இன்றைய இலங்கையின் அரசியல் அரங்கில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதியும், அராசங்கமும் வெளியிட்ட கருத்துக்களும் அதற்கு தமிழர் தரப்பின் சார்பில் பேச்சுக்களில் பங்கெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து வந்திருக்கும் பதிலுமே அதிகமாக பேசப்படும் விடயமாக உள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பிற்பட்ட காலத்தில் அதாவது இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் பெரியளவில் விஸ்வரூபம் எடுத்த இலங்கையின் இனப்பிரச்சினையானது காலத்திற்கு காலம் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்களாலும் அதன் தலைமைகளாலும் வெவ்வேறு வகையில் கையாளப்பட்டமை வரலாறு.
இருந்த போதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்களிடமோ அதன் தலைமைகளிடமோ தெளிவான ஒரு கொள்கை இருக்கவில்லை. இதனால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் இனம் சாத்வீக வழியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து அதன் மூலம் எந்தவித பயனும் இல்லை என்கின்ற நிலையில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு ஓர் தனி நாடு அது தமிழீழம் என்கின்ற கொள்கையுடன் ஆயுத வழியில் போராட்டங்களை ஆரம்பித்தது. பல்வேறு ஆயுதக் குழுக்களாக ஆரம்பித்த ஆயுதப் போராட்டத்தில் துரோகங்கள், விலை போதல்கள் என்பவற்றிற்குள் சிக்குண்டு பல இயக்கங்கள் மீண்டும் ஜனநாயக வழி முறைக்கு திரும்பியதுடன் இன்னும் சில குழுக்கள் ஆயுதம் எந்தியதன் நோக்கம் மறந்து தமது ஆயுதங்களை சக இயக்கங்களிற்கு எதிராக திருப்பின. இவ்வாறான ஆயுத போராட்ட காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னடைவுடன் கடந்த 2009 ஆண்டு மே மாதத்துடன் நிறைவுக்கு வந்தது.
விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு முன்னர் அதாவது விடுதலைப் புலிகள் பலமான ஒரு இராணுவக் கட்டமைப்பாக இருந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று ஒரே நாட்டுக்குள் அதிகாரப்பரவலாக்கலாக அமையும் என்ற வகையில் அரச தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவந்தன. மேலும் நாட்டில் உள்ள பயங்கர வாதத்தை ஒழித்துவிட்டு தீர்வை முன் வைக்க போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கூறியது. ஆனால் இப்போது புலிகளை அழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்து இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நிறைவடைந்த தருணத்தில் ஜனாதிபதி மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் வடக்கு கிழக்கை மீள இணைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் மேற்குலகின் விருப்பபடி குறிப்பாக அமெரிக்காவின் விருப்பபடி செயற்பட முடியாது என்றும் அவர் சொல்லியுள்ளார். இதுமட்டுமல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வை காண முடியாமல் இருப்பதற்கு தமிழர் தரப்பே காரணமாக இருப்பதாகவும், புலிகளைப் போன்று தமிழ்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கவில்லை என்கின்ற குற்றச் சாட்டையும் முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துக்கள் இவ்வாறு அமைகின்ற அதே வேளை அரசாங்க அமைச்சர்களும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று சொல்லியுள்ளனர். குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வளவு காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு பிரதிநிதிகளை நியமிப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கலாம் என்றும் சொல்லியுள்ளார். தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினை விடயத்தில் பல்வேறு ஒப்பந்தங்களையும், ஆணைக் குழுக்களையும் கண்டுள்ளனர்.
யுத்த காலத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் உருவாக்கப்பட்ட சர்வகட்சிக் குழு இதற்கு ஓர் சிறந்த உதாரணம் நூற்றுக்கும் அதிகமான தடைவை கூடிய இந்தக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்தியதா? மேலும் இந்த குழுவின் தலைவராக செய்யப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண அண்மையில் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார்.
அதாவது ""தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் உள்ளடக்க முடியும். எனவே அரசாங்கம் பேச்சுக்களில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளாது நிரந்தர தீர்வொன்றிற்காக கூட்டமைப்புடன் இணைந்து முன்னகர வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடாத்துவதில் அர்த்தமில்லை. ஆகவே இருதரப்பும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விரைவான தீர்வொன்றுக்கு வர வேண்டும். இழுத்தடிப்பதால் யாருக்கும் பயனேற்படப் போவதில்லை."" என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்திருந்தார்.
இங்கு பேராசிரியர் குறிப்பிட்ட இழுத்தடித்தல் என்கின்ற சொல் மிகவும் முக்கியமானது. இலங்கை அரசியல் வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும், அதன் தலைமைகளும் இனப்பிரச்சினை தொடர்பில் இழுத்தடிக்கின்ற உத்தியையே கால காலமாக பின்பற்றியிருக்கின்றன. ஆட்சியாளர்களின் இவ்வாறான போக்கால்தான் முப்பது வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள் ஆயுதம் எந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த நிலையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத பிரிந்த வடக்குக் கிழக்கிற்குள் அரசாங்கம் எவ்வாறான அரசியல் தீர்வை முன்வைக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவை நியமிக்கின்றது? இதற்கு ஒரு குழு நிச்சயம் தேவைதானா? இவ்வாறான ஒரு தீர்வைக் கூட அரசாங்கம் சுயமாக முன்வைக்க முடியாத நிலையிலா உள்ளது? இவையெல்லாம் தவிர்க்க முடியாத கேள்விகள்.
பாராளுமன்றத்தில் 2 / 3 பெரும்பான்மை உள்ள இன்றைய அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதில் உண்மையான அக்கறை இருக்குமானால் அதனை செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் அரசாங்கம் ஒரு போதும் அதனை செய்ய தயாரில்லை என்பதுடன் இந்த அரசாங்கமும் இழுத்தடிக்கும் உத்தியையே கையாளப்போகிறது என்பதையும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நியமிப்பு வெளிப்படுத்துகின்றது.
இங்கு வேடிக்கையான விடயம் என்னவென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமான அமைப்பாக இருந்து பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கும்போது அவர்களின் தனி நாட்டுக் கோரிக்கை நியாயமற்றது என்றும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இன ஐக்கியத்துடன் தீர்வு, சமஷ்டி ஆட்சி என்று வெவ்வேறு தீர்வுத்திட்டங்களை முன்வைத்த அரச ஆதரவு தமிழ்க் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இப்போது அமைதியாக இருக்கிறார்கள். முன்பு புலிப் பயங்கரவாதத்தால்தான் தீர்வைக் காண முடியாமல் உள்ளது என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முழங்கியவர்கள் இப்போது மூலைக்குள் முடங்கியுள்ளனர். இருந்த போதிலும் அரசாங்கத்தில் உள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன், முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புத் தொடர்பில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்த காலம் தொடக்கம் இப்போது வரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் சமூகத்தில் சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் வெளிவந்த தமிழ் சிவில் சமூகத்தின் அறிக்கை இதன் உச்சக் கட்டம் என்று சொல்லலாம். அந்த வகையில் தமிழ் சிவில் சமூகம் என்கின்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த கால தவறுகள் என்று சில விடயங்களும் எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை என்று சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது என்பது தொடர்பில் அதிகமாக விளக்கப்பட்டுள்ளமையானது இந்த அறிக்கையின் பின்னணியில் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் பொதுவாக தவறுகளை சுட்டிக் காட்டியும், போதுமான ஆலோசனைகளை முன்வைத்தும் புத்திஜீவிகளிடமிருந்து கருத்துக்கள், அறிக்கைகள் வெளிவருவது ஆரோக்கியமானது என்கின்ற போதிலும் அந்த அறிக்கைகள் வெளிவரும் காலப்பகுதியையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் தமிழர்கள் தமது ஒன்றுபட்ட அரசியல் சக்தியை சீர் குலைக்காமல் மென்மேலும் பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தக் கூடாது. அவ்வாறு பலவீனப்படுத்தும் பட்சத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் இழுத்தடிக்கும் உத்திக்கு தூபமிடுவதாகவே அது அமையும்.
தமிழ் சிவில் சமூகம் என்கின்ற பெயரில் வெளிவந்த அறிக்கை ஒருபுறமிருக்க ஜனாதிபதி இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான் சிங்கிற்கு அலரி மாளிகையில் வைத்து அளித்துள்ள செவ்வி ஒன்றில் தன்னை மேற்குலகம் தங்களின் அடிமையாக வைத்திருக்க முயல்வதாகவும் இதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் இந்தியாவை தாண்டியே இலங்கைக்கு எல்லாம் என்றும் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் அவர் தனது செவ்வியில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவை பகிரங்கமாகவே சாடியுள்ளார். புலிகளின் கப்பல்களை அழிப்பதற்கான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதாவது சுதந்திரத்துக்கு பின்னர் எந்தவொரு ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ வெளிநாடுகள் தொடர்பில் எதிரான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பது குறைவு அல்லது இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால்தான் என்னவோ இலங்கைக்கு பகையான நாடுகள் என்று எதுவும் இல்லை. மேலும் இலங்கை ஒரு தீவாக இருப்பதால் எல்லைப் பிரச்சினையும் இல்லை. இந்த நிலையில் அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடான இலங்கை வெவ்வேறு நாடுகளில் பொருளாதாரத்தில் தங்கியுள்ளது என்பதால் எந்தவொரு நாட்டையும் அரசியல் ரீதியான கருத்துக்களால் பகைத்துக் கொள்வது நல்லதல்ல. இலங்கை மீது வெளி நாடுகள் பொருளாதார ரீதியான தடைகளை விதித்தாலோ அல்லது ராணுவ ரீதியிலான தலையீடுகளை மேட்கொண்டாலோ அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு போதுமான வளங்களும் இலங்கையில் இல்லை. இந்த நிலையில் எந்தவொரு நாடு தொடர்பிலும் வெளிப்படையான எதிர்க் கருத்துக்களை முன்வைப்பதை தவிர்ப்பதே நல்லது.
உண்மையில் இலங்கை தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மாற வேண்டும் என்றால் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும். இதன் மூலம் மேற்குலகின் தேவையற்ற தலையீடுகள் குறைவடைவதுடன் இலங்கை என்பது பலமான ஒரு நாடாக திகழவும் வாய்ப்புள்ளது. இதனை விடுத்து தமிழர்கள் கேட்கும் குறைந்த பட்ச அதிகாரப் பகிர்வான இணைந்த வடக்குக் கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரங்களை கூட வழங்குவதற்கு அரசாங்கம் முன்வராவிட்டால் வெளிநாடுகளின் தலையீடுகளையும் தவிர்க்க முடியாது, தமிழர்களின் மனங்களையும் வென்றெடுக்க முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சமகால அரசியல் நிகழ்வுகளை காலத்தின் தேவைக்கேற்ப தொகுத்து,விளக்கி வழங்கியமைக்கு நன்றி......
arumai......ungal pani thodara vaalthukkal....
///Anonymous said...///
நன்றி நன்றி உங்கள் மேலான வருகையையும்,ஆதரவையையும் என்றும் எதிர்பார்க்கின்றேன்...
Post a Comment