உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, January 9, 2010

இலங்கையணி அபாரம், இறுதிப் போட்டிக்கும் தெரிவு...

இலங்கை- இந்திய -பங்களாதேஷ் அணிகள் விளையாடும் முத்தரப்புத் தொடர் கடந்த நான்க்காம் திகதி பங்களாதேஷின் தலை நகர் டாக்காவில் மிர்பூர் மைதானத்தில் இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பித்து இதுவரையில் நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன, அந்தவகையில் இந்தத் தொடரில் இதுவரையில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கையணி மூன்று போட்டிகளையும் வெற்றிகொண்டுள்ளது. மேலும் மூன்று போட்டிகளில் விளையாடிய பங்களாதேஷ் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த முத்தரப்பு தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 31 பந்து வீச்சுக்கள் மீதமிருக்க 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் தனது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தது இலங்கையணி. அந்த வகையில் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்துமாறு பங்களாதேஷை இலங்கையணி பணித்ததற்கு இணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் சார்பாக முஹம்மத் அஷ்ரபுல் அதிகூடிய ஓட்டங்களாக 91 பந்து வீச்சுக்களில் 75 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் வேறு எந்தவொரு வீரரும் 50 ஓட்டங்களை பங்களாதேஷ் சார்பாக கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பங்களாதேஷ் அணி சார்பாக தனது முதலாவது ஒரு நாள் சர்வதேசப்போட்டியில் விளையாடிய ஷாபியுல் இஸ்லம் 5 ஓவர்கள் பந்து வீசி 39 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார்.

எனவே பதிலுக்கு 261 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கையணி 44 .5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கையணி சார்பாக TM டில்ஷான் 104 ஓட்டங்களையும், அணித் தலைவர் குமார் சங்கக்கார 74 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர். TM டில்ஷான் ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் பெற்ற 6 ஆவது சதம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் TM டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தத் தொடரின் முதலாவது போட்டி இவ்வாறு அமைய இரண்டாவது போட்டி மறு நாள் ஐந்தாம் திகதி இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் ஆரம்பித்தது. இந்தப் போட்டியிலும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் களத் தடுப்பையே தெரிவு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாட களம் புகுந்த இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பாக யுவராஜ்சிங் 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். வேறு எந்தவொரு வீரரும் இந்திய அணி சார்பாக 50 ஓட்டங்களைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் 280 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கையணி 48 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியீட்டியது. இலங்கையணி சார்பாக திலான் சமரவீர ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும், அணித் தலைவர் குமார் சங்கக்கார 60 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக் கொண்டார்கள். வேறு எந்தவொரு வீரர்களும் இலங்கையணி சார்பாக அரைச் சதம் கடக்கவில்லை. மேலும் இந்தப் போட்டியில் TM டில்ஷான் விளையாடவில்லை என்பதுடன் அவருக்கு பதிலாக லகிரு திரிமென்ன தனது ஒரு நாள் சர்வதேச அறிமுகப் போட்டியில் விளையாடியிருந்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உப்புல் தரங்கவுடன் களமிறங்கிய இவர் 24 பந்து வீச்சுக்களை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டப் பெறுதிகள் அடங்கலாக 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் திலான் சமரவீர தெரிவு செய்யப்பட்டார்.

உண்மையில் சச்சினைத் தவிர அத்தனை முழுமையான வீரர்களையும் கொண்ட இந்திய அணியுடன் TM டில்ஷான், சனத் ஜெயசூரிய, மஹேலஜெயவர்த்தன, முரளிதரன் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இலங்கையணி வெற்றி பெற்றமை முக்கியமான ஒரு விடயம் என்றே சொல்லவேண்டும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இந்திய மண்ணில் வைத்து இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த இலங்கை அணிக்கு இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்குமென்பதில் சந்தேகமில்லை.


இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி பங்களாதேஷ்-இந்திய அணிகளுக்கிடையில் கடந்த ஏழாம் திகதி இடம்பெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களம் புகுந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக இம்ருல் கயேஸ் 70 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 60 ஓட்டங்களையும், மஹ்முத்துல்லா ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும் அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.

அந்தவகையில் 297 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47 .3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணி சார்பாக அணித் தலைவர் மகேந்திரசிங் டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் முறையே ஆட்டமிழக்காமல் 101 , 51 ஓட்டங்களையும், விராட் கொஹ்லி 91 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.விராட் கொஹ்லிக்கு இது நான்க்காவது அரைச்சதம் என்பதுடன் மகேந்திரசிங் டோனிக்கு இது 7 ஆவது சதமும் ஆகும். நெருக்கடியான நிலையில் இந்திய அணி போராடி வெற்றி பெற்ற இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி தெரிவு செய்யப்பட்டார்.

இங்கு பங்களாதேஷ் சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்த இம்ருல் கயேஸ் மற்றும் தமிம் இக்பால் இருவரும் அரைச் சத்தங்களைக் கடந்திருந்தார்கள். அந்தவகையில் பங்களாதேஷ் சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்த இரண்டு வீரர்களும் அரைச் சதம் கடந்தமை இதுவே முதற்தடவை என்பதுடன் பங்களாதேஷ் இந்தப்போட்டியில் பெற்றுக்கொண்ட 296 ஓட்டங்களே பங்களாதேஷ் அணியினால் டெஸ்ட் அந்தஸ்த்துள்ள ஒரு அணிக்கெதிராக ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக மூன்றாவது போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணி அடுத்த நாள் எட்டாம் திகதி அணியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் இலங்கை அணியுடன் நான்க்காவது போட்டியில் விளையாடியது. அந்த வகையில் இந்தப் போட்டியிலும் இலங்கையணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைக்க களம் புகுந்த பங்களாதேஷ் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக இந்தப் போட்டியில் எந்தவொரு வீரரும் அரைச் சதம் கடக்காத நிலையில் அணித் தலைவர் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு 250 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கையணி 42 .5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அந்தவகையில் இந்தப் போட்டியில் இலங்கை அணியில் உப்புல் தரங்கவுடன் காயத்திலிருந்து மீண்டு போட்டிகளுக்கு திரும்பிய மஹேல ஜெயவர்த்தன ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இணைந்தார். இதில் உப்புல் தரங்க மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களையும், மஹேல 108 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். உப்புல் தரங்கவை பொறுத்தவரையில் இது அவரது எட்டாவது சதம் என்பதுடன், மஹேலவுக்கு இது 12 ஆவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் உப்புல் தரங்க தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததன. அந்தவகையில் புஷ்பகுமார, வெலகெதர, சுரங்க லக்மல் போன்றோர் அணியிலிருந்து நீக்கப்பட்டதுடன் மஹேல ஜெயவர்த்தன, மலிங்க பண்டார, நுவான் குலசேகர ஆகியோர் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டனர். மேலும் இதே அணியே இந்தியாவுடன் நாளைய தினம் நடைபெறவுள்ள போட்டியிலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக இலங்கை-இந்திய-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இலங்கையணி ஒவ்வொரு போட்டியிலும் தலா 4 புள்ளிகள் வீதம் பெற்று முன்னணியில் உள்ளதுடன் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 4புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வி என்கின்ற நிலையில் புள்ளிகள் எதனையும் பெறாத நிலையில் உள்ளது.

உண்மையில் இந்தத் தொடரில் பங்களாதேஷின் துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தபோதிலும் பந்து வீச்சாளர்கள் பெரியளவில் பிரகாசிக்கத் தவறியமையே அந்த அணியின் தோல்விக்கான பிரதான காரணமாக உள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் பங்களாதேஷ் பெரும்பாலும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது என்றே தெரிகிறது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி எவ்வாறு அமையும் பொறுத்திருந்து பார்க்கலாம்???

Sunday, January 3, 2010

புதிய எழுத்துக்கள் வேண்டும்!!!


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்று சொல்வது கொஞ்சம் மிகையானது என்றாலும் தமிழர்களும், நமது தமிழ் மொழியும் நீண்ட வரலாறுகளைக் கொண்டவர்களாக இருக்கின்றோம் என்பதை யாருமே மறுத்துவிட முடியாது. அந்தவகையில் நமது மொழி முன்பிருந்த வடிவில்தான் இப்பொழுதும் உள்ளதா?? நமது மொழியின் எழுத்துக்கள் ஆரம்பத்திலிருந்தது போலவா இப்பொழுதும் உள்ளன?? என்று கேட்டால் எல்லோரும் இல்லை என்றே சொல்வோம். உண்மையும் அதுதான்.

அதாவது இயல்பான காலமாற்றங்களுக்கும், உலக ஒழுங்குகளுக்கும் அமைவாக நமது மொழியிலும் நாமது அறிஞர்கள், பண்டிதர்கள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள், இன்னும் உருவாக்கிவருகிறார்கள். அந்தவகையில் பெரும்பாலும் கலைச் சொல் உருவாக்கங்கள் நமது மொழியில் அதிகளவில் நிகழ்கின்றன.

ஆனாலும் னா,ணா,றா போன்ற எழுத்துக்களின் மாற்றங்களுக்கு பிறகு அண்மைக்காலத்தில் நமது தாய்மொழி எழுத்துக்களில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவில்லை. மேலும் தமிழ் மொழியின் எழுத்துக்களின் எண்ணிக்கை 247 என்கின்ற அளவிலையே தொடர்ந்தும் பேணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் நாம் வடமொழியிலிருந்து கடன் வாங்கிவைத்திருக்கும் கிட்டத்தட்ட ஐந்து எழுத்துக்களை இன்னமும் திருப்பிக் கொடுக்காமல் வைத்திருக்கின்றோம்.

சொல்லப்போனால் நமது இளஞ் சந்ததி அவற்றையும் நமது தமிழ் எழுத்துக்கள் என்று கருதுகின்ற அளவுக்கு இப்போது குறிப்பிட்ட வடமொழி எழுத்துக்களின் ஆதிக்கம் நமது கட்டுரைகள், கவிதைகள், படைப்புக்களில் அதிகளவில் உள்ளன. அதாவது நாம் அவற்றை நமது அன்றாட வாழ்வில் அதிகளவில் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இந்த நிலையில் தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் நோக்கில் சில வட மொழி எழுத்துக்களை தவிர்த்து அவற்றுக்கு பதிலாக தமிழ் எழுத்துக்கள் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. (உதாரணம்-ஜனாதிபதி=சனாதிபதி.) இருப்பினும் குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரையோ அல்லது இடத்தையோ குறிப்பிடும்போது இவை சாத்தியமற்றவையாகிவிடுகின்றன. அந்தவகையில் முதலில் தமிழ்ச் சமூகத்தினராகிய நாம் முதலில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அதாவது நமது தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி வடமொழி எழுத்துக்களை நமது மொழிப் பயன்பாட்டிலிருந்து நீக்கி அவற்றுக்கு பதிலான புதிய தனித்துவமான தமிழ் எழுத்துக்களை உருவாக்க முன்வரவேண்டும்.

வடமொழி எழுத்துக்களுக்கான மாற்றீட்டு தனித்துவ தமிழ் எழுத்துக்களின் உருவாக்கத்துக்கான தேவை இவ்வாறு இருக்க, தமிழ் மொழியின் எழுத்துக்களில் இன்னும் புதிய மூன்று எழுத்துக்களுக்கான தேவை உள்ளது. அதாவது நாம் இன்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல் பரந்துவிரிந்த உலகத்துக்குள், ஆங்கில மொழியின் அதிக ஆதிக்கப் பிடிக்குள் பிரவேசித்திருப்பதால் இந்த மூன்று புதிய எழுத்துக்களுக்கான தேவையும் தவிர்க்கமுடியாததாக உள்ளது.

அந்தவகையில் இன்று நம்மில் அதாவது நமது ஊடகத் துறைக்குள் BANKIMOON என்பதை பான்கிமூன் என்று உச்சரிக்கும் எத்தனையோ மூத்த, இளைய அறிவிப்பாளர்கள், தொகுப்பாளர்களை காணமுடிகின்றது. அதுமட்டுமல்லாமல் இடங்களின் பெயர்களை சொல்லும்போதும் இவ்வாறான பிரைச்சினைகளை அறிவிப்பாளர்களும், தொகுப்பாளர்களும் எதிர்கொள்வது என்னவோ உண்மைதான். உதாரணங்களாக BANDARAWALA என்பதை பண்டாரவளை என்றும், BERUWALA என்பதை பேருவளை என்றும், பண்டாரிக்குளம் என்பதை BANDAARIKKULAM என்றும், பண்டத்தரிப்பு என்பதை BANDATHTHARIPPU என்றும் உச்சரிக்கும் பலர் உள்ளனர்.

எனவே இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில்க் கொண்டு பெரும்பாலான ஊடகங்களில் இடங்கள், பெயர்கள் என்பன ஆங்கிலத்திலையே எழுதப்பட்டு வாசிக்கப்படுவதுண்டு.. ஆனாலும் அச்சுத் தமிழ் ஊடகங்களில் இவை சாத்தியமற்றவை. ஆகவே அச்சு ஊடகங்களை வாசிக்கும் தமிழர்கள் பிழையான உச்சரிப்பை பின்தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக தொடர்வதை அவதானிக்க முடிகின்றது.எனவே நாம் B உச்சரிப்புக்குரிய ஒரு புதிய தூய தனித்துவமான தமிழ் எழுத்தை உருவாக்கவேண்டியவர்களாக உள்ளோம்.

நமது முதலாவது புதிய தமிழ் எழுத்துக்கான தேவை இவ்வாறு இருக்க, அடுத்து நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு ஆங்கில எழுத்தான F உச்சரிப்பில் ஒரு புதிய தூய தமிழ் எழுத்தை தோற்றுவிக்க வேண்டியுள்ளது. இங்கு நாம் தற்போது F உச்சரிப்புக்காக "ஃ ப்" என்பதையே அதிகளவில் பயன்படுத்துகின்றோம். ஆனாலும் உச்சரிப்பு ரீதியில் அது முற்றிலும் முரணான ஒன்றாகவே உள்ளது. அதாவது இந்தப் பயன்பாடு காரணமாக "ஃ" என்பதன் உண்மையான உச்சரிப்பு சிதைக்கப்படுகின்றது.

எனவே மேற்படி F ஒலிக்கு அமைய ஒரு புதிய எழுத்து தமிழில் அவசியம். குறிப்பாக இலங்கை, தமிழ்நாடு வாழ் தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகள் தங்கள் பெயர்களை தமிழில் எழுதுவதற்கு இந்த எழுத்து உருவாக்கம் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் பெயர்களையும், ஏனையவர்ல்களின் பெயர்களையும், இடங்களையும்(உதாரணம்-FRANCE =பிரான்ஸ்.) ஊடகங்களில் உச்சரிக்கவும், அச்சேற்றவும் F உச்சரிப்பில் ஒரு தூய தமிழ் எழுத்து வேண்டும்.

F உச்சரிப்பு இவ்வாறு இருக்க, அடுத்து நம்மிடம் இப்போது W என்கின்ற எழுத்தின் பயன்பாடும் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் WATS என்பதை நம்மவர்கள் வாற்று என்று அழைக்கின்றார்கள். உண்மையில் WATS என்பது ஒரு சர்வதேச அலகு மட்டுமல்லாமல் அது ஒரு விஞ்ஞானியின் பெயருமாகும். ஆகமொத்தம் நாம் வாற்று என்று அழைப்பதன் மூலம் ஒரு குறித்த நபரின் பெயரை பிழையாக உச்சரிக்கின்றோம்.

அண்மையில் நமது நாட்டில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் LASANTHA WIKKIRAMATHUNGA அவர்கள் கொல்லப்பட்டபோது அவரின் பெயரை நமது இலத்திரனியல் ஊடகங்கள் லசந்த விக்கிரமதுங்க என்று உச்சரித்துக் கொண்டிருந்தன. நமது மொழியில் நாம் உச்சரிப்பு பிழைகளை விடுகின்றபோது அது எவ்வளவு பிழையானதோ அதேபோன்றுதான் குறித்த நபரின் பெயரை பிழையாக உச்சரிப்பதும் பிழையானதாக இருக்கும்.ஆகவே இவற்றை எல்லாம் பார்க்கின்றபோது W என்கின்ற ஆங்கில எழுத்துக்கான உச்சரிப்பில் ஒரு தூய தமிழ் எழுத்தின் உருவாக்கமும் அவசியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் சொல்லலாம் அதாவது முன்பு சிங்கள மொழியில் B ,F உச்சரிப்புக்களுக்கான சிங்கள எழுத்துக்கள் இருக்கவில்லை. எனினும் பிற்பட்ட காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அறிஞர்கள் இரண்டு எழுத்துக்களுக்கும் நிகரான சிங்கள எழுத்துக்களை உருவாக்கியிருந்தார்கள்.

ஆகமொத்தம் இவற்றை எல்லாம் தொகுத்துப்பார்க்கின்றபோது நாம் நமது மொழிக்குள் ஊடுருவியிருக்கும் வடமொழி எழுத்துக்களுக்கு பொருத்தமான தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதுடன், புதிய மூன்று எழுத்துக்களையும் இப்போதைக்கு உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். இங்கு ஆங்கில மொழியின் ஆதிக்கத்துக்கு தமிழ் உட்படாது, அதனை பின்பற்றி புதிய தமிழ் எழுத்துக்களை உருவாக்குவது தமிழ் மொழியின் தனித் துவத்தை பாதிக்கும் போன்ற விடயங்கள் இருந்தாலும் நாம் இவ்வாறான மாற்றம் ஒன்றைச் செய்யாவிட்டால் நமது எழுத்துப் பயன்பாடுகளில் ஆங்கிலம் அதிகம் ஊடுருவும் என்பதையும் கவனத்தில்க் கொள்ளவேண்டும்.

Saturday, January 2, 2010

ஜனாதிபதித் தேர்தல்!!!! பிச்சை வேண்டாம் நாயைப் பிடி!!!!

இலங்கையில் புதிய ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புடனும், மலையாக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மரணத்துடனும் பிறந்திருக்கிறது. ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு கூட இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு தமிழ் அரசியல்வாதியான காலஞ் சென்ற மகேஸ்வரனின் மரணத்துடன்தான் ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டிலும் ஒரு அரசியல்வாதியின் மரணத்துடன் மலர்ந்திருக்கும் புத்தாண்டு என்ன என்ன நன்மைகளை, தீமைகளை கொண்டுவரும் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் மீது மக்களின் கவனம் அதிகமாக குவிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல சர்வதேச நாடுகளினது பார்வையும் கூட இந்தத் தேர்தலின் மீதுதான் உள்ளது.

இந்த நிலையில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்கின்ற எந்தவொரு உறுதியான தகவலையும் வெளியிட முடியாத நிலையில் அரசியல் ஆய்வாளர்கள் உள்ளார்கள். அதுமட்டுமல்லாது இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அறிந்துகொள்ள புலம்பெயர் வாழ் தமிழர்களும், இலங்கை வாழ் தமிழர்களும் ஆவலாக உள்ளார்கள்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரையில் அவர்கள் எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அது அவர்களுக்கு தற்போது உள்ள பலத்தில் அதாவது மக்கள் செல்வாக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்ற நிலை உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் செல்வாக்கை தக்க வைக்க வேண்டும் என்பதுடன் தமது கட்சி உறுப்பினர்களையும் பிரிந்து செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்கின்ற நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் உள்ளார்கள்..

இந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையிலும், அதில் அங்கம் வகிக்கும் கட்சியினர்களுக்கு மத்தியிலும் சின்னச்ச் சின்ன பிரைச்சினைகள், கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் அவை பூதாகரமாகியிருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்படாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிட முடிவு செய்தமை, அவருக்கு இன்னுமொரு சக பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீகாந்தா ஆதரவு வழங்கிவருகின்றமை என்பவற்றை இதற்கான உதாரணங்களாக சொல்ல முடியும். மேலும் அண்மையில் நடைபெற்ற தமித் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழ் காங்கிரசின் கூட்டத்தில் அக்கட்சி தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஜானதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை கட்சி, கொள்கை என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் வரவேற்கலாம். இதே போன்றதொரு கருத்தைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தனும் அண்மையில் வெளியிட்டிருந்தார். மேலும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு பிரதான வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஜானாதிபதித் தேர்தலில் எந்தவொரு பிரதான வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளை பெற்றுக் கொள்ளாமல் தடுப்பதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆகமொத்தம் இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு என்னவென்று அறிவிக்கும்போது கிட்டத் தட்ட அதன் பலம் பாதியாக குறைந்துபோய்விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும் அண்மையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொடர்பில் வெளியிட்ட கருத்து புலம் பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். ஆகவே எல்லா நிலைமைகளையும் கவனத்தில்க் கொண்டு கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் என்ன முடிவை எடுப்பார்?? ஏற்கனவே சொன்னது போல எதிர்வரும் நான்காம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடு வெளிவருமா?? பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் இவ்வாறு இருக்க ஜானாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் யுத்த வெற்றியின் பிரதான பங்கு தமக்கே என்று சொல்வதிலும், ஒருவரின் முகத்தில் இன்னொருவர் கரி பூசுவதான கருத்துக்களை வெளியிடுவதுமாக தேர்தல் பிரசாரங்களிலும், ஊடக அறிக்கைகளிலும் வலம் வந்துகொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் மக்களுக்கான சலுகைகள் தொடர்பாகவும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். விரைவில் தேர்தல் விஞ்ஞாபனமும் முன்வைக்கப்படவுள்ளது.

இன்றைய நிலையில் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை கருத்தில்க்கொண்டு பொருட்களின் விலைகளைக் குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கையின் அதியுயர் துறையான நீதித் துறையால் அதாவது நீதிமன்றத்தால் பெற்றோலின் விலை குறைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட போது அதனை கவனத்திலெடுக்காத அரசாங்கம் அண்மையில் பெற்றோலின் விலையை 15 ரூபாவினால் குறைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லாப் எரிவாயுவும் கணிசமான அளவு விலைக் குறைப்பு செய்யப்பட்டிருக்கின்றது.மேலும் இடம்பெயர் மக்களினதும், யாழ்ப்பாண மக்களினதும், கிழக்கு மாகாண மக்களினதும் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் மீள்குடியேற்றம், கட்டுபாடற்ற போக்குவரத்து, அனுமதியின்றிய மீன்பிடித் தொழில், புதிய போக்குவரத்து ரயில்பஸ் சேவைகள் என்பனவும் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இடம்பெயர் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை என்று தேர்தல் செயலகம் அறிவித்திருக்கின்றது. ஏற்கனவே பல்வேறு அமைப்புக்கள் இதனை சொன்னபோது அதனை மறுத்து தேர்தலுக்கான பதிவுகள் இடம்பெயர் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சொன்ன தேர்தல் செயலகம், இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட இடம்பெயர் வாக்காளர்களில் இதுவரை
23000 வரையிலான வாக்காளர்களே தங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், இடம்பெயர் வாக்காளர்கள் தேதர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லியுள்ளது.

இடம்பெயர் மக்கள் இறுதிவரை இதே நிலைப்பாட்டிலையே இருப்பார்களானால் அரசாங்கம் மிக வேகமாக இடம் பெயர் மக்களுக்கு செய்து வரும் சலுகைகளெல்லாம் வீணாகிவிடும். அதாவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தகர்ந்துபோயவிடும். மேலும் இடம்பெயர் மக்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆர்வங்காட்டாமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு வெளிவராமையும் ஒரு காரணமாக இருக்கலாம். உண்மையில் இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலோ விரைவாக வராவிட்டால் இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இவ்வாறாக அரசாங்கம் சார்பிலான ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் இருக்க எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா யுத்த கால உண்மைகளை ஊடகங்களுக்கு சொல்வதாகவும், அரசாங்கம் செய்கின்ற பிழைகளை சுட்டிக்காட்டுவதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவும் தனது அரசியல் தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் ஒரு காலத்தில் தமிழர்கள் இந்த நாட்டின் வந்தேறுகுடிகள் என்று சொன்ன ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது இடம்பெயர் மக்கள் பாதுகாப்பற்ற வகையில் மீள்குடி ஏற்றப்படுவதாகவும், அவர்களுக்கு போதியளவு வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் கண்ணீர் வடிக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல் அண்மைக்காலமாக அவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கின்றார். அதாவது ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் கருத்துக்களாலும், அவர் தொடர்பில் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களாலும் பல சர்ச்சைகள், குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அண்மையில் முன்னாள் கடற்படைத் தளபதி தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகம் ஒன்றில் வெளியிட்ட கருத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறி முன்னாள் கடற்படைத் தளபதி ஜெனரலிடம் நஷ்ட ஈடு கோரியிருப்பதை குறிப்பிட்டு சொல்லமுடியும். இவ்வாறாக ஆரம்பமே சர்ச்சைகள், குழப்பங்கள் என தனது அரசியல் வாழ்வில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கியதேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என இரண்டு பெரும்பான்மை இனக் கட்சிகள் ஆதரவாக உள்ளமை பலம் என்றே சொல்ல வேண்டும்.

இங்கு இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆசிய நாடுகளில்ன் குறிப்பாக இந்தியாவின் செல்லப் பிள்ளையாகவும், ஜெனரல் சரத் பொன்சேகா மேற்குலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் வலம் வருகிறார்கள் என்றே தெரிகிறது. இந்த இடத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவினால் மூளைச் சலவை செய்யப்பட்டே ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதையும் நினைவுபடுத்தலாம்.

நிலைமை இவ்வாறு இருக்க ஜெனரல் சரத் பொன்சேகா உண்மையில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்தால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை இந்தியாவின் கைகளிலிருந்து அமெரிக்காவின் கைகளுக்கு இடம்மாற வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையிலான புரிந்துணர்வு, ராஜதந்திர உறவு என்பவற்றின் அடிப்படையில் இந்தக் கைமாற்றத்தை குறுகிய காலத்திற்குள் எதிர்பார்க்க முடியாது.
இந்த இடத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் சின்ன சின்ன விரிசல்கள் கைமாற்றத்துக்கு வித்திடலாம். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் பார்வையும் ஆசிய நாடுகள் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு அடிப்படையாக அமையலாம். மேலும் இந்தியாவில் இப்போதுள்ள தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பிலான குழப்பங்களும், தீவிரவாத அச்சுறுத்தல்களும் இந்தியா இலங்கையின் மீது வைத்திருக்கும் ஆதிக்கங்களை குறைத்து உள்நாட்டுக்குள் கவனத்தை திருப்ப வாய்ப்பாக அமையக்கூடும். இவ்வாறு இந்தியாவின் ஆதிக்கம் குறையும்போது அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை புதிய பாதையில் பாணிப்பதற்குரிய சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லலாம்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முன்னெடுப்புக்களும் அதன் விளைவுகளும் இவ்வாறு இருக்க மலையாக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மரணத்தால் மலையாக மக்கள் முன்னணியின் எதிர்காலம் தொடர்பான கேள்விகள் இப்போதே எழுந்திருக்கின்றன.அதாவது மலையாக மக்கள் முன்னணியின் அடுத்த தலைவராக பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மறைந்த மலையாக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் மனைவி சந்திராதேவி சந்திரசேகரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.ஆனாலும் அவரின் தலைமையில் அனைவரும் ஒன்றுபட்டு மலையாக மக்கள் முன்னணி கட்டுக்கோப்புடன் இருக்குமா?? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் சந்திரசேகரனின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு புதிதாக யாரை நியமிப்பது என்பது தொடர்பிலும் மலையாக மக்கள் முன்னணி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது.

மலையாக மக்கள் முன்னணியின் நிலை இவ்வாறு இருக்க மலையகத்தின் மற்றுமொரு பிரதான அரசியல்க் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பலவீனமடைந்திருக்கிறது.. அதாவது அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களான கட்சியின் தேசிய அமைப்பாளர் R .ஜோகராஜனும், பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான M .சச்சிதானந்தனும் கட்சியிலிருந்து விலகிச் சென்று ஐக்கியதேசியக் கட்சியில் இணைந்துள்ளார்கள். இதனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இந்தக் கட்சித் தாவலால் அரசாங்கமும் பாதிப்படந்திருக்கின்றது. மேலும் எதிரணிக்கு இது மேலும் பலம் சேர்க்கும் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவு உள்ள நிலையில் மலையாக வாக்காளர்களை கவருவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பிளவு எதிரணிக்கு வலுச் சேர்த்திருக்கின்றது.

உண்மையில் மலையாக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் மரணமும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பிளவும் அந்தந்தக் கட்சிகளின் பலவீனம் என்பதுமட்டுமல்லாமல் அவை மலையாக மக்களுக்கும் நிறைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.. ஏற்கனவே மலையகத்தில் புதிய புதிய கட்சிகளின் தோற்றங்களால் வாக்குகள் சிதறடிக்கப்பட்ட நிலையில் இனிவருங் காலங்களில் இன்னும் இன்னும் மலையாக சமூகம் அரசியல் ரீதியில் பலவீனமடைய மேற்படி சம்பவங்கள் இரண்டும் வழிவகுத்திருக்கின்றன.

இவ்வாறாக ஒரு புதிய தசாப்தத்துக்குள், புதிய ஆண்டு ஒன்றில் இலங்கையின் அரசியல் நகரப்போகின்றது. பெரும்பாலும் இலங்கையின் அரசியல் போக்கில் நிகழப்போகும் மாற்றங்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலே தீர்மானிக்கப்போகின்றது. ஆனாலும் தமிழ் பேசும் சமூகத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு தேர்தலும் எந்தவொரு பெரியளவு மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை. தமிழ் பேசும் சமூகம் எத்தனையோ தேர்தல் வாக்குறுதிகளைக் கண்டவர்கள். எத்தனையோ ஒப்பந்தக்களைக் கண்டவர்கள்.

ஒரு விடயத்தை சிந்தித்தால் தேர்தலில் வாக்களிக்காமலே இருதுவிடலாம் போல தோன்றுகிறது. அதாவது வட கிழக்கில் ஒருகுறிப்பிட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்து அவர் ஜனாதிபதியாக தெரிவாகாமல் மற்றவர் தெரிவு செய்யப்பட்டால் நமது நிலை??? பிச்சை வேண்டாம் நாயைப் பிடி!!!!

Wednesday, December 30, 2009

விடைகொடுத்து.. வரவேற்கிறோம்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

எனது பதிவுகளால் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் எனது இதற்கு முந்தைய "தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள புதுவழி சங்க்காவின் சாதுரியம்" என்ற தலைப்பிலமைந்த பதிவானது இலங்கையணி மீது சேறு பூசுவதாக அமைந்துள்ளது என நான் அதிகம் மதிக்கும் எனது ஊடகத் துறையிலும், வலைத் துறையிலும் குருநாதராக இருக்கும் மதிப்புக்குரிய
திரு A . R .V .லோஷன் அவர்கள் தனது கருத்துரையின் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்தப் பதிவின் தலைப்பு இலங்கையணி ரசிகர்களை சீண்டியது என்பது உண்மைதான். எனவே மேற்படி தலைப்புக்காக வருந்துகிறேன். இந்தத் தலைப்பால் அசெளகரியங்களுக்கு உள்ளான இலங்கை அணி ரசிகர்களை மன்னிக்க வேண்டுகிறேன்.. மேலும் இனிவருங் காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுவேனெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்...

சரி, நிலைமை இவ்வாறு இருக்க ஒரு பிரபல தனியார் தமிழ் வானொலியில் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு பற்றிய கருத்துக் கணிப்பின் உந்துதலால் எனது மனக் கிடைக்கைகளைக் கொட்டி இந்த 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து புதிய 2010 ஆம் ஆண்டை வரேவேற்கும் முகமாக ஒரு அவசரப்பதிவாக இதனைத் தருகின்றேன்.

உண்மையில் ஒவ்வொரு ஆண்டிலும் இன்பங்களும், துன்பங்களும் வரும் என்றாலும் 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் வாழ்வில் சொல்லணா துயரங்களைத் தந்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டு எனது பார்வையில் மிகவும் மோசமான ஒரு ஆண்டு. கிட்டத் தட்ட 30 ஆண்டுகள் நீரூற்றி வளர்த்த விருட்சத்தை வேரோடு சாய்த்த 2009 ஆம் ஆண்டை நான் வெறுக்கிறேன். எமது உறவுகளின் உயிர்களை வகை தொகையின்றி வாரிக் குடித்த இந்த ஆண்டு ஏன் வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் இந்த ஆண்டில் இழந்தவை ஏராளம் ஆனால் பெற்றவை என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இன்று இலங்கையில் உள்ள தமிழர்களை அடிமைகள் என்கின்ற நிலைக்கு கொண்டு வந்த ஆண்டு இது. வெறுமைகளையும், ஏமாற்றங்களையும் ஏராளமாக அள்ளித் தந்த 2009 ஆம் ஆண்டே உனக்கு விடைகொடுக்கின்றோம்.
சரி 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்தால் அடுத்து என்ன 2010 ஆம் ஆண்டு வரப்போகின்றது.. வருக!! வருக!! 2010 . நீயாவது நமது வாழ்வில் ஒளியேற்றுவாய் என்கின்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் உன்னை வரவேற்கிறோம். வந்து எம் வாழ்வில் வசந்தம் தருவாய் என்று அன்போடு வரவேற்கிறோம். அந்தவகையில் மலரப்போகும் 2010 ஆம் ஆண்டு எமக்கான இனிய எதிர்காலத்தின் புதிய ஆரம்பமாக அமையட்டும்.

என் வலைத் தளத்துக்கு வந்து செல்லும் வாசகர்களுக்கும், கருத்துரைகளால் உற்சாகமூட்டும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இதயங் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டிலும் எனது பார்வைகளும், பதிவுகளும் உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் தொடரும்.

Sunday, December 27, 2009

தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள புது வழி சங்காவின் சாதுரியம்!!

இலங்கை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய டெஸ்ட்,20 -20 ,ஒரு நாள் தொடர்கள் ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளன. அந்தவகையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை ஒன்றைத்தானும் வெல்ல முடியாமல்போனதுடன் ஒரு போட்டியை சமன் செய்திருந்தது. இருந்தபோதிலும் 20 -20 போட்டியில் இலங்கை ஒருபோட்டியில் வெற்றிபெற்று தொடரை சமநிலை செய்தது. மேலும் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3 -1 என்ற கணக்கில் வென்று தொடரை வெற்றிகொண்டிருக்கின்றது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டி மோசமான ஆடுகளம் என்ற இலங்கையனித் தலைவர் குமார் சங்கக்காரவின் புகாரையடுத்து 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் டில்லியில் இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

எனவே முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கையணி 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட நிலையில் 5 விக்கட்டுகளை இழந்து 85 ஓட்டங்களை பெற்று தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான் அணியின் தலைவர் சங்கக்காரவினால் டில்லி மைதானம் மோசமானது என்கின்ற புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இன்றைய போட்டியில் இலங்கையணி வீரர்கள் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அந்தவகையில் நான்காவது ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தரங்க போட்டியின் முதலாவது பந்துவீச்சிலையே ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். உண்மையில் இதன் காரணமாக இலங்கையணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது என்றுதான் சொல்லவேண்டும். இருந்தபோதிலும் நான்காவது போட்டியில் சொதப்பியவர்களும், இரவு நேர மதுபான விடுதிச் சர்ச்சையில் சிக்கியவர்க்களுமான டில்ஷான், சனத் ஜெயசூரிய ஆகிய இருவரும் இந்தப்போட்டியில் கொஞ்சம் நிதானமாக செயற்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இதில் சனத் இலங்கையணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக 31 ஓட்டங்களையும், டில்ஷான் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய எந்தவொரு வீரரும் இலங்கையணி சார்பில் 20 ஓட்டங்களைக் கடக்கவில்லை. உதிரிகளாக இந்தியணியினரால் 10 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இன்னுமொரு முக்கியமான விடயம் இன்றையதினம் இலங்கையணி சார்பாக தனது முதலாவது ஒரு நாள்போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட முதுமலிங்க புஷ்பகுமார ஆட்டம் கைவிடப்படும்போது ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இன்றையபோட்டியில் இலங்கையணியின் சராசரி ஓட்டப்பெறுமானம் 3 .53 ஆகக் காணப்பட்டது.

இந்தியணி சார்பாக இன்றைய தினம் சஹீர்ஹான் 8 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 31 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இன்றைய தினம் தனது ஒருநாள் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட சுதீப் தைகி 6 .3 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 15 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். ஹர்பஜன்சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 12 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினை வீழ்த்தினார். நேஹரா 5 ஓவர்கள் பந்து வீசி 24 ஓட்டங்களைக்கொடுத்த போதிலும் எந்தவித விக்கட்டினையும் அவரால் வீழ்த்த முடியாமல்போனது.

இந்தியஅணியின் பந்து வீச்சு இவ்வாறு இருக்க இன்றைய போட்டி கைவிடப்பட்டமையால் மோசமான ஒரு தோல்வியிலிருந்து இலங்கையணி தப்பியதாக சொல்லிக்கொள்ள முடியும். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அதாவது டில்லி ஆடுகளம் மோசமானது என்பது சங்கக்காரவிற்கு ஏன் 23 .3 ஓவர்கள் பந்துவீசப்பட்ட பின்னர்தான் தெரிய வந்தது??? மேலும் இன்றையபோட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படாத ஒரு போட்டி என்றாலும் கொஞ்சம் விறுவிறுப்பான போட்டியாக இருக்குமென்றே பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஏமாற்றியது இலங்கையணி... சரி இனி வங்கதேசத்தில் நடைபெறவுள்ள முக்கோணத் தொடரிலாவது இந்தியாவை இலங்கை பழிதீர்க்குமா??? வழமைபோல பொறுத்திருந்துதான் பார்ப்போமே!!!

Saturday, December 26, 2009

ஐந்தாண்டுகள் அசைந்தோடியும் உள்ளம் இன்றும் அழுகிறது...

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்த நாள் ஏன் வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆம் நமது உறவுகளின் உயிர்களைக் குடித்த ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த வேளையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னரும், அதற்கு பின்னரும் நிகழ்ந்த பல சம்பவங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

அப்போது நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் கல்லூரி (வித்தியானந்தக் கல்லூரி) முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து கிட்டத்தாட்ட ஐந்து ஆறு கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்திருக்கும் முள்ளியவளை என்னும் இடத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்திருந்தது. அந்த வகையில் பெரும்பாலும் முல்லைத்தீவையும் அதனை அண்டிய கரையோர கிராமங்களிலும் வசித்த பெரும்பாலான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்காக வித்தியானதக் கல்லூரிக்கே வருவதுண்டு.

இவ்வாறாக எமது வகுப்பில் கள்ளப்பாட்டு (கல்விப்பாடு) கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் நாங்கள் சாதாரண தரம் படிக்கும்போதே எமது வகுப்பில் வந்து இணைத்திருந்தார்கள். பின்னர் உயர்தரத்திலும் அவர்கள் எமது பிரிவிலையே (உயிரியல் பிரிவு) தொடர்ந்தார்கள். அவர்கள் இருவரும் கல்வியில் மிகுந்த ஆர்வமுடையவர்கள் என்பதுடன் இருவருமே கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள். (இங்கு அவர்கள் கிறிஸ்தவ சமயத்தவர்கள் என்று குறிப்பிடுவதால் மத ரீதியான வேற்றுமை காட்டுவதாக அர்த்தம் கொள்ளவேண்டாம்.) எனவே 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகைக்காக எங்களை அழைத்திருந்தார்கள்.

மிகுந்த சந்தோஷத்துடன் அவர்களின் வீட்டிற்கு உந்துருளியில் ஆண்களும் ஈருருளியில் பெண்களும் என பெரும்பாலான வகுப்பு உறவுகள் அனைவரும் கள்ளப்பாட்டு கிராமத்திற்கு சென்றோம். அன்றுதான் நான் முதன்முதலாக அந்தக் கிராமத்துக்கு சென்றிருந்தேன். கள்ளப்பாடு யுத்தத்தின் பிடிக்குள் சிக்குண்டு அப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ச்சியடையத் தொடங்கிக் கொண்டிருந்தது. பாதைகள் பல செப்பனிடப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனாலும் கள்ளப்பாட்டின் அழகே தனி அழகுதான் என்று சொல்லுமளவுக்கு மிகவும் அமைதியான ஒரு கிராமமாக காட்சி தந்தது. உண்மையில் கள்ளப்பாடு என்பது அந்தக் கிராமத்தின் திரிபடைந்த ஒரு பெயர் என்றே நான் அறிகிறேன். அதாவது பல கல்விமான்கள் வாழ்ந்த இடமென்பதால் அந்த இடத்துக்கு கல்விப்பாடு என்றே பெயர் வழங்கப்பட்டிருந்தது. எனினும் பின்நாளில் அது கள்ளப்பாடு எனப் பெயர் மாறிப்போனது.

அன்று நாங்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கள்ளப்பாட்டுக்குள் கால்பதித்தோம். ஒரு சந்தோஷமான பண்டிகை. அதாவது மக்களின் பாவங்களைப் போக்க ஜேசு பாலன் பூமியில் அவதரித்த நாள். பெரும்பாலான கிறிஸ்தவ மக்களால் மட்டுமன்றி எல்லோராலும் கொண்டாடப்படுக் கொண்டிருந்தது. அன்று முதலில் நாங்கள் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 100 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த நண்பன் ஒருவனின் வீட்டுக்கு சென்றோம். அங்கேதான் எங்களுக்கு மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த நண்பனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து அப்படியே கடற்கரைக்கு சென்றோம். கடற்கரையில் இனிமையாக பொழுதுகளை கழித்துவிட்டு அப்படியே அடுத்ததாக மற்றைய நண்பனின் வீட்டிற்கு சென்றோம். மற்ற நண்பனின் வீடு கடற்கரையிலிருந்த சற்று தொலைவிலையே அமைந்திருந்தது.
அங்கே சென்ற போது அங்கே எமக்காக சிற்றுண்டிகள், மென்பானங்கள் பரிமாறப்பட்டன. நண்பனின் பெற்றோர், சொந்தங்கள் அன்போடு உபசரித்து வழியனுப்பி வைக்க மீண்டும் முதலாவது நண்பனின் வீட்டிற்கு வந்தோம். அங்கே எமக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. மிகவும் சுவையான உணவு நண்பனின் பெற்றோரினதும், உறவுகளதும் அன்பான உபசரிப்பினால் இன்னும் இன்னும் சுவையாக இருந்தது. கிட்டத்தட்ட காலை 10 மணிக்கு கள்ளப்பாட்டுக்கு சென்ற நாங்கள் மாலை 5 மணியளவில்தான் அங்கிருந்து புறப்பட்டு வந்தோம். நாங்கள் வந்தபோதிலும் நமது நண்பர்கள் அவர்களது வீட்டிலையே தங்கிக்கொண்டார்கள்.

இவ்வாறாக அன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைய, மறு நாள் 26 .12 .2004 பொழுது புலர்ந்தது. இந்தப் பொழுது புலர்ந்திருக்கவே கூடாது. அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. காலையில் உயிரியல் வகுப்பு 8 .30 இற்கு இருந்தது. அதனால் கள்ளப்பாட்டிலிருந்து எமது நண்பர்கள் முள்ளியவளைக்கு வந்திருந்தார்கள். இதில் கடற்கரைக்கு அண்மையில் வீடு அமைந்திருந்த நண்பன் பேரூந்தை தவறவிட்டிருந்ததால் முல்லைத்தீவு மாகா வித்தியாலத்தில் கணிதப்பிரிவில் கல்விகற்றுக்கொண்டிருந்த எமது சக நண்பன் ஒருவன் தனது உந்துருளியில் கொண்டுவந்து முள்ளியவளையில் சேர்த்திருந்தான். ஆனாலும் நேரம் தாமதமாகியமையால் மேற்படி நண்பன் அன்று வகுப்புக்கு வரவில்லை.

நாங்கள் கல்விகற்றுக் கொண்டிருந்தோம். வீதியால் சென்ற ஒருவர் அந்த தனியார் கல்விநிலைய நிர்வாகியைப் பார்த்து கடல் வருகுதாம் ஏன் பிள்ளைகளை வைச்சுக் கொண்டிருக்கிறியள் என்று கத்திக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் வேகமாக சென்றுகொண்டிருந்தார். உடனே அவசரமாக நிர்வாகி எங்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியையிடம் சொல்லிவிட்டு எங்களை வீடுகளுக்கு செல்லுமாறு சொன்னார். நாங்களும் மிகவும் வேகமாக எங்கள், எங்கள் துவிச்சக்கர வண்டிகளை மிதித்துக்கொண்டு வீடுகளுக்கு புறப்பட்டோம். நான் எனது வீட்டை அடைந்த போது அம்மா வீட்டு வாசலில் வீதியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வீதியால் வாகனங்கள், மிக வேகமாக நகர்துகொண்டிருந்தன.. நேரம் தாமதித்ததால் வகுப்புக்கு வராத எனது நண்பன் ஒரு துவிச்சக்கர வண்டி சகிதம் அம்மாவுடன் கதைத்துக்கொண்டிருந்தான். அம்மாவின் கையில் வானொலிப்பெட்டி இருந்தது. உடனே அம்மா என்னிடம் என்ன கடல்வருகாதாம் என்று சொல்லிறாங்களே உண்மையா?? என்று கேட்டார். நானும் எனக்குத் தெரிந்ததை சொன்னேன். அப்போது அம்மா குறித்த நண்பனின் பெயரை விளித்து "இவன் கள்ளப்பாட்டுக்கு போகப்போறானாம் வேண்டாம் என்று சொல்லு" என்று என்னிடம் கூற நான் நண்பனை சமாதானம் செய்துகொண்டே விடுமுறையில் வவுனியாவிலிருந்து வந்து இச் சம்பவங்களைக் கண்டு கலங்கிப்போய் அழுதுகொண்டிருந்த உறவினர்களை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்புவதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் நண்பனைத் தேடினால் எங்கும் அவனைக் காணவில்லை.,
காணாமல்போயிருந்த நண்பனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வைத்தியசாலையில் சென்று பார்த்தால் அங்கேயும் அவன் இல்லை. அப்போதுதான் அவனது அப்பா சுமாரான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். உடனே அவரிடம் சென்று அவருக்கு தேவையானவற்றை செய்துவிட்டு உரையாடியபோது. அவர் தனது மனைவி மற்றும் அங்கிருந்த இரண்டு பெண் பிள்ளைகளும் உயிர் தப்ப வாய்ப்பேயில்லை என்ற அந்த துயரச் செய்தியை சொன்னார். அவர் அப்படி சொன்னாலும் அவர்கள் நிச்சயம் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்றே நான் நம்பினேன்.

அவர் தனது மகன் எங்கே என்று என்னிடம் கேட்டார். அவனைக் காணவில்லை என்று இந்தச் சந்தர்ப்பத்தில் சொன்னால் அவரின் மனம் துன்பப்படும் என்று எண்ணியவனாக "அவன் இப்ப என்னோட நின்றவன் நான் கூட்டி வாறன் நீங்கள் வாங்கோ" என்று அவரை அழைத்துக் கொண்டுபோய் நண்பன் தங்கியிருந்த அறையில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு, நண்பனை மீண்டும் தேடத் தொடங்கினேன். கிட்டத்தாட்ட மதியப்பொழுது அம்மாவுக்கு சொல்லாமல் முல்லைத்தீவை நோக்கிச் சென்றேன். அங்கே நண்பனைத் தேடினேன். நான் பயணித்த உந்துருளி கடல் நீர் உட்புகுந்தமையால் இயங்க மறுத்தது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் அங்கும் நண்பனைக் காணாத ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினேன்.
பொழுது இருண்டது அன்றைய நாளில் நண்பனைக் காணவில்லை என்ற ஏக்கத்துடன் வீட்டுக்கு சென்றேன். அடுத்த நாள் காலையில் நண்பனின் அப்பாவிடம் சென்றபோது அவர் எங்கே மகன் என்று கேட்டார்?? எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு ஒருவர் சொன்ன குறிப்பினடிப்படையில் அவன் உங்களைத் தேடி ஒட்டுசுட்டான் சென்றுவிட்டான் என்று சொன்னேன். ஒட்டுசுட்டான் என்பது முள்ளியவளையிளிருந்து 16 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. உடனே நண்பனின் அப்பா அங்கே போய் அவனைக் கூட்டிவர முடியுமா?? என்று கேட்க போகிறோம் என்று சொல்லிவிட்டு நானும் இன்னுமொரு அண்ணாவும் உந்துருளியில் ஒட்டுசுட்டான் நோக்கி புறப்பட்டோம். ஒட்டுசுட்டானுக்கு செல்லும் பாதை (மாங்குளம்-முல்லைத்தீவு வீதியின் ஒரு பகுதி) குன்றும் குழியும் நிறைந்த செப்பனிடப்படாத பாதையாக இருந்தது. அதனால் நாங்கள் ஒட்டுசுட்டானை அண்மித்தபோது எமது உந்துருளி பஞ்ச்சராகிவிட்டது. ஒருவாறு உந்துருளியைத் தள்ளிக்கொண்டுபோய் ஒரு தெரிந்தவர்களின் வீட்டில் விட்டுவிட்டு அவர்களிடம் ஒரு துவிச்சக்கர வண்டியை வாங்கிக்கொண்டு நண்பனைத் தேடிப்புறப்பட்டோம்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில்தான் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கிய எம் உறவுகள் சிலர் தங்கவைக்கப்பட்டிருந்தமையால் அங்கு சென்று விசாரித்தபோது நண்பன் அங்கே வந்து சென்றமை தெரியவந்தது. ஆனாலும் அவனை அங்கே காணக்கிடைக்கவில்லை. உடனே நானும் என்னுடன் வந்த அண்ணாவும் எமது உந்துருளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு வந்தோம். நல்ல வேளையாக நமது இரு நண்பர்கள் எங்களைத் தேடி இன்னுமொரு உந்துருளியில் வந்தமையால் அவர்களின் உதவியுடன் எமது உந்துருளி சக்கரத்தை கழற்றிக்கொண்டு ஒட்டுசுட்டானிலிருந்து நான்க்கைந்து கிலோமீற்றருக்கு அப்பாலிருந்த கற்சிலைமடுவுக்கு கொண்டுபோனால் டியுப் ஒட்ட முடியாதளவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. பிறகு ஒரு புது டியுப் வாங்கி பொருத்திக் கொண்டு ஒட்டுசுட்டானிலிருந்து முள்ளியவளையை நோக்கி புறப்பட்டோம்.
நாங்கள் முள்ளியவளை வந்தபோது நண்பனின் அப்பாவும், நண்பனும் கயட்டையடி நல்லடக்க இடத்துக்கு சென்றுவிட்டார்கள் என்றும் நண்பனின் அம்மா, ஒரு அக்காவின் உடலங்கள் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்தத் துயரச் செய்தியுடன் கயட்டையடி நோக்கி சென்றால் அழுகை...அழுகை... நிறைந்த உறவுகள்.. உறவுகளின் உடலங்கள் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.... நண்பனின் துன்பத்தில் பங்கெடுத்தேன்.. ஆனாலும் கடைசிவரை அவனது அம்மா, அக்கா ஆகியோரின் உடலங்கள் அங்கு வரவேயில்லை.. இரவாகியமையால் நண்பனையும் அழைத்துக் கொண்டு அவனது தங்குமிடத்துக்கு வந்தோம்..

கடைசிவரையும் நண்பனின் அம்மாவினதோ அல்லது அக்காமாரினதோ உடலங்களை காணக்கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களில் அம்மாவினதும், ஒரு அக்காவினதும் உடலம் முதலிலும் பின்னர் மற்ற அக்காவினது உடலமும் கண்டெடுக்கப்பட்டு அந்த இடத்திலையே அடக்கம் செய்யப்பட்டதாக அறியமுடிந்தது. இப்படி பல பல கதைகள்.. பலருக்கும் பல பல சோகங்கள்.. மறக்கச் சொன்னாலும் உள்ளம் இன்றும் அழுகிறது.. ஒன்றா, இரண்டா.. எத்தனை சொந்தங்கள் இந்த ஆழிப்பேரலை என்னும் அரக்கனால் பலிகொள்ளப்பட்டார்கள்... இந்த நாளில் இழந்த எம் உறவுகளை மனதில்கொண்டு தியானிப்போம்.. ஏய் ஆழிப்பேரலையே இனி ஒருபோதும் உன் அகோரதாண்டவத்தை அரங்க்கேற்றிவிடாதே!!

Saturday, December 19, 2009

APPLE சாப்பிட்டு ICE CREAM குடிக்கலாமா???

இரண்டாவது வலைப் பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றி பல விடயங்களை எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனாலும் ஒரே விடயத்தை திரும்பத் திரும்ப எல்லோரும் எழுதுவதை விட புதிதாக ஏதாவது எழுதலாம் என்று இரண்டாவது சந்திப்பில் மூத்த பதிவர் ஒருவர் சொன்ன ஆலோசனையின் அடிப்படையில் அதைப் பற்றி எழுதவில்லை.. (ஆஹா!! நேரம் இல்லை என்று நான் சொன்னால் என்ன இவர் வெட்டிப் பிடுங்கிறார் என்று நீங்கள் சொல்லுவீங்கள் அதுதான் இந்த சமாளிப்பிக்கேஷன்..)
கடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் பயனுறப் பதிவெழுதுதல் தொடர்பாக அதிகமாக பேசப்பட்டது. பயனுறப் பதிவெழுதும் பலருக்கும் அதற்கான பின்னூட்டங்கள் முறையாகக் கிடைப்பதில்லை என்கின்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. நிலைமை இப்படி இருக்க பயனுறப் பதிவெழுதுகிறவர்கள் தொடர்ந்தும் பயனுறவே எழுதுங்கள், பின்னூட்டங்களைக் கொண்டு உங்கள் தளத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்காதீர்கள் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.. அந்தவகையில் எனது இந்தப் பதிவும் ஏதாவது ஒரு வகையில் பயனுள்ள பதிவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு தொடர்கின்றேன்..
எனது இந்தப் பதிவில் நான் புதிதாக எதையும் சொல்லப்போவதில்லை. இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்பதால் பதிகின்றேன். அந்த வகையில் இந்தப்பதிவில் நான் அறிந்த தூய தமிழ்ச் சொற்கள் இரண்டை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நாங்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் சில சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களை தவிர்த்து அவற்றை அப்படியே ஆங்கிலத்திலையே உச்சரிக்கின்றோம். அந்தவகையில் நம்மில் பெரும்பாலானவர்கள் சிறிய வயது முதல் APPLE என்பதை தமிழிலும் ஆப்பிள் என்றே அழைத்துவருகின்றோம்.. அதற்கான முறையான தமிழ்ச் சொல் என்ன என்பது தொடர்பாக கொஞ்சம் தேடிப்பார்த்தால் மதுரையில் ஒரு கடையில் ஆப்பிள் என்பதற்கு மேலைநாட்டுக் கோலை இலந்தை என்று தமிழ் வடிவம் கொடுத்திருக்கின்றார்களாம்.
உண்மையில் நாம் ஆப்பிளை இலந்தைப் பழத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும்பாலும் இரண்டும் ஒரே மாதிரியான அமைப்புடையவையாகவே காட்சி தருகின்றன. உருவத்தில் மட்டும் ஆப்பிள் பெரிதாகவும் இலந்தப்பழம் சிறிதாகவும் இருக்கின்றன. சுவை இரண்டும் வேறுபட்டவை என்றாலும் இரண்டிலும் ஒரு வகையான மாத்தன்மை இருக்கின்றது. ஆக மொத்தம் நமது இலந்தைப் பழத்தின் அண்ணன்தான் இந்த ஆப்பிள். அதாவது மேலைநாட்டுக் கோலை இலந்தை. (ஆஹா!! APPLE என்ற நான்கு எழுத்து சொல்லுக்கு இவ்வளவு பெரிய தமிழ் அர்த்தமா?? என்று நீங்கள் யோசிக்கிறது புரியுது.. என்ன செய்ய நாங்கள் தமிழர் எதையும் முறையான அர்த்தத்துடன்தான் தமிழ்ப்படுத்த வேண்டும்.)
சரி இனி அடுத்த தூய தமிழ்ச் சொல்லுக்கு வருவோம். இதுவும் மதுரையில் உள்ள அந்தக் கடையில் தமிழ் வடிவில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் இருந்த ஒரு விடயம்தான். அதாவது நாங்கள் ICE CREAM என்பதை தமிழிலும் பெரும்பாலும் ஐஸ்கிரீம் என்றே அழைக்கின்றோம். இருப்பினும் இதனை சிலர் குளிர்களி என்றும் தமிழில் சொல்கின்றார்கள். உண்மையில் ICE என்றால் தமிழில் குளிர் என்று அர்த்தமில்லையே!!! மாறாக ICE என்றால் தமிழில் பனி என்றே அர்த்தம். ஆகவே ICE CREAM ஐ குளிர்களி என்று அழைப்பது பொருத்தமற்றது என்றே சொல்ல தோன்றுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க மதுரையில் உள்ள மேற்படி கடையில் ICE CREAM என்பதற்கு பால்பனி வெண் குழைவு என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறார்களாம்.
ஒரு வேளை ICE CREAM என்பதில் MILK என்கின்ற சொல் வரவில்லையே பிறகு எப்படி தமிழ்ப்படுத்தும்போது பால் என்ற சொல் வந்தது என்றும், ஏன் எல்லா ICE CREAM உம் வெள்ளை நிறத்திலா உள்ளது என்றும் தர்க்கிக்க முடியும். ஆனாலும் ICE CREAM தயாரிக்கும்போது அதற்குள் பால் உள்ளீட்டுப் பொருளாக அமைவதால் பால்பனி வெண் குழைவு என்பதில் "பால்" என்ற சொல்லை சேர்த்ததை நியாயப்படுத்தலாம். மேலும் ஆரம்ப காலங்களில் ICE CREAM வெள்ளை நிறத்திலையே இருந்தமையால் பால்பனி வெண் குழைவில் "வெண்" என்ற சொல்லை சேர்த்ததை நியாயப்படுத்த முடியும். ஆகமொத்தம் நாங்கள் பயன்படுத்தும் குளிர்களி என்ற தமிழ்ப் பதத்தை விட பால்பனி வெண் குழைவு என்கின்ற தமிழ் சிறந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.