இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின்போது தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ள இந்திய அணி இலக்கு இழப்பின்றி 25 ஓட்டங்களை பெற்றுள்ளது. அந்தவகையில் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதலாவது இனிங்ஸில் 6 இலக்குகளை இழந்து மொத்தமாக 558 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தி இந்திய அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தது.
அந்தவகையில் தென்னாபிரிக்க அணி சார்பாக முதலாவது இனிங்ஸில் மிகவும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஹசிம் அம்லா 473 பந்து வீச்சுக்களில் 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இது ஹசிம் அம்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கட்டில் பெறும் முதலாவது இரட்டைச் சதமாகும். இதற்கு முன்னர் நியுசிலாந்திற்கு எதிராக கடந்த 2007 நவம்பரில் பெற்ற 176 ஓட்டங்களே ஹசிம் அம்லாவின் அதிகூடிய சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் ஓட்டமாக அமைந்திருந்தது.
ஹசிம் அம்லாவின் அதிரடிக்கு துணையாக தென்னாபிரிக்க அணியின் மற்றுமொரு வீரரான ஜக் கலிசும் தன பங்கிற்கு அசத்தியிருந்தார். அந்தவகையில் மொத்தமாக 351 பந்துவீச்சுக்களை எதிர்கொண்ட ஜக் கலிஸ் 15 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக மொத்தமாக 173 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஜக் கலிஸ் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் அரங்கில் பெறும் 34 ஆவது சதம் இதுவாகும்.ஹசிம் அம்லா, ஜக் கலிஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்க அணி சார்பாக AB டிவிலியஸ் 88 பந்துவீச்சுக்களில் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றார். இது டிவிலியசின் 21 ஆவது அரைச் சதமாகும்.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் இவ்வாறு அமைய இந்திய அணி சார்பாக சஹீர்கான் 31ஓவர்கள் பந்து வீசி 7 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 96 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தியதுடன் ஹர்பஜன்சிங் 46 ஓவர்கள் பந்து வீசி 1 ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 166 ஓட்டங்களைக் கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். மேலும் வீரேந்திர ஷேவாக் 1 இலக்கை வீழ்த்தினார். அமித் மிஷ்ரா இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக முதலாவது இனிங்க்சில் அதிகூடிய ஓவர்கள் (53 ) பந்துவீசியபோதிலும் ஒரு இலக்கைத்தானும் வீழ்த்தவில்லை.
இவ்வாறாக தென்னாபிரிக்க அணியின் முதலாவது இனிங்ஸ் நிறைவடைய தன்னுடைய முதலாவது இனிங்சை ஆரம்பித்த இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது இலக்கு இழப்பின்றி 4 ஓவர்கள் நிறைவின் போது 25 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அந்தவகையில் இந்திய அணியின் சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்த கம்பீர் 12 ஓட்டங்களையும், வீரேந்திர ஷேவாக் 9 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் களத்திலிருந்தார்கள்.
இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நிலைவரம் இவ்வாறு இருக்க இன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகள்- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேசப் போட்டித்தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் மெல்பேர்னில் நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களம் புகுந்த அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வொட்ஷன் 74 பந்துவீச்சுக்களை எதிர் கொண்டு 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். வொட்ஷன் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பெறும் 12 ஆவது அரைச் சதம் இதுவாகும். இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ரிக்கிப் பொண்டிங் ஒரு ஓட்டத்தால் அரைச்சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார்.
மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பொல்லர்ட் 10 ஓவர்கள் முழுமையாக பந்துவீசி 45 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும், ரவீந்திரநாத் ராம்பவுல் 8 ஓவர்கள் பந்துவீசி 43 ஓட்டங்களைக் கொடுத்து 2 இலக்குகளையும் கைப்பற்றியிருந்தார்கள். மேலும் ஜமால் ரொயச், கெயில் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தியிருந்தார்கள்.
அந்தவகையில் 50 ஓவர்களில் 257 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 34 .2 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக பந்துவீச்சில் கலக்கிய பொல்லர்ட் 35 பந்து வீச்சுக்களில் 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 31 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்தவொரு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரரும் 30 ஓட்டங்களைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா சார்பில் ஜேம்ஸ் ஹர்ரிஸ் 9 ஓவர்கள் பந்து வீசி 1 ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 24 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும், ஹயுரிட்ஸ் 6 .2 ஓவர்கள் பந்து வீசி 28 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார்கள். மேலும் பொலிங்கர் 2 இலக்குகளையும் ஜோன்ஷன், வொட்ஷன் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார்கள்.
அவுஸ்திரேலிய அணி 113 ஓட்டங்களினால் வெற்றியீட்டிய இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பந்து வீச்சிலும் ஒரு இலக்கை வீழ்த்திய வொட்ஷன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி அடிலைட்டில் இடம்பெறவுள்ளது.
*************
நேற்றைய எனது பதிவில் பாகிஸ்தான் அணியின் சைட் அஃப்ரிடி பந்தக் கடித்த விவகாரத்தில் ஒரு விடயத்தை தவறவிட்டுவிட்டேன் அதாவது அஃப் ரிடியின் இந்தச் செயலுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரான இன்சமாம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் அணித் தலைவர் பதவியைப் பறிகொடுக்கும் நிலையில் உள்ள பாகிஸ்தான் அணித்தலைவர் முஹம்மத் யூசுஃப்பிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
***********
இன்னுமொரு விடயம், பங்களாதேஷ்- நியுசிலாந்து அணிகளிற்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை டுனேடினில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதலாவது போட்டியில் தோல்வியடைந்த பங்களாதேஷ் இந்தப் போட்டியில் வென்றால்தான் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்கின்ற நிலையிலும், ஏற்கனவே முதலாவது போட்டியில் வென்ற நியுசிலாந்து நாளைய போட்டியில் வென்றால் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்கின்ற நிலையிலும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.
Sunday, February 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment