இது எனக்கு முதல் படம் -அதனால்
காட்சிகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.
என் படத்தின் பெயரை
பாசம் என்று பவ்வியமாய் சூட்டியுள்ளேன்.
"பாசம்"
இது கிராமத்து வாசம் வீசும் கதை.
பலருக்கும் இப்படம்
ஓசை இன்றி ஓர் கதை சொல்லும்- அதனால்
ஆசை ஆசையாய்
அரங்கிற்கு நீங்கள் அணிதிரண்டு வரலாம்.
பயப்படாதீர்கள்,
பணம் கொடுத்து பார்த்தாலும்
பாசம் உங்களை மோசம் போகச் செய்யாது- மாறாக
மாசற்ற உங்கள் மனதை பாசம் பரவசப்படுத்தும்.
வன்முறைக்குள் வாழும் உங்கள் வாழ்வின்
மூன்று மணி நேர மகிழ்ச்சிக்காய்
படத்தில் வன்முறைக் காட்சிகளை
பாதி அளவு குறைத்துள்ளேன்-ஆனால்
ஆங்கில வார்த்தைகள் ஆங்காங்கே உண்டு.
அதுதானே இன்றைய தமிழ் சினிமாவின் நாகரீகம்.
நாகரீக வரம்பை நான் மட்டும் எப்படி மீறுவது?
அடுத்ததடுத்து அரைத்த மாவையே அரைக்கும்
அகன்ற திரைக்கு பாசம் புதுசு.
இன்று,
என் "பாசம்" படத்தின்
தொடக்க பூசை.
படப்பிடிப்பையும் இன்றே ஆரம்பித்து விட்டேன்.
காட்சிகள் சிதறாமல் கட்டு கோப்புடன் இருக்க்க
கமரா கோணம் பார்க்கிறேன்.
அந்த காட்சி அவ்வளவு அழகாக தெரியவில்லை.
இன்னும் கொஞ்சம் இடப்பக்கம் திருப்பி கமராவை நிலைப்படுத்தினால்
நிச்சயம் நல்ல காட்சி கிடைக்கும்.
கமராவை அசைக்கிறேன்,
அற்புதமான அந்த காட்சியையும்
அவர்கள் நடிப்பையும் கமரா சுட்டுத்தள்ளுகிறது.
இனி அடுத்த காட்சிக்காய் கமராக் கோணம் திரும்புகிறது.
இப்படி திருப்பி திருப்பி எடுத்த காட்சிகள்
எடிட்டிங் அறையில் ஏராளமாய்
காட்சிக் கோர்ப்பிட்காய் காத்திருக்கின்றன.
இனி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.
அதற்குள்......
அம்மாவின் அலறல்,....
தம்பி விடிஞ்சிட்டு எழும்படா.....
இலங்கையில் தமிழ் பட இயற்குனராகும்
இலட்சியத்துடன் இருக்கும் எனக்காக
இந்த இரவு பொழுது தானும்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்க கூடாதா?
2 comments:
wow.........
miga azhkaana katpanai da.
short n sweet a irunthuchu.
good luck.......ithai pondru melum pala padaipukalai padaika manamaarntha vaazhthukal.
tc
:)
okda. but not thanks. we are friends. ok.
Post a Comment