இது கொஞ்சம் பிந்திய பதிவுதான்..
அதாவது கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கடந்த ஜூலை பதின்மூன்றாம் திகதி தனது ஐம்பத்தியாறாவது அகவையை பூர்த்தி செதிருந்தார்...(அவர் இம்முறை ஈழத்தமிழர்களுக்காக தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை.) எனவே இந்த பதிவை கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
உண்மையில் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களின் கவிதைகளாக இருந்தாலென்ன, பாடல்களாக இருந்தாலென்ன, கருத்துக்களாக இருந்தாலென்ன எனக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன் நான் எழுதும் சில கவிதைகளில் அவரின் பாதிப்பு இருப்பதாக நண்பர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு மிகவும் ஒரு தீவிர ரசிகன். கவிப்பேரரசர்வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதையை பிடிக்காத உள்ளங்களே இல்லை என்று சொல்லலாம்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறாம் ஆண்டு ஜூலை மாதம் பதின்மூன்றாம் திகதி இந்த பாரினில் அவதரித்தவர்தான் கவிப்பேரரசர் வைரமுத்து. அவர் வெளியிட்ட முதலாவது கவித்தொகுப்பு வைகறை மேகங்கள். இதனை அவர் தனது பதினேழாவது வயதில் வெளியிட்டதாக அறியமுடிகிறது. மேலும் அதனைத்தொடர்ந்தும் வைரமுத்துவின் வைர வரிகளை தாங்கிய தொகுப்புக்கள் பல வெளிவந்திருக்கின்றன, வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் பல திரைப்படங்களுக்கு பாடல்களை மிகவும் தத்துருபமாக எழுதியிருக்கிறார் என்பது முக்கியமானது. அந்த வகையில் நமது ஈழத்தமிழர் நிலைமையை தெளிவுபடுத்திய வைரமுத்துவின் பாடல்தான் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெறும் விடைகொடு எங்கள் நாடே... என்று ஆரம்பிக்கும் பாடல்.
உண்மையில் ஈழத்தில் இருக்கின்ற ஒரு படைப்பாளியால்கூட இவ்வளவுக்கு உணர்வுபூர்வமாக சிந்திக்க முடியுமா? என்று வியக்கும் அளவுக்கு அந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் அமைந்துள்ளன..
விடைகொடு எங்கள் நாடே.....
கடல் வாசல் தெளிக்கும் வீடே.....
பனைமரக்காடே பறவைகள் கூடே....
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா??....
இந்த ஆரம்பம் ஒன்றே போதும். இடப்பெயர்வே வாழ்வாக கொண்ட நமது மக்களின் நிலையினை சொல்ல..
உதட்டில் புன்னகை புதைத்தோம் .....
உயிரை உடம்புக்குள் புதைத்தோம் ....
வெறுங்கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...
இந்த வரி போதும் இடப்பெயர்வையே கண்டிராத ஒருவனுக்கு அதன் வலியை புரியவைக்க.....
கந்தல் ஆனாலும் தாய்மடி போல் ஒரு சுகம் வருமா?? வருமா?? சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் சுதந்திரம் வருமா?? வருமா??...
மனச்சாட்சி இல்லாதவனை கூட உலுக்கும் வரி.. சுதந்திரத்தின் உறைவிடம் நமது சொந்த ஊர்தானே அன்றி வேறேது...???
கண் திறந்த தேசம் அங்கே ....
கண் மூடும் தேசம் எங்கே???
சொந்த தாயகத்தில் பிறந்தவன் கண்மூடுகிறான் வேற்றுத்தாயகத்தில்... இதை விட இன்னும் எப்படி சொல்ல முடியும்..????
பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்.....
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்..
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம்.....
மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் தான் நேசிக்கும் இயற்கையோடு பேசுவான்... நீராடிய நதிகளுடன் பேசுகிறார்கள் இடம்பெயரும் எம் சொந்தங்கள்..... மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்... எம்மவர்களுக்கு சொந்த தாயகம் அழைக்கும் என்ற நம்பிக்கையும் கூட... இடம்பெயரும் நேரத்திலும் தாயகம் மீண்டும் அழைக்கும் என்ற நம்பிக்கையுடன் நகர்கிறார்கள்... அந்த பொழுதுகளில் எம்மவர்கள் கடைசியாய் கண்ணீர் திரையுடன் தாயகத்தை பார்க்கிறார்கள்.... உண்மையில் கவிப்பேரரசர் ஈழத்தமிழ் உணர்வுள்ள கவிஞரே...
எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்..
எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு புகையிலே புதைத்தோம்...
முன்னிரவில் மலரில் கிடந்தோம் பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்....
எங்கள் சொந்தங்கள் இடம்பெயரும் மனிதர்கள்தான்.. ஆனாலும் அவர்களுக்கும் காதல் காம உணர்வுகள் உண்டு... கவிப்பேரரசர் மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்....
கடல் நீர் பறவையாய் இருந்தால் சந்திப்போம்...
மனமே மலைகளாய் வாழ்ந்தால் சந்திப்போம்...
எந்த இடத்திலும் எங்கள் நம்பிக்கைகள் தளராதவை...
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்....
நமக்கு நெஞ்சில்தான் அதிக பாரங்கள்... உடைமைகள் இழந்தோம் உறவுகள் இழந்தோம்.... நெஞ்சில் மட்டும் பாரங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது..
இவ்வாறாக அந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மகத்தானவை...
இசைப்புயல் ரஹ்மானின் இசையும், பாடகர்களின் உணர்வுபூர்வமான உருக்கமான குரலும் வரைமுத்துவின் வைரவரிகளுக்கு உயிர் கொடுக்கின்றன...
ஒரு சிறந்த படைப்பாளி கவிப்பேரரசர் வைரமுத்துவுக்கு இனிய வாழ்த்துக்களும் நன்றிகளும் சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.....
Saturday, July 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
nalla pathivu? vazthukkal . athusati 1956 m aandu piantha avatukku eppidi 2009 il 56 vazathu??????????
Tharsha
உண்மைதான் தர்ஷா....
அது 1953 என்று வர வேண்டும்.... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி....
உங்கள் அன்பும், ஆதரவும் உற்சாகம் தருகின்றது....
தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களால் சிறப்படைவேன் என்ற நம்பிக்கையுடன்.....
அன்புடன்-மயில்வாகனம் செந்தூரன்....
Post a Comment