Friday, May 22, 2009
அடுத்து வரும் நாட்கள்/வருடங்கள்?
அரசாங்கம் புலிகளை அழித்த பின்னர் தீர்வு திட்டத்தை முன்வைக்க போவதாக முன்னர் கூறியமை குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இப்போது புலிகளை அழித்தது விட்டதாகவும் அதன் தலைமையை அழித்தது விட்டதாகவும் அரச தரப்பில் இருந்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் நாட்கள் அல்லது வருடங்கள் நிச்சயம் ஒரு இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை நோக்கி நகரும் என எந்தவொரு நாடோ அல்லது அமைப்போ கருதுமானால் அது முட்டாள்தனமான ஒன்றாகவே அமையும். அந்த வகையில் இந்த விடயம் தொடர்பில் கொஞ்சம் ஆழமாக நோக்க வேண்டியது இன்றைய நிலையில் அவசியமாக உள்ளது. கடந்த பல தசாப்தங்களாக தொடரும் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு குறுகிய பார்வை போதுமானதாக இருக்காது என்ற போதிலும் இனி வரும் நாட்கள் பற்றி முக்கியமான ஒரு சில விடயங்களை குறிப்பிடலாம்.
இப்போது அரசின் பார்வையில் போர் முடிந்து விட்டது. இனி அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கும்? இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும். பின்னர் வடக்கை கட்டிஎழுப்ப வேண்டும். அதன் பின் அவசர அவசராவசரமாக ஒரு மாகாண சபை தேர்தலை வடக்கில் நடாத்த வேண்டும். அதன் பின் அபிவிருத்தி, மக்கள் புனர்வாழ்வு.... இப்படி பல பல திட்டங்களால் வடக்கில் வசந்தத்தை வீச செய்ய வேண்டும். ஆக மொத்தம் இதெல்லாம் நடந்து முடிய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அது வரையான காலத்துக்குள் இப்போதுள்ள அரசாங்கம் அல்லது ஜனாதிபதி பதவியில் இருப்பாரா? அப்போது பதவியில் இருப்பவரின் கொள்கை இப்போதுள்ள ஜனாதிபதியின் கொள்கையுடன் ஒன்று பட்டதாக இருக்குமா? இவை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டிய கேள்விகள் மட்டுமன்றி பல தடவை பலரும் சிந்தித்த கேள்விகளும் கூட. உண்மையை செல்வதாக இருந்தால் இனி இலங்கையில் "இனப்பிரச்சினைக்கான தீர்வு" என்ற சொல்லை கேட்பது குறைவாக இருக்கும். மாறாக அபிவிருத்தி, மீளக்கட்டி அமைத்தல், புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், மாகாண சபை தேர்தல், செயலணி குழு.... இப்படியான சொற்களையே அதிகம் கேட்க முடியும்.
கடந்த பத்தொன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதியின் உரையும் இதனையே பிரதிபலிக்கின்றது.
Thursday, May 21, 2009
பேய் இருக்குதா? இல்லையா?
பொதுவாக பேய் உண்டு என்று யாராவது வாதாடினால் நான் கேட்கும் முதலாவது கேள்வி, கனவு என்று ஒன்று நடமாடுகின்றதா? அதாவது பேய் என்று நீங்கள் சொல்வது போல கனவு என்று, ஒரு உருவம் உள்ளதா? இந்த கேள்விக்கு பலரும் சொல்லும் பதில் "இல்லை"என்பதுதான். அப்படியானால், கனவு என்றால் என்ன? இது எனது இரண்டாவது கேள்வி. இதற்கு வரக்கூடிய பதில் கனவு என்பது ஒரு "பிரமை". அதாவது கற்பனைகளின் நிழல் என்று கனவை அடையாளப்படுத்த முடியும். சரி இப்ப கனவு என்றால் என்ன என்பதா முக்கியம்?என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கனவு என்பது ஒரு கற்பனை நிழல் என்றால் ஏன் பேய்க்கு மட்டும் உருவம் கொடுக்க வேண்டும்?. அதனையும் ஒரு கற்பனை நிழலாக அடையாளப்படுத்தி விட வேண்டியதுதானே? உண்மையை சொல்லவதாக இருந்தால் அதுதான் நிஜம். அன்றி பேய்க்கு என ஒரு உருவம் கிடையாது. கனவு என்பது உருவம் உள்ளது என்று யாராவது நிரூபித்தால், நான் பேய் உண்டு என்பதை ஏற்று கொள்கிறேன். அதாவது பேய்க்கு உருவம் உண்டு என்பதை ஏற்று கொள்ள தயார். ஒரு மன பிரமைதான் பலருக்கும் பேய்க்கான உருவத்தை காட்டுகின்றது என்பது எனது கருத்து. அன்றி பேய் என்பது கனவு போல தமிழில் உள்ள ஒரு சொல் அவ்வளவுதான்.
பேய் பற்றிய இந்த பதிவை இடும் போது ஒரு கதை ஞாபகம் வருகிறது, ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் செம்மணி சுடுகாட்டிற்கு நள்ளிரவில் சென்று அங்குள்ள மரக்குற்றியில் ஆணி அடித்துவிட்டு வருவதாக ஒருவர் சபதம் எடுத்துவிட்டு சென்றிருக்கிறார், அங்கே அவர் சென்று ஆணி அடித்து விட்டு திரும்ப வீடு வர முயற்சித்த போது அவரால் ஒரு அடி கூட நகர முடியவில்லை. இதனால் அந்த இடத்திலேயே பேய் அடித்து அவர் இறந்து விட்டார். (இப்படி சொன்னால் உடன நம்பீடுவீங்க்களே) அங்கு நடந்தது என்ன தெர்யுமா? அவரை பேயும் அடிக்கல்ல பிசாசும் அடிக்கல்ல. அவர் அந்த மரக்குற்றியில் ஆணி அடிக்கும் போது தனது சாரத்தையும் சேர்த்து ஆணியால் அடித்து விடாராம். அப்படி என்றால் அவரால் எப்படித்தான் நகர முடியும்.
ஆக மொத்தம் இல்லாத ஒன்றினை இருப்பதாக எண்ணிய ஒரு மனப்பிரமை ஒரு மனித உயிரை எடுத்தது. அது பேயும் இலலை பிசாசும் இலலை. பேய் பற்றி பல்வேறு ஆராட்சிகள் நடைபெறுகின்றன. என்னதான் ஆராய்ந்தாலும் சொன்னாலும் மனிதனின் மனப்பிரமையை மாற்ற முடியாது. விஞ்ஞானம் சொல்லவதெல்லாம் ஒன்றுதான் அதாவது சக்தி காப்பு. இது கூட ஒரு சில இடங்களில் பொய்யாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் ஒற்றுமையாக உள்ளது. ஆகவே இறுதியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன் மனிதநிட்க்குள் இருக்கும் சக்தி அவன் இறந்த பின்னர் இந்த பூமியில் காக்கப்படுவது உண்மை, அன்றி அதனை பேய் என்றும் பிசாசு என்றும் உருவம் கொடுத்து அடையாளப்படுத்துவது அர்த்தமற்றது. இதனால் இளம் சமுதாயத்தினர் மத்தியில் பய உணர்வை விதைக்க முடியுமே தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது. இப்ப சொல்லுங்க நான் சொல்லிறது சரிதான? பேய் பற்றின அலுவலகத்தில நடந்த ஒரு சுவாரசியம் இருக்கு பிறகு பதியிறன்.
Wednesday, May 20, 2009
இயக்குனர்......

இது எனக்கு முதல் படம் -அதனால்
காட்சிகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.
என் படத்தின் பெயரை
பாசம் என்று பவ்வியமாய் சூட்டியுள்ளேன்.
"பாசம்"
இது கிராமத்து வாசம் வீசும் கதை.
பலருக்கும் இப்படம்
ஓசை இன்றி ஓர் கதை சொல்லும்- அதனால்
ஆசை ஆசையாய்
அரங்கிற்கு நீங்கள் அணிதிரண்டு வரலாம்.
பயப்படாதீர்கள்,
பணம் கொடுத்து பார்த்தாலும்
பாசம் உங்களை மோசம் போகச் செய்யாது- மாறாக
மாசற்ற உங்கள் மனதை பாசம் பரவசப்படுத்தும்.
வன்முறைக்குள் வாழும் உங்கள் வாழ்வின்
மூன்று மணி நேர மகிழ்ச்சிக்காய்
படத்தில் வன்முறைக் காட்சிகளை
பாதி அளவு குறைத்துள்ளேன்-ஆனால்
ஆங்கில வார்த்தைகள் ஆங்காங்கே உண்டு.
அதுதானே இன்றைய தமிழ் சினிமாவின் நாகரீகம்.
நாகரீக வரம்பை நான் மட்டும் எப்படி மீறுவது?
அடுத்ததடுத்து அரைத்த மாவையே அரைக்கும்
அகன்ற திரைக்கு பாசம் புதுசு.
இன்று,
என் "பாசம்" படத்தின்
தொடக்க பூசை.
படப்பிடிப்பையும் இன்றே ஆரம்பித்து விட்டேன்.
காட்சிகள் சிதறாமல் கட்டு கோப்புடன் இருக்க்க
கமரா கோணம் பார்க்கிறேன்.
அந்த காட்சி அவ்வளவு அழகாக தெரியவில்லை.
இன்னும் கொஞ்சம் இடப்பக்கம் திருப்பி கமராவை நிலைப்படுத்தினால்
நிச்சயம் நல்ல காட்சி கிடைக்கும்.
கமராவை அசைக்கிறேன்,
அற்புதமான அந்த காட்சியையும்
அவர்கள் நடிப்பையும் கமரா சுட்டுத்தள்ளுகிறது.
இனி அடுத்த காட்சிக்காய் கமராக் கோணம் திரும்புகிறது.
இப்படி திருப்பி திருப்பி எடுத்த காட்சிகள்
எடிட்டிங் அறையில் ஏராளமாய்
காட்சிக் கோர்ப்பிட்காய் காத்திருக்கின்றன.
இனி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.
அதற்குள்......
அம்மாவின் அலறல்,....
தம்பி விடிஞ்சிட்டு எழும்படா.....
இலங்கையில் தமிழ் பட இயற்குனராகும்
இலட்சியத்துடன் இருக்கும் எனக்காக
இந்த இரவு பொழுது தானும்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்க கூடாதா?
கடவுள் உள்ளார? இல்லையா?

நான் சொல்லுகின்ற ஒவ்வொரு கருத்திற்கும் எனது நண்பன் எதிர்க்கருத்துக்களை முன் வைத்தான். சரி விவாதத்தை எனக்கு சாதகமாக முடித்து வடலாம் என்று எண்ணி இறுதியாக அவனிடம் கேட்டேன் அதாவது எனது இறுதி அஸ்திரத்தை தொடுத்தேன், கடவுள் இருக்கிறார் என்றால் எங்கே அவரை எனக்கு காட்டு பார்க்கலாம் என்று? (வெற்றி எனக்கு என்று கேட்ட இந்த கேள்விதான் எனக்கு தோல்வியை தரப்போகின்றது என்பது எனக்கு அப்போது தெரியாது) நான் இந்த கேள்வியை கேட்ட உடனே எனது நண்பன் என் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தான். ஆ... வலிக்கிறது ஏன் அடித்தாய் என்று கேட்டேன். வலிக்கிறதா? எங்கே அந்த வலியை காட்டு பார்க்கலாம் என்றான் என் உயிர் தோழன். வலியை எப்படி காட்ட முடயும் அதை உணரத்தானே முடியும் என்று நான் சொன்னேன். உடனே அதே போல்தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களினால் கடவுளை காண முடியாது, உணரத்தான் முடியும் என்று கூறினான். ஆஹா வாயை கொடுத்து மாட்டீற்றமே என்ற கவலை மட்டுமல்ல, என் நண்பனின் புத்தி சாதுர்யம் என்னை பிரமிக்க செய்தது. துரதிஸ்டவசம் என்னுயிர் தோழன் இப்போது உயிருடன் இல்லை.
Tuesday, May 19, 2009
இப்போதுள்ள குழப்பம்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டதான தகவல் உண்மையா பொய்யா என்பதே இப்பொழுது அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை தேடுவதிலையே அனைத்து தமிழ் மற்றும் சர்வதேச நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அரச சார்பு இணையங்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என்று பலவற்றால் இது தொடர்பான தகவல்கள் பரப்பபட்டு வருகின்ற போதிலும், இன்று பாராளு மன்றில் உரையாற்றிய ஜனாதிபதி புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்த தவறிவிட்டார். அதாவது பல விடயங்கள் பற்றி பேசிய அவரால் புலிகளின் தலைவர் தொடர்பாக ஒரு விடையம்தானும் சொல்ல முடியாத அளவிற்கு குழப்பம் நிறைந்த ஒன்றாகவே இந்த தகவல் உள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதியால் உறுதியாக சொல்ல முடியாத ஒன்றை இன்று தென்னிலங்கை சிங்கள சமூகம் ஒரு பெரும் வெற்றியாக கொண்டாடுகின்றது. ஆழமாக சிந்தித்து பார்த்தால் இதன் உள்ளார்ந்த நோக்கம் தெரிய வரும் அதாவது, திட்டமிடப்பட்ட ஒரு பொய் பரப்புரையை நம்பி சிங்கள இனவாதிகள் (இப்போது அவர்கள்தான் அதிகம் சிங்கள மக்கள் குறைவு.) தங்கள் அற்ப கொண்டாட்டங்களை அரங்க்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் வன்னியில் நடந்தது என்ன? அல்லது நடப்பது என்ன? சரியாக எதனையும் சுயாதீன முறையில் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இன்னும் உயிருடன் உள்ளார் என்பது இதுவரையிலான ஆய்வுகள் கருத்துக்களின் பிரகாரம் உண்மையாக உள்ளது. ஆனால் இன்றைய சிங்கள மற்றும் ஒரு சில தமிழ் பத்திரிகைகளை பார்த்த எவனும் நிச்சயம் குழப்பம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் முன்பெல்லாம் புலிகளின் தலைவர் தொடர்பாக செய்திகள் வந்தாலும் முன்பக்கத்தில் தலைப்பு செய்தியாக இடம் பிடிப்பதில்லை. ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லாமல் புகைப்படம் அடங்கலாக வந்த செய்திகள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இவை அனைத்தும் அரசால் சொல்லப்பட்ட செய்திகள். ஆதாரம் இல்லாத விடயங்கள் பல அதில் அடங்குகின்றன. எனவே ஆதாரம் அற்ற அந்த விடயங்களை கண்டு அதிர்ச்சியோ ஆழ்ந்த கவலையோ அடைய தேவையில்லை.
ஆனால் இங்கு பரிதாபமான ஒரு விடயம் என்னவெனில் அரசின் பொய் தகவலை இலங்கையில் உள்ள தனியார் தமிழ் வானொலி, தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் பரப்பியமைதான். ஒரு வானொலி நண்பர் சொன்னார் நேற்று மாலை அவரின் நிகழ்ச்சிக்கு நேயர்கள் பாடல் கேட்க இணைந்து கொண்டது மிக மிக குறைவு என்று. இதன் மூலம் அரசாங்கத்தின் பரப்புரை இலங்கை தமிழ் உள்ளங்களை எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது. அது மட்டுமன்றி மறுதலையாக பார்த்தால் மக்கள் பிரபாகரனை எவ்வளவுக்கு ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதல்லவா? ஆக மொத்தம் வன்னியில் ஏற்பட்ட மக்கள் இழப்பை மூடிமறைக்க கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு பொய் பரப்புரையில் அரசு வெற்றி கண்டதே தவிர, தமிழ் மக்களின் மனங்களை வெல்லவோ அல்லது புலித் தலைமையை அழிக்கவோ முடியவில்லை என்பதே உண்மையாகும்.