இதே போன்றுதான் சரத்பொன்சேகாவின் விடுதலையின் பின்னர் இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை பேணும் வகையில் தனது வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவர இருப்பதாகவும், அதற்குரிய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் அண்மையில் நடைபெற்ற ரியோ பிளஸ் மாநாட்டின் போது இலங்கை ஜனாதிபதியும், ஈரானிய ஜனாதிபதியும் சந்தித்து புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பேச்சு நடத்தியதாக தெரியவருகின்றது. மேலும் இந்த பேச்சுக்கள் குறித்து ஈரானிய ஜனாதிபதி வெளியிட்ட அமெரிக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுடன் இலங்கை ஜனாதிபதியும் உடன்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமான வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்க முயற்சிப்பதான செய்தி கேள்விக் குறியாகின்றது என்கின்ற போதிலும் கடந்த மே 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹில்லாரி கிளிண்டனை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்த போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன்வைத்த பரிந்துரைகளில் குறுகிய காலத்தில் செயற்படுத்தக் கூடியவற்றை உடனடியாகவும், நடுத்தர மற்றும் இறுதி யுத்தம் தொடர்பான அம்சங்களை உரிய காலத்திலும் நிறைவேற்ற உள்ளதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் இதனையே ஹில்லாரி கிளிண்டன் செயற்திறன் மிக்க நல்ல திட்டம் ஒன்றை இலங்கை கையளித்துள்ளது என குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இவ்வாறான எந்தவொரு ஆவணத்தையும் அமெரிக்காவிடம் தாம் கையளிக்கவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முன்னணி செய்திப்பத்திரிகையான சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட மேற்படி செய்தி தொடர்பில் மேலும், மேலும் மறுப்பறிக்கைகள் வெளியிடப்படும் பட்சத்தில் இலங்கை அமெரிக்காவிடம் கையளித்த உறுதி மொழி ஆவணத்தை தாம் வெளியிடப்போவதாகவும் சண்டே லீடர் பத்திரிகை எச்சரித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலும் பாரிய இடைவெளி ஒன்று காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இந்தியாவின் இலங்கைக்கு எதிரான வாக்களிப்பால் இந்தியாவுடனான இலங்கையின் நெருக்கமான உறவுகளில் விரிசல் பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தப்பட்டு வருவதாகவே தெரிகின்றது. குறிப்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய போதும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சு அப்படியான விஜயம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளதன் மூலம் இதனை தெளிவாக உணர முடிவதாக கூறப்படுகின்றது.

மேலும் தமிழகத்துடன் இலங்கை அரசு ஒரு ஆரோக்கியமான உறவைக் கட்டியெழுப்ப பல்வேறு வழிகளிலும் முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் இன்று தமிழகத்துக்கு இலங்கை அரசு சார்பில் எந்தவொரு பிரமுகர்களும் சென்றாலும் அங்கு கடுமையான எதிர்ப்பை சந்திக்கும் நிலைமையே உள்ளது. அண்மையில் கோவையில் ஒரு கருத்தரங்கிற்கு சென்றிருந்த அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிற்கு எதிராக போராட்டம் நடாத்தப்பட்டதால் அவர் உடனடியாக நாடு திரும்பியிருந்தார். இவ்வாறான சூழ் நிலையில்தான் இந்திய மத்திய அரசுடன் மந்தமான உறவு இருக்கின்ற போதும் தமிழகம் போன்ற இந்திய மாநில அரசுகளுடன் நெருக்கமான உறவைப்பேண இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது.

உண்மையில் இந்திய மத்திய அரசு ஜெனீவா பிரேரணையில் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க தமிழகத்தின் நெருக்குதலும் ஒரு காரணம் என்பதனை மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகவும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இலங்கை அரசு இந்தியாவுடனான உறவுகளை சுருக்கியதன் விளைவாகவே இலங்கையில் தமிழ் இளைஞர், யுவதிகளிற்கு ஆயுதப் பயிற்சிகளையும், உதவிகளையும் இந்தியா வழங்கியது என்பதன் அடிப்படையிலும் இலங்கை அரசு இந்தியாவின் மாநில அரசுகளுடன் நெருக்கமான உறவுகளை பேண விளைவதாக சொல்லப்படுகின்றது.
இலங்கை அரசு மாநில அரசுகளுடன் குறிப்பாக தமிழகத்துடன் ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள விளைவதான செய்திகள் வெளிவருகின்ற அதே சமயம் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை என்பதுடன் கச்ச தீவுக்கு வரும் தமிழக மீனவர்களை கைது செய்து இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்கின்ற தோரணையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதே வேளை இலங்கை அரசின் அண்மைக்கால போக்கு தொடர்பில் இந்திய அரசும் அதிக கவலை கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் ஒரே நோக்கத்திற்காக இலங்கை அரசின் எந்தவொரு போக்கு குறித்தும் கரிசனை இல்லாமல் இருந்த இந்தியா இன்று சீனாவுடனான இலங்கை அரசாங்கத்தின் அதீத நெருக்கம் காரணமாக பல்வேறு நெருக்கடிகளிற்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு சூழ் நிலையிலையே இலங்கை அரசை கண்டிக்கும் வகையில் ஜூன் 29 ஆம் திகதி சிவ்சங்கர் மேனன் இலங்கை செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையின் வெளியுறவுத் தொடர்புகள் குறித்தான விடயங்கள் இவ்வாறு இருக்க, இலங்கையில் இன்று தமிழ் அரசியல் சக்திகளிடையே எவருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு ஒற்றுமை நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பிலும், அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று தமிழ் அரசியல் சக்திகள் தமிழ் சமூகத்தின் நிலங்கள் பறிபோவதற்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளமை வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
அந்த வகையில் முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து இப்போது தமிழ்த் தேசிய முன்னணி என்கின்ற கட்சியில் இயங்கிவரும் செல்வராசா கஜேந்திரன் தலைமையிலானவர்கள் ஏற்பாடு செய்த நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற முக்கிய கட்சிகள் தமது ஆதரவை தெரிவித்து பங்குபற்றியதன் மூலம் தமிழ் சமூகம் ஒற்றுமையுடன் போராடுவதற்கு வழி ஏற்பட்டுள்ளதாக உணர முடிகின்றது.
மேலும் சரணாகதி அரசியலில் பல காலமாக ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் தலைவர்களும் நில அபகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் நில அபகரிப்புக்கு எதிரான போரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கரம் கோர்க்க போவதாகவும் கூறப்படுகின்றது. அண்மைக் காலமாக இலங்கை அரங்கில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் முஸ்லீம் சமூகத்துக்கு எதிராக சிங்கள சமூகம் சில நாசகார வேளைகளில் ஈடுபட்டுள்ளமை முஸ்லீம் அரசியல் தலைவர்களை கொஞ்சம் சிந்திக்க வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கைத் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் அமைச்சு பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியிருந்தார். மேலும் வடக்கு, கிழக்கில் காணிகளை படையினர் பயன்படுத்துவது தொடர்பிலும் அவர் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஒரு அரசாங்க அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் வடக்கு , கிழக்கில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை என கூறுவது வேடிக்கையானது.

இந்த நிலையில் தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்காலம் என்பது இலங்கை நாட்டில் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்க போகும் தமிழ் அரசியல் சக்திகள் தங்கள் ஒற்றுமையை தொடர்ந்தும் பேணிப்பாதுகாத்து தீர்வை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக்குவது அவசியமாகும்.