடவுள்ளமை யாருமே எதிர்பார்க்காத ஒரு அரசியல் மாற்றம் என்றே சொல்ல வேண்டும்.
அரசாங்கம் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அறிவித்ததன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை இன்னும் சில ஆண்டுகளுக்கு யாருமே அசைக்க முடியாது என்கின்ற ரூ கருத்து எல்லா அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகள் மத்தியில் தோன்றியமை உண்மைதான். ஆனாலும் ஜெனரல் சரத்பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் இந்த கருத்துருவத்தை மீள் பரிசீலனைக்குட்படுத்தியுள்ளது. மேலும் யுத்தத்தின் வெற்றி என்கின்ற மிகப் பெரிய அரசியல் பலம் கிட்டத்தட்ட இரண்டாக உடைக்கப்பட்டிருப்பதனால் அரசாங்கத்தின் ஆயுட்காலம் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது யுத்த வெற்றியின் பிரதான பங்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை சாருமா?? அல்லது முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை சாருமா?? என்று சிந்திக்கும் நிலைக்கு சிங்கள மக்கள் தள்ளப்ப்பட்டிருக்கிறார்கள்.

முன்பு அரசாங்கம் யுத்த வெற்றியை வைத்துக் கொண்டு நீண்ட காலம் அரசியல் நடாத்த முடியாது என்றும் இன்னும் சில வருடங்களில் படித்த மக்கள் பொருளாதாரம் குறித்து சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் அப்போது யுத்த வெற்றி இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் அந்த நீண்ட ஆய்ட்காலத்தைக் கடந்து யுத்தம் நிறைவடைந்திருக்கும் ஆறு மாதத்துக்குள் அரசாங்கம் தனது இருப்புப் பற்றி சிந்திக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேசப்பட்டபோது ஜனாதிபதி யுத்த வெற்றியின் பரபரப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்கக் கூடும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த யுத்த வெற்றி யாருக்கு சொந்தமானது??? என்று தீர்மானிக்கும் சக்தியாக சிங்கள மக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் அரசியலுக்குள் நுழையப்போவதில்லை என்றுகூறிய சரத்பொன்சேகா திடீரென அரசியலுக்குள் நுழைந்ததன் பின்னணியில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க புலனைவுத்துறையையே சந்தேகிக்கின்றார்கள்.


நிலைமை இவ்வாறு இருக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என சிறுபான்மைக் கட்சிகள் தீர்மானித்து அறிவித்துக் கொண்டிருக்கின்றன. எனினும் பாராளு மன்றத்தில் அதிக ஆசனத்தைக் கொண்ட சிறுபான்மைக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்து நிலைப்பாடு குறித்து இன்னமும் தெளிவான ஒரு நிலைப்பாட்டிற்கு வரவில்லை. எந்த அடிப்படையில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிறைய சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. பலவாறான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டமைப்புக்குள் இவ்வாறான சிக்கல்கள் இருப்பது இயல்பானதுதான்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள்ள ஐந்து சாத்தியமான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்திருப்பதாக தெரிய வருகின்றது. இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பது, விக்கிரமபாகு கருணாரட்னவை ஆதரிப்பது, தேர்தலை புறக்கணிப்பது, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது, மக்களை தங்கள் தங்கள் விருப்பின்படி செயற்படுமாறு பணிப்பது ஆகியவையே அந்த ஐந்து வழிமுறைகளுமாகும்.

இதில் முதல் இரண்டு வழிமுறைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல் அடையாளத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன. கடைசி மூன்று வழி முறைகளில் தேர்தலைப் புறக்கணிக்கக்கோருவது தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இலங்கையில் குறைவடைந்திருக்கும் நிலையில் ஒரு அரசியல் தற்கொலையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமையக்கூடும். அதாவது கடந்த முறைக்கு பின்னர் இன்னுமொரு தடவை தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் மக்கள் தயாராக இருப்பார்களா என்கின்ற சந்தேகம் உள்ளது. மேலும் தமிழ் மக்களை தங்கள் விருப்பின்படி செயற்படுமாறு பணிப்பது ஒரு பொறுப்புவாய்ந்த அரசியல் கட்சிக்கட்சிக்கு நாகரீகமாக இருக்காது. மேலும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது என்பதும் குறுகிய காலத்துக்குள் மிகுந்த சவாலான ஒன்றாக இருக்கும்.. மேலும் எல்லா சிறுபான்மைக் கட்சிகளினதும் ஆதரவுடன் இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளுமானால் அது வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ் சமூகத்திற்கோ ஜனாதிபதித் தேர்தல் முக்கியமான ஒன்று இல்லை என்றாலும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற தீர்மானமே அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதன் வாக்கு வங்கியை தீர்மானிக்கும் என்ற அடிப்படையில் தெளிவாகச் சிந்திக்கவேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. ஆனால் அண்மைக் கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது. அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்படிக்கை, ஒப்பந்தம், உறுதிமொழி என்கின்ற சொற்களைப் பயன்படுத்தி ஆதரவு வாழங்கினால் அதுவும் ஒரு அரசியல் தற்கொலைக்கு சமனாகும் என்பது பொதுவான கருத்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பிலான நிலைமைகள் இவ்வாறு இருக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மைச் சமூகம் இருக்கும் என்கின்ற ஒரு வகையிலான கருத்து முன்னைய காலங்களைப் போல முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதாவது முன்னைய காலங்களுக்கு பொருத்தமாக இருந்த ஒரு கருத்து மீள் பரிசீலனை இன்றி தொடர்ந்தும் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிச் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள இலங்கையில், சிறுபான்மைக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத சூழலில் தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகமே தீர்மானிக்கும் சக்திகளாக இந்தத் தேர்தலிலும் இருக்கப்போகின்றன என்று அறுதியிட்டு சொல்லிவிட முடியாது. அதாவது தற்போது சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள் திட்டமிட்டு சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மைச் சமூகம் இருக்கும் என்கின்ற கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

உண்மையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கட்சிகளின் வாக்கு வங்கியை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் வெற்றி வாய்ப்பு மிக மிக அதிகம் என்கின்றபோதிலும் ஜனாதிபதித் தேர்தல் கட்சிக்கும் அப்பால் தனிப்பட்ட மரியாதைகளின் அடிப்படையிலானது என்பதால் தேர்தல் முடிவுகளை எளிதில் எடைபோட்டுவிட முடியாது. மேலும் இரண்டு வேட்பாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கதாநாயகர்கள் என்பதால் சிங்கள மக்கள் மத்தியில் இருவருக்கும் அதிகமான மரியாதை நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறான ஒரு சூழலில் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை தவிர்த்துப் பார்க்கின்றபோது நடைபெற இருப்பது யுத்த வெற்றியின் பிரதான பங்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை சாருமா?? அல்லது முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவைச் சாருமா?? என்கின்ற ஒரு கருத்துக்கணிப்பாகவே அமையவுள்ளது.. அன்றி தமிழ் பேசும் சமூகத்திற்கு இதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்பதே உண்மை...



Sunday, December 6, 2009

சாதிக்கத் தவறியது இலங்கை!!!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. உண்மையில் இலங்கை அணியைப் பொறுத்த வரையில் இந்தத் தொடரை இந்திய மண்ணில் வைத்து வெற்றி கொண்டு சாதனை படைக்கும் என்றே பலரும் சொல்லியிருந்தார்கள்.(நாங்களும் நம்பியிருந்தோம்.) ஆனால் தொடரில் ஒரு போட்டியைக்கூட வெற்றி கொள்ள முடியாத நிலையில் 2 -௦ 0 என்ற நிலையில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. உண்மையில் இந்தத் தொடரின் முதலாவது போட்டியை அவதானித்தவர்கள் இலங்கை அணியின் வெற்றி உறுதி என்றே எண்ணியிருந்தார்கள். ஆனால் அடுத்து வந்த இரண்டு போட்டிகளும் நிலைமையை மாற்றி அமைத்திருந்தன. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் இனிங்ஸ் தோல்வி என்பது தர வரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த இலங்கைக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே இருக்கும்.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் தங்கள் நாட்டில் நடந்த தொடரை வெற்றிகொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் முதல்போட்டியை கஷ்டப்பட்டு சமநிலைப்படுத்திவிட்டு அடுத்த இரண்டு போட்டிகளையும் மிகவும் அபாரமாக வெற்றிபெற்று டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறார்கள். அந்த வகையில் இதுவரையில் முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்கா இரண்டாமிடத்துக்கும், இரண்டாமிடத்திலிருந்த இலங்கை நான்க்காமிடத்துக்கும் பின்தள்ளப்பட்டிருக்கின்றன. நான்காமிடத்திலிருந்த அவுஸ்திரேலியா மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி ஆரம்பித்து இன்று நிறைவுற்றிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கம்பீர் இல்லாமல் அவருக்கு பதிலாக முரளி விஜயை பயன்படுத்தி இந்தியா வெற்றிபெற்றமையையும் கவனத்தில்கொள்ளவேண்டும். உண்மையில் முரளி விஜய் தனக்குக்கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனாலும் 13 ஓட்டங்களால் சதமடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டமை துரதிஷ்டவசம் என்றே சொல்லவேண்டும். அண்மையில் கம்பீர் இல்லாத நிலையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இந்தியா யாரைக் களமிறக்கப் போகிறது (நிரந்தரமாக) என்று எழுந்த கேள்விக்கு முரளி விஜய் தனது துடுப்பாட்டத்தின் மூலம் பதில் சொல்லியுள்ளார்.

நிறைய சாதனைகள் நிகழ்த்தப்பட்ட மும்பை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மற்றுமொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஷேவாக் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை ஏழு ஓட்டங்களினால் தவற விட்டிருந்தார். அத்துடன் இந்தப்போட்டியில் இந்திய அணியின் தலைவர் டோனி சதமடிக்க வேண்டுமென்கின்ற நோக்கில் விளையாடியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தபோதிலும் இந்திய அணி வெற்றி பெற்றமையால் டோனி தப்பித்துக் கொண்டார். இல்லையேல் எல்லோரும் டோனியை வசைபாட ஆரம்பித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் பந்துவீச்சு மிக மிக மோசமாக இருந்தது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முரளிதரன் பெரிதாக சோபிக்கவில்லை. ஆரம்பத்தில் இவர்மீதான விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும் இலங்கைக்கு தலையிடியைக் கொடுத்த ஷேவாக்கின் விக்கட்டை வீழ்த்தியதன் மூலம் முரளிதரன் விமர்சனங்களில் இருந்து கொஞ்சம் காப்பாற்றப்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில் முதலாவது இனிங்ஸ்ஸில் டில்ஷான் சதமடித்து (109 ) காப்பாற்றியிருந்தார். அத்துடன் மத்தியுஸ் (99 ) ஒரு ஓட்டத்தினால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். பரணவிதாரண (53 ) அரைச் சதம் கடந்திருந்தார். ஆனால் இரண்டாவது இனிங்ஸ்ஸில் அணித் தலைவர் சங்கக்கார (137 ) சதம் கடந்திருந்தார். பரணவிதாரண (54 ) அரைச் சதம் கடந்தார். தவிர வேறு எந்தவொரு வீரர்களும் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் முரளிதரன் (4 ), ஹேரத் (3 ) ஆகியோர் ஓரளவுக்கு
இலங்கையை காப்பாற்றியிருந்தார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் துடுப்பாட்ட வீரர்களும் சரி பந்துவீச்சாளர்களும் சரி தங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்திருந்தார்கள். அந்த வகையில் முதல் இனிங்ஸ்ஸில் ஷேவாக் (293 ) ஏழு ஓட்டங்களால் முச்சத வாய்ப்பை தவறவிட்டிருந்தார். அணித்தலைவர் டோனி (100 ) சதம் கடந்தார். முரளி விஜய் (87 ), டிராவிட் (74 ), லக்ஸ்மன் (62 ), டெண்டுல்கர் (53 ) ஆகியோர் அரைச் சதம் கடந்தார்கள். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக முதல் இனிங்ஸ்ஸில் ஹர்பஜன்சிங் (4 ), ஒளஜா (3 ) ஆகியோரும் இரண்டாவது இனிங்க்ஸ்ஸில் ஸ்ரீஷாந்தும் (5 ) பிரகாசித்திருந்தார்கள். மேலும் இன்றைய போட்டியின் சிறப்பாட்டக் காரராகவும், தொடர் நாயகனாகவும் வீரேந்திர ஷேவாக் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறாக ஒரு இனிங்ஸ்ஸாலும் 24 ஓட்டங்களினாலும் இன்றைய மூன்றாவது போட்டியை வெற்றி பெற்றதன் மூலமாக தொடரை 2 -0 என்று கைப்பற்றியிருக்கும் இந்திய அணி அடுத்து நடைபெற உள்ள 2 போட்டிகளைக் கொண்ட 20 -20 போட்டியிலும் சாதிக்குமா??? இல்லையேல் இலங்கை பழிதீர்க்குமா??? பொறுத்திருந்து பார்ப்போம்.......

Saturday, December 5, 2009

பதும நாதம்!!!!!!!!!!!!












இது எனது தந்தையார் அமரர் உயர்-திரு.குமாரவேலு மயில்வாகனம் (பதுமநாயக முதலியார்) அவர்களின் வாழ்க்கை வரலாறு..

ஈழவள நாட்டின் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வியங்காட்டில் குமாரவேலு மீனாட்சியம்மை தம்பதியினருக்கு 1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வந்துதித்த ஆண் மகவிற்கு மயில்வாகனம் எனப் பெயர் காணப்பட்டது. இவரின் பாசத்திய்குரிய சகோதரியாக வேதநாயகி வந்துதித்தார்.

இவர் தனது கல்வியை யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆரம்பித்து தொடர்ந்ததுடன், அன்னை வழித் தொடர்பில் சைவை சமயத்தின் ஆச்சார ஒழுக்கங்களை சீராகக் கடைப்பிடித்து கீரிமலையில் உள்ள சடையம்மா மடத்திலிருந்து சைவக் கிரியைகள் சம்பந்தமான விளக்கங்களை குருவிடம் முறையாக கற்றுக்கொண்டார்.

இவர் இளைஞராக இருக்கும் காலத்திலேயே தமது வீட்டின் அருகில் அமைந்திருந்த பூதவராயர் ஆலயம், வெள்ளைப் பிள்ளையார் ஆலயம், சிவஞான பிள்ளையார் ஆலயம் (கலட்டிப் பிள்ளையார்) என்பவற்றில் அதீத பற்றுக் கொண்டவராவார் என்பதுடன் வெள்ளைப் பிள்ளையார், சிவாஞானப் பிள்ளையார் ஆலயங்களின் ஆரம்ப கால பூசகராகவும் இருந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளியவளை பிராதன வீதியில் உள்ள ஞான வைரவர் ஆலயமும் இவராலேயே ஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் இவர் நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெறும் சூர சங்கார நிகழ்வுகளில் நவவீரர்களில் ஒருவராக முடிதரித்தவர்.

தனது இளம் பராயத்தை யாழ்ப்பாணத்தில் கழித்த இவர் முல்லைத்தீவு முள்ளியவளையில் குமாரசாமி மகேஸ்வரி தம்பதியரின் மூத்த புதல்வியான சுசிலாதேவியை (லீலாவதி) விரும்பி மனம் செய்து முறையே சத்தியசீலன்(கண்ணன்), ஞானசீலன்(ஞானம்), ஜெயசீலி(ஜெயா), மயூதரன்(மயூ), செந்தூரன்(செந்துவா) ஆகியோருக்கு தந்தையுமானார்.பிள்ளைகள் தங்கள் கல்வியைத் தொடர ஆரம்பத்திலிருந்தே தேவையான வசதிகளையும், உதவிகளையும் வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டார். அதன் பெறுபேறாக பிள்ளைகள் அரச துறையிலும், இதர துறைகளிலும் கடமை புரிவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். மேலும் தனது மூன்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது கடமையை செவ்வனே நிறைவேற்றினார்.

உயர்-திரு.குமாரவேலு மயில்வாகனம் அவர்கள் திருமணம் செய்து முள்ளியவளையில் குடியேறிய பின்னரும் இவரது சமயப்பணி தொடர்ந்தது. அந்த வகையில் தனது வீட்டிற்கு முன் புறமாக அமைக்கப்பட்ட ஞான வைரவர் ஆலயத்தின் பூஜை, பராமரிப்பு என்பவற்றை மிகவும் நேர்த்தியான முறையில் மேற்கொண்டார். மேலும் இவர் முள்ளியவளையில் இருந்த காலத்தில் அவரது மனைவியின் தாயார் காலமானபோது அவருக்கு செய்யவேண்டிய அபரக் கிரியைகளை செய்வதற்கு அவ்வூரில் குருமார் எவரும் இல்லாத காரணத்தினால் தான் முன்பு கற்று வைத்திருந்த அபரக் கிரியையை முதன் முதலாக தனது மனைவியின் தாயாருக்கு செய்து வைத்தார்.

இதனைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் தங்களுக்கு இவ்வாறான கிரியைகளை ஆற்றக்கூடியவர்கள் அவ்வூரில் இல்லாத காரணத்தினாலும், கிரியை முறைகளை இவர் மிகவும் திருப்தியான முறையில் செய்கின்றார் என்பதாலும் இவரை, அவ்வூரில் இடம்பெறும் அபரக் கிரியைகளை செய்ய வேண்டுமென மிகவும் வினயத்துடன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவ்வூரில் குருக்கள் ஐயா என எல்லோராலும் நேசிக்கப்பட்டதுடன், தனது இந்து சமயத் தொண்டை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு மிகவும் திறம்படச் செய்து வந்தார்.

இவ்வாறு சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வந்த இவர் காலத்தின் கோலம் காரணமாக இடம்பெற்ற வன்னி மக்களின் பேரவல இடப்பெயர்வின்போது கடைசிவரை அங்கிருந்துவிட்டு இறுதியில் வவுனியா வந்து பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்களின் அன்பான அரவணைப்பில் தனது நொந்த உள்ளத்தையும் உடலையும் தேற்றிவந்த வேளையில் காலனவனின் கணக்கு வந்துவிட்டது.

தாராள மனதும், இரக்க சுபாவமும் கொண்ட இவர் ஊர் மக்களால் பதுமை ஐயர், பதுமண்ணா என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டார். ஒரு மதத்தின் அடையாளச்சின்னமாக இருந்தாலும், பிற மதங்களையும் நேசித்த ஆனால் மத மாற்றங்களை வன்மையாகக் கண்டித்த உயர்-திரு.குமாரவேலு மயில்வாகனம் அவர்கள் தனது 71 ஆவது வயதில் 04 .11 .2009 புதன் கிழமை அன்று காலைப் பொழுதில் இறைவன் திருவடி சேர்ந்தார். தனது நாளாந்தக் கடமைகளை நிறைவு செய்துவிட்டு தன்வீட்டு பூஜை அறையில் இறைவனை பூக்களால் அலங்கரித்துவிட்டு அடுத்த சில நொடிகளில் உடல் தளர்ந்து வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அரை மணி நேரத்துக்குள் அன்னாரின் ஆத்மா உடலைவிட்டு பிரிந்தது.....

திதி வெண்பா...
ஆண்டு விரோதியின் ஐப்பசித் திங்களது
அபரபக்க துதியை திதி தனில்
பதுமு என்னும் செம்மல் மயில்வாகனனார்
பரம்பொருள் நல்லடி சேர்ந்தார் சிறந்து!!!!!


ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Friday, August 28, 2009

எப்பிடி இருந்ததை எல்லாம் இப்பிடியாக்கீட்டாங்க!!!!!

உருவ மாற்றங்களும், கருத்து மாற்றங்களும் காலங் காலமாய் நிகழ்ந்து வருகின்ற ஒன்றுதான். அந்த வகையில் நமது தமிழ் மொழியும் இதற்கு விதிவிலக்கானதல்ல. இன்று வழ்க்கில் உள்ள எத்தனையோ தமிழ்ச் சொற்களுக்கான அர்த்தங்கள் அந்தக் காலத்தில் வேறுபட்டவையாக இருந்திருக்கின்றன.

மேலும் அன்றைய காலங்களில் சாதாரணமாக வழக்கிலிருந்த எத்தனையோ சொற்கள் இன்று வழக்கிழந்து அல்லது அரும்பதங்கள் என்ற அடையாளங்களுடன் இருக்கின்றன. அது மட்டுமன்றி வேறு மொழிகளின் ஊடுருவல்களும் தமிழ் மொழியின் அடிப்படைத் தன்மைகள் சிலவற்றை மாற்றி அமைத்திருக்கின்றன. அத்துடன் காலத்தின் சுழற்சியில் அறிவியல், விஞ்ஞானத்தின் வளர்ச்சிகளால் சில கலைச் சொற்களின் உருவாக்கங்களும் தவிர்க்க முடியாதவையாக உள்ளன.

இவ்வாறாக ஏராளமான ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற மாற்றங்களை தமிழ் மொழி சந்தித்து வந்துள்ளது. இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த விடயங்கள் ஒருபுறமிருக்க நமது தமிழ் மொழிக்குள்ளே இருந்த பல தத்துவங்களும், கருத்துக்களும், சிந்தனைகளும் இன்று திரிபடைந்து வழக்கில் உள்ளமையையும் காணமுடிகின்றது. அந்த வகையில் நான் அறிந்த திரிபடைந்துள்ள விடயங்களில் சிலவற்றை இந்தப் பதிவின் வழியே பகிர்ந்து கொள்கின்றேன்...

இன்று பொதுவாக எல்லா விடயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் அனைவருக்கும் அதீத ஆர்வமுள்ளது உண்மைதான். இந்த எல்லா விடயங்கள் என்பதுக்குள் நல்ல விடயங்களும் வரும் தீய விடயங்களும் வரும். இத்தனை அடிப்படையாகக் கொண்டு நம்மிடையே "களவும் கற்று மற" என்று ஒரு கருத்து உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் இது தொன்றுதொட்டு வந்த ஒன்று என எண்ணுகின்றோம். ஆனால் இது அவ்வாறு வந்ததல்ல. அதாவது, அடிப்படையில் "களவும் கத்தும் மற" எனற கருத்தைத்தான் நாம் களவும் கற்று மற என்று மாற்றியிருக்கிறோம்.

இங்கு களவு என்பது திருட்டையும், கத்து என்பது பொய்யையும் குறிக்கின்றது. ஆகவே உண்மையில் களவையும், பொய்யையும் மறக்க வலியுறுத்துவதாகவே இதன் நோக்கம் அன்று அமைந்தது. ஆனால் நாம் இன்று கருத்தையே மாற்றிவிட்டோம். (நாங்கள்தான் அரிச்சந்திர பரம்பரையில் வந்தவர்களாச்சே என்று எண்ணி கத்தும் என்ன்பதை கற்று என்று மாற்றியிருப்பார்களோ???)

இனி அடுத்த விடயத்துக்கு வருவோம். இது கொஞ்சம் மகளீரணியோடு சம்பந்தப்பட்டது. அதாவது இன்று பெண்களின் மீதான ஆண்களின் நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்த பல பாடல்கள், கருத்துக்கள், தத்துவங்கள் வழக்கத்திலிருக்கின்றன. இதில் "சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே..", "பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்.." போன்ற பாடல்கள் பிரபலமானவை. இவ்வாறான பாடல்கள் ஒருபுறமிருக்க "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே" என்ற ஒரு வரிவடிவம் நமக்குள் வழக்கத்தில் உள்ளது. சேலை கட்டும் பெண்ணை நம்பக் கூடாது என்றால், சுடிதார் அணியும், ஜீன்ஸ், T சேட் அணியும், பாவடை தாவணி அணியும் பெண்களைத்தான் நம்ப வேண்டுமா?? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

உண்மையில் "சேலைகட்டும் பெண்ணை நம்பாதே" என்பது "சேல் அகட்டும் பெண்ணை நம்பாதே" என்பதிலிருந்து திரிபடைந்த ஒன்றாகும். இங்கு சேல் அகட்டும் பெண்ணை நம்பாதே என்றால் கண்ணடிக்கும் பெண்ணை நம்பாதே என்று அர்த்தம். (இனியாவது இந்தக் கண்ணடிக்கிற பெண்களை நம்பமாட்டீங்கதானே!!!) ஆக மொத்தம் எவ்வளவு அர்த்தமுள்ள கருத்தை திரிபுபடுத்தி சம்பந்தமே இல்லாமல் "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே" என்று சேலை கட்டி பொட்டு வைத்து அழகாக காட்சி தருகின்ற அத்தனை பெண்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்த விளைவது எந்த வகையில் நியாயம். (மகளீர் அணியினர் எனக்கு மாலை போட்டு கெளரவிக்க விரும்பினால் முகவரியை பிரசுரிக்கத் தயார்.)

இப்படி சேலை கட்டும் பெண்ணை நம்பாதே என்ற விடயம் அமைய அடுத்த விடயத்திற்கு வந்தால் இது கொஞ்சம் ஆன்மீகத்தோடு சம்பந்தப்பட்டது. (அதில் நமக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால்தானே!) அதாவது, "விதியை மதியால் வெல்ல முடியும்" என்ற ஒரு கருத்து நம்மிடையே நிலவுகின்றது. இத்தனை நம்மில் பெரும்பாலானோர் நமக்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதி என்ற ஒன்றை நமது புத்தியால் வெற்றி கொள்ள முடியும் என்று பொருள் கொள்கின்றோம்.

உண்மையில் விதி என்ற ஒன்று இருக்குமேயானால் அது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவே அமையும். (விதி என்பதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது வேடிக்கையாக இருக்கட்டும்) இப்படி நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒன்றை எப்படி நமது புத்தியால் வெல்ல முடியும்??? என்பது இயல்பான கேள்வி. ஆகவே நாம் விதியை மதியால் வெல்லலாம் என்பதை நமக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதியை நமது புத்தியால் வெல்ல முடியும் என்று அர்த்தம் கொள்ளவது பொருத்தமற்றதாகவே அமைகின்றது. மாறாக இத்தனை இறை நம்பிக்கை உள்ளவர்கள் குறிப்பாக சைவர்கள் "நமக்கென நிர்ணயிக்கப்பட்ட விதியை மதியை (சந்திரனை) தலையில் சுமந்த சிவனால் வெல்ல முடியும்" என்றும் ஏனைய சமயத்தவர்கள் "நமக்கென நிர்ணயிக்கப்பட்ட விதியை மதிபோன்ற (சந்திரன் போன்ற) தத்தமது கடவுள்களை விழித்து அவர்களால் வெல்ல முடியும்" என்றும் அந்தக் காலத்தில் அர்த்தம் கொண்டிருக்கின்றார்கள். (ஆஹா நம்மைப் போல கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் இனி இதனை உச்சரிக்கவே முடியாது போல)

இறுதியாக இன்னுமொரு மருவிய அர்த்தம் கொள்ளல், "எறும்பு தின்றால் கண் கூர்மையாகும்". எறும்பைப் பிடித்து பொரித்தோ, அவித்தோ, பச்சையாகவோ, தேநீரி, தண்ணீரில் கலந்தோ உட்கொண்டால் கண்கூர்மை பெறும் என்று நாம் இதனை அர்த்தம் கொள்கின்றோம். (அது சரி கண்கூர்மையாக கட்டெறும்பைப் பிடித்து தின்று உதட்டிலும், நாக்கிலும் கடிவேண்டிய உத்தமர்கள் உங்கள் அனுபவங்களை கருத்துரையில் மறைக்காமல் வெட்கப்படாமல் சொல்லிடுங்க)

எறும்பை சாப்பிடுவதால் கண்கூர்மை பெறும் என்று எந்த விஞ்ஞானம் அல்லது மருத்துவம் சொன்னது.?? ஆகமொத்தம் இதுவுமொரு தவறான புரிந்துகொள்ளல்தான். அதாவது அன்றைய காலங்களில் வீட்டிற்கு முன்னால் அதிகாலையில் அரிசிமாக் கோலம்போடும் வழக்கம் இருந்தது. (இப்போதும் சில வீடுகளில் உள்ளது) இந்த செயலுக்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டன. குறிப்பாக வீட்டுச் சூழலில் உள்ள எறும்புகள் போன்ற உயிரிகளுக்கு அரிசிமாக் கோலத்தின் மூலம் உணவு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆகவே இதன்படி கோலம்போடுவதை ஊக்குவிப்பதற்காக கோலத்திலுள்ள அரிசிமாக்களை எறும்பு தின்றால் கண் கூர்மையாகும் என்று சொன்னார்கள். இதனையே நாம் எறும்பைத் தின்றால் கண் கூர்மையாகும் என்று நினைத்து செயற்படுகின்றோம். (எறும்பு வியாபாரம் செய்யலாம் போல..)

இவ்வாறாக பல விடயங்கள் உள்ளன... எனக்குத் தெரிந்த அல்லது இனி அறிந்துகொள்ளப்போகின்ற இவ்வாறான விடயங்களை எல்லாம் உங்களோடு பகிர்ந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கின்றேன்...

Wednesday, August 26, 2009

இருபத்தைந்தாவது பதிவில் இதயம் திறக்கிறேன்....!!!!!!


இது எனது வலைப்பூவில் பதிவாகும் 26ஆவது பதிவு. ஆனால் எனது சொந்தப் பதிவென்று பார்த்தால் இது 25ஆவது பதிவு. பொதுவாக 25ஆவது பதிவை எழுதும்போது பலரும் தங்கள் பதிவுலக அனுபவங்களையும், அடுத்து வரப்போகும் தங்கள் பதிவுகளின் போக்குகள் தொடர்பிலும் சொல்வதுண்டு.
அந்தவகையில் மிகவும் குறுகிய அனுபவமுடைய நானும் எனது சின்னச் சின்ன அனுபவங்களையும் எதிர்காலத் திட்டங்களையும் இந்தப் பதிவின் வழியே சுருக்கமாக தருகின்றேன்.....
உண்மையில் நான் கடந்த மே மாதத்தில் இந்த வலைப்பூவை ஒரு விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருந்தேன். அப்போது வலைப் பூ தொடர்பான தொழில் நுட்ப அறிவோ, வேறு வலைப் பதிவாளர்களுடனான தொடர்புகளோ இருக்கவில்லை.
மேலும் வலைப்பூக்களை வாசிப்பதும், பின்னூட்டங்களை இடுவதும் அப்போது குறைவு அல்லது இல்லை என்று சொல்லலாம். அப்படியான ஒரு சூழலில்தான் இந்த வலைப் பூவை ஒரு மின்னஞ்சலை உருவாக்குவது போன்ற உணர்வுடன் ஆரம்பித்தேன்...
ஆரம்பித்ததன் பின்னர் இதில் என்னென்ன விடயங்களை இடுவது என்று சிந்தித்து முதலில் வேறு வலைத்தளங்களில் வெளியாகும் முக்கியமான செய்திகளை பிரதிபண்ணி வெளியிட்டு பரீட்சித்துப் பார்த்தேன்... ஆனாலும் அது ஆபத்தில் முடியுமோ என எண்ணி அவற்றை நீக்கிவிட்டு சினிமா சம்பந்தமான தகவல்கள் சிலவற்றை பிரதிபண்ணி வெளியிட்டேன்.
எனினும் அதுவும் திருப்திகரமாக அமையாமையால் அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு விளையாட்டாக கடந்த மே மாதம் 19ஆம் திகதி, அன்று பெரும்பாலானவர்கள் மத்தியில் இருந்த குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டு "இப்போதுள்ள குழப்பம்" எனற தலைப்பில் எனது முதலாவது சொந்தப் பதிவை பதிந்தேன்...
உண்மையில் இந்தப் பதிவை முழுமையாக்கிய பின்னர் எனது மனதில் ஒரு இனம்புரியாத திருப்தி உருவானது. அத்துடன் அந்தப் பதிவு கணினிக்கு முன்னால் அமர்ந்திருந்து யோசித்து, யோசித்து தட்டச்சு செய்த பதிவு. ஏற்கனவே எழுதவுமில்லை, தயார்ப்படுத்தவுமில்லை. அதாவது அது ஒரு திடீர் பதிவு. (இப்போதும் பெரும்பாலான பதிவுகள் அப்படித்தான் என்றாலும் கொஞ்சம் குறிப்பெடுத்துக் கொள்வதுண்டு.)
இப்படியாக எனது ஆரம்பப் பதிவே ஒரு அரசியல் பதிவாக அமைய அடுத்து எனது வலைப்பூவில் என்னென்ன விடயங்களை எல்லாம் பதியலாம் என்று சிந்தித்தபோது, சில முகப்புத்தக நட்புக்களும், இன்னும் சில நேரடி, தொலைபேசி நட்புக்களும் இதனை ஒரு பல்சுவை அம்சங்களிற்கான வலையாக பேணுமாறு கூறினார்கள்.
ஆனாலும் எனக்கு இதனை ஒரு அரசியல் கட்டுரைகளுக்கான களமாக பேணும் எண்ணமே இருந்தது. எனினும் தொடர் அரசியல் பதிவுகளின் ஆபத்தினை கருத்தில்க் கொண்டு எனது நட்பு உள்ளங்களின் ஆலோசனைப்படி பல்சுவை அம்சங்களிற்கான வலைத்தளமாக பதிவுகளை பதிய எண்ணி, அடுத்ததாக எனக்கும் எனது ஆருயிர் நண்பனுக்கும் (நண்பன் யுத்தத்தின் பிடிக்குள் சிக்கி உயிரிழந்துவிட்டான்) இடையில் நடந்த சுவையான விவாதம் ஒன்றை "கடவுள் உள்ளாரா?? இல்லையா???" என்ற தலைப்பில் பதிந்தேன்...
அதனைத்தொடர்ந்து "இயக்குனர்" என்ற தலைப்பில் கையிருப்பில் இருந்த ஒரு கவிதையென்று பதிவுகள் தொடர்ந்து இப்போது 25ஆவது சொந்தப் பதிவை பதிந்துகொண்டிருக்கின்றேன்.... (எனது வலைப் பூவில் வணக்கப் பதிவோ அல்லது விளக்கப் பதிவோ இல்லாமை இது ஒரு விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட திட்டமிடப்படாத வலைப்பூ என்பதற்கு ஆதாரமாக இருக்கும்...)
மேலும் நான் வலைப் பூவை ஆரம்பித்த மே மாதத்தில் மட்டும் மொத்தமாக 05 பதிவுகளை பதிந்திருந்தேன். அடுத்து ஜூன் மாதத்தில் 06பதிவுகள் ஜூலையில் 07பதிவுகள் என்று மாதம் ஒவ்வொரு பதிவுகளாக அதிகரித்திச் செல்வதே நோக்கமாக இருந்தது... இதுவரை அதை செய்யவும் முடிந்துள்ளது... அத்துடன் எனது பதிவுகளையும், படைப்புக்களையும் காத்திரமானவையாக்குவதுடன், அவற்றை பலரிடம் கொண்டு சேர்க்கின்ற தேவையும் உள்ளது...
அதுமட்டுமன்றி இனிவருங்காலங்களில் ஏனைய அனுபவஸ்தர்களின் வலைப்பூக்களை அதிகம் வாசித்து அவற்றுக்கு பின்னூட்டங்களை வழங்குவதுடன், தொழில் நுட்ப விடயங்களையும் கற்றறிந்து கொள்ளவேண்டியுள்ளது... உண்மையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல், வலைப்பூக்களை அதிகம் வாசிக்காமல், பின்னூட்டமிடாமல், தொழில் நுட்ப விடயங்களை அறிந்துகொள்ளாமல் உள்நுழைந்த எனக்கு மேற்படி விடயங்களை நடைமுறைப் படுத்துவது மிக மிக அவசியமான ஒன்று...
மேலும் புதிதாக வலைப்பதிவுகளை ஆரம்பிப்பவர்களின் வலைத்தளங்களை வாசித்து பின்னூட்டங்களால் உற்சாகப்படுத்த வேண்டுமென்கின்ற அதீத ஆர்வத்தில் உள்ளதுடன், எனது பதிவுகள் யார் மனதையும் புண்படுத்தாமல் அமைய வேண்டுமென்பதிலும் உறுதியாக உள்ளேன்...
உங்கள் அன்பும், ஆதரவும் துணையிருக்க எனது பயணம் இன்னும் தொடரும்.... உற்சாகப் படுத்தும் உள்ளங்களுக்கும், வலைத்தளத்திற்கு வரும் வாசகர்களுக்கும், ஆலோசனைகளை தரும் அன்பர்களுக்கும், உதவி புரியும் உறவுகளுக்கும் உள்ளத்தால் உண்மையான நன்றிகள்....

Sunday, August 23, 2009

முகாம்களை நோக்கி.....!!!!!!! பகுதி-02

ண்பன் வீதிச் சோதனையில் அடையாள அட்டை இல்லாமல் சிக்கியமையால் தடைப்பட்ட முகாம்களை நோக்கிய எனது முதலாவது பயணத்தை திங்கட்கிழமை காலை உறவினர் ஒருவறின் துணையுடன் ஆரம்பிப்பதாக தீர்மானித்திருந்தேன். எனினும் அவராலும் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் என்னுடன் கூட வருவதற்கு முடியாமல்போகவே அன்றைய பயணம் சாத்தியமாகுமோ? என்ற அச்ச உணர்வு தோன்றியது.
அப்போது எனது அன்னையார் தான் என்னுடன் வருவதாக சொன்னார். (எனக்கு இதற்கு முன்னர் அந்த முகாம்கள் அமைந்துள்ள செட்டிக்குளம் பகுதிக்கு சென்ற அனுபவம் கிடையாது. ஆனால் அம்மா ஓரிரு தடவை சென்று வந்திருக்கிறார்.) உண்மையில் அப்போது எனது அன்னையாரின் உடல்நிலை அவ்வளவு நன்றாக இருக்கவில்லை.
ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை எட்டு ஐம்பது மணியளவில் அம்மாவுடன் பொடி நடையாக வவுனியா பேரூந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இடையில் கொழும்பில் வாங்கிக் கொண்டு செல்வதற்கு தவறிய சில பொருட் கொள்வனவு...
வவுனியா பேரூந்து நிலையத்தை அடைந்தபோது அங்கு நிறைந்த மக்கள் கூட்டம். பிறகென்ன ஆரம்பமே வரிசைதான். (நமக்கு நிவாரணத்தில ஆரம்பித்து இப்ப மலசல கூடம், குளியல் வரைக்கும் வரிசை...வரிசை...) கூட்டத்தோடு கூட்டமாக கலந்து வரிசையில் நின்று பயணச் சிட்டையை பெற்றுக்கொண்டு பொதிச் சோதனையை முடித்துக்கொண்டு (எங்களுக்கு எங்குதான் சோதனை இல்லை..) பேரூந்துக்குள் புகுந்தால் அங்கு கால் கூட வைக்க முடியாதளவுக்கு பேரூந்து பயணிகளால் நிறைந்திருந்தது. எனக்கு இந்த அனுபவம் கொஞ்சம் பழக்கம் என்றாலும் அன்னையாரை எண்ணினால் பாவமாக இருந்தது.
அப்போது நம்மை பார்த்து நிறைய நேரம் புன்னகைத்துக் கொண்டிருந்த நம்மை நன்கு தெரிந்த ஆனால் நமக்கு திடீரென ஞாபகம் வராத ஒரு வயதான பெண் தனது இருக்கையை எனது அன்னைக்கு கொடுத்தார். உண்மையில் அவருக்கும் எனது அன்னைக்கும் இடையில் பெரிதாக வயது வேறுபாடு இருக்காது என்று நினைக்கின்றேன். இத்தனைக்கும் எத்தனையோ இளையவர்கள் அங்கு ஆசனத்தில் அமர்ந்திருந்தாள்.
ஒருவாறாக அந்த நல்ல உள்ளத்தின் உதவியால் அம்மா ஆசனத்தில் அமர நான் ஒற்றைக் காலில் தொங்கிக் கொண்டு நிற்க ஓடியது பேரூந்து. அது ஒரு அரச பேரூந்து. பொதுவாக முகாம்களுக்கு அரச பேரூந்துச் சேவையே இடம்பெறுகின்றது. பேரூந்துக் கட்டணம் 49 ரூபாய். ஐம்பது ரூபாய் கொடுத்தால் ஒரு ரூபாய் மிகுதி கிடையாது. இங்கென்றால் (கொழும்பில்) ஐம்பது சதம் மிகுதிக்காக நடத்துனருடன் சண்டையிடும் எத்தனையோபேரை கண்டிருக்கின்றேன். அந்தவகையில் இது நம்மவர்களின் நல்ல ஆனால் பலவீனமான பழக்கம் என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன். (நமது உரிமைகள் பறிக்கப்பட்டால் அல்லது நம்மை மற்றவர்கள் ஏமாற்றினால் அதனை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற அடிப்படையில் கொஞ்சம் பலவீனமானதே.)
பேரூந்து யாழ்-கண்டி வீதியில் சிறிது தூரம் பயணித்து பின்னர் வவுனியா கச்சேரியை அண்டியுள்ள வவுனியா-மன்னர் வீதியால் திரும்பி சென்று கொண்டிருந்தது.
இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் சொல்ல வேண்டும் அதாவது பேரூந்தில் பயணித்த பயணிகளிடம் எங்கு செல்கின்றீர்கள் என்று நடத்துனர் கேட்டபோதெல்லாம் ஒற்றை வார்த்தையில் ராமநாதன், ஆனந்தகுமாரசுவாமி, அருணாசலம்.... என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எத்தனை உயர்ந்த மனிதர்கள். அவர்களின் முன்னால் மரியாதைக்காக வழங்கப்பட்ட சேர்பொன், கலாயோகி எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதா??? குறைந்த பட்சம் அவர்கள் ராமநாதன் முகாம், ஆனந்தகுமாரசுவாமி முகாம், அருணாசலம் முகாம்.... என்று அழைத்திருந்தாலாவது ஆறுதலடைந்திருக்கலாம். (முகாம்களிற்கு முன்னால் உள்ள பெயர்ப் பலகைகளிலும் சேர்பொன், கலாயோகி போன்ற கெளரவங்களை காணவில்லை.)
வவுனியா-மன்னர் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பேரூந்து பூவரசங்குளத்தை அடைந்து அங்கிருந்து இடது பக்கமாக திரும்பி பூவரசங்குளம்-செட்டிக்குளம் வீதியால் சென்றது. இந்த வீதியில் தார்களே இல்லாத பல பகுதிகளை தரிசிக்க முடிந்தது. இந்த வீதியில்ருந்து வலது பக்கமாக திரும்பிய பேரூந்து மன்னார்-மதவாச்சி வீதியால் மன்னார் போகும் திசையில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியின் வலது பக்கத்தில் முதலாவது முகாம். அது கதிர்காமர் முகாம். இந்த முகாம் மட்டுமே வீதியின் வலது பக்கமாக உள்ள முகாம் என்பதுடன், இதுவே வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கூட்டிச் சென்று காண்பிக்கப்படுகின்ற கொஞ்சம் தரப்படுத்தப்பட்ட முகாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமை அடுத்து சிறிது தூரமாக சென்றால் வலது பக்கத்தில் அடுத்த முகாம். அது கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களின் பெயரில் அமைந்த முகாம். அதனை அடுத்து அதற்கு அருகாக சேர்பொன் ராமநாதன் அவர்களின் பெயரில் அமைந்த முகாம். இந்த முகாமை நோக்கியதாகவே எனது முதலாவது பயணம் அமைந்தது.
முகாமிற்கு முன்னால் பேரூந்து தரித்தபோது நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திக்கப் போகும் அந்த உறவுகளை காணும் அதீத உற்சாகத்துடன் கால்பதித்து வீதிக்கு வலது பக்கமாக இருக்கும் பார்வையாளர்கள் பதிவு, சோதனை நிலையத்திற்கு சென்றால் அங்கும் நிறைந்த கூட்டம். பிறகென்ன மீண்டும் வரிசைதான். வேகாத வெயில் வேறு.. ஒரு தடவையில் கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து பேரைத்தான் பார்வையிடுவதற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே பார்வையிட முடியும் என்றார்கள். வவுனியாவிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள் ஒற்றைக்காலில் பேரூந்தில் தொங்கி வந்து இங்கு பத்து நிமிடங்கள் மட்டும்தான் பார்க்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.
ஒருவாறு மனதை சமாதானம் செய்துகொண்டு வரிசையோடு வரிசையாக கால்கடுக்க நின்று அடையாள அட்டையை பதிந்து, பின்னர் பொதிகளை சோதனைக்கு கொடுத்தபோது அவர்கள் பல பொதிகளில் கொண்டு வந்தவற்றை ஒரு பொதிக்குள் அடக்கி, சுருட்டி, சுமையாக்கி தந்தார்கள். வீதியைக்கடந்து முகாமின் சந்திப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அந்த இடத்தை நோக்கி நகர்ந்தபோது என்னினிய சொந்தங்கள் அந்த வேகாத வெயிலுக்குள் நமது வருகைக்காக காத்திருந்தார்கள்... (ஏற்கனவே நமது வருகையை தெரியப்படுத்தியிருந்தோம்)
கண்ணீரால் கழுவப்பட்ட முதலாவது சந்திப்பு....
தலையில் ஒரு தொப்பிகூட இல்லாமல் அவர்கள் நின்றதை பார்த்தபோது எமது வருகை அவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் என்பதை உணர்ந்தேன்... நீண்ட காலம் சந்திக்காத, நிறைய துயரங்களை, இழப்புக்களை சுமந்திருந்த உறவுகளை கண்டவுடன் மனதில் இருந்த துன்பச் சுமைகள் எல்லாம் திரண்டு வந்துகொண்டிருந்தது. ஓ! என்று பலமாக உரத்த குரலில் அவர்களை அரவணைத்து அழவேண்டும் என்று தோன்றியது. ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் கண்ணீரை தடுக்க முடியவில்லை. மெளனமாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. கதைப்பதற்கு நா தளதளர்த்தது அதனால் வார்த்தைகள் வர மறுத்தன. அன்றைய சந்திப்பு அது கண்ணீரால் கழுவப்பட்ட சந்திப்பு.
எனது உறவினர்களின் கையை தொட்டு பேச எண்ணி கையை நீட்டினால்,,, வலை வடிவில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்த அந்த இரட்டை முள்வேலி இடம்தர தாமதித்தது.. ஒருவாறு கையை நீட்டி அவர்கள் கரம் தொட்டுக் கொண்டபோது கவலைக்குள்ளும் ஒரு சந்தோசம்.. இந்த சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது அந்த வேலிக்கு பின்னால் முகாமுக்குள் கையில் குழைந்தையுடன் நின்ற ஒரு இளம்பெண் வயிற்றுப்பசிக்காகவோ என்னவோ மற்றவர்களிடம் கை ஏந்திக்கொண்டிருந்தாள். மனம் இரங்கியது.... நெஞ்சு வலித்தது... உண்மையில் முகாம்களில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்தாலும் அப்படி வசதி இல்லாத பலரும் அங்கு இருக்கின்றார்கள்...
விசில் ஊதப்பட்டது... நேரம் பத்து நிமிடங்களை கடந்துவிட்டது.... இனி அங்கு நிற்க முடியாது.... கையில் கொண்டுசென்றதை கொடுத்துவிட்டு விடைபெற்றேன்... அப்போது உறவினர்கள் ஆனந்த குமாரசுவாமி முகாமில் என்றால் அதிக நேரம் நின்று கதைக்கலாம் நாங்கள் நாளை அந்த முகாமுக்கு வருகிறோம் நீங்களும் வாருங்கள் என்றார்கள்...(இந்த இரண்டு முகாம்களும் அடுத்தடுத்து உள்ளதால் அங்கும் ஒரு வரிசையில் நின்று அனுமதி பெற்று பக்கத்து முகாமுக்கு செல்லும் வசதி உண்டு) வருகிறேன் என்று கூறி விடைபெற்றேன்... அது ஒரு அவசர விடை பெறல்... விடை பெற்று சென்று பேரூந்தில் ஏறும் வரை உறவுகள் அந்த வேகாத வெய்யிலில் நின்று கையசைத்து எம்மை வழியனுப்பி வைத்தார்கள்....
((((இது அத்தியாயத்தின் ஆரம்பம் இனி அடுத்த அத்தியாயம்... முகாம்களை நோக்கி இன்னும் வரும்....))))

இனிதே நிறைவுற்றது இலங்கை வலைப் பதிவாளர் சந்திப்பு...!!!

இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழைமை திட்டமிடப்பட்டதற்கு அமைவாக இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு காலைப் பொழுதில் ஆரம்பமாகியது. அந்த வகையில் முதலாவதாக வரவேற்புரை இடம் பெற்றது. வரவேற்புரையினை புல்லட் என்று எல்லோராலும் அறியப்பட்ட பவன் நிகழ்த்தினார்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும், அதாவது புல்லட் தனது வலைப்பூவில் பதிந்த வலைப்பதிவாளர் சந்திப்பு நிகழ்வது போன்ற ஒரு கனவுப் பதிவுதான் இந்த ஒன்றுகூடலுக்கு காரணமாக அமைந்திருந்தது. உண்மையில் தனது புனை பெயருக்கு ஏற்ப அவர் ஒரு நகைச்சுவை மன்னனாகவே இருந்தார். அவருடைய வரவேற்புரையில் இதனை காண முடிந்தது.

வரவேற்பைத் தொடர்ந்து வலைப்பதிவும் சட்டமும் என்ற தலைப்பில் சுபானு என்னும் புனைபெயரைக் கொண்ட சயந்தன் சில விளக்கக்ங்களை கொடுத்திருந்தார். இந்த விளக்கத்தில் எமக்கு தெரியாத பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு நிறுவன ரகசியங்களை பதிவேற்றுவது, மற்றவர்களின் பதிவுகளை பிரதி பண்ணி வெளியிடுவது போன்ற செயற்பாடுகளில் சட்டம் எப்படி பாயும் என்பது தொடர்பான விளக்கம் சிறப்பாக இருந்தது.

இவரின் இந்த விளக்கவுரையைத் தொடர்ந்து அதிகமானோர் பயன்படுத்தும் வலைப்பூவான Bloggerஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பத்து மெழுகுதிரிகளை ஏற்றி கேக் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த பத்து மெழுகுதிரிகளில் இரண்டாவது மெழுகுதிரியை ஏற்றுவதற்காக வயதாலும், அனுபவங்களாலும் மிகவும் சிறியவனான என்னை அழைத்திருந்தார்கள். மெழுகுதிரி ஏற்றப்பட்டதும் கேக் வெட்டப்பட்டது. கேக்கினை மூத்த ஊடகவியலாளரான திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள் உட்பட்ட அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் சிலர் வெட்டினார்கள்... ஆதிரை என்ற புனைப்பெயர் கொண்ட ஸ்ரீகரன் Bloggerஇன் பத்தாவது ஆண்டு நிறைவைப்ப்பறிய சில கருத்துக்களை வழங்கினார்.

அடுத்து வலைப் பதிவாளர்களுக்கிடையிலான அறிமுகம் இடம் பெற்றது. இலங்கையின் சகல பாகங்களிலுமிருந்து (யாழ்ப்பாணத்திலிருந்தும்) இந்த நிகழ்வில் வலைப்பதிவாளர்கள், பின்னூட்டமிடுவோர், வலைப்பதிவை ஆரம்பிக்கவுள்ளவர்கள், வாசகர்கள் என கிட்டத்தட்ட எண்பதுக்கும் அதிகமானவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்கள். உண்மையில் எழுத்துக்களால் மட்டும் அறியப்பட்ட முகம் தெரியாத பலரை சந்திக்கக் கிடைத்தமை மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

வலைப் பதிவாளர்ளுக்கிடையிலான அறிமுகங்களைத் தொடர்ந்து மருதமூரான் என்ற புனைபெயரைக் கொண்ட புருஷோத்தமன் வெளிப்படுத்தல் என்ற தலைப்பில் சில விளக்கங்களைக் கொடுத்திருந்தார். இந்த விளக்கவுரையில் தமிழ்மணம், தமிழிஸ், பூச்சரம் போன்ற திரட்டிகள் தொடர்பாக சொல்லப்பட்டதுடன், இலங்கை வலைப்பதிவாளர்களுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ்தேவி, மாயாலங்கா திரட்டிகள் பற்றியும் கூறப்பட்டது. இதில் யாழ்தேவி தமிழ்ப் பதிவுகளுக்கான திரட்டி என்பதுடன் மாயாலங்கா சிங்கள, ஆங்கில பதிவுகளுக்கான திரட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த திரட்டிகள் பற்றி பேசும்போது பலரும் தங்கள் சந்தேகங்களையும், கருத்துக்களையும் கூறியிருந்தார்கள். குறிப்பாக பெரும்பாலானவர்கள் யாழ்தேவி என்ற பெயர் பிரதேச குறியீடாக அமைவதுடன் அது அரசியல் ரீதியான ஒரு குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறு பல கருத்துக்கள், விவாதங்களுடன் இந்த நிகழ்வு நிறைவுபெற அடுத்ததாக சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மூத்த ஊடகவியலாளரான திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது பதிவுலக அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டதோடு விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பதிவாளர்களுக்கு சில ஆலோசனைகளை அல்லது அன்பான வேண்டுகைகளை வழங்கியிருந்தார். உண்மையில் பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள்தான். எத்தனை பெரிய மனிதர் திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள். ஆனாலும் அந்த கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் மிகவும் இயல்பாக பேசினார். இவரிடமிருந்து நம்மைப் போன்றவர்கள் கற்கவேண்டியவை இன்னும் இன்னும் ஏராளம் உள்ளன என்று எனது உள்ளம் சொன்னது.

இந்த சிறப்புரையைத் தொடர்ந்து சேரன் கிரிஷி அவர்கள் சில தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கினார். உண்மையில் எம்மைப் போன்றவர்களுக்கு அது மிகவும் பிரயோசனமாக இருந்தது. அவரின் தொழில்நுட்ப விளக்கங்களில் வலைப்பூவை பாதுகாப்பது எப்படி என்ற கருத்து மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

இனி என்ன மீண்டும் புல்லட்.... தனது வலைப்பதிவு அனுபவங்களை சுவாரசியமாக அவருக்கேயுரிய பாணியில் பகிர்ந்துகொண்டார்..

அடுத்து வலைப்பதிவாளரும் இளைய தலைமுறை அறிவிப்பாளர்களின் முதல்வனுமான திரு.லோஷன் அவர்களின் அனுபவப் பகிர்வு இடம்பெற்றது. தலைப்புக்களால் வாசகர்களை கவர்வது தொடர்பாகவும், சீரியஸ் பதிவுகளுக்கு கிடைக்கும் குறைந்த வரவேற்புக்கள் தொடர்பான தனது ஆதங்கத்தையும் அவர் சொல்லியிருந்ததுடன் சில இந்தியத் தமிழை நாங்கள் பயன்படுத்துவது தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவரின் இந்த பகிர்வுகளைத் தொடர்ந்து பதிவர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில் அதிகமாக விசைப் பலகைகளின் பாவனை மற்றும் யாழ்தேவி என்ற பெயரில் உள்ள சிக்கல் நிலை தொடர்பாகப் பேசப்பட்டது. மேலும் பலர் தங்கள் பல விதமான கருத்துக்களையும் முன்வைத்திருந்தார்கள்..

இந்த வலைப்பதிவாளர் சந்திப்பின் இறுதி நிகழ்வாக வந்தியத்தேவன் என்ற புனை பெயர் கொண்ட மயூரனின் பின்னூட்டலும் நன்றியுரையும் இடம் பெற்றது. உண்மையில் இங்கு வந்தியத்தேவன் அவர்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம். அதாவது நான் இந்த வலைப்பதிவாளர் சந்திப்புக்கு சென்ற போது வாசலில் நின்றவர்கள் வந்தியத்தேவன் அவர்களும் புல்லட் அவர்களும்தான். இதில் வந்தியத்தேவன் அவர்கள் எந்தவித பெருமையும் இல்லாமல் இயல்பாக பேசியமை என்னை மிகவும் கவர்ந்தது. புல்லட் அவர்களும் அப்படித்தான். அவரும் இயல்பாக மிகவும் நகைச்சுவை உணர்வோடு பேசினார்.

இவ்வாறாக அமைந்த இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் திரு.லோஷன், திரு.வந்தியத்தேவன், திரு.புல்லட், திரு ஆதிரை ஆகிய நான்கு சிங்கங்கள் என்பதுடன் இந்த நிகழ்வை இனிமையாக வெற்றி FM இன் புதிய அறிவிப்பாளரான சதீஷ் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்வை இணையத்தின் வழியே நேரடியாக ஒளி, ஒலிபரப்பும் ஆர்வத்தை வெளியிட்டு அதனை சிறப்பாக மது அவர்கள் செய்திருந்தார்.. அத்துடன் இந்த நிகழ்வு சிறக்க இன்னும் எத்தனையோ உள்ளங்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்..

இப்படியாக இனிதே நிறைவுற்றது இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு.

(((வடை, பற்றீஸ், கேக், கோப்பி எல்லாம் தந்தாங்கப்பா... அதை சொல்லாட்டி பலரும் கோபப்படுவாங்களே. ...)))

Friday, August 21, 2009

புகையிரத பயணத்தில் உதித்த சின்ன சின்ன கற்பனைகள்..

எழில் கொஞ்சும் குளு குளு மலையகப் பயணத்தின்போது உதித்த சின்ன சின்ன கற்பனைகளை இந்தப் பதிவு சுமந்து வருகிறது....

நீ பார்த்த பார்வை...

முழு முகச் சவரம் செய்துவிட்டு

வகுப்பறைக்குள் நான் வந்த போது

ஓரக் கண்ணால் ஒழிந்தொழிந்து நீ பார்த்த பார்வை

இன்னும் என் உள்ளத்தில் உள்ளதடி..

கண்ணீர்!!!!....

இளவரசனின் மரணத்துயரால்

இளவரசி சிந்திய கண்ணீர்

அங்கே அருவியாய் கொட்டுதாம்..

அப்போ

உலகில் உள்ள மொத்தக் கடலும்

உன்னை பிரிந்திருந்த நாட்களில்

நான் பொழிந்த கண்ணீரா???

கடந்து செல்கின்றாய்....

மிதி பலகையில் பயணித்த போது

தென்றல் வருடிய ஒவ்வொரு கணமும்

நீ என்னை கடந்து சென்ற ஞாபகங்கள்....

மறக்காது....

கணப்பொழுதில்

கன்னத்தில் நீ தந்த காந்த முத்தம்

மரணத்தின் கடைசி மணித்துளிவரை

மறக்காது பெண்ணே.......

கெளரவம்..

மெல்லினிய உன் சொல்லொலி

காற்றலையில் கலக்கையில்

காற்றலையும்

கெளரவம் பெறுகுதடி பெண்ணே..

இங்கொரு இதயம்...

ஓங்கி வளர்ந்த ஆலமரம்

அதில் ஓய்யாரமாய்

பல பச்சைக்கிளிகள்...

வாழ்ந்த காலத்தை மறக்கமுடியுமா??

கடந்துபோன

கல்லூரிக்காலம் இனி வராதா?? என்ற ஏக்கத்துடன்

இங்கொரு இதயம்...

பிரிவு...

அந்தப் புகை வண்டிப் பயணத்தில்

ஒவ்வொரு மலைக் குடைவுகளை கடந்தபோதும்

உன்னைப் பிரிந்திருந்த இருண்ட நாட்கள்

நிழலாடின நெஞ்சில்....

மெளனம்...

நீண்ட உன் மெளனம்

எனக்குள் நிறைந்த சலனம்...

அது மரண வேதனையிலும் கொடியது....

மங்கையே!

இன்றே உன் மெளனம் கலைத்து

என் சலனம் களைந்துவிடு....

இல்லையேல்

இந்த இதயம் இனியும் தாங்காது....

பார்வை...

உயர்ந்த மலையின்

உச்சியிலே நின்றபோது

பனித்துளிகள் மேனி தடவிய

மணித்துளிகள் ஒவ்வொன்றும்

உன் பார்வை

என்மேல் பட்ட நாட்களை மீட்டிச் சென்றன...

மாற்றுவோம்....

காலங்கள் மாறும் என்றிருக்காமல்,

காலத்தை நாம் மாற்றுவோம்...

பொறாமை..

தங்கு தடையின்றி

தண்டவாளத்தில் பயணிக்கும்

புகையிரதத்தை பார்க்க

பொறாமையாய் உள்ளதடி....

இந்த புகையிரதம்போல்

எங்கள் காதல் இல்லையே!!!!

நீயே வருகிறாய்...

நீண்ட நினைவேடுகளின்

பசுமையான பக்கங்களில் எல்லாம்

அழியாத அழகிய குறிப்புக்களாய்

நீயே வருகிறாய்....

ஏக்கம்!!!!

அந்த புகையிரத ஊழியர்

பச்சைக் கொடி அசைக்கும்போதெல்லாம்

நீ என் காதலுக்கு

பச்சைக்கொடி காட்டாயோ

என்ற ஏக்கம் எனக்குள்ளே!!!!

செல்லாக் காசு....

பசிக்குது தர்மம் பண்ணுங்க...

வயசான முதியவர்...

ஒரு கையில் பொல்லு மறு கையில் தட்டு....

கந்தல் ஆடை...

முகச்சவரம் செய்து பல நாட்கள் இருக்கும்....

மனம் இரங்கியது...

பக்கத்துக் கடையில் பாண் வாங்கிக்கொடுக்க எண்ணி

கடைக்காரனிடம் பணத்தை நீட்டினேன்....

கரையில் சின்ன கிழிசலால்

அது செல்லாக்காசு என்றான் கடைக்காரன்....

சின்ன மெளனம்...

இன்னுமொரு காசை நீட்டினேன்...

கம கம பாணை கையில் தந்தான்...

இப்போ அந்தப் பாண்

முதியவரின் கைக்கு மாறியது...

பசியின் கொடுமை

அவர் அதை சாப்பிட்ட அழகில் தெரிந்தது...

முதியவரின் முகம்

மெல்ல மெல்ல மலர்ந்தது....

விடைபெற்றேன்...

இப்போ,

அந்த செல்லா காசின் ஞாபகம்...

எடுத்துப் பார்த்தேன்...

கொஞ்சம் சிந்தித்தேன்....

செல்லாக் காசு...

இது செல்லாக் காசு...

கரை கொஞ்சம் கிழிந்ததனால் அல்ல!

ஏழையின் பசியை போக்காததால்...

செல்லாக் காசு...

இது ஒரு செல்லாக் காசு.....

Sunday, August 16, 2009

முகாம்களை நோக்கி...... பகுதி-01

வவுனியா முகாம்களில் உள்ள எனது நண்பர்களையும், உறவினர்களையும் பார்வையிடுவதற்காக செல்லவுள்ளேன் என்று கூறியபோது, நண்பர்கள் சிலர் அங்குள்ள உண்மை நிலைமைகளை எடுத்து வருமாறு கூறியிருந்தார்கள்..

நண்பர்களின் இந்த வேண்டுகோளே இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருக்கிறது. அதாவது நண்பர்கள் அவாறு சொன்னபோதே வவுனியா முகாம்களை நோக்கிய பயணத்தை பயண அனுபவமாகவும், இன்னோரன்ன விடயங்களை வெளிப்படுத்துவதற்காகவும் வலைப்பூவின் வழியே பகிர்ந்துகொள்ள எண்ணினேன்.

இதன்படி எனது பயணத்தையும், அங்கு நடந்த விடயங்களையும் இந்த பதிவுத்தொடரின் மூலம் பகிர்ந்துகொள்கிறேன்..

நான் கடந்த சித்திரை வருடப்பிறப்பிற்கு வவுனியா சென்று வந்ததன் பின்னர் பல முறை அங்கு சென்றுவர வேண்டிய தேவை இருந்தபோதிலும் நேரச்சிக்கல் காரணமாக அது சாத்தியமாகவில்லை. அதாவது கடந்த மே மாதத்தில்தான் வவுனியாவை நோக்கி முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்த எனது உறவினர்களும், நண்பர்களும் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். எனவே நீண்டகாலமாக சந்திக்க முடியாமல் அந்த இரத்தபூமியில் இருந்து வந்த அவர்கள் எல்லோரையும் சென்று பார்க்க வேண்டிய தேவை இருந்தது.

இப்படியாக அங்கு சென்றுவர வேண்டிய அவசியம் இருந்த போதிலும் அது சாத்தியமாகவில்லை. அதனால் கவலை தோய்ந்து இந்த இயந்திர வாழ்வுக்குள் இயங்க்கிக்கொண்டிருந்தபோதுதான் இந்தப் பயணம் சாத்தியமானது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அங்கு செல்ல முடியும். இது எனக்கு மிகுந்த சந்தோசம். அன்றைய தினம் இரவு தபால் புகையிரதத்தில் வவுனியா நோக்கி பயணிக்க தீர்மானித்து, முதல் நாள் வெள்ளிக்கிழைமை ஆசன முற்பதிவுக்க்காக கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றிருந்தேன். (முற்பதிவு சாத்தியமாகுமா என மனதில் கொஞ்ச பயமிருந்தது.)

ஆசன முற்பதிவுச் சிட்டையை பெற்றுக்கொண்டு அன்றைய வழக்கப்படி அலுவலகம்... அங்கிருந்து வீடு செல்ல நேரம் இரவுப்பொழுது........ அதனால் நண்பர்களுக்கும், உறவினர்களுக்குமான பொருட்கொள்வனவை அடுத்த நாளைக்கு (சனிக்கிழமை) ஒத்திவைத்துவிட்டு சில வேலைகள்........

இது நான் வவுனியா பயணிக்கவுள்ள சனிக்கிழமை காலைப்பொழுது.. வழக்கமான கற்கைநெறி வகுப்பு.. அது முடிய மதியமாகிவிட்டது.. இப்போது அந்த பொருட்கொள்வனவு.. முடிய கிடைத்த குறுகிய நேரத்துக்குள் முகப்புத்தகத்துடன்... பின்னர் கொழும்பில் நான் தங்கியுள்ள வீட்டை நோக்கி... அங்கு செல்லும்போது இரவு ஏழு மணி கடந்திருந்தது. பயணப்பையை தயார் செய்தேன்... (இதுதான் நம்ம வழக்கம்..) உணவு.... அதன் பின் பேரூந்து தரிப்பிடம் நோக்கி நகர்வு.. நேரம் இரவு எட்டு மணி முப்பது நிமிடத்தை அண்மித்துக்கொண்டிருந்தது. பேரூந்து தரிப்பிடத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் நோக்கி பேரூந்தில் ஒரு பயணம்.. நேரம் ஒன்பது மணியைத் தொடுவதற்கு இன்னும் சில மணித்துளிகள் மட்டுமே இருந்தன...

புகையிரத நிலைய நுழைவாயிலில் வழமையான சோதனை.. எனது பயணப்பை மிகவும் சிறியது என்றாலும் எனக்கு முன்னால் நின்றவர் ஏராளமான மிகவும் பெரிய பைகளை வைத்திருந்தமையால் அதில் ஒரு தாமதம்.. எல்லாம் முடிந்து உள்ளே போனால் அங்கு என்றுமில்லாத அளவுக்கு மூன்றாம் மேடையில் (இதுதான் வவுனியா புகையிரதம் வரும் மேடை) நிறைந்த மக்கள் கூட்டம். அப்போது பக்கத்தில் நின்ற ஒருவர் "இன்று என்றுமில்லாத அளவுக்கு கூட்டமாக உள்ளதே! எப்படி இதுக்குள்ள சீட் கிடைக்கப்போகுது" என்று சலித்துக்கொண்டார். "நல்ல வேளை ஏற்கனவே முற்பதிவு செய்துகொண்டேன்" என்று எனது உள்மனம் சொன்னது.(சுயநலம்)

நேரம் ஒன்பது மணி முப்பது நிமிடத்தை அண்மிக்கும்போது அந்த புகையிரதம் வந்தது.. உண்மையில் அது வழக்கமாக முதலாம் மேடையில் வரவேண்டிய புகையிரதம். அதாவது பதுளை நோக்கி செல்லும் புகையிரதம். அப்போதுதான் என்றுமில்லா கூட்டம் அன்று நின்றமை ஏன் என்று புரிந்தது. அந்தபுகையிரதம் புறப்பட்டது... இனி நமக்கான புகையிரதம்..... ம்ம்... அதுவும் வந்தது....

வவுனியா நோக்கி செல்லும் தபால் புகையிரதம் வந்தது... நேரம் ஒன்பது மணி நாற்பத்தைந்து நிமிடமாகிக்கொண்டிருந்தது... பயணிகள் எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள்... நானும் என் பங்கிற்கு ஏறினேன்... சிறிது நேரத்தில் புகையிரதம் புறப்பட்டது.....

தனியாக இருந்து இந்த இயந்திரமயமாக்கப்பட்ட நகரத்திற்குள் வாழ்க்கையை நகர்த்தும் எனக்கு எனது சொந்த இடத்திற்கு ஓரளவு அண்மையில் இருக்கக்கூடிய வவுனியா நோக்கிய பயணமும், அங்குள்ள என் உறவுகள், நண்பர்களை பார்க்கும் ஆர்வமும் மனதுக்கு இனிமையாகவும், சந்தோசமாகவும் இருந்தது. வழக்கமாக இரவு புகையிரதங்களில் பயணிக்கும்போது உறக்கம் வருவது குறைவு. ஆனால் அன்று வழமைக்கு மாறாக கொஞ்சம் தூக்கம்...

நான் எனக்கு ஆறு வயது இருக்கும்போது புகையிரதத்தில் முதன்முதலாக பயணித்திருக்கின்றேன்.. அதற்கு பின்னர் அங்கும், இங்குமென பலமுறை பயணித்தாலும் இம்முறை பயணம் ஒரு உற்சாக உணர்வைகொடுத்தது..

ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நேரம் அதிகாலை ஐந்துமணி பதினைந்து நிமிடத்தை கடந்திருந்தது... புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை அடைய பயணிகளோடு பயணிகளாக கால்பதித்தேன்... அப்போது வவுனியா நிலையத்தில் கடுகதி புகையிரதத்தில் கொழும்பு நோக்கி வருவதற்கான பயணிகள் வரிசையில் காத்திருந்தார்கள்.. ((ம்ம்ம்... எங்கு போனாலும் வரிசைதான்.))எம்மை இறக்கிவிட்டு நாம் வந்த அந்த புகையிரதம் தாண்டிக்குளம் நோக்கி புறப்பட்டது. உள்ளே புகையிரத ஊழியர்களை மட்டுமே காணக்கிடைத்தது.(இதனால் அரசாங்கத்துக்கு எவ்வளவு நஷ்டமாகியிருக்கும்? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது.)

இப்போது புகையிரத நிலையத்திலிருந்து முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி ஒரு பயணம்.. அப்போது வவுனியாவில் தேர்தல் காற்று பலமாக அடித்துக்கொண்டிருந்தது.. சுவரொட்டிகளால் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன... வீட்டை அடைந்தபோது நிலம் கொஞ்சம் தெளிந்து பொழுது புலர்ந்துகொண்டிருந்தது..

உண்மையில் அன்றைய தினமே அதாவது ஆகஸ்ட் இரண்டாம் திகதி ஞாயிற்றுக் கிழைமை அன்றே முகாம்களுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தபோதிலும், எனது நண்பன் ஒருவன் வவுனியாவில் வீத்திச்சோதனையில் அடையாள அட்டை இல்லாமல் வந்து சிக்கிக்கொண்டமையால் (அவன் அடையாள அட்டையை தொலைத்திருந்தான்) அது சாத்தியமாகவில்லை.. எனவே அன்றைய பொழுது வீட்டிலையே கழிய அடுத்தநாள் திங்கட்கிழமையை முகாம்களுக்கான முதலாவது பயண நாளாக தீர்மானித்தேன்....

(((((இது ஆரம்பம் இனித்தான் அத்தியாயம்... முகாம்களை நோக்கி....... இன்னும் வரும்........)))))