கொஞ்ச நாளாய் வலைப்பதிவிடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை... இந்த மாதம் மொத்தம் எட்டு பதிவுகளை இடுவதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனாலும் மாதத்தின் அரைவாசி நாட்கள் கடக்கவுள்ள நிலையில் ஒரு பதிவுடன் வலைப்பூ இருக்கிறது. கைவசம் ஏராளமான விடயங்களை பதிய சிந்தித்துள்ள போதிலும் வவுனியா சென்று வந்ததன் பின்னர் கொஞ்சம் நேரம் பிரச்சினையாக உள்ளது.
அதாவது பாதியில் விட்டுவிட்டு சென்ற சில கல்வி சம்பந்தமான செயற்றிட்டங்களை பூரணப்படுத்த வேண்டியிருப்பதாலும், இம்முறை அம்மா, அப்பாவையும் என்னுடன் அழைத்து வந்துள்ளமையால் அவர்களின் சில பிரத்தியேக அலுவல்களிற்காக நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளதாலும் நேரம் கிடைப்பது குறைவாக உள்ளது.
இந்த நிலையில் இடையில் கிடைக்கும் நேரம் மூஞ்சிப்புத்தகத்தை பார்ப்பதற்கே போதுமானதாக இருக்கிறது. சரி ஒரு சின்ன பதிவையாவது இடலாம் என்றால் அதற்கும் மனம் இடங்க்கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில் கிடைத்திருக்கும் குறுகிய நேரத்தில் ஒரு அவசரப்பதிவாக வருகிறது இந்தப்பதிவு........
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத பல சம்பவங்கள் இருக்கும். அவற்றுள் பல சம்பவங்கள் முதன் முதலாக என்ற தலைப்புக்குள் அடக்கப்படக்கூடியவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது முதன் முதலாக பள்ளி சென்றது, கிணற்றில் தண்ணீர் அள்ளியது, துவிச்சக்கர வண்டி செலுத்தியது, உந்துருளி செலுத்தியது, பேரூந்தில் பயணித்தது, தொடரூந்தில் பயணித்தது, விமானத்தில் பயணித்தது, நூறு மதிப்பெண்கள் பெற்றது, காதல் கடிதம் கொடுத்தது, விளையாட்டில் ஜெயித்தது............ என்று இந்தப்பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். (சேரனின் ஞாபகம் வருதே பாடல் உங்களுக்கு ஞாபகம் வருகுதா??)
என்னைப்பொறுத்த வரையில் இவ்வாறான முதன்முதல் சம்பவங்கள் நடந்த திகதிகள் ஞாபகம் இல்லாவிட்டாலும் அவை மிகவும் சுவாரசியமானவை என்றே சொல்லுவேன். அந்த நாட்களை நான் மீள மீள நினைக்கவே விரும்புகிறேன். இப்படி உங்கள் வாழ்வில் நடந்த விடயங்களையும் நீங்கள் மீள நினைவுபடுத்தினால் இனிமை என்றே சொல்வீர்கள். இன்றைய இந்தப்பதிவில் நான் எனது கலையுலக வாழ்வின் ஒரு இனிமையான சம்பவத்தை பகிர்ந்துகொள்கிறேன்...
கலையுலக வாழ்வில் இதுவரை நான் காலெடுத்து வைக்காதவன் என்றே சொல்ல வேண்டும். அதாவது கலைஞன் என்ற அந்தஸ்தை அடையவில்லை. இந்த நிலையில் பள்ளிக்கால வாழ்வில் பொதுவாக எல்லோரும் எழுதுவதைப்போன்று நானும் பல கவிதைகளை, பாடல்களை, நாடகங்களை எழுதியிருக்கிறேன். அவற்றுள் நான் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று எனக்கு ஞாபகம் இல்லை. மேலும் அந்த கவிதையும் ஞாபகம் இல்லை. ஆனால் நான் எழுதிய முதலாவது பாடல் இன்னும் மனதில் உள்ளது..
அப்போது எனக்கு பத்து வயது தரம் ஐந்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். புலமைப்பரிசில் பரீட்சைக்காலம் என்பதால் ஆசிரியர்கள் வகுப்புக்களில் அக்கறையாக இருப்பார்கள். சின்ன இடைவேளை கூட விளையாடுவதற்கு கிடைப்பது குறைவு. அப்படி கிடைத்தால் அதைவிட சந்தோசம் இருக்குமா என்ன? இந்த நிலையில்தான் நான் அதிகமாக நேசித்த ஒரு கலைஞனின் மரண செய்தி வந்தது. அவர் ஒரு இனிமையான பாடகர். அவரால் பாடப்பட்ட பாடல் ஒன்று பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (BBC) சிறந்த பத்துப்பாடல்களுக்குள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. அந்தளவுக்கு இனிமையான குரல். அந்த குரல் ஓய்ந்துபோன போது அவருக்காக எழுதியதுதான் எனது முதலாவது பாடல்.
இது எனது பத்து வயது சிந்தனை. இங்கே அந்த பாடல் வரிகளை முழுமையாக தர முடியாவிட்டாலும் ஒரு சின்ன வரியை தருகிறேன், "மலராய் வித்து முளைக்காதா?" இப்படி அந்த பாடலில் ஒரு வரி வருகிறது. உண்மையில் இந்த வரியை எழுதும்போது அதன் அர்த்தம் தெரிந்திருந்ததோ இல்லையோ என்று எனக்கு இன்று வரை தெரியாது. ஆனாலும் ஒரு சின்ன உணர்வு என்னை அப்படி எழுதத்தூண்டியது என்று நம்புகிறேன்.
இவ்வாறாக ஆரம்பித்த பாடல் எழுதும் பயணம் பல பாடல்களை படைத்தது. ஆனாலும் அவை இசை வடிவம் பெறாதவை. அதாவது இசையமைப்பிற்கு உட்பட்டு இறுவெட்டில் ஏற்றப்படாத கற்பனைகள்.
இதே போன்றுதான் நாடகங்கள் தொடர்பிலும் ஒரு விடயம் உள்ளது. அதாவது எனக்கு சிறிய வயது இருக்கும்போது எனது ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் அதிக பொழுதை செலவிடுவதுண்டு. இப்படி செலவிடும் பொழுதுகளில் வெறுமனே விளையாட்டு மட்டும் என்றில்லாமல் நாடகங்களை எழுதி நடித்துக் கொள்வதுமுண்டு. அந்தவகையில் முதலில் நான் எழுதிய நாடகம் "வடை விற்ற வியாபாரி". இதனை எழுதியபோது எனக்கு வயது எட்டு..
இதனை ஒரு தெருக்கூத்துப் பாணியில் எழுதி சகோதரர்களுடன் சேர்ந்து நடித்திருந்தேன். அதுவும் மறக்க முடியாத ஒரு சம்பவம். அதன் பின்னர் பல நாடகங்களை எழுதியிருக்கிறேன். நடித்திருக்கிறேன். கடைசியாக நான் சூரியனின் அரங்கத்திற்காக எழுதிய "அடைக்கோழி கவனம் கவனம்" என்ற நகைச்சுவை நாடகத்தை தொடர்ந்து இன்னும் பல நாடகங்களை எழுதி வருகின்றேன். உண்மையில் நாடகத்துறை என்பது என்னை மிகவும் கவர்ந்தது. மாவீரன் பண்டாரவன்னியனின் காவியத்தை பத்து வயதில் எழுதி அதில் பண்டாரவன்னியன் கதாபாத்திரம் ஏற்று நடித்ததை என்றுமே என்னால் மறக்க முடியாது...
இவ்வாறாக கலைத்துறையில் பல மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளன. ஒவ்வொரு விடயங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்.........
பிற்குறிப்பு- இந்தப்பதிவை தற்பெருமைக்காக எழுதவில்லை. மாறாக எனது கடந்த காலங்களின் இனிமைகளை உங்களோடு மீட்டிக்கொள்ளவே எழுதியுள்ளேன். தற்பெருமையாக தெரிந்தால் மன்னிக்கவும்.
Friday, August 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment