கொஞ்ச நாளாய் அரசியல் பக்கம் போகக்கிடைக்கவில்லை. அதனால் இந்த பதிவில் கொஞ்சம் அரசியல் பேசலாம் என்று எண்ணி இந்த பதிவை இடுகின்றேன்.. இது தொடர்பான உங்கள் கருத்துக்களயும் எதிர்பார்க்கின்றேன்...
இன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு ஒரு பெரும் வெற்றிக்களிப்பில் உள்ளது... இந்த வெற்றிக்களிப்பு ஒரு புறம் இருக்க தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றமை ஒரு பெரும் பிரச்சினையாக தலைதூக்க ஆரம்பித்துள்ளது..
இதனால் உலக நாடுகளிடமிருந்து ஏதாவது ஒரு வகையில் நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாததாக உள்ளது.(நம்ம நாட்டிற்கு எப்பத்தான் இது தவிர்க்ககூடியதாக இருந்திருக்கு..)
இருந்த போதிலும் இலங்கையின் போர் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ள மேற்குலக நாடுகள் உதவிகள் தொடர்பில் சில, பல நிபந்தனைகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றன.
அந்த வகையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம், நீண்ட கால இன முரண்பாடுகளிற்கான நிரந்தர தீர்வு என்பன இதில் முதன்மை பெறுகின்றன.(நமக்கு தெரிந்தவரை இவைதான் முதன்மை ஆனால் அந்தந்த நாடுகள் திரை மறைவில் எவற்றை முதன்மைப்படுத்துகின்றனவோ..??????) எனவே இவை தொடர்பில் அரசு விரும்பியோ விரும்பாமலோ ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது.
இருந்தபோதிலும் இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையும் இன முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் தமிழ்மகளுக்கு திருப்திகரமானதாக இருப்பதாக தெரியவில்லை என்றே கூற வேண்டும்..
இந்த நிலையில் இன முரண்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி உட்பட அரச பிரதிநிதிகள் வெளியிடும் கருத்துக்களும் குழப்பம் நிறைந்தவையாகவும், ஒன்றுக்கு ஒன்று முரணானதாகவும் உள்ளன. இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
கடந்த மே மாதம் பத்தொன்பதாம் திகதி பயங்கரவாதம் அழிக்கப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி "இந்த நாட்டில் இரண்டு இனங்கள் மட்டுமே இருப்பதாகவும் அதில் ஒன்று நாட்டை நேசிக்கும் இனம் என்றும் மற்றையது நாட்டை நேசிக்காத சிறிய குழு என்றும்" கூறியிருந்தார். அதாவது ஜனாதிபதியின் பார்வையில் சிறுபான்மையினர் என்றோ அல்லது பெரும்பான்மையினர் என்றோ தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் என்றோ எந்தவொரு இனமும் இலங்கையில் கிடையாது.
அப்படியானால் இலங்கையில் நாட்டை நேசிக்கின்ற இனத்திற்கும் நாட்டை நேசிக்காத சிறிய குழுவிற்கும் இடையிலா முரண்பாடுகள் உள்ளன என எண்ண தோன்றுவதுடன் ஜனாதிபதி நாட்டில் இன முரண்பாடுகள் இல்லை என்று சொல்ல விழைகின்றாரா??? என்ற சிந்தனையையும் உண்டுபண்ணுகின்றது..
ஆனால் ஜனாதிபதயும் அரசாங்கமும் இலங்கையில் நீண்டகால இனமுரண்பாடு உள்ளதை நேரடியாக இதுவரை மறுக்கவில்லை என்பதனாலும் இப்போது பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் அது, இது என்று பேசுவதாலும் இலங்கையில் இனமுரண்பாடுகள் உள்ளன என்பதை ஜனாதிபதியும் அரசும் மறுக்கவில்லை என்றும் கொள்ள இடமுண்டு.
சரி இலங்கையில் இனமுரண்பாடுகள் உண்டு என்றால் ஜனாதிபதியின் பார்வையில் அது இலங்கையில் வாழும் நாட்டை நேசிக்கும் இனத்திற்கும் நாட்டை நேசிக்காத இனத்திற்கும் இடையில்தான் இருக்கவேண்டும்.அப்படியானால் அரசாங்கம் நாட்டை நேசிக்காத சிறிய குழுவிற்குத்தான் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க போகின்றதா?? என்ற கேள்வியும் தவிர்க்கமுடியாததாக உள்ளது..
இந்த நிலையில் அந்த நாட்டை நேசிக்காத சிறிய குழுதான் சம உரிமை தொடர்பிலும், அதிகாரங்கள் தொடர்பிலும் பேசுபவர்களாக இருக்க வேண்டும். கணிசமான தமிழ், முஸ்லீம் மக்கள் சம உரிமை தொடர்பிலும் அதிகாரங்கள் தொடர்பிலும் பல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். (அரசியல்,ஆயுதம்) ஆகவே ஜனாதிபதியின் கருத்துப்படி நாட்டை நேசிக்காதவர்கள் என்று சொல்லலாம்.
ஜனாதிபதியின் கருத்து இவ்வாறு இருக்க நூற்று இருபது தடவைகள் கூடி தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்த சர்வகட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸவிதாரண அண்மையில் சிங்கள நாளேடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் "தமிழ் மக்கள் ஆயுத ரீதியில் உரிமைகளை வென்றெடுக்கலாம் என எண்ணி புலிகளை ஆதரித்ததாகவும் அவர்களுக்கு வலுவூட்டியதாகவும் ஆனால் அந்த வழிமுறை தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வைப்பெறுவதே தற்போது சாத்தியம்" என்றும் கூறினார். அத்துடன் ஜனாதிபதியின் நாட்டைநேசிப்போர் நேசிக்காதோர் தொடர்பில் கேட்டபோது "அது ஜனாதிபதியின் கருத்து வெளியிடும் உரிமை என்றும் யாரும் எப்படியும் கருத்துக்களை முன்வைக்கமுடியும்" எனவும் பதிலளித்திருந்தார்.
அந்த வகையில் பேராசிரியர் திஸ்ஸவிதாரண அவர்கள் தனது இந்த செவ்வியின் மூலமாக தமிழ்ர்களின் ஏக பிரதிநிதிகளாக புலிகள் இருந்தமையை ஏற்றுக்கொண்டுவிட்டாரா? என்ற கேள்வி எழுவதுடன் இனங்கள் தொடர்பில் பேராசிரியரின் கருத்து தமிழ்ர்கள், சிங்களவர்கள்,முஸ்லீம்கள்...என்று அமைகின்றமை ஜனாதிபதியின் வகைப்படுத்தலில் இருந்து முற்றிலும் முரண்படுகின்றது.
இவை இவ்வாறு இருக்க இந்த நேர்காணலின் ஒரு இடத்தில் பேராசிரியர் "முதலில் தமிழ் மக்களின் கையில் ஒரு அதிகாரத்தை கொடுக்கவேண்டும் பின்னர் படிப்படியாக அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இதனை வரவேற்றே ஆகவேண்டும். அதாவது நீண்டகால இன முரண்பாட்டை ஒரே நாளில், ஒரே முயற்சியில் தீர்ப்பது என்பது சாத்தியமற்றது. படி நிலை வழியில்தான் அதனை தீர்க்கமுடியும்.
மேலும் இப்பத்திரிகை நேர்காணலின்போது "புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தால் தீர்வை விரைவாக பெற முடியும் எனவும், புலிகளிற்கு வழங்கிய நிதியுதவிகளை அரசாங்கத்திற்கு வழங்க முன்வர வேண்டும்" எனவும் கோரியிருந்தார். அவரின் இக்கோரிக்கையானது, அரசாங்கம் சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியையும், புலம்பெயர் நாடுகளில் தமிழ்ர்கள் நடாத்தும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கும் மிகப்பெரிய அழுத்தத்தையும் வெளிப்படுத்துகின்றது.
இவை ஒருபுறமிருக்க அரசில் அங்கம்வகிக்கின்ற, வகிக்காத பெரும்பான்மை இனவாத கட்சிகளின் கருத்துக்கள் வேடிக்கையானவையாகவும், முரண்பட்டவையாகவும் அமைகின்றன. அண்மையில் ஜனாதிபதி வெளியிட்ட ஒரு கருத்தும் குழப்பம் நிறைந்ததாகவும், சிறுபான்மை சமூகத்திடம் இருந்த ஒரு சின்ன நம்பிக்கையை கூட இழக்க வைப்பதாகவும் உள்ளது. மேலும் வடக்கில் அவசரமாக நடாத்தப்படும் தேர்தலும், பொதுத்தேர்தலின் பின்னரே தீர்வுத்திட்டம் என்ற அரசின் அறிவிப்பும் தீர்வு பற்றிய நம்பிக்கைகளை சீர்குலைக்க செய்துள்ளன என்பது நிதர்சனம்..
இந்த நிலையில் தீர்வுத்திட்டம் சாத்தியப்படுமா?????????
Saturday, July 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment