ஆரோக்கியமான விமர்சனங்கள் ஒரு படைப்பாளியை முழுமையடைய செய்வதற்கு அவசியம் என்பது பொதுவான கருத்து.. இருந்தபோதிலும் சில சந்தர்ப்பங்களில் சில விமர்சனங்களால் படைப்பாளிகள் பாதிக்கப்படுவதுமுண்டு. உதாரணமாக சினிமாவை விமர்சிக்கும் சிலர் அதனை முழுமையாக மக்களுக்கு சொல்லிவிடுவதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஏன் நடிகர்களும் பாதிப்படைய நேரிடுவதுண்டு.
அத்துடன் இது தொடர்பாக தமிழ்கத்தில் இயக்குனர் ஒருவர் "படைப்பாளிகள் அணுவணுவாக வெயிலிலும் மழையிலும் நின்று செதுக்கும் படங்களை தொலைக்காட்சி கலையகத்தில் சொகுசு கதிரையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து கொண்டு விமர்சிக்கின்றார்கள்" என்று விமர்சகர்களை சாடியிருந்தார்.
எது எப்படி இருந்தாலும் நல்ல ஆரோக்கியமான விமர்சனம் ஒன்றினால் ஒரு படைப்பாளியை பூரணமாக்க முடியும் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது..
இப்படித்தான் நான் கல்லூரியில் கற்கின்ற காலங்களிலும் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. அதாவது எனது கல்லூரி நண்பர்களில் ஒருவன் மிகவும் திறைமையான படைப்பாளி. (குறிப்பாக கவிதை...) ஒரு நாள் அவன் எழுதிய ஒரு கவிதையை எம்மிடம் காட்டினான். அந்த கவிதையில் என்னால் எந்த குறையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதாவது அவனின் கவிதையில் குறை கண்டுபிடிக்கும் அளவுக்கு அப்போது எனக்கு அனுபவம் இருக்கவில்லை. ஆனாலும் எனது இன்னுமொரு நண்பன் அந்த கவிதையில் இருந்த குறைகள் சிலவற்றை சுட்டிக்காட்டினான்.
என்னதான் சிறந்த படைப்பாளி என்றாலும் எனது நண்பனுக்கு குறைகளை சுட்டிக்காட்டும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. இதனால் தனது கவிதையில் குறைகண்டுபிடித்த எனது மற்றைய நண்பனிடம் இவன் விளக்கம் கேட்க ஆரம்பித்தான். அவனும் ஒவ்வொன்றுக்கும் மிகவும் தெளிவாக விளக்கமளித்தான். படைப்பாளி நண்பன் விடுவதாக இல்லை. அவனுக்கு தெரிந்த எல்லாவற்றையும் கேள்விகளாக தொடுக்கலானான். விமர்சித்த என் நண்பனும் சளைக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தான்.
விமர்சனத்தில் ஆரம்பித்த இந்த நிகழ்வு நீண்டுகொண்டேபோனது. ஆற்றாமையில் இருந்த படைப்பாளி நண்பன் "அது சரி இவ்வளவு சொல்கிறாயே உன்னால் இப்படி ஒன்றை படைக்க முடியுமா???" என்று கேட்டான்.
உண்மையில் இந்த கேள்வி நம்ம விமர்சகருக்கு நெத்தியடியாக இருக்குமென்றுதான் நான் நினைத்தேன். ஆனால் நமது விமர்சகன் ரொம்ப புத்திசாதுரியமாக "நண்பா என்னால் முட்டை இட முடியாது, பால் கொடுக்க முடியாது. ஆனால், அந்த கோழிதரும் முட்டையின் சுவையையும், பசு தரும் பாலின் சுவையையும் கோழியையும், பசுவையும் விட நான் நன்றாக விமர்சிப்பேன்." என்று கூறினான்.
நம்ம படைப்பாளி மட்டுமல்ல நாங்களும் ஒரு கணம் அமைதியாகிவிட்டோம். அந்தளவுக்கு நண்பனின் விளக்கம் பிரமிக்க வைத்துவிட்டது. இதற்குமேல் அந்த விவாதம் தொடர்ந்திருக்குமா என்ன?? இரண்டு கோடுகளாக இருந்த என் நண்பர்கள் இருவரும் இணைந்தகோடுகளாக மாறிவிட்டனர்.
ஆம் படைப்பாளி நண்பன் நம்ம விமர்சக நண்பனுக்கு கைகொடுத்து தனது தவறை திருத்திக்கொண்டான். இதில் இன்னுமொரு விடயமும் உண்டு அதாவது அந்த சம்பவத்தின் பின்னர் தனது படைப்புக்கள் எதுவாக இருந்தாலும் படைப்பாளி நண்பன் முதலில் விமர்சக நண்பனிடம்தான் காட்டுவான்..
உண்மையில் விமர்சிப்பது ஒன்றும் சாதாரண விடயமல்ல. அத்துடன் படைப்பாளிகள் எல்லோரும் சிறந்த முறையில் விமர்சனத்தை முன்வைப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. மேலும் படைப்பாளிகள் நல்லதோ, கெட்டதோ வருகின்ற ஒவ்வொரு விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் ம்நோபக்குவமுடையவர்களாக இருந்தால் அவர்களின் படைப்பில் பூரணத்துவங்கள் எதிர்காலத்தில் அமைவதை யாராலும் தடுத்துவிட முடியாது.. அதேபோன்று விமர்சிப்பவர்களும் படைப்பாளிகளின் படைப்பை பாதிக்காத வகையில் விமர்சிப்பது அவசியம்..
இப்படி பல சம்பவங்கள் கல்லூரிக்காலத்தில் நடந்துள்ளன. ஒவ்வொன்றையும் தேவையான நேரத்தில் உங்களோடு பகிர்ந்துகொள்ளவேன் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு நிறைவடைகின்றது.
Friday, July 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment