
அப்போது எனது அன்னையார் தான் என்னுடன் வருவதாக சொன்னார். (எனக்கு இதற்கு முன்னர் அந்த முகாம்கள் அமைந்துள்ள செட்டிக்குளம் பகுதிக்கு சென்ற அனுபவம் கிடையாது. ஆனால் அம்மா ஓரிரு தடவை சென்று வந்திருக்கிறார்.) உண்மையில் அப்போது எனது அன்னையாரின் உடல்நிலை அவ்வளவு நன்றாக இருக்கவில்லை.
ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை எட்டு ஐம்பது மணியளவில் அம்மாவுடன் பொடி நடையாக வவுனியா பேரூந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இடையில் கொழும்பில் வாங்கிக் கொண்டு செல்வதற்கு தவறிய சில பொருட் கொள்வனவு...
வவுனியா பேரூந்து நிலையத்தை அடைந்தபோது அங்கு நிறைந்த மக்கள் கூட்டம். பிறகென்ன ஆரம்பமே வரிசைதான். (நமக்கு நிவாரணத்தில ஆரம்பித்து இப்ப மலசல கூடம், குளியல் வரைக்கும் வரிசை...வரிசை...) கூட்டத்தோடு கூட்டமாக கலந்து வரிசையில் நின்று பயணச் சிட்டையை பெற்றுக்கொண்டு பொதிச் சோதனையை முடித்துக்கொண்டு (எங்களுக்கு எங்குதான் சோதனை இல்லை..) பேரூந்துக்குள் புகுந்தால் அங்கு கால் கூட வைக்க முடியாதளவுக்கு பேரூந்து பயணிகளால் நிறைந்திருந்தது. எனக்கு இந்த அனுபவம் கொஞ்சம் பழக்கம் என்றாலும் அன்னையாரை எண்ணினால் பாவமாக இருந்தது.
அப்போது நம்மை பார்த்து நிறைய நேரம் புன்னகைத்துக் கொண்டிருந்த நம்மை நன்கு தெரிந்த ஆனால் நமக்கு திடீரென ஞாபகம் வராத ஒரு வயதான பெண் தனது இருக்கையை எனது அன்னைக்கு கொடுத்தார். உண்மையில் அவருக்கும் எனது அன்னைக்கும் இடையில் பெரிதாக வயது வேறுபாடு இருக்காது என்று நினைக்கின்றேன். இத்தனைக்கும் எத்தனையோ இளையவர்கள் அங்கு ஆசனத்தில் அமர்ந்திருந்தாள்.
ஒருவாறாக அந்த நல்ல உள்ளத்தின் உதவியால் அம்மா ஆசனத்தில் அமர நான் ஒற்றைக் காலில் தொங்கிக் கொண்டு நிற்க ஓடியது பேரூந்து. அது ஒரு அரச பேரூந்து. பொதுவாக முகாம்களுக்கு அரச பேரூந்துச் சேவையே இடம்பெறுகின்றது. பேரூந்துக் கட்டணம் 49 ரூபாய். ஐம்பது ரூபாய் கொடுத்தால் ஒரு ரூபாய் மிகுதி கிடையாது. இங்கென்றால் (கொழும்பில்) ஐம்பது சதம் மிகுதிக்காக நடத்துனருடன் சண்டையிடும் எத்தனையோபேரை கண்டிருக்கின்றேன். அந்தவகையில் இது நம்மவர்களின் நல்ல ஆனால் பலவீனமான பழக்கம் என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன். (நமது உரிமைகள் பறிக்கப்பட்டால் அல்லது நம்மை மற்றவர்கள் ஏமாற்றினால் அதனை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற அடிப்படையில் கொஞ்சம் பலவீனமானதே.)
பேரூந்து யாழ்-கண்டி வீதியில் சிறிது தூரம் பயணித்து பின்னர் வவுனியா கச்சேரியை அண்டியுள்ள வவுனியா-மன்னர் வீதியால் திரும்பி சென்று கொண்டிருந்தது.
இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் சொல்ல வேண்டும் அதாவது பேரூந்தில் பயணித்த பயணிகளிடம் எங்கு செல்கின்றீர்கள் என்று நடத்துனர் கேட்டபோதெல்லாம் ஒற்றை வார்த்தையில் ராமநாதன், ஆனந்தகுமாரசுவாமி, அருணாசலம்.... என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எத்தனை உயர்ந்த மனிதர்கள். அவர்களின் முன்னால் மரியாதைக்காக வழங்கப்பட்ட சேர்பொன், கலாயோகி எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதா??? குறைந்த பட்சம் அவர்கள் ராமநாதன் முகாம், ஆனந்தகுமாரசுவாமி முகாம், அருணாசலம் முகாம்.... என்று அழைத்திருந்தாலாவது ஆறுதலடைந்திருக்கலாம். (முகாம்களிற்கு முன்னால் உள்ள பெயர்ப் பலகைகளிலும் சேர்பொன், கலாயோகி போன்ற கெளரவங்களை காணவில்லை.)
வவுனியா-மன்னர் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பேரூந்து பூவரசங்குளத்தை அடைந்து அங்கிருந்து இடது பக்கமாக திரும்பி பூவரசங்குளம்-செட்டிக்குளம் வீதியால் சென்றது. இந்த வீதியில் தார்களே இல்லாத பல பகுதிகளை தரிசிக்க முடிந்தது. இந்த வீதியில்ருந்து வலது பக்கமாக திரும்பிய பேரூந்து மன்னார்-மதவாச்சி வீதியால் மன்னார் போகும் திசையில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியின் வலது பக்கத்தில் முதலாவது முகாம். அது கதிர்காமர் முகாம். இந்த முகாம் மட்டுமே வீதியின் வலது பக்கமாக உள்ள முகாம் என்பதுடன், இதுவே வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கூட்டிச் சென்று காண்பிக்கப்படுகின்ற கொஞ்சம் தரப்படுத்தப்பட்ட முகாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமை அடுத்து சிறிது தூரமாக சென்றால் வலது பக்கத்தில் அடுத்த முகாம். அது கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களின் பெயரில் அமைந்த முகாம். அதனை அடுத்து அதற்கு அருகாக சேர்பொன் ராமநாதன் அவர்களின் பெயரில் அமைந்த முகாம். இந்த முகாமை நோக்கியதாகவே எனது முதலாவது பயணம் அமைந்தது.
முகாமிற்கு முன்னால் பேரூந்து தரித்தபோது நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திக்கப் போகும் அந்த உறவுகளை காணும் அதீத உற்சாகத்துடன் கால்பதித்து வீதிக்கு வலது பக்கமாக இருக்கும் பார்வையாளர்கள் பதிவு, சோதனை நிலையத்திற்கு சென்றால் அங்கும் நிறைந்த கூட்டம். பிறகென்ன மீண்டும் வரிசைதான். வேகாத வெயில் வேறு.. ஒரு தடவையில் கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து பேரைத்தான் பார்வையிடுவதற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே பார்வையிட முடியும் என்றார்கள். வவுனியாவிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள் ஒற்றைக்காலில் பேரூந்தில் தொங்கி வந்து இங்கு பத்து நிமிடங்கள் மட்டும்தான் பார்க்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.
ஒருவாறு மனதை சமாதானம் செய்துகொண்டு வரிசையோடு வரிசையாக கால்கடுக்க நின்று அடையாள அட்டையை பதிந்து, பின்னர் பொதிகளை சோதனைக்கு கொடுத்தபோது அவர்கள் பல பொதிகளில் கொண்டு வந்தவற்றை ஒரு பொதிக்குள் அடக்கி, சுருட்டி, சுமையாக்கி தந்தார்கள். வீதியைக்கடந்து முகாமின் சந்திப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அந்த இடத்தை நோக்கி நகர்ந்தபோது என்னினிய சொந்தங்கள் அந்த வேகாத வெயிலுக்குள் நமது வருகைக்காக காத்திருந்தார்கள்... (ஏற்கனவே நமது வருகையை தெரியப்படுத்தியிருந்தோம்)
கண்ணீரால் கழுவப்பட்ட முதலாவது சந்திப்பு....
தலையில் ஒரு தொப்பிகூட இல்லாமல் அவர்கள் நின்றதை பார்த்தபோது எமது வருகை அவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் என்பதை உணர்ந்தேன்... நீண்ட காலம் சந்திக்காத, நிறைய துயரங்களை, இழப்புக்களை சுமந்திருந்த உறவுகளை கண்டவுடன் மனதில் இருந்த துன்பச் சுமைகள் எல்லாம் திரண்டு வந்துகொண்டிருந்தது. ஓ! என்று பலமாக உரத்த குரலில் அவர்களை அரவணைத்து அழவேண்டும் என்று தோன்றியது. ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் கண்ணீரை தடுக்க முடியவில்லை. மெளனமாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. கதைப்பதற்கு நா தளதளர்த்தது அதனால் வார்த்தைகள் வர மறுத்தன. அன்றைய சந்திப்பு அது கண்ணீரால் கழுவப்பட்ட சந்திப்பு.
எனது உறவினர்களின் கையை தொட்டு பேச எண்ணி கையை நீட்டினால்,,, வலை வடிவில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்த அந்த இரட்டை முள்வேலி இடம்தர தாமதித்தது.. ஒருவாறு கையை நீட்டி அவர்கள் கரம் தொட்டுக் கொண்டபோது கவலைக்குள்ளும் ஒரு சந்தோசம்.. இந்த சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோது அந்த வேலிக்கு பின்னால் முகாமுக்குள் கையில் குழைந்தையுடன் நின்ற ஒரு இளம்பெண் வயிற்றுப்பசிக்காகவோ என்னவோ மற்றவர்களிடம் கை ஏந்திக்கொண்டிருந்தாள். மனம் இரங்கியது.... நெஞ்சு வலித்தது... உண்மையில் முகாம்களில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்தாலும் அப்படி வசதி இல்லாத பலரும் அங்கு இருக்கின்றார்கள்...
விசில் ஊதப்பட்டது... நேரம் பத்து நிமிடங்களை கடந்துவிட்டது.... இனி அங்கு நிற்க முடியாது.... கையில் கொண்டுசென்றதை கொடுத்துவிட்டு விடைபெற்றேன்... அப்போது உறவினர்கள் ஆனந்த குமாரசுவாமி முகாமில் என்றால் அதிக நேரம் நின்று கதைக்கலாம் நாங்கள் நாளை அந்த முகாமுக்கு வருகிறோம் நீங்களும் வாருங்கள் என்றார்கள்...(இந்த இரண்டு முகாம்களும் அடுத்தடுத்து உள்ளதால் அங்கும் ஒரு வரிசையில் நின்று அனுமதி பெற்று பக்கத்து முகாமுக்கு செல்லும் வசதி உண்டு) வருகிறேன் என்று கூறி விடைபெற்றேன்... அது ஒரு அவசர விடை பெறல்... விடை பெற்று சென்று பேரூந்தில் ஏறும் வரை உறவுகள் அந்த வேகாத வெய்யிலில் நின்று கையசைத்து எம்மை வழியனுப்பி வைத்தார்கள்....
((((இது அத்தியாயத்தின் ஆரம்பம் இனி அடுத்த அத்தியாயம்... முகாம்களை நோக்கி இன்னும் வரும்....))))
1 comment:
புல்லட் said...
நன்றி அண்ணா....
Post a Comment